ஞாயிறு, அக்டோபர் 27, 2019

நலம் எங்கும் சூழ்க..

அன்பின் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துகள்!..


ஓரானைக் கன்றை உமையாள் திருமகனைப் 
போரானைக் கற்பகத்தைப் பேணினால் வாராத
புத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும்
சத்தி தரும் சித்தி தருந்தான்!..
-: பழம் பாடல் :-

மகிழ்ச்சி.. மட்டற்ற மகிழ்ச்சி..

அந்த ஒன்றினை நாடியே அனைவரது பயணமும்..

பண்டிகை நாட்களில் - இருப்போரும் இல்லாதோரும்
எய்த நினைப்பது மகிழ்ச்சி ஒன்றினையே...

அந்த மகிழ்ச்சி தான் நெஞ்சிற்கு நிம்மதி!..

நெஞ்சிற்கு நிம்மதியான மகிழ்ச்சியும் இன்பமும் எங்ஙனம் கைகூடும்?..

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.. (0039)

- என்று வள்ளுவப் பெருந்தகை வழிகாட்டுகின்றார்... 

இதற்குத்தான் -

அறஞ்செய விரும்பு - என்றார் ஔவையார்...

நெஞ்சுக்கு நிம்மதி தெய்வத்தின் சந்நிதி!..

- என்று கூறி, 
எளிய மக்களை திருக்கோயில்களுக்கு ஆற்றுப்படுத்தினர் ஆன்றோர்...

இன்றைய நாட்களில் எல்லாம் தலை கீழாயிற்று...
அதைப் பற்றியெல்லாம் ஒன்றும் சொல்வதற்கில்லை...

வரும் நாட்களில் இறையருளால் எல்லாம் நலமாகி
மகிழ்ச்சியும் நிம்மதியும் அனைவருக்கும் ஆக வேண்டும்!..
என்று நல்லநாள் தனில் வேண்டிக் கொள்கின்றேன்..


அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மை பூண்டு
நங்குரு மரபிற் கெல்லாம் முதற்குரு நாதன் ஆகி
பங்கயந் துளவம் நாறும் வேத்திரப் படை பொறுத்த
செங்கை எம்பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி!..
-: காஞ்சி புராணம் :-

ஸ்ரீ மறைக்காட்டுறையும் மணாளன்
திருமறைக்காடு (வேதாரண்யம்)
தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்லமரர் சூளாமணிதான் கண்டாய்
காண்டற்கரிய கடவுள் கண்டாய் 
கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட்டுறையும் மணாளன் தானே.. (6/23)  
-: அப்பர் பெருமான் :-


தனந்தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!..
-: அபிராமி பட்டர் :-

சிக்கல் ஸ்ரீ சிங்காரவேலன் 
விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!.. 
-: அருணகிரியார் :-

ஸ்ரீ அமிர்த நாராயணப்பெருமாள் - திருக்கடவூர் 
திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமுங் கண்டேன் செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று.. (2282)
-: பேயாழ்வார் :-
திரு அரங்கத்துச் செல்வன் 
பச்சைமா மலைபோல்மேனி பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் 
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!.. (873) 
-: தொண்டடிப்பொடியாழ்வார் :- 


வந்தாய் என்மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழுஞ்சுடரே எங்கள் நம்பி
சிந்தாமணியே திருவேங்கடம் மேய
எந்தாய் இனியான் உன்னை என்றும் விடேனே!.. (1046) 
-: திருமங்கையாழ்வார் :- 
***

மத்தாப்புகளும் வெடிகளும்
தீபாவளித் திருநாளின் ஒரு அங்கமாகி விட்டன..

ஊடகங்களில் பலரும் பலவிதமாக கருத்துகளை
உபதேசம் செய்து கொண்டிருக்கின்றனர்...

ஜல்லிக் கட்டுக்குத் தடை வாங்கியதைப் போல
தீபாவளி வெடிகளுக்கும் தடை விதிக்க வேண்டும்..
என்றெல்லாம் எழுதிக் கொண்டிருக்கின்றனர்...

கூடிய விரைவில் மாற்று இயக்கங்களால் - ஒட்டு மொத்த
தீபாவளிக் கொண்டாட்டத்திற்கும் தடை கேட்கப்படலாம்..
என்றே தோன்றுகின்றது...

