சனி, மே 04, 2019

பூம்புகார் 4

இப்போது நாம் சிலப்பதிகாரக் கலைக்கூடத்தினுள்
சுற்றிக் கொண்டிருக்கின்றோம்...

சாம்பல் நிறம் பூசப்பட்ட தாழ்வாரம்... மங்கலான வெளிச்சம்..

கரு நிற சிற்பத் தொகுப்பு... எல்லாவற்றுக்கும் மேலாக அழிந்து போன - அழிக்கப்பட்ட விவரக்குறிப்புகள்...

விளக்குகள் வரிசையாகப் பொருத்தப்பட்டிருந்தாலும் அவற்றுள்
ஒளிர்பவை - ஒரு சில தான்...

மாலைச் சூரியனின் கதிர்களால் எதிர்புறத்தில் மட்டும் கொஞ்சம் வெளிச்சம்..

வடக்கு நோக்கிய கட்டடம் அல்லவா.. தெற்கு மற்றும் மேல்புற தாழ்வாரங்களில் போதிய வெளிச்சம் இல்லை...

மாலை மயங்கி இருள் கவிந்து விட்டால் -
போதிய வெளிச்சம் இல்லாத நிலையில்
உட்புறத்தின் நிலைமையைக்
கொஞ்சம் எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்...

கொஞ்சம் நிம்மதியான விஷயம் என்னெவெனில் -
கலைக்கூடத் தாழ்வாரங்கள் சுத்தமாக இருக்கின்றன...

கலைக்கூடப் பணியாளர்கள் சுற்றி வருவதால் -
கலைக்கூடத்தின் உள்ளே புகுந்து
சேட்டைகள் புரிவார் - யாருமில்லை!...

இதோ மீண்டும் சிற்ப வரிசைக்குள் -

கானல் வரி பாடும் கோவலன்
திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அதுஓச்சி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி..
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழிதல் கயற் கண்ணாய்
மங்கை மாதர் பெருங்கற்பு என்றறிந்தேன் வாழி காவேரி.. 

கானல் வரி பாடும் மாதவி 
மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்கயல் கண் விழித்து ஒல்கி நடந்தாய் வாழி காவேரி..
கருங்கயல்கண் விழித்து ஒல்கி நடந்த எல்லாம் நின் கணவன்
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி..

கோவலனின் பிரிவு  

கண்ணகியைச் சேர்ந்த கோவலன்
கவுந்தியடிகளுடன் பூம்புகாரை விட்டு நீங்குதல் 
வாழ்க்கை எனும் ஓடம்.. வழங்குகின்ற பாடம்.. 
 ஆயர் குல மகள் மாதரியின் மனையில் அடைக்கலம் 
மதுரையில் மனை மங்கலம் 
சீறடிச் சிலம்பில் ஒன்று கொளல் 
கள்ள மனங்கொண்ட கைக்கோல் கொல்லனைக் கண்டனன் கோவலன்  
கலைக்கூடத்தின் எல்லா சிற்பப் படிவங்களையும் நான் படம் எடுக்க வில்லை என்று இப்போது எனக்குத் தோன்றுகின்றது...


தேறா மன்னா.. செப்புவதுடையேன்... 

மலை வளங்காண வந்த செங்குட்டுவன்  

சிற்பத் தொகுப்பை இயன்ற வரை வழங்கியிருக்கிறேன்..

ஏறத்தாழ 50 சிற்பப் பதிவுகள் என்று அங்கே கண்டதாக நினைவு... அத்தனையையும் படம் எடுக்கவில்லைதான்..

அங்கே இருந்த சூழல் அப்படி..

இன்றைய பதிவிலுள்ள படங்கள்
தங்களைக் கவர்ந்திருக்கும் என நம்புகிறேன்..

நேற்று நள்ளிரவு இரண்டு மணிக்கு விழித்து பதிவை ஒழுங்கு செய்தும் இந்தப் பதிவினை வெளியிடுவதில் தாமதம் ஆகி விட்டது..

அதுவுமில்லாமல் கோவலன் வீழ்வதை
நேற்று வெளியிட மனமில்லை...

தொடரும் பதிவில் மேலும் சில படங்களைக் காணலாம்...

வாழ்க நலம் 
ஃஃஃ

35 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    திடீரென ஒரு இனமே அழிவது போல எப்படி திடீரென யாருக்குமே இந்தக் கலைப்பொக்கிஷங்கள் மேல் அக்கறை இல்லாமல் போனது? யாரும் எந்த முயற்சியும் எடுக்காமல் இருக்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு...

      எல்லாம் தன் முனைப்பு தான்!...

