புதன், மார்ச் 25, 2020

சிவமே சரணம் 3

ஞானசம்பந்தப்பெருமான் தன் அடியாருடன்
திருச்செங்கோட்டுக்கு வருகை தந்த போது 
கொங்குநாட்டில் விஷக்காய்ச்சல் பரவியிருந்தது..
மக்கள் சொல்லொணாத துயருக்கு ஆளாகியிருந்தனர்...

தொற்று நோயாகிய அந்த விஷக் காய்ச்சல்
அடியார்களையும் பற்றிக் கொண்டது.

விஷ ஜூரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களையும் அடியார்களையும் 
காத்தருளத் திருவுளங்கொண்ட ஞானசம்பந்தப் பெருமான்..
பாடியருளிய திருப்பதிகம் தான் - திருநீலகண்டத் திருப்பதிகம்...

இத்திருப்பதிகத்தினால்
நாடு முழுதும் விஷக் காய்ச்சல் ஒழிந்து 
மக்களும் பிணி நீங்கி நலம் பெற்றதாக ஆன்றோர் கூறுவர்.. 

இன்றைய பதிவில்
ஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த
திரு நீலகண்டத் திருப்பதிகம்.. 
* * *

திருத்தலம் - திருச்செங்குன்றூர்
திருச்செங்கோடு


இறைவன் - ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ பாகம்பிரியாள்
தலவிருட்சம் - இலுப்பை.
தீர்த்தம் - தேவதீர்த்தம்.

திருநீலகண்டத் திருப்பதிகம் 
முதலாம் திருமுறை. 
திருப்பதிக எண் - 116


அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாதி ருப்பதும் உந்தமக்கு ஊனம் அன்றே
கைவினை செய்தெம் பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்
செய்வினை வந்துஎமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்..{1}

காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனிமனத்தால்
ஏவினையால் எயில் மூன்றெரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம்அடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்.. {2}

முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்றெவையும் எல்லாம்
விலைத்தலை ஆவணங் கொண்டுஎமை ஆண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்..{3}

விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரரும் வேதியரும்
புண்ணியரென்று இருபோதுந் தொழப்படும் புண்ணியரே
கண்ணிமை யாதன மூன்றுடையீர் உம்கழல் அடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்..{4}


மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் தோளுடையீர்
கிற்றெமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதுந் தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்துன் திருவடியே அடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்..{5}

மறக்கு மனத்தினை மாற்றியெம் ஆவியை வற்புறுத்திப்
பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழையாத வண்ணம்
பறித்த மலர்க்கொடு வந்துமை ஏத்தும் பணியுடையோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்..{6}

இத் திருப்பதிகத்தின்
ஏழாவது திருப்பாடல் சிதைவுற்றது..

கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை ஏத்துதும் நாம் அடியோம்
செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்தருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்..{8}

உமையொருபாகன் 
நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
தோற்றமுடைய அடியும் முடியுந் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாம்அடியோம்
சீற்ற மதாம்வினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்..{9}

சாக்கியப் பட்டுஞ் சமணுருவாகி உடை ஒழிந்தும்
பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றும் விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர் அடிபோற்று கின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்..{10}

பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண்டாகில் இமையவர்கோன் அடிக்கண்
திறம்பயில் ஞானசம்பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே..{11}
-: திருச்சிற்றம்பலம் :- 
* * *

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * * 

12 கருத்துகள்:

  1. ஞானசம்பந்தப் பெருமான் போன்ற மகான்கள் இன்றில்லாதது இழப்பு.  திருநீலகண்டர் விஷத்தை முறிக்கட்டும்.  அவனருள் பரவட்டும் அகிலமெங்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...
      தங்களுக்கு நல்வரவு...

      அவனருள் பரவட்டும் அகிலமெல்லாம்...

      நீக்கு
  2. இன்றைய சூழலுக்குத் தேவையான பதிகம்.

    நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      நலமே விளையட்டும் உலகமெல்லாம்...

      நீக்கு
  3. வாழ்க நலம் வையகம் காக்க இறைவன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...

      வையகம் காக்க இறைவன்...
      வாழ்க நலம்...

      நீக்கு
  4. இந்த் பாடலை வீட்டில் காய்ச்சல் யாருக்காவது வந்து இருந்தால் பாடி விபூதி பூசி விடுவார்கள் எங்கள் வீட்டில். உலக மக்கள் அனைவருக்காக நேற்றிலிருந்து படிக்க ஆரம்பித்து இருக்கிறேன் என்று உங்கள் பதிவில் போட்டேன்.

    எல்லோரும் நேரம் கிடைக்கும் போது ( நேரம் ஒதுக்கி) உலக நன்மைக்கு நம்பிக்கையுடன் பாடலாம்.

    உங்கள் பகிர்வுக்கு மிகவும் நன்றி.
    இன்றைய தரிசனம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை வணங்கி நலம் பெறுவோம்.
    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  5. இப்பதிகத்தை பல முறை பாடியுள்ளேன். இப்போது மறுபடியும் பாடினேன்.திருச்செங்கோடு பல முறை சென்றுள்ளேன். பகிர்வுக்கு நன்றியும் மகிழ்ச்சியும்.

    பதிலளிநீக்கு
  6. நல்லதே நடக்கட்டும்... ஓம் நமச்சிவாய...

    பதிலளிநீக்கு
  7. நம்பிக்கைகள் மெய்யாகட்டும்

    பதிலளிநீக்கு
  8. நல்ல பதிகம். அதுவும் இப்போதைய விஷத்தை முறிக்கு...நல்லதே நடக்க வேண்டும் அண்ணா. உலகத் துயர் முடிவுற வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. அருமையான பதிகம். எங்கள் பெண் தினம் தினம் இதைப் போட்டுக் கேட்டுக் கூடவே சொல்லுகிறாள். இதுவும் "மந்திரமாவது நீறு" பதிகமும் பாடி வந்தால் நல்ல பலன் கிட்டுவதைப் பலமுறை கண்டிருக்கிறேன். நீலகண்டப் பெருமான் அருளால் இந்தக் கொடிய விஷ வைரஸ் (நோய்க்கிருமி) அழிந்து ஒழியட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..