அந்நிலையிலிருந்து நம்மை நாமே மீட்டுக் கொள்வோம்...


இயன்றவரைக்கும் 
சுற்றுச்சூழலைப் பாதுகாத்து - 
தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம்.. 

நாமும் மகிழ்வோம்..
பிற உயிர்களையும் மகிழ்விப்போம்!..
***

இனிய பாடலுடன்
தீபாவளிக் கொண்டாட்டம்..

திரைப்படம் -  மூன்று தெய்வங்கள்
பாடல் - கவியரசர்
இசை - மெல்லிசை மன்னர் 


தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
வைரங்கள் போலே ஒளி விடட்டும்
சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்..
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்!..
-: கவியரசர் கண்ணதாசன் :-


அன்பும் அறநெறியும் நிலை நாட்டப்பட்ட நாள் இன்று..

அனைவருக்கும் 
அன்பின் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துகள்!..

வாழ்க நலம்..  
* * *

ஞாயிறு, அக்டோபர் 20, 2019

வாழ்க மாமன்னன்..

தஞ்சை அரண்மனை வளாகத்தில்
புத்தகக் கண்காட்சி அரங்கு அமைப்பதற்காகக்
குழிகள் தோண்டியபோது
பழைமையான பொருட்கள்
கிடைத்துள்ளன...

அதைத் தொடர்ந்து அங்கே
அகழ்ந்து ஆய்வு செய்வதற்கு
கோரிக்கைகள் எழுந்துள்ளன...

சோழர்களது அரண்மனையின்
அடித்தளத்தின் மீது தான்
பின்னர் வந்த நாயக்கர்கள் 
தங்களுக்கான அரண்மனையை எழுப்பினார்கள்
என்று ஒரு கருத்தும் உள்ளது..

விரிவான ஆய்வு நடத்தப்பட்டால்
நல்ல விவரங்கள் கிடைக்கக் கூடும்..

இன்னும் இரு வாரங்களில்
சதயப்பெருவிழா நிகழ உள்ளது..

தமிழகத்தின் பெருமையை விண்ணளவுக்கு உயர்த்திய
மாமன்னன் ஸ்ரீராஜராஜ சோழனின் புகழ் வாழ்க...











தமிழ் மண்ணின்
பெருமை தன்னைக்
கடல் கடந்தும் நிலைநாட்டிய
மாமன்னன் திருவடிகளைப் போற்றி வணங்குகின்றேன்..

ராஜராஜனின் புகழ் ஓங்குக.. 
ஃஃஃ  

வெள்ளி, அக்டோபர் 18, 2019

அவனன்றி...

நேற்று புரட்டாசி மாதத்தின் நிறைவையொட்டி வெளியிட்ட பதிவில்
ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியின் அவதாரத் திருக்காட்சியினைக் குறிக்கும் சிறு காணொளியை பதிவு செய்திருந்தேன்...

அந்தப் பதிவு கூட இரவு மூன்று மணிக்கு (இ.நே - 5:30)
எழுந்து செய்யப்பட்டதாகும்..

Fb ல் வெளியாகியிருந்த படம் 
காரணம் ஒரு மாதமாக 12 மணி நேர வேலை...

காலை ஐந்து மணிக்கு கம்பெனிப் பேருந்தில் புறப்பட்டால்
அறைக்குத் திரும்பி வர மாலை 5:30 மணி ஆகிவிடும்...

புரட்டாசி மாதம் ஆதலால் -
Salad மற்றும் ஆயத்த உணவுகள் தவிர்த்து


பொது சமையலறையில் சாப்பிடுவதில்லை...

மாலை அறைக்குத் திரும்பி கைகால் கழுவிக்கொண்டு
அறைக்குள்ளேயே சமைத்து ஒருவேளைக்கு சாப்பிடுவது வழக்கம்...

மாலை வேளைகளில் இணையம் இயங்குவதில்லை என்று முன்பே சொல்லியிருக்கின்றேன்...

இதனால் தான் இந்த மாதம் பதிவுகள் அதிகம் வெளிவரவில்லை...

