செவ்வாய், நவம்பர் 12, 2019

சிவ தரிசனம்

இன்று ஐப்பசி நிறைநிலா நாள்..

சகல் சிவாலயங்களிலும்
சிவலிங்கத் திருமேனிக்கு அன்னாபிஷேகம் நிகழ்த்தப்படும் நாள்..

இந்த நன்னாளில் சிந்திக்கவும் வந்திக்கவுமாக
திருக்கோடிகா எனும் திருத்தலம்...

காவிரிக்கு வடகரை என்று பகுக்கப்பட்டிருக்கும் இத்திருத்தலம்
இன்றைக்கு திருகோடிக்காவல் என்று வழங்கப்படுகின்றது...

கும்பகோணத்திலிருந்து கதிராமங்கலம் செல்லும் வழியில் உள்ளது இத்திருத்தலம்..

பதிவிலுள்ள படங்களை வழங்கியவர்கள்
உழவாரம் - சிவனடியார் திருக்கூட்டம்..

அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

திருத்தலம் 
திருகோடிகா



இறைவன் - ஸ்ரீ கோடீசர், குழகர்
அம்பிகை - ஸ்ரீதிரிபுரசுந்தரி


தலவிருட்சம் - பிரம்பு
தீர்த்தம் - காவிரி

ஞானசம்பந்தப் பெருமானும்
அப்பர் ஸ்வாமிகளும்
திருப்பதிகம் அருளியுள்ளனர்..

இங்கே பதிவிலுள்ளது
அப்பர் பெருமான் அருளிச் செய்த திருத்தாண்டகம்..

ஆறாம் திருமுறை
எண்பத்தொன்றாவது திருப்பதிகம்..


கண்டலஞ்சேர் நெற்றியிளங் காளை கண்டாய்
கல்மதில்சூழ் கந்தமா தனத்தான் கண்டாய்
மண்டலஞ்சேர் மயக்கறுக்கும் மருந்து கண்டாய்
மதிற்கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய்
விண்டலஞ்சேர் விளக்கொளியாய் நின்றான் கண்டாய்
மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்
கொண்டலஞ்சேர் கண்டத்தெங் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே..

வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய்
மறைக்காட்டுறையும் மணாளன் கண்டாய்
பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்
பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்
செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய்
திருஆரூர் திருமூலட்டானன் கண்டாய்
கொண்டாடும் அடியவர்தம் மனத்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே...

அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய்
அடியார்கட் காரமுதம் ஆனான் கண்டாய்
மலையார்ந்த மடமங்கை பங்கன் கண்டாய்
வானோர்கள் முடிக்கணியாய் நின்றான் கண்டாய்
இலையார்ந்த திரிசூலப் படையான் கண்டாய்
ஏழுலகு மாய்நின்ற எந்தை கண்டாய்
கொலையார்ந்த குஞ்சரத்தோல் போர்த்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே...

மற்றாருந் தன்னொப்பார் இல்லான் கண்டாய்
மயிலாடு துறையிடமா மகிழ்ந்தான் கண்டாய்
புற்றாடு அரவணிந்த புனிதன் கண்டாய்
பூந்துருத்தி பொய்யிலியாய் நின்றான் கண்டாய்
அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய்
ஐயாறு அகலாத ஐயன் கண்டாய்
குற்றாலத் தமர்ந்துறையும் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே...

வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய்
போரார்ந்த மால்விடையொன் றூர்வான் கண்டாய்
புகலூரை அகலாத புனிதன் கண்டாய்
நீரார்ந்த நிமிர்சடையொன் றுடையான் கண்டாய்
நினைப்பார் தம் வினைப்பாரம் இழிப்பான் கண்டாய்
கூரார்ந்த மூவிலைவேற் படையான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே...

கடிமலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய்
கண்ணப்ப விண்ணப்புக் கொடுத்தான் கண்டாய்
படிமலிந்த பல்பிறவி அறுப்பான் கண்டாய்
பற்றற்றார் பற்றவனாய் நிற்பான் கண்டாய்
அடிமலிந்த சிலம்பலம்பத் திரிவான் கண்டாய்
அமரர்கணந் தொழுதேத்தும் அம்மான் கண்டாய்
கொடிமலிந்த மதில்தில்லைக் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே...

உழையாடு கரதலமொன் றுடையான் கண்டாய்
ஒற்றியூர் ஒற்றியாவுடையான் கண்டாய்
கழையாடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய்
காளத்திக் கற்பகமாய் நின்றான் கண்டாய்
இழையாடும் எண்புயத்த இறைவன் கண்டாய்
என்நெஞ்ச த்துள் நீங்காத எம்மான் கண்டாய்
குழையாட நடமாடுங் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே...

ஸ்ரீ திரிபுரசுந்தரி
கோவிந்த ரூபிணியாக திருக்காட்சி
(புரட்டாசி 2018)
படமாடு பன்னகக் கச்சை அசைத்தான் கண்டாய்
பராய்த் துறையும் பாசூரும் மேயான் கண்டாய்
நடமாடி ஏழுலகுந் திரிவான் கண்டாய்
நான்மறையின் பொருள்கண்டாய் நாதன் கண்டாய்
கடமாடு களிறுரித்த கண்டன் கண்டாய்
கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய்
குடமாடி இடமாகக் கொண்டான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே...
ஃஃஃ

இத்திருப்பதிகத்தில் திருவூர்கள் பலவற்றையும் கூறிச் செல்கின்றார் அப்பர் ஸ்வாமிகள்...

சிறப்புடைய இத்திருப்பதிகத்தில் எட்டுத் திருப்பாடல்களே கிடைத்துள்ளன... ஏனையவை சிதைந்து விட்டன... 

பற்றற்றார் பற்றவன் - பரமன்!.. - எனும் திருவாக்கு சிந்திக்கத்தக்கது...

நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் எந்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

12 கருத்துகள்:

  1. திருக்கோடிக்கா போகலை.. இது வேறே கோடியக்கரை இரண்டும் ஒன்று தானே?கோடியக்கரையிலும் குழகர் தான்! ஆனால் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின் பதிகம் தான் அங்கே பிரபலம்னு நினைக்கிறேன். கோடியக்கரை காவிரியின் தென்கரை அல்லவோ வரும்! அப்போ இரண்டும் வேறே வேறேனு நினைக்கிறேன். கோடியக்கரையும் போனதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா அவர்களுக்கு நல்வரவு...

      கோடியக்கரை குழகர் தனி விசேஷம்..

      கோடிகா எனும் தலம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. காலையிலிருந்து அன்னாபிஷேஹப்படங்களாக வந்து கொண்டிருக்கின்றன. நல்ல திவ்ய தரிசனம்

    பதிலளிநீக்கு
  3. திருத்தாண்டகம் அருமை ஐயா...

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்....

      நீக்கு
  4. திருத்தாண்டகம் படித்து திருகோடிக்கா தரிசனம் செய்தேன்.
    வாழ்த்துக்கள்.
    அம்மா வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கோவிலில் நேற்றே அன்னாபிஷேகம் நடந்து விட்டது. நேற்று இரவு தரிசனம் செய்து சாம்பார் சாதம் பிரசாதம் கொடுத்தார்கள் பெற்று வந்தோம். நிறைய கோவிலில் இன்று தான் அன்னாபிஷேகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  5. இனிய தமிழ். சுகமான சிவதரிசனம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ஐயா...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..