திங்கள், மே 06, 2019

வரச் சொல்லடி..


அன்பிலாதவைகளை அறக்கடவுள் வாட்டுவதைப் போல
தமிழகத்தை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கின்றது இக்கோடை...

அன்பு எனும் என்பு - முதுகெலும்பு
இற்றுப் போனது தமிழகத்துக்கு!...

பலன் தரும் மரங்கள் வேண்டாம்!...
நிழல் தரும் மரங்களும் வேண்டாம்!...
குளங்களும் ஆறுகளும் கூட வேண்டாம்!..
ஆனால் - குடிக்க மட்டும் தண்ணீர் வேண்டும்...

மற்றதுக்கு - வெள்ளையன் காட்டிய வழிதான்..

அதுக்காக இளம் பெண்கள் மேனியழகைக் காட்டி
ஆட்டம் எல்லாம் ஆடி விளம்பரம் செய்து விட்டார்கள்...


காய்ந்து கிடக்கும் கானகம் 
திடீரென்று மழை வந்தால் கூட
எதிர்கொள்ள அஞ்சுகின்றார்கள் மக்கள்...

இந்த வாரத்தில் புயல் வீசக்கூடும் என்ற எச்சரிக்கை வந்ததும்
சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - என்று
ஓலமிட எல்லா ஊடகங்களும் தயாராக இருந்தன...

ஆயினும் -
இயற்கை இரங்கவில்லை...
இங்கே இறங்கவில்லை...

புயலும் மழையும் இடம் பெயர்ந்து ஒடிசா மாநிலத்தில்
கோரத் தாண்டவம் ஆடிவிட்டு ஓய்ந்திருக்கின்றன...

புயலின் கோரத்தைக்
காணொளியில் கண்டபோது மனமெல்லாம் பதறியது..

இடருற்றவர் எவராயினும் அவர்தமக்கு இரங்குவோம்...
துயரிலிருந்து அவர்கள் மீள்வதற்குவேண்டிக் கொள்வோம்...

இந்நிலையில் -
ஒப்புக்கு இருக்கும் அறநிலயத் துறை
திருக்கோயில்களில் வருணயாகம் செய்யுங்கள்..
அதைச் செய்யுங்கள்.. இதைச் செய்யுங்கள்.. - என்று
இறங்கி வந்தது தான் உச்சகட்டம்...

அறநிலையத் துறையின் வேண்டுகோளை
இறைவனும் இயற்கையும் ஏற்பார்களா?.. தெரியவில்லை!...


 இயற்கை வளங்கள் எல்லாம்
அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில்
அவற்றை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும்
சிற்றுயிர்கள் பரிதவித்து நிற்கின்றன..


கூடு கட்ட முடியாமல்
குறுஞ் செடியின் நிழலில்  
சமீபத்தில் ஸ்ரீமதி கோமதி அரசு
அவர்கள் தமது தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில் -
தரை துடைத்த ஈரத் துணியில் அமர்ந்திருக்கும்
புறாவைக் கண்டு மனம் நெகிழ்ந்து போனது...

அதன் விளைவே இந்தக் கற்பனை...

வாழ்தல் வேண்டி மதுரைக்கு வருகின்றன இரு புறாக்கள்..


தங்குதற்குத் தோதான இடம் எங்கும் கிடைக்கவில்லை...

முட்டைகளைத் தாங்கியிருக்கும் - பெண் புறா
மிதமிஞ்சிய வெக்கையினால் தவிக்கிறது...

இதைக் கண்டாஆண்புறா
தனது துணையின் துயர் தீர்க்க - இடம் தேடிப் புறப்பட்டு விட்டது..

ஆனால் - அது திரும்பி வருவதற்குள்
பெண்புறா நல்லதோர் இடத்தைக் கண்டு விட்டது..

அந்த மகிழ்ச்சியுடன் -
தனது துணைக்காக தூது விடுக்கின்றது...

வழியில் எங்காவது
அந்த ஆண் புறாவைக் கண்டால்
தயவு செய்து சொல்லி விடுங்கள்!...

நன்றி - திருமதி பக்கங்கள் 
வரச் சொல்லடி - அவனை
வரச் சொல்லடி..

நல்ல நான்மாடக் கூடலிலே
நான் தேடி இடம் கண்டேன்..

வரச் சொல்லடி - அவனை
வரச் சொல்லடி..

சிபி ராஜன் எமைக் காத்த
கதை சொல்லவோ..
தமிழ் மாமன்னர் தூதான
திறம் சொல்லவோ..

யாம் வாழ்ந்த நலம்
தொன்மைப் புகழ் அல்லவோ..
இன்று எமக்கென்று
இழைத்ததுவும் துயர் அல்லவோ!.. 

வரச் சொல்லடி - அவனை
வரச் சொல்லடி..

இரை தேட மனம் இன்றி 
இடம் தேடினான்..
நல் இடம் கொண்டு 
நான் வாழ வழி தேடினான்..

மனங் கொண்ட நல்லோர்கள்
இடம் இங்கு தான்..
என் மனங் கொண்டு
நான் வாழ சுகம் இங்குதான்!...

வரச் சொல்லடி - அவனை
வரச் சொல்லடி..

பிடிசோறும் குடிநீரும் 
தரும் நெஞ்சங்கள்..
குளிர் மனம் கொண்டு
நிழல் காட்டும் அருட்செல்வங்கள்

இணையோடு நான் இங்கு
நலங் கொள்ளுவேன்..
இனி எந்நாளும் அவர் வாழ
தமிழ் சொல்லுவேன்...

வரச் சொல்லடி - அவனை
வரச் சொல்லடி..

வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்
ஃஃஃ

33 கருத்துகள்:

  1. // இயற்கை இரங்கவில்லை இங்கே இறங்கவில்லை...//

    ஆம், நன்றி கெட்டவர்கள் சென்னை மக்கள் என்று வேறிடம் சென்றுவிட்டது.

    Good Morning.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. // கூடு கட்டமுடியாமல் குறுஞ்செடியின் நிழலில்...//

    மனிதனின் சுயநலத்துக்கு பலியாகும் சக உயிர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்கள் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. வரவேற்புப்பாடல் அற்புதம். ஈரக்கவிதை. படங்கள் பொருத்தமாய் மனதில் நிற்கின்றன. கொடும்புலி மனிதன் வைத்திருக்கும் தண்ணீர் பம்ப்பை எட்டிப்பார்த்து ஏமாறுவது வேதனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      அந்தக் குழயினுள் தண்ணீர் இருந்தாலும் புலி அதனை எப்படிக் குடிக்கும்?...
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  4. மழை வேண்டும் எனத் தமிழக மக்கள் மனப்பூர்வமாக நினைப்பதே இல்லை. பெய்து கெடுக்கிறது என்றே சொல்வார்கள்; சொல்கிறார்கள். பெய்யும்போதும் அதைச் சேமிக்கும் திறன் இல்லை/ அதைக் கற்றுக்கொடுக்க இன்னொரு கரிகாலன் வரவேண்டும்! அது எப்போதோ? ஆனால் மற்றவர்களைக் குறை கூற மட்டும் தயங்குவதில்லை. தண்ணீருக்காகக் கையேந்தி நிற்கிறோமே என்னும் எண்ணமே எழுவதும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரை நகருக்குள் தண்ணீர் இல்லை, காலி குடங்களை தூக்கி கொண்டு மக்கள் அலைபாய்கிறார்கள் அங்கும். இங்கும்.

      பழமுதிர் சோலை போகும் வழியில் கண்ட காட்சி பைப் தண்ணீரை திறந்து விட்டு போய் விட்டார்கள். பைப் அடியில் வைத்த
      பாத்திரம் நிறைந்து தண்ணீர் கீழே போகிறது. பார்க்க கஷ்டமாய் இருந்தது, அந்த வழியாக வந்த பெண்ணை மூட சொன்னேன். அவர்கள் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே அமர்ந்து துவைக்க ஆரம்பித்தார்கள்!
      அந்த பெண்தான் தண்ணீரை திறந்து விட்டு போன ஆள்.
      அந்த பெண் பக்கத்து கடைக்கு போய் அரசன் சோப் வாங்கி வந்து துவைக்கிறார்கள்.