நள்ளிரவுக்குப் பின் இணையம் கிடைக்கும் என்பதால்
அதிகாலை 2:45/3:00 என்று எழுந்து பதிவுகளைக் கவனிக்கிறேன்..

இப்படியான சூழ்நிலையில்
வழக்கம் போல அதிகாலை வெளியான எங்கள் பிளாக் பதிவினை வாசித்தபின் வேலைத்தளத்திற்குச் சென்று அங்கு அப்போதிருந்த வேலைகளை முடித்து விட்டு -

காலை ஆறு மணியளவில் இணையத்துள் நுழைந்து
Fb யைத் திறந்தால் அங்கே வெளியாகியிருந்த படம் தான்
இன்றையப் பதிவில் இருப்பது...

அருமையான திருப்பாசுரத்தை Fb யில்
பதிவு செய்த அன்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

இங்கிருக்கும் சூழலில் புரட்டாசி மாதம் முழுதும்
விரதத்தை செம்மையாகக் கடைபிடித்தோமா?.. - என்று
ஐயம் கொண்டிருந்த மனம் ஆனந்தத்தில் மூழ்கியது...

அவனருள் அனைவருக்கும் ஆகட்டும்..
ஆனந்தம் எங்கெங்கும் பொங்கியே பெருகட்டும்..

ஐயன் நம்மை நினைத்துக் கொண்டு தான்
இருக்கின்றான்..
ஐயமில்லை.. ஐயமேயில்லை..


ஸ்ரீ ப்ரசன்ன வெங்கடேசப்பெருமாள்
தஞ்சை 
தூணாய் அதனூடு அரியாய் வந்து தோன்றி
பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய்
சேணார் திருவேங்கட மாமலை மேய
கோணா கணையாய குறிக்கொள் எனைநீயே..(1042)
-: திருமங்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
ஃஃஃ

வியாழன், அக்டோபர் 17, 2019

நமோ நாராயணாய 5

இன்றுடன் புரட்டாசி நிறைவு பெறுகின்றது..

நன்றி - ஸ்ரீ கேசவ் ஜி  
நாள் முழுதும் நம்பெருமாள் தன் நினைவுடன் இருந்ததாக ஒரு நினைப்பு..

நாம் அவன் நினைவில் இருக்கின்றோமோ.. இல்லையோ!..

அவன் மட்டும் நம் நினைவுடன் தான் இருக்கின்றான் என்பது உண்மை...

தொடரும் ஐப்பசியில் தீபாவளி, கேதார கௌரி வழிபாடு,
கந்த சஷ்டி சூர சங்காரம் என கொண்டாட்டங்கள்...

எல்லா வேளைகளிலும் அவனருள் துணை நிற்பதற்கு
மனதார வேண்டிக் கொள்வோம்..

இன்றைய பதிவில்
அற்புதமான ஒரு காட்சி -
பக்த ப்ரகலாதா என்னும் திரைப்படத்திலிருந்து...


ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
ஃஃஃ

சனி, அக்டோபர் 12, 2019

நமோ நாராயணாய 4

புண்ணிய புரட்டாசி மாதத்தின்
நான்காவது சனிக்கிழமை இன்று..

 ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளிச் செய்த
திருப்பாசுரங்களுடன் திருமாலவனின் திவ்ய தரிசனம்

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப்பெருமாள்
தஞ்சை 
ஸ்ரீப்ரசன்ன வெங்கடேசப் பெருமாள் - தஞ்சை 
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே என்று.. (2082)

ஸ்ரீ பார்த்தசாரதி - திரு அல்லிக்கேணி 
ஸ்ரீ செல்வநாராயணப் பெருமான்
மேல்கோட்டை 
வாயவனை அல்லது வாழ்த்தாது கையுலகம்
தாயவனை அல்லது தாந்தொழா பேய்முலைநஞ்சு
ஊணாக உண்டான் உருவோடு பேரல்லால்
காணா கண்கேளா செவி.. (2092)

ஸ்ரீ அத்தி வரதராஜன் - திருக்காஞ்சி 
நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்
சென்று திசையளந்த செங்கண்மாற்கு என்றும்
படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம்
அடையாழி நெஞ்சே அறி.. (2102)