      கண்ணகி நம்மவள்...
      காவிரிப்பூம்பட்டினம் நம் ஊர் ...
      என்ற நினைவு இருக்குமாயின் இன்றைய பூம்புகார் எவ்வளவோ முன்னேறியிருக்குமே...

      இது சட்டசபைத் தொகுதிகளுள் ஒன்று என்பது வேடிக்கை...

      நீக்கு
    2. சட்டசபை வெறும் சத்தசபை ஆகி வருடங்கள் பல ஆகின்றனவே....!

      நீக்கு
    3. அன்பின் ஸ்ரீராம்...
      தங்களது கருத்துக்கு ஆதரவாக ஒரு எழுத்தை மாற்றிக் கூறுவதற்கு ஆசைதான்..

      ஆனால் அது குற்றமாகிவிடக் கூடும்...

      இருப்பினும் பூம்புகார் போன்ற தொன்மை நகருக்குப் பிரதிநிதி ஆவதற்கே முற்பிறவி புண்ணியம் வேண்டும்..

      அது கிடைத்தும் காமதேனுவின் பாலைக் கழிவில் ஊற்றியதாகி விட்டது...

      தனது பேர் பெருமையைக் காக்கவே பட்டமும் பதவியும் என்றாகி விட்ட பிறகு -

      ஊராவது... ஊரின் பேராவது!...

      நீக்கு
    4. // தங்களது கருத்துக்கு ஆதரவாக ஒரு எழுத்தை மாற்றிக் கூறுவதற்கு ஆசைதான்.. //

      புரிகிறது.

      செத்த பாம்பை அடிக்க வேண்டாம். விடுங்கள்!!!

      நீக்கு
  2. சிறப்பான படப் பகிர்வு. எல்லா சிற்பங்களும் அருமையாய் இருக்கின்றன. மிக அழகாக படம் எடுத்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. என்னென்ன சம்பவங்கள் நிகழ்கின்றன என்று சில சிற்பங்களை பார்த்துச் சொல்ல முடியாது. இங்கு தெளிவாக அறிய முடிவது சிறப்பு. உங்கள் உழைப்புக்கு தலை வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. கானல்வரிகள்... ஏன் இப்படிச் சொல்லப் படுகின்றன என்று சொல்லுங்களேன். எனக்கு இந்த வரிகள் ஒரு அழகிய தமிழ்த் திரைப்பாடலை நினைவூட்டுகின்றன. .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      இது நெய்தல் நில பாடல் வகை..
      மதுரைக்குள் கண்ணனைப் போற்றி ஆய்ச்சியர் குரவை...
      வேட்டுவ வரி என கொற்றவை வழிபாடும் வருகின்றதே....

      தமிழுக்குள் ஆழ்ந்திடும் போது தான் நமது பெருமையே நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது...

      தமிழர்க்கு இனம் இல்லை மதம் இல்லை என்றொரு புதிய கோஷம்...

      மதுரையின் ஆயரும் ஆய்ச்சியரும் தமிழர்கள் இல்லையா?..
      அவர்கள் கண்ணனைப் பாடிப் புகழ்ந்தாக இளங்கோவடிகள் பாடுவது வெறுங் கோஷமா.. வேஷமா?...

      நீக்கு
    2. விளக்கத்துக்கு நன்றி துரை ஸார்.

      //தமிழர்க்கு இனம் இல்லை மதம் இல்லை என்றொரு புதிய கோஷம்...
      மதுரையின் ஆயரும் ஆய்ச்சியரும் தமிழர்கள் இல்லையா?..​//​

      தமிழர் என்றொரு இனமுண்டு
      தனியே அதற்கொரு கதையுண்டு...

      தமிழரையே தனி இனமாகப் பார்க்கிறார்கள். கூகிள் மாதிரி அதற்குள் இன்னும் நெருங்கி, நுணுக்கிப் பார்த்தால் இவை எல்லாம் கண்ணுக்குத் தெரியும்.

      எல்லோருக்கும் அவசரம்.

      மேலோட்டமாகப் பார்த்து விட்டுப் போய்விடுகிறோம்.

      நீக்கு
    3. இலக்கியங்களை ஆழ்ந்து படித்து, ஆராய்ந்தவர்களுக்கு பலர் 'தமிழன்' என்ற பெயரில் செய்வது வெற்று கோஷம் என்று தெரியும். ஆனாலும் அமைதியாக இருக்கிறார்கள். ஐம்பெரும் காப்பியங்களுக்கு முன்னும் பல நூல்கள் இருந்திருக்கலாம்.