      வீணாகும் தண்ணீர் பார்த்து மனம் பதறுகிறது.

      நீக்கு
    2. கீதாக்கா ரொம்ப சரியாகச் சொன்னீங்க. மழை பெய்தால் அதை வரவேற்பவர் இல்லை அதனால்தான் வந்த புயலும் ஓடிப் போனது. மழையை அவதியாக நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக மழை அருள் கிடைக்காது.

      கோமதிக்கா மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு பத்தாது. கொஞ்சம் கூட இல்லை என்றே சொல்லுவேன். ப்ளாஸ்டிக் பாட்டிலை குப்பையை பேருந்து ஜன்னல், ரயில் ஜன்னல் வழி வெளியெ தூக்கி எறிகிறார்கள். இதற்கு சிங்கப்பூர் போன்று பெரிய அளவில் ஃபைன் கட்டச் சொல்ல வேண்டும். தண்ணீருக்கும் சேர்த்து ஒவ்வொருவரும் வரி அதிகமாகக் கட்ட வேண்டும் என்று... இல்லை என்றால் மக்களுக்குப் பொறுப்போ இல்லை விழிப்புணர்வோ வரவே வராது.

      கீதா

      நீக்கு
    3. >>> மழை நீரைச் சேகரிக்க வேண்டும்...<<<

      மக்களுக்கு அது மிகவும் கஷ்டமான வேலையாற்றே!..

      >>> மதுரை நகருக்குள் தண்ணீர் இல்லை..<<<

      ஊரைச் சுற்றி இருந்த கண்மாய்கள் எல்லாவற்றையும் மக்கள் நலன் என்கிற பெயரில் அழித்தாயிற்று..

      இனியொரு வைகையை சொக்க நாதர் தோற்றுவித்தால் தான் உண்டு...

      >>> சிங்கப்பூர் போல பெரிய ஃபைன் கட்டச் சொல்ல...<<<

      பிளாஸ்டிக் பைகளை ஒழிப்பதே தோல்வியில் முடிந்ததாகச் சொல்கிறார்கள்...

      வேதாளங்கள் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறி விட்டன...

      ஒட்டு மொத்த ஜனங்களும் திருந்துவதாகத் தெரியவில்லை...

      கீதாக்கா, கோமதி அரசு, கீதா அனைவரது வருகைக்கும் நன்றி..

      நீக்கு
  5. கோமதி அரசுவின் ஒவ்வொரு பதிவுகளாலும் எங்களுக்கு அழகான கவிதைகள் கிடைக்கின்றன. இம்மாதிரி இருவரும் இணைந்து பேசிக் கொண்டும் பதிவுகள் போடலாம். இந்தப் பாடலை, "கண்ணனிடம் போய்ச் சொல்லடி!" பாடல் ராகத்தில் பாடிப் பார்த்துக் கொண்டேன். மனசுக்குள் தான்! வாயைத் திறந்தால் எல்லோரும் பயந்துட மாட்டாங்க? :)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா, சகோ வரகவி அவர் நம் படத்தை பார்த்தவுடன் கவிதை எழுதி விடுவார்.

      கண்ணனிடம் போய்ச் சொல்லடி பாடல் நீங்கள் பாடி கேட்க ஆசை.

      நீக்கு
    2. >>> எல்லாரும் பயந்துட மாட்டாங்க?.... <<<

      வேப்பிலை அடித்துக் கொள்ளலாம்..
      தயவு செய்து பாடலை உங்கள் குரலில் பதிவு செய்யுங்கள் அக்கா!...

      நீக்கு
  6. பாடல், புறாக்கள், படங்கள் அத்தனையும் இனிமை.
    மனிதர்கள் செய்யும் கொடுமைக்கு இறை என்ன
    பதில் கொடுக்கும்.

    கோமதி அவர்களின் பதிவைப் பாராமல் விட்டுவிட்டேன். மீண்டும் தேடிப் படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. இந்தத் தேர்தலில் உங்கள் பரப்புரை வேண்டாம். எங்கள் பகுதி குளம் கண்மாயை நன்றாக தூர் வாரும் கட்சிக்கே எங்கள் வாக்குகள் என்று அனேக ஊர்கள் சொல்லியிருந்தாலே, தமிழகத்தில் தேர்தலுக்காக இறைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோடிகள், வெயில் காலத்தில் மழை சேமிப்புக்கு தயாராகியிருக்கும். அடுத்த தேர்தல் வரை, தண்ணீருக்குக் கவலை இருந்திருக்காது. ஆனால் மக்களுக்கு, தண்ணீரைவிட டாஸ்மாக் முக்கியமாகப் போய்விட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத்தமிழன், நீங்கள் சொல்லிய கருத்து அருமை.

      நீக்கு
    2. அப்படியெல்லாம் வலியுறுத்தியிருந்தால் தான் ஊரும் நாடும் எப்போதோ
      உருப்பட்டு இருக்குமே!...

      அரசியல் வாதிகளுக்கும் - மக்கள் இந்த மாதிரியெல்லாம் கேட்டு விடக்கூடாது என்பது தானே ஆசையாக இருக்கிறது...

      நீக்கு
  8. மனிதனுக்கு ஆறறிவு என்று கணித்தான் மனிதன்.
    ஐந்தறிவுக்கு இருக்கும் இரக்க உணர்வை இழந்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  9. வருத்தம் தர வைக்கும் நிகழ்வுகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  10. மழையும் நீரும் தமிழனைப் பார்த்து பயப்படுகிறது வரச் சொல்லடி கவிதை ரசிக்க வைத்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  11. பதிவு அருமை.
    கவிதை மிக அருமை.

    குறுஞ்ச் செடியின் நிழலில் படுத்து இருக்கும் மணிப்புறாக்கள் பார்க்க பாவமாய் இருக்கிறது, வெயிலுக்கு நிழல் தேடி கிறங்கி தான் போய் இருக்கிறது.

    ஈரத்தூணி மேல் அமர்ந்து இருக்கும் புறா இனிமையாக அருமையாக பாடுகிறது.

    வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
    வையகம் நன்றாக இருந்தால் நாமும் நன்றாக இருப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வையகம் நன்றாக இருந்தால் தான் நாமும் நன்றாக இருப்போம்...

      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  12. குரங்கிற்கு தண்ணீர் தருவதைப் பார்த்ததும் தினம் Z தமிழில் சோழிங்கநல்லூரில் குரங்குகள் தண்ணீர் இல்லாமல் தவிப்பதாகவும் தண்ணீர் தொட்டி அமைத்து அவற்றிற்கு நீர் அருந்த வழி செய்யுங்கள் அதன் தாகம் தணித்தால் ந்ல்லது என்று சொல்லிக் கொண்டு இருப்பது நினைவு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல விஷயத்தைத் தான் சொல்லியிருக்கிறார்கள்...
      எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கட்டும்...

      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  13. நம் மனிதர்களின் சுயநலத்தால் பிற உயிர்கள் வாடுவதைக் கண்டு மனம் வேதனை. அண்ணா உங்கள் கவிதை மிக மிக அருமை. கோமதிக்காவின் தளத்துப் படத்தை வைத்து கதை புனைந்து என்று செம.

    மனிதன் ஒன்றைப் புரிந்து கொள்ளவில்லை. கோமதிக்காவின் தளத்தில் நாங்கள் சொல்லியிருந்ததையெ இங்கும். மனிதன் இல்லாமல் எல்லா ஜீவராசிகளும் வாழ்ந்துவிடலாம் ஆனால் அவை இல்லாமல் மனிதன் வாழ்வது என்பது அழிவை நோக்கித்தான் இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சமுதாயம் திருந்துவதாக இல்லை...

      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  14. புலி தண்ணீர்ப்பைப்பை எட்டிப் பார்க்கிறதே தண்ணீர் இருக்கிறதோ பாவம் புலி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் குழாயினுள் தண்ணீர் இருந்தாலும் புலி அதனை எப்படிக் குடிக்கும்?...

      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  15. மனதை கனப்படுத்துகின்ற நிகழ்வுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..