ஸ்ரீ சௌந்தரராஜப்பெருமாள்
நாகப்பட்டினம் 
இறையும் நிலனும் இருவிசும்பும் காற்றும்
அறைபுனலும் செந்தீயும் ஆவான் பிறைமருப்பின்
பைங்கண் மால்யானை படுதுயரம் காத்தளித்த
செங்கண்மால் கண்டாய் தெளி.. (2110)

ஸ்ரீ அப்பக்குடத்தான் - கோயிலடி 
குன்றனைய குற்றஞ்செயினும் குணங்கொள்ளும்
இன்று முதலா என்னெஞ்சே என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித் திரு.. (2122)

ஸ்ரீராமஸ்வாமி - திருக்குடந்தை 
அயல் நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சி
உயநின் திருவடியே சேர்வான் நயநின்ற
நன்மாலை கொண்டு நமோநாராயணா என்னும்
சொன்மாலை கற்றேன் தொழுது.. (2138)

ஸ்ரீகோதண்டராமன் - வடுவூர் 
ஸ்ரீ வீரநரசிங்கப்பெருமாள் - தஞ்சை யாளி நகர் 
தொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி
எழுதும் எழுவாழி நெஞ்சே பழுதின்றி
மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கைதொழுவான்
அந்தரம் ஒன்றில்லை அடை.. (2139)


நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும்
பாடிலும் நின்புகழே பாடுவன் சூடிலும்
பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
என்னாகில் என்னே எனக்கு.. (2169)
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
ஃஃஃ

செவ்வாய், அக்டோபர் 08, 2019

விஜயதசமி


அன்பின் இனிய
விஜய தசமி நல்வாழ்த்துகள்!..

மங்கலகரமாகிய நவராத்திரி வைபவத்தில் -

வீரத்துக்கு அதிபதியான ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியையும் 
செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீ ஆனந்த லக்ஷ்மியையும் 
கல்விக்கு அதிபதியான ஸ்ரீ ஞான சரஸ்வதியையும்

- நெஞ்சார வணங்கி மகிழ்ந்தோம்.

இன்று விஜயதசமி.
ஸ்ரீ துர்காம்பிகை - பட்டீஸ்வரம்
அநீதியை எதிர்த்து  ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி -
மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்தாள்.
ஒன்பதாம் நாளன்று மகிஷன் வீழ்ந்தான்.

அத்துடன் ஆணவமும் அகந்தையும் அடியோடு அழிந்தன...

அன்னை போர்க்கோலத்தில் இருந்து மீண்டாள்.. 
சாந்த ஸ்வரூபிணியாக மங்களத் திருக்கோலம் கொண்டருளினாள்.

மறுநாள் தேவர்களும் முனிவர்களும் சகல உயிர்களும்
அன்னை ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியைக் கொண்டாடி மகிழ்ந்தனர். 

 

ஊர்க்கும் உண்டு உடையானின் சிறப்பு என்பது சிவநெறி.

அதுபோல அம்பிகை தனது திருக்கரங்களில் ஏந்தியருளிய 
ஆயுதங்களுக்கும் சிறப்பு உண்டு!..


அயிகிரி நந்தினி நந்தித மேதினி விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்த்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே.. 


என்று, ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியையும்
அவள் தாங்கி நின்ற ஆயுதங்களையும்  வணங்கி மகிழ்ந்தனர்.

விமலையின் வெற்றியைக் கொண்டாடியபடியால் - விஜய தசமி.

சிறார்களுக்கான கல்வி பயிற்றுவிப்பதற்கும்
இல்லத்தில் நல்லனவற்றை மேற்கொள்வதற்கும்
புதிய வணிகம் தொடங்குவதற்கும் உகந்த நாளாக -
இந்நாள் விளங்குகின்றது. 


ஸ்ரீராமபிரான்  - ராவணனை வெற்றி கண்ட நாள் என்றும்,

பஞ்சபாண்டவர்கள் தங்களது அஞ்ஞாத வாசம் முடிந்தபின் -
வன்னி மரத்தில் ஒளித்து வைத்திருந்த ஆயுதங்களை மீண்டும் 
எடுத்துக் கொண்டு - ஸ்ரீதுர்கா தேவியை வழிபட்ட  நாள் என்றும் 

- விஜயதசமி குறிக்கப்படுகின்றது..

என்றாலும் -


விரதம் இருந்து மகிஷனை வென்ற மகேஸ்வரி - 
வெற்றிக் களிப்புடன் சிவபெருமானின் திருமார்பில் சாய்ந்து 
பேருவகை கொண்ட நாள் - விஜயதசமி!..
* * * 


நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் 
நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்!.. 

மக்களிடையே தனது அருள்மொழிகளால் நல்லுறவை வளர்த்தவர்
மகான் ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

அவதார புருஷராகிய ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா மகாசமாதி அடைந்த நாள் விஜயதசமி (15 அக்டோபர் 1918) நாளாகும்.

மேலும்,


மதுரை ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள் சித்தி ஆனதும் (1932) விஜய தசமி நாளில் தான்!.. 

ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள் ஜீவசமாதி மதுரை அரசரடியில் உள்ளது.

ஆக, உத்தம புருஷர்களை சிந்திக்கவும் வந்திக்கவும் உகந்த நாள்.

எல்லாவற்றையும் விட இன்னொரு சிறப்பு!..

ஒன்பது நாட்களும் ஒருமித்த சிந்தையுடன் - 
அன்புடனும் தன்னை வழிபட்டவர்களின் இல்லங்களைத் தேடி, விஜயதசமியன்று அன்னை பராசக்தி வருகின்றாள்...

அம்பிகை நம்மைத் தேடி வருகின்றாள் என்பது எத்தனை மகத்தானது!.. 

அவளை மகிழ்வுடன் நாம் வரவேற்போம்!.. 
அவள் திருவடிகளைப் போற்றி வணங்குவோம்!.. 


எங்கெங்கு காணினும் சக்தியடா - தம்பி 
ஏழுகடல் அவள் வண்ணமடா!.. - அங்கு
தங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்தத்
தாயின் கைப்பந்தென ஓடுமடா!.. - ஒரு
கங்குலில் ஏழு முகிலினமும் - வந்து 
கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ?.. - எனில்
மங்கை நகைத்த ஒலியெனலாம் - அவள்
மந்த நகையங்கு மின்னுதடா!..

காளை ஒருவன் கவிச்சுவையைக் - கரை
காண நினைத்த முழுநினைப்பில் - அன்னை
தோளசைத்தங்கே நடம் புரிவாள் - அவன்
தொல்லறிவாளர் திறம் பெறுவான் - ஒரு
வாளைச் சுழற்றும் விசையினிலே - இந்த 
வையம் முழுவதும் துண்டு செய்வேன் - என
நீளஇடை யின்றி நீநினைத்தால் - அம்மை
நேர்ப்படுவாள் உந்தன் தோளினிலே!..
- : பாவேந்தர் பாரதிதாசன் :-


யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீநிறைந்தாய்
தீது நன்மையெல்லாம் நின்றன் செயல்களன்றி இல்லை
போதும் இங்கு மாந்தர் வாழும் பொய்மை வாழ்க்கை எல்லாம்
ஆதிசக்தி தாயே என்மீதருள் புரிந்து காப்பாய்!..
- : மகாகவி பாரதியார் :-


உனக்கே வெற்றி!.. உந்தனுக்கே வெற்றி!.. 
உன் திருவடிகளைப் போற்றுகின்றேன்!..
மஹிஷனை வென்றவளே!.. 
மண்ணுலகைக் காத்தவளே!..
ஏலவார்குழலீ!.. எங்கள் அன்னையே!..
நின் திருவடிகள் சரணம்!.. சரணம்!..




நன்றி - ஸ்ரீ கேசவ் ஜி 
விஜய தசமி எனும் நன்நாள்
பொலிவு கொண்ட பெண்மை போரிட்டு வென்ற நாள்!..
பேர் கொண்ட பெண்மை பெருமை கொண்ட நாள்!..

காத்யாயனாய வித்மஹே கன்யகுமாரி தீமஹி
தந்நோ துர்கி: ப்ரசோதயாத்:

ஓம் சக்தி!.. ஓம் சக்தி!..
ஓம் சக்தி!..
 * * *