      கொஞ்சம் யோசனை செய்துபார்த்தால், 'யாதவர்கள்' என்பவர்கள் இந்தியா முழுவதும் பரந்து விரிந்திருக்கிறார்கள். அதுபோல 'நாயக்கர்கள்' மற்றும் பல சாதி இனங்கள். அவரவர் அவரவர் நிலத்துக்கேற்ற கடவுள்களை வணங்கிவந்திருக்கிறார்கள். இந்து மதம் என்பது, பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது. 'தமிழக வரலாறு', 'தெலுங்கர்கள் வரலாறு', 'மலையாளிகள் வரலாறு'... எனப் பல்வேறுபட்டதும் 'வரலாறு' என்ற கூறுக்குள் அமைவதுபோல, 'இந்து' என்ற சமயத்தில் இந்தக் கூறுகள் எல்லாம் அடங்கிக்கிடக்கின்றன. 'ஜெயின்' சமயத்தினர் மஹாலக்‌ஷ்மியை வழிபடுவதும், இதுபோலவே ஒவ்வொரு சமயமும் இந்துமதக் கூறுகளை உள்ளடக்கியிருப்பதும் காணத் தக்கது.

      நீக்கு
  5. பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் உங்கள் பதிவு வழியாக பூம்புகாரை கண்டு மகிழ்ந்தேன்.

    ஒருமுறை உறவினர்களை அழைத்துக் கொண்டு போன போது மின்சாரம் போய் விட்டது, டார்ஜ் லைட்டின் ஓளியில் அவர்களுக்கு நானும், என் கணவரும் கதையை சொல்லிக் கொண்டே போன போது எங்கள் பின்னால் பெரிய கூட்டம்.

    அவர்கள் எல்லோரும் எங்களுக்கு நன்றி சொன்னார்கள்.

    கதையும் தெரிந்து கொண்டோம். சிலைகளையும் கண்டு களித்தோம் என்றார்கள்.

    என் நினைவுகளையும் இங்கே சொல்லிவிட்டேன்.

    சிப்பி வடிவில் வீடுகள் இருந்தது. விருந்தினர் மாளிகை இருந்தது மிக அழகாய்.
    இப்போது எப்படி இருக்கிறதோ! தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி..

      இந்தப் பூம்புகார் பதிவு தங்கள் மனதில் எத்தனை எத்தனை நினைவு எழுப்பி விட்டிருக்கின்றது!..

      புத்தம் புதிதாய் கலைக்கூடத்தைக் கண்டு களித்த அந்த நாட்களை நினைவு கூர்வதும் எத்தனை சந்தோஷம்...

      பள்ளி நாட்களில் படித்த சிலம்பிற்குள்
      மீண்டும் ஆழ்வதற்கு மனம் துடிக்கின்றது...

      சும்மாவா சொன்னார் மகாகவி -

      நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர்
      மணியாரம் படைத்த தமிழ் நாடு என்று!..

      நீக்கு
    2. கோமதி அக்கா....

      எனக்கும் நீங்கள் எப்படி விளக்கங்கள் சொல்லி இருப்பீர்கள் என்று அறிய ஆவல். இந்தப் படங்கள் மூலம் நீங்கள் சென்ற அந்தக்காலம், உங்களுக்கு நினைவூட்டிய அந்த வரலாற்றை, கதையை சுருக்கமாக உங்கள் பாணியில் உங்கள் உணர்வுகளுடன் எழுதி எங்களுக்கு அனுப்புங்களேன்.

      நீக்கு
  6. இத்தனை அழகான சிற்பங்களை வடிவமைத்தவருக்கும், அதைப் படம் பிடித்துக் காட்டியதுக்கும் பாராட்டுகள், நன்றி. மிக அழகாகப் படம் பிடித்திருக்கிறீர்கள். இதை எல்லாம் பார்க்கையில் பூம்புகார் பார்க்கும் ஆவல் அதிகம் ஆகிக் கொண்டே போகிறது. பொருத்தமான தலைப்புகள். கோமதி அரசுவின் விளக்கங்கள் எப்படி இருந்திருக்கும் எனக் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரையும் பாராட்டுரையும் நன்றி...

      இந்தப் பதிவுகளுக்கு மேற்கோளாக
      சிலப்பதிகாரத்தை மறுபடியும் படித்துக் கொண்டிருக்கின்றேன்..

      பள்ளி நாட்கள் மீண்டும் மனதில் மலர்கின்றன...
      இன்னும் கொஞ்சம் நன்றாகப் படித்திருக்கலாமே.. என்று தோன்றுகின்றது..

      அத்துடன் இப்போது தான் புரிகிறது -
      அன்றைய ஆசிரியப் பெருமக்கள் எத்தனை தூரத்துக்கு
      சிலப்பதிகாரத்துக்குள் ஆழ்ந்திருந்தார்கள் என்று!...

      எனது மனதில் எண்ண அலைகளை இங்கே விவரிக்க இயலாதவனாக இருக்கிறேன்...

      உண்மையில் மகிழ்ச்சியாக பெருமையாக இருக்கின்றது...

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  8. "நெய்தலங் கானல்" என்று நெய்தல் நிலப்பகுதியைக் குறிப்பது வழக்கம்.
    அந்த இடத்தில் பாடப்பெற்ற வரிப் பாடல்கள் (இசைப்பாடல்கள்)ஆகையால் அது 'கானல் வரி' என்று சொல்லப்படுகிறது, என்று என் கணவர் சொன்னார்கள் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா. எனது இன்னொரு வேண்டுகோளை இன்னமும் பார்க்கவில்லை நீங்கள்!

      நீக்கு
  9. பாரம்பர்யத்தை காப்பாற்றி அடுத்த சந்ததியினருக்கு கொடுக்ககூடிய ஆட்சியாளர்களை நாம் தேர்ந்து எடுக்காதது நமது குற்றமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  10. ஸ்ரீராம் , உங்களுக்கு நிறை நம்பிக்கை என் பேரில். ஆனால் நான் அதற்கு தகுதிதான என தெரியவில்லை. பாடத்தில் படித்த விஷ்யங்களை அங்கு பகிர்ந்து கொண்டேன்.

    கண்ணகி சோகமாய் உட்கார்ந்து இருக்கும் காட்சியும், அதன் பின்னால் மூன்று குளங்களும் தெரியும். அதில் கோவில்குளங்கள் சென்று வா உன் சோகம் சரியாகும் என்று ஒரு பெண் கன்னகியிடம் சொல்வது போல் காட்சி அமைந்து இருக்கும்.

    நான் அந்த குளங்கள் திருவெண்காடு கோவில் அதில் மூன்று குளங்கள் இருக்கும் யாருக்கு என்ன பிரார்த்தனயோ அது நடக்கும் என்று சொன்னேன். குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு என்று நம்பபட்ட செய்தி.


    கண்ணகி அந்த அம்மாவுக்கு சொல்வது கணவர் இல்லாமல் தீர்த்தமாட கூடாது என்பது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதையெல்லாம் சிறு விளக்கமாக ஒவ்வொரு சிற்பத்துக்கும் கீழே அமைக்கவேண்டும். அப்போதுதான் எல்லோரும் ரசித்து நம் வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியும்.

      நீக்கு
  11. ஒவ்வொரு சிற்பத்திற்கு கீழும் சுருக்கமாய் இரண்டு வரியில் எழுதி இருந்தது நெல்லைத் தமிழன். இப்போது அழிந்து விட்டதோ என்னவோ தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிற்பங்களுக்குக் கீழே குறிப்பு எழுதியுள்ளனர்..
      அவை அழிந்தும் அழிக்கப்பட்டும் உள்ளன...

      நீக்கு
  12. பல அருமையான தகவல்கள் கோமதி அரசு மூலம் தெரிந்து கொண்டேன். இத்தகைய அரிய தகவல்களை இக்காலத்துக் குழந்தைகளும் தெரிந்து கொள்ளும்படி பாடங்கள் அமைக்க வேண்டும். பேராசை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
      இக்காலத்துக் குழந்தைகள் நிச்சயம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்...
      நன்றி...

      நீக்கு
  13. பூம்புகாரையோ அங்குள்ள சிற்பங்களையோ கண்டதில்லை. உங்களுடைய பதிவில் புகைப்படங்களாக பொருத்தமான சிலப்பதிகார வரிகளோடு சேர்த்துப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா!

    https://youtu.be/G402XeF2J0Y இந்தச் சுட்டியில் இயற்பாவாக சிலப்பதிகாரத்தில் இருந்தாலும் இசைகூட்டி கானல்வரிகளைப் ;பாடக் கேட்கலாம். கானல் வரிகள் என்பதற்கு கடற்கரையின் ஓசை என்றும் கூடப் பொருள் சொல்லுவதுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு நல்வரவு...
      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
      தங்கள் வருகையும் மேலதிகச் செய்தியும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  14. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  15. படங்கள் அத்தனையும் மிக மிக அழகாகத் தெளிவாக இருக்கின்றன. என்ன அழகான சிற்பச் செதுக்கல்கள். இப்படி அழகான ஒரு கலைக்கூடம் பராமரிப்பு இல்லாமல் குழந்தைகள் அனைவரும் வந்து பார்த்து தெரிந்து கொள்ள முடியாத சூழல் சூழ்ந்து இருக்கிறதே. வேதனைதான்.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..