ஞாயிறு, ஜனவரி 27, 2019

விருந்தினர் பக்கம் 03

அன்பின் நெல்லைத்தமிழன் அவர்களின்
பயணக் குறிப்புகள்..
*
புள்ளமங்கை ஆலந்துறை நாதர் கோயில்
(தொடர்ச்சி)
ஃஃஃ

கிபி 900ல் பராந்தக சோழன் இக்கோயிலின் கருவறையையும் அர்த்த மண்டபத்தையும் திருப்பணி செய்துள்ளான்.

பராந்தக சோழன், ராஜராஜ சோழனின் கொள்ளுப்பாட்டன்.  பராந்தகன் காலத்தில்தான் பலவித சிற்பங்களோடு கோயில் உருப்பெற்றிருந்திருக்கிறது.

இந்தக் கோயிலின் வெளிப்புறத்தில் உள்ள துர்க்கை (மஹிஷாசுர மர்த்தனி என்பார்கள்)..



சிலை மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தது. கருங்கல்லில் எருமைத் தலைமீது நின்று சக்கரம் சங்கோடு, வில், சூலம் போன்ற ஆயுதங்கள் ஏந்தி இரு புறமும் கலைமானும் சிங்கமும் இருக்க, ஒரு வீரன் தன் தலையை கத்தியால் அரிந்து தருவது போலவும், 


இன்னொரு புறம், இன்னொரு வீரன் தன் துடையைக் கிழித்து இரத்த பலி தருவது போலவும் சிற்பங்கள் உள்ளன.


இந்தத் துர்க்கை கோலம், திருநாகேச்வரம், பட்டீச்வரம் மற்றும் இந்தக் கோயிலில் ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டவை என்றும் மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் சொல்கிறார்கள்..





கோயிலின் சுற்றுச்சுவரில், நம் முழங்காலுக்கும் கீழான பகுதியில்
சிறு சிறு சிற்பங்கள் நிறைய செதுக்கியுள்ளனர்..

இவை இராமாயண மகாபரதக் காட்சிகள் என்று சொல்கின்றனர்..




ஒவ்வொன்றையும் புரிந்து கொள்ள முடியாதபோதும் சிற்பங்களின் சிறப்பை நம்மால் புரிந்து கொள்ள முடியும்..



கோயில் கருவறை கோபுரத்தில் விஷ்ணு நரசிம்ஹ சிற்பங்களும் இருக்கின்றன.. சுமார் அரை மணி நேரம் கோயிலில் இருந்திருப்போம்.. சிற்பங்கள் தந்த உணர்வை எழுத்தில் வடிக்க இயலாது,, எனக்கு முகத் திருப்தியாக அமைந்த கோயில் மற்றும் கலை தரிசனம்..

காரணமில்லாமல் இதற்கு நான் பயணப்பட்டிருக்க முடியாது..
அதனால் தான் இதனை இணையத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது..

கல்வி கற்ற அந்தணர்கள் வாழ்ந்த ஊர்..  என்று, சம்பந்தர் சொல்கிறார்..
அதற்கான தடயம் இருப்பதாகவே தெரியவில்லை..

எல்லா கிராமங்களைப் போல - சாதாரணத் தெருக்களைக் கொண்டிருக்கும் கிராமத்தின் ஒரு பகுதியாகவே தோன்றுகிறது...


கோயிலில் மண்டபத்தில் ஒரு பாடலை ஒட்டி வைத்திருந்தனர்.. இரவு படுக்கப் போவதற்கு முன்பு சொல்வது நல்லது - என.. 

அந்தப் பாடல் உங்களுக்காக..

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்செழுத்தை 
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே...

பிறகுதான் இந்தப் பாடல் பட்டினத்தார் பாடியது என்று தெரிய வந்தது..
ஏகம்பன் அவனது கோயிலை விட்டுவிட்டு வந்தவர்களையும் பொறுத்தருளட்டும்...

1980 களில் இந்தக் கோயிலுக்குச் சென்றுவிட்டு அதைப் பற்றி எழுதியவர்கள் குறிப்பிட்டிருப்பது..

தினமணி நாளிதழில் வெளியாகி கோயிலிலேயே பத்திரிக்கைப் பக்கத்தை வைத்திருக்கிறார்கள்..

மாஞ்சோலையாகத் திகழும் நெடுஞ்சாலை வழியாகப்
பயணப்பட்டு இவ்வூருக்குள் நுழைகிறோம்..
இருமருங்கும் நெல்லும் கரும்புமாக
வயல்வெளிகள் வரவேற்கின்றன..
ஊரைச் சுற்றி எங்கும் குன்றுகள் போல
சிறிதும் பெரிதுமாக மணல்மேடுகள்..
கோயில் ஆற்றின் நடுவே அமைந்துள்ளதோ
என்ற பிரம்மையை உண்டாக்குகின்றன..

ஆனால் நான் சென்றபோது அப்படி வயல்சூழ் இடங்களைப் பார்க்கவில்லை..

கோயிலை விட்டு வெளியில் வரும்போது என்மனதில் தோன்றியவை இரண்டு..

ஒன்று -
எதைத் தேடி நாம் எல்லாரும் நம் ஊரை விட்டு விட்டு வெளி இடங்களுக்குப் புலம் பெயர்ந்தோம்?..

பாடல் பெற்ற திருத்தலங்கள், கோயில்களை விட்டு நாம் விலகி வந்ததன் காரணம் என்ன?..

அதை நாம் அடைந்து வாழ்க்கையில் வெற்றி பெற்றோமா.. இல்லை -
அந்த ஊரை விட்டு விடாமல் அங்கேயே இருக்கின்ற மனிதர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களா?..

இரண்டாவது -
வெளிநாடுகளில் புகழ்பெற்ற மியூசியங்களுக்குச் சென்றிருக்கிறேன்..
அங்கு இருப்பவை பளிங்கில் வடிக்கப்பட்ட கிரேக்க சிலைகள்.. ஆனால்
நம்மிடம் ஒவ்வொரு ஊரிலும் இருப்பவை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, 
நம் முன்னோர்கள் தத்தம் கலைத்திறமையால் வடித்த சிற்பங்கள்..

இவைகளின் மதிப்பை நாம் ஏன் புரிந்து கொள்ளவில்லை?..

இந்த இடங்களை அரசாங்கம் செலவு செய்து சுத்தப்படுத்தி வைத்தால்
அவை எத்தனை அன்னியச் செலவாணிகளையும் சுற்றுலா வருபவர்களையும் ஈர்க்கும்?...

இன்னும் பல கோயில்களைப் பற்றி வாய்ப்பிருக்கும்போது பகிர்ந்து கொள்கிறேன்..
***
வெகு சிறப்பாக எழுதியுள்ளார்
அன்பின் திரு. நெ. த., அவர்கள்...

சென்ற வருடம் இத்திருக்கோயிலுக்குச்
சென்றிருந்த போது பூட்டிக் கிடந்தது..

மீண்டும் தரிசனம் செய்ய வாய்ப்பினை
அருள்வான் - இறைவன்....

இனி, பதிவினைப் பற்றி
எனது கருத்து...

இந்த இடங்களை அரசாங்கம் செலவு செய்து
சுத்தப்படுத்தி வைத்தால்..

அதான் சுத்தப்படுத்தி வெச்சுட்டாங்களே!...

கலையழகு மிக்க சிற்பங்கள்
அன்னியச் செலவாணிகளையும் ... ஈர்க்கும்?...

அன்னியச் செலவாணிகளை மட்டுமா!..
அயோக்கியக் களவாணிகளையும் அல்லவா ஈர்க்கின்றது!?...


வாழ்க நலம் 
ஃஃஃ

45 கருத்துகள்:

  1. முடிவில் தங்களது ஆதங்கமான கேள்வி சிந்திக்க வைத்தது தமிழரே...

    நாம் அனைவருமே நமது முன்னோர்களின் பேராற்றலை உணர்ந்து பார்க்க மறுக்கின்றோம்.

    அதன் பலனை நாம், அனுபவித்தே தீரவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி.... சமூகத்தின் ஒவ்வொரு அங்கமும் கோவில் கட்டுவதிலும் அதனை பராமரிப்பதிலும் சமூகத்தின் நல்லொழுக்கத்துக்குக் காரணியாக அதனை வைத்திருப்பதிலும் ஈடுபட்டிருந்திருக்கிறது.

      கடந்த 300 ஆண்டுகளில் நாம் எந்த அளவு மாறியிருக்கிறோம், சமூகத்தைவிட, தன் நலத்தையே பேணியிருக்கிறோம் என்பதைக் காட்டும் கண்ணாடிதான் தற்போதைய கோவில்களின் நிலைமை என்று எனக்குத் தோன்றுகிறது.

      நீக்கு
    2. இதற்குத்தான் நான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்துவிட விரும்பினேன் தமிழரே...

      நீக்கு
  2. கோவில் சென்று அங்கு கலை அம்சம் நிறைந்த சிற்பங்களை ஒவ்வொன்றையும் ரசித்து படம் எடுத்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நெல்லைத் தமிழன்.

    கோவில்கள் பழைமை மாறாமல் சீர் அமைத்தால் நல்லது, ஆனால் அதை கெடுத்து விடுகிறார்கள்.

    பழைய மூலிகை ஓவியங்களை அழித்து விட்டு இவர்கள் ஏதோ வரைந்து வைக்கிறார்கள், பின்னம் அடைந்து இருந்தாலும் கலை அம்சம் நிறைந்த சிற்பங்கள் எல்லாவற்றையும் குப்பை போல் மூலையில் போட்டு வைத்து இருக்கிறார்கள்.

    அந்த அந்த கோவில்களில் உள்ள உற்சவர்களை (மிக அழகாய் வடிவமைத்த) காட்ட பயப்படுகிறார்கள் குருக்கள், பட்டர்கள்.

    மேலகடம்பூர் அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருக்கோவிலில் உள்ள அருள்மிகு ரிஷபத் தாண்டவ மூர்த்தி மிகவும் அழகாய் இருப்பார், அதை தயங்கி தயங்கி காட்டினார் குருக்கள்.

    பிரதோஷ்காலத்தில் வழிபட்டால் சகல தோஷ நிவர்த்தி ஆகும் என்று சொன்னார்.
    படம் விற்றார்கள்.

    சுற்றலாத் துறை கவனிக்கலாம் நீங்கள் சொல்வது போல்.
    வெளி நாட்டில் அப்படியே பழமையை காப்பாற்றி வருகிறார்கள்.
    அடுத்த பதிவுக்கு காத்து இருக்கிறேன்.

    திருவெண்காடு துர்க்கையை பார்த்து வாருங்கள் அவ்வளவு அழகாய் வில், சூலம் ஏந்தி மிக அழகாய் இருப்பார்.






    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்.

      கோவிலை சீரமைப்பது என்பது ஒரு கலை. நிறைய செலவு பிடிக்கும் விஷயம். அதனைச் செய்யும் திறமை, அதற்குக் கொடுக்கவேண்டிய முக்கியத்துவம் எல்லாம் நம் சமூகத்தில் இருப்பதுபோல் தெரியவில்லை.

      விஜிபி சகோதரர்கள், சென்னையில் அவர்களது விஜிபி பீச் இடத்தைக் கட்டும்போது, தென்னகத்திலிருந்து கோவில்களிலிலிருந்து (பழைமையான ஆனால் சிதைவுற்ற) தூண்களை மற்றும் சிற்பங்களை அவர்களது விஜிபி பீச் இடத்தில் வைத்தார்கள். மிகுந்த எதிர்ப்பு வர ஆரம்பித்ததும், அப்படி கலைப்பொருட்களை லவட்டுவதை நிறுத்தினார்கள் என்று படித்திருக்கிறேன்.

      நீக்கு
    2. கோவில்களுக்கு ஏராளமானவர்கள் வருகிறார்கள். பல கோவில்களில் பாதுகாப்பு என்பது இல்லை. யார் என்ன நோக்கத்தோடு வருகிறார்கள் என்பதை அறிய இயலாது. அதனால்தான் உற்சவ விக்கிரகங்களை பெரும்பாலும் பூட்டு பூட்டி வைத்திருக்கிறார்கள். சிறப்பினைச் சொல்லத் தயங்குகிறார்கள். (அதன் பழமை, சிறப்பு தெரிந்துவிட்டால் திருடர்களுக்கு வசதியாகிவிடுமே என்று. இதனைப் பற்றி விரிவாக எழுதலாம், ஆனால் அது அரசியலாகிவிடும். எப்போ நம்முடைய சொத்தைக் காப்பதை விட்டுவிட்டு நாம் அந்த அந்த இடங்களைவிட்டு விலகி வந்தோமோ அப்போதே 'தெய்வ நம்பிக்கை' அற்றோருக்கு பெரிய வாய்ப்பாக அது அமைந்துவிட்டது.

      நீக்கு
    3. 89-90ல் நான் வேதாரண்யம் ஆபீஸ் வேலையாகச் சென்றிருந்தபோது, அங்கிருந்த பிரம்மாண்டமான கோவிலில் மரகத லிங்கம் தரிசித்திருக்கிறேன். அங்கே கலைமகள் சன்னிதியில் ஏராளமான ஓலைச்சுவடிகளைப் பார்த்தேன் (இறைந்து கிடந்தது).

      நம்மிடம் பெரிய பெரிய கோவில்கள் உண்டு. அதனைப் பராமரிக்கும் ஆட்கள் குறைவு, எப்படி ஒவ்வொரு கோவிலையும் அதன் புனிதம் கெடாமல் Profit Centerஆக (அதாவது அந்தக் கோவிலை தானே நடத்துவதற்கு ஏற்ற வருவாயை ஈட்டுவதாக) ஆக்கிக்கொள்வது என்றுதான் சிந்திக்கணும். கோவில் நிலங்களை மீட்பது என்பது நெடுங்காலம் ஆகும் பணி ஆகும். (கோவிலைக் கட்டினபோதே அதற்குரிய நிலங்களை எல்லாம் பிரித்துக்கொடுத்திருந்தனர் முன்னோர். அவைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. கோவிலுக்கும் விளைநிலத்தின் வருவாய் கொடுக்கப்படுவதில்லை)

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்கள் சொந்த கிராமத்தை இந்த அல்லது முந்தைய தலைமுறைகளிலில் விட்டுவிட்டு வந்து இன்னொரு இடத்தில் செட்டிலாகிவிட்டவர்களின் எண்ணத்தை அறிய ஆசை.

      நாம் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று சொல்லி கடந்துவிட முடியாது என்றே நினைக்கிறேன்.

      நீக்கு
  4. படங்கள் அழகாய் இருக்கின்றன. விவரங்கள் சுவாரஸ்யம். ஆதங்கம் எல்லோருக்கும் பொது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம்.... பெரிய பாடல் பெற்ற கோவில்களைப் பார்க்கும்போது எழும் ஆதங்கம் அது. திருவிடைமருதூர் கோவில், பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் (அங்க இருந்த துர்க்கை சிறிய சன்னிதிதான் ரொம்பப் பெரிதாக ஆகிவிட்டது, பெரும்பாலோர் தேனுபுரீஸ்வரர் ஆலயத்துக்குள் செல்ல மறந்துவிடுகிறார்கள்) இதெல்லாம் பார்க்கும்போது எவ்வளவு மக்கள் அதனைச் சுற்றி இருந்திருந்தால் இவ்வளவு பெரிய கோவில் எழுப்பியிருப்பார்கள் என்று எண்ணத் தோன்றியது.

      நீக்கு
    2. நாங்க பட்டீஸ்வரம் போயிருக்கோம். பக்கத்தில் உள்ள திருச்சத்திமுற்றமும் போய்த் தழுவக் குழைந்த நாயகியையும் தரிசித்திருக்கிறோம். இன்னொரு முறை கூடப் போக ஆவல்! விரைவில் போகலாம்! :))))
      http://sivamgss.blogspot.com/2006/08/108.html

      நீக்கு
    3. கீதா சாம்பசிவம் மேடம்... நான் திருச்சத்திமுற்றம் செல்லவில்லை. எனக்கு எந்தக் கோவிலையும் விட்டுவிட மனமில்லை. ஆனால் நேரம் கிடைக்கலை.

      விரைவில் கும்பகோணம் பயணம் வாய்க்கணும். விட்டுப்போன கோவில்களைத் தரிசனம் செய்யணும்.

      நீக்கு
  5. அன்பு முரளி மா,
    இத்தனை அழகான சிற்பங்களை நீங்கள் படம் எடுத்ததால் தெரிய வருகிறது. அதுவும் அந்த துர்க்கை மஹா சக்தி வாய்ந்தவள்
    மூன்றடி உயரம் பேபர் மாஷே தங்கப் பதுமையாக எங்கள் வீட்டுக்கு வந்து
    ஒரு மழை நாளில் கரைந்து போனாள்.
    பிறகு பட்டீஸ்வரம் சென்று பார்த்த பிறகே மனம் ஆறியது.

    அருள் வடிவம் அவள்.
    கச்சி ஏகம்பன் பாடல் எங்கள் தமிழ் மாஸ்டர் சொல்லிக் கொண்டே இருப்பார். அவரும் பிழைக்க வேண்டி திண்டுக்கல்லுக்கு வந்தவர் தான். எப்போது நம் முன்னோர்
    அவரவர் ஊரைவிட்டுப் புலம் பெயர்ந்தார்களொ
    அப்போதே ஆரம்பித்தது இந்த Exodus.

    YAARAICH SOLLI ENNA PAYAN. என் மாமா பையன் சென்னையைச் சுற்றி இருக்கும் கோவில்களில் உழவாரப் பணிகள் செய்கிறான். என் சம்பந்தியும் திருவல்லிக் கேணியில் இருந்தவரை
    கோவில் பணிகளைச் செய்து கொண்டுதான் இருந்தார்கள்.

    இங்கே கோவில்களில் சுத்தம் பரிசுத்தமாகக் கவனிக்கப் படுகிறது.
    நம் ஊரில் அழுக்குக்கே பழகிவிட்டோமோ என்னவோ.
    இப்போது நிறைய விழிப்புணர்ச்சி வந்திருக்கிறது. தமிழ்னாடு ஹெரிடேஜ் குழுவில்
    நீங்கள் சேர்ந்தால் இன்னும் பல இடங்கள் போகலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா.

      அப்போல்லாம் ஆசிரியப் பணிக்காக அவரவர் கிராமங்களிலிருந்து புலம் பெயர ஆரம்பித்தனர். பிறகு குடும்பம் குடும்பமாக பெயர ஆரம்பித்துவிட்டனர். நாங்க சென்னைக்கு மேல் படிப்பு, வேலை என்று புலம் பெயர்ந்து, சொந்த ஊர்னு ஒண்ணும் இல்லாமப் போயிடுச்சு.

      நீக்கு
    2. சென்றமுறை பட்டீஸ்வரம் துர்க்கை, தேனுபுரீஸ்வரர் தரிசனம் செய்தேன். (கோவில்களில் நடந்து நடந்து கால் வலி மிக அதிகமாகிவிட்டது. அவ்வளவு நெடிய கோவில்கள்)

      உழவாரப் பணி, இருப்பிடம் அருகில் உள்ள கோவிலில் பணி என்பதெல்லாம் ஒரு வகையில் மனச் சமாதானத்துக்கு உதவும்.

      நம்ம ஊரில் நாம் அழுக்குக்குப் பழகிவிட்டோம்தான். சுத்தம் என்பது குளிப்பதில் மட்டும் அல்ல, நம் இடம், நம்மைச் சுற்றியுள்ள இடம் சுத்தமாயிருக்கணும் என்பது நமக்குத் தெரியவில்லை.

      நீக்கு
  6. அன்பு துரை செல்வராஜு வணக்கம்மா.

    பதிலளிநீக்கு
  7. மிக அருமையான பதிவு!
    சொந்த ஊரிலேயே இருப்பவர்களை விடவும் வாழ்க்கையின் தேவைகளுக்காக புலம் பெயர்ந்தவர்களுக்கு இன்னும் அதிகமாக ஊர்ப்பாசம் இருக்குமென்பது என் நினைப்பு. அனுபவமும் அப்படித்தான் சொல்கிறது.
    தஞ்சை பெருவுடையார் கோவிலையே எடுத்துக்கொள்ளுங்களேன். அங்கே சும்மா பிராகாரத்தில் அமர்ந்திருந்தாலே போதும், மனதில் அமைதி கிடைக்கும். மதுரையிலிருந்து முதன்முதலாக தஞ்சை பெரிய கோவிலைப்பார்க்க வந்த நண்பர், அதை முழுமையாக பார்த்ததும் ' இந்த அமைதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இல்லை' என்றார்.
    நிறைய கோவில்களில் சுத்தம் இல்லை என்பதைக் கண்கூடாக பார்க்கலாம்.

    இத்தனை கோவில்களின் சிறப்புகளுக்குப்பின்னால் மாபெரும் வரலாறு, நம் முன்னோர்களுடைய வரலாறு இருக்கிறது. அவர்களுடைய தொலை நோக்குப்பார்வை, பொது நலன், சிறப்பான நிர்வாகம் இருக்கின்றன. உதாரணத்துக்கு, தஞ்சை பெருவுடையார் கோவிலில் விழும் மழை நீர் வீணாவதே இல்லையாம். கோவிலின் இரு புறமும் அதற்கான குளங்கள் வெட்டி கோவிலினுள்ளேயிருந்து மழை நீர் பூமி வழியே இந்த குளங்களில் நிரம்புகிறதாம். முதல் நீர் அழுக்கான, சுத்தமில்லாத நீராக இருப்பதால் அதை அப்படியே சிவகங்கை தோட்டத்தினுள்ள் திருப்பி விடப்பட்டு நல்ல தண்ணீர் மட்டும் சேமிக்கப்படுகிறதாம். இது ராஜராஜ சோழன் செய்தது. இப்போதும் இது நடைபெறுவதாக வரலாற்று அறிஞர்கள் சொல்கிறார்கள். இவற்றையெல்லாம் அரசு தான் நல்ல முறையில் கட்டிக்காத்து ஆவன் செய்ய வேண்டும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிதம்பரம் கோயிலிலும் இதே நடைமுறைப்படி பெய்யும் மழை நீரெல்லாம் சிவகங்கைக்குளத்திலும் பிரகாரத்தில் உள்ள கிணற்றிலும் சேமிக்கப்படுகிறது. இன்றளவும் இது நடந்து வருகிறது. நாங்க ஒரு மழை நாளில் நேரிலும் பார்த்தோம்.

      நீக்கு
    2. வாங்க மனோ சாமினாதன் மேடம்...

      தஞ்சை பெருவுடையார் கோவிலில் அமைதி இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதனை கோவில் என்ற நோக்கோடு பார்க்க வருகிறவர்கள் மிக மிகக் குறைவு என்பது என் அனுமானம்.

      'சுத்தம்' என்று சொல்லும்போது நம்மிடம் அது இல்லை. பொதுவா நாம நம்மை மட்டும் சுத்தமா வைத்துக்கொண்டு, பொது இடங்களை சுத்தமில்லாமல் செய்கிறவர்கள் (அது என்ன என் வீடா என்ற மனநிலை). தஞ்சை பெரிய கோவில் சன்னிதியிலிருந்து வெளியேறும்போது (கோவில் உள்ளேயே) நிறைய விபூதிக் கைகளால் சுவற்றின்மீது அடையாளப்படுத்திவிட்டுச் செல்கின்றனர் நம் மக்கள். வெளியிலும் விபூதியைப் பூசுகின்றனர். இந்தப் படங்களை இந்தத் தளத்தில் விரைவில் பகிர்ந்துகொள்கிறேன்.

      நீக்கு
    3. சென்னையில் எங்கள் ஊரில் 20 அடி வாய்க்கால் (கழிவுநீர்) சென்றுகொண்டