திங்கள், ஜனவரி 14, 2019

மங்கல மார்கழி 30

ஓம் 

தமிழமுதம்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது... (007)
அருளமுதம் 

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 30




வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை 
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப்பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப் 
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே 
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் 
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்..

திருப்பாவையின் சிகரம்..
குன்றிலிட்ட விளக்கு..
ஆண்டாள் அளித்த அமுதம்..
அதனை அப்படியே அள்ளிப்
பருக வேண்டியது தான்...

ஆண்டாள் அரங்கனின்
நல்லருளும்
அமுதத் தமிழின்  நற்சுவையும்
நம்மை எல்லாம்
வாழ வைப்பதாக!..

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்
திருவடிகள் போற்றி!.. 
*


திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே 
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே 
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே 
உயரரங்கற்கே கண்ணியுகந் தருளிதாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே 
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே..
*

தித்திக்கும் திருப்பாசுரம் 


தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து.. (2344)
-: ஸ்ரீ பேயாழ்வார் :- 

இயற்கையின் சீதனம் 

பூசணி 


மஞ்சள் மற்றும் சாம்பல் என 
இரு நிறங்களில்
மனங்கவர்வதோடு
குலம் காப்பது...

நமது மண்ணுக்கே உரியது...



மார்கழி முழுதும்
தமிழ்ப்பாரம்பர்யத்தைப் பறை சாற்றுபவை
பூசணிப் பூக்களே...

அந்தக் காலத்தில்
கிராமம் நகரம் என்றில்லாமல்
மரபு வழி நிற்கும் ஹிந்து மக்கள் 
மார்கழிக் கோலத்தின் நடுவில் பூசணிப் பூவை
வைத்து குறிப்பால் உணர்த்துவார்கள்
இந்த வீட்டில் பருவ மங்கை இருக்கின்றாள்
என்பதை...

சமைந்த பெண்களின் முகம் பார்த்தறியாத
காலத்தில் நடைமுறையிலிருந்த
நளினமான நாகரிகம்...

அதன்பின் இருவீட்டாரும்
மனங்கலந்து பேசி விட்டால்
தை - மாசியில் கல்யாண மேளந்தான்!...



இப்படியான
பூசணி நீர்ச்சத்து மிக்கது...

உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுப்பது..
உடற்சூடு அடங்கி விட்டாலே
நோய் நொடிகள் வாராது...

சாம்பல் பூசணி சமையலில்
சிறப்பிடம் பெறுவதைப் போல
கண் திருஷ்டியைத் தீர்ப்பதிலும்
பில்லி சூனியம் முதலான
துஷ்ட திருஷ்டிகளை அகற்றுவதிலும்
சிறப்பிடம் பெறுகிறது...

சமஸ்க்ருதத்தில் பூசணிக்கு
கூஷ்மாண்டம் என்று பெயர்..

யாகசாலைச் சடங்குகளிலும்
ஸ்ரீ பத்ரகாளி பூஜையிலும்
பூசணியின் பங்கு குறிப்பிடத்தக்கது..

ஆனாலும் நம் மக்கள்
திருஷ்டி கழித்தபின்
நடுச்சாலையில் பூசணிக் காயைப்
போட்டுடைப்பது கண்டிக்கத்தக்கது..

மஞ்சள் பூசணியில் 
நோய் எதிர்ப்பினைக் கொடுக்கும்
பீட்டா கரோட்டின் நிறைந்திருப்பதாக
இப்போது கண்டறிந்திருக்கின்றார்கள்..
*

சிவதரிசனம் 
தஞ்சபுரி
-: தஞ்சாவூர் :- 

ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர்.. 
இறைவன் - ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர்  
அம்பிகை - ஸ்ரீ ஆனந்தவல்லி


தலவிருட்சம் - வில்வம்  
தீர்த்தம் - வெண்ணாறு

அம்பிகை திருவுடைக்கோடியம்மனாக எழுந்து
தஞ்சன் தஞ்சாக்கன் எனும் அசுரர்களை
வதம் செய்தருளியபோது
அஞ்சி நடுங்கிய தேவர்களுக்கு
ஈசன் எம்பெருமான் தஞ்சமளித்தருளிய திருத்தலம்..

ஸ்ரீ பால சாஸ்தா
தேவர்களைக் காப்பாற்றும் பொறுப்பினை
ஏற்றுக் கொண்டதால் இத்தலத்தில் 
ஸ்ரீ சிறை காத்த ஐயனார் என்று திருப்பெயர்...

குபேரன் இத்தலத்தில் வழிபாடு செய்துதான்
இராவணனிடம் தான் இழந்த செல்வங்களை
மீண்டும் பெற்றான்..

மேற்கு நோக்கிய திருத்தலம்..

கடன்கள் தீர்வதற்கும்
இழந்த செல்வங்களைத் திரும்பப் பெறுவதற்கும்
வழிபட வேண்டிய ஐந்து திருத்தலங்களுள்
முதன்மையானது - தஞ்சபுரி..

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து
திருஐயாறு - ஐயம்பேட்டை
செல்லும் பேருந்துகள் எல்லாம்
திருக்கோயிலின் அருகில்
நின்று செல்கின்றன...


ஸ்ரீ வீரநரசிங்கப்பெருமாள் - தஞ்சை.. 
இத்திருக்கோயிலின் எதிரில் தான்
யாளி நகர் எனப்படும்
தஞ்சை மாமணிக் கோயில்களுள் ஒன்றான
ஸ்ரீ வீரநரசிங்கப்பெருமாள் திருக்கோயில்
அமைந்துள்ளது...
***

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைகாப்பு


ஸ்ரீ பிரகதீஸ்வரரும் அம்பிகையும்
விடை வாகனத்தில்.. 
மந்திர நான்மறை ஆகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.. (3/22)

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்
ஸ்ரீ அல்லியங்கோதை உடனாகிய
தியாகராஜப்பெருமான் - தஞ்சை.. 
நம சிவாயவே ஞானமும் கல்வியும்
நம சிவாயவே நானறி இச்சையும்
நம சிவாயவே நாநவின் றேத்துமே
நம சிவாயவே நன்னெறி காட்டுமே..(5/90)

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய
திருத்தொண்டத் தொகை
திருப்பாடல் 10 -11


பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தை சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருஆரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிசார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே... (10) 

மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணாற் கடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவலூர்க் கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே... (11)

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவாசகம்


அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச்
சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவது இனியே..
*
இந்த அளவில்
சிந்திக்கவும் வந்திக்கவும் செய்த
ஈசன் எம்பெருமான் திருவடிகள் போற்றி.. போற்றி!..


பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி.. 
***

அன்பின் நண்பர்களுக்கு
வணக்கம்..
மார்கழி முழுதும் தொடர்ந்து வந்து 
உற்சாகமும் ஊக்கமும் அளித்த
தங்களுக்கெல்லாம் மனமார்ந்த நன்றி...

தங்களுடைய கருத்துரைகளுக்கு 
என்னால் உடனுக்குடன்
பதிலளிக்க இயலவில்லை...
குறைதான்..
இருப்பினும் மனதிற் கொள்ளற்க..

இணைய வேகம் ஒருபுறம் இருக்க
எதிர்பாராத விதமாக இருப்பிடம் மாற்றம் ஆனது..
அத்துடன் வேலை நேரமும் மாற்றம் ஆனது..

எல்லாவற்றையும் கடந்து
மார்கழிப் பதிவுகளை உங்கள் முன்பாக
சமர்ப்பித்து விட்டதில் மகிழ்ச்சி 
***

இன்று போகி..
எங்கெங்கும்
புன்மைகள் விலகி
நன்மைகள் பெருகட்டும்..


அனைவருக்கும் 
அன்பின் இனிய
பொங்கல் நல்வாழ்த்துகள்.. 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

24 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    மீண்டும் ஒரு பழைய நல்ல குறளை (அப்போ நல்லா இல்லாத குறள்னு ஒண்ணு உண்டா என்று கேட்கக் கூடாது!!) நினைவுபடுத்தி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. திருப்பாவையை இப்போதுதான் வல்லிம்மா பதிவில் எம் எல் வி குரலில் கேட்டு ரசித்துவிட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. இன்றென்ன பாசுர விளக்கம் தர மறந்து விட்டீர்களா? பூசணி, பரங்கி விசேஷம் நன்று. பரங்கியை எப்போதாவதுதான் சமைப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      இன்றைய நூற்பயன் அப்படியே ஆண்டாள் அருளியதாகவே இருக்கட்டும் என்று நினைத்தேன்...

      இதோ சேர்த்து விட்டேன்...

      நீக்கு
  4. தஞ்சபுரீஸ்வரர் - ஆனந்தவல்லி அம்பிகை, வீரநரசிங்கப்பெருமாள் தரிசனம் ஆச்சு.

    நிறைவுடன் மார்கழியை நிறைவு செய்துவிட்டீர்கள். நல்ல முயற்சி. என்ன ஆச்சு உங்கள் புதிய பணி? வாழ்த்துகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தற்சமயம் இங்குள்ள ஸ்டோரில் விட்டிருக்கிறார்கள்...

      சில வாரங்கள் கழித்துத் தான் தெரியும்...

      தங்கள் அன்பினுக்கு நன்றி..

      நீக்கு
  5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்களனைவருக்கும்
      அன்பின் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்....

      தங்கள் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. தஞ்சபுரீஸ்வரரையும் நரசிங்கரையும் பார்க்கலை! கேஷவின் ஓவியம் அருமை. பாசுர விளக்கமும் இல்லை. பூஷணி இங்கே அடிக்கடி வாங்குவோம். முன்னெல்லாம் வெள்ளைப் பூஷணியின் சாறு எடுத்துக் குடித்துக் கொண்டிருந்தோம். இப்போ நிறுத்திட்டோம். பறங்கி இங்கே சின்னக் கொட்டையாகவும் கிடைக்கும். மஞ்சளாகிப் பழுக்காமல் பச்சைப் பசேலென்றும் கிடைக்கும். துவையல், சாம்பார் எனச் செய்வதோடு சப்பாத்திக்கூட்டு, ஓலன் என்றும் செய்யறது உண்டு. அடைக்கும் போடுவது உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      வாய்ப்பு கிடைக்கும் போது அவசியம் தரிசனம் செய்யுங்கள்..

      நன்றி..

      நீக்கு
  7. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அது காற்றின் திசையைக் கணிக்கவேண்டிச் சொல்லப்பட்டாலும் உண்மையாகவே உங்களுக்கு இந்தத் தை மாதத்தில் இருந்து நல்லதொரு வேலை கிடைக்கப்பெற்று நல்லதொரு இடத்தில் தங்கவும் கிடைக்கப் பெற்று அமைதியாகவும் சந்தோஷமாகவும் வாழ வாழ்த்துகள் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி..

      தங்களனைவருக்கும்
      அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. நீங்கள் கூறியுள்ள கோயில்களுக்கு பல முறை சென்றுள்ளேன். இன்று உங்கள் மூலமாகச் செல்லும் வாய்ப்பு. நன்றி. பூசணியின் பெருமை மலைக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. மார்கழி முழுவதும் பக்தியோடு பதிவுகளை பகிர்ந்து தந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி ஜி.

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்களது வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.

      தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

      நீக்கு
  10. மார்கழி பதிவுகள் அனேகமாக அனைத்தையும் திரும்ப படிக்கவேண்டும்.

    தஞ்சை மாமணிக் கோவிலில் (3 கோவில்கள் அருகருகே), சென்ற தடவை மணிக்குன்றப் பெருமாளைச் சேவிக்க இயலவில்லை. நரசிம்மப் பெருமானைச் சேவித்தேன். இந்த முறை மனைவியோடு சென்றிருந்தபோது, நரசிம்மப் பெருமாளைச் சேவிக்க இயலவில்லை. 11:30க்கே நடை சாத்திவிட்டார்கள். இங்கு அவனுருவம் கண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனுர் மாசம் சீக்கிரம் நடை சாத்திடுவாங்க எல்லாக் கோயில்களிலும்.

      நீக்கு
  11. மார்கழி முடிந்து தை எட்டியாயிற்று. தை பிறந்தால் நல்லது பிறக்கும் என்பதற்கு ஏற்ப எல்லோருக்கும் நல்லது ந்டந்திடட்டும்! எல்லோரும் மகிழ்வுடன் இருக்க இறைவனிடம் பிரார்த்தனைகல்.
    பாடல்கள் தகவல்கள் அருமை.

    இரு பூஷணியுமே நம் வீட்டில் வாரத்தில் இடம் பெற்றுவிடும். எவ்வகையிலேனும்....நாளைக்கும் உண்டு...

    அதன் அருமை பெருமைகள் சொல்லியதும் சிறப்பு அண்ணா.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கள் திருநாள் வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. மார்கழி முடிந்து தை எட்டியாயிற்று. தை பிறந்தால் நல்லது பிறக்கும் என்பதற்கு ஏற்ப எல்லோருக்கும் நல்லது ந்டந்திடட்டும்! எல்லோரும் மகிழ்வுடன் இருக்க இறைவனிடம் பிரார்த்தனைகல்.
    பாடல்கள் தகவல்கள் அருமை.

    இரு பூஷணியுமே நம் வீட்டில் வாரத்தில் இடம் பெற்றுவிடும். எவ்வகையிலேனும்....நாளைக்கும் உண்டு...

    அதன் அருமை பெருமைகள் சொல்லியதும் சிறப்பு அண்ணா.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கள் திருநாள் வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  13. அமுதம் அனைத்தும் சிறப்பு.

    இரு வகை பூஷணியும் பயன்படுத்துவதுண்டு என்றாலும் வெள்ளைப் பூஷணி/இளவன்/தடியன் காய் தான் அதிகம் பயன்படுத்துவதுண்டு.

    மத்தன்/மஞ்சள் பூஷணி எரிசேரி செய்யும் போது பயன்படுத்தலுண்டு.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் சுற்றத்தார் அனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துகள்!

    எங்கள் பகுதியில் உள்ள கோயிலில் இன்றிலிருந்து வெள்ளி வரை திருவிழா. நான் இம்முறை பொறுப்பாளராக இருப்பதால் நன்கொடை கலெக்ஷன் என்று பிஸி. வெள்ளி வரை பிசிதான். நிறைய நிகழ்ச்சிகள் இடம் பெறும். கோயில் பணிகள் கல்லூரி வீட்டு பணிகள் என்று அதனால்தான் பதிவுகள் வாசிக்க நேரம் இல்லாமல் போயிற்று.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  14. அனைத்து படங்களும் அருமை.
    பொங்கலுக்கு வேண்டிய காய்கள் வந்து விட்டது இன்று.இரண்டும் மிக சிறப்பானது.
    உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
    உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்.
    நல்லதே நடக்க மாதவனும், மகேசனும் அருள் புரிவார்கள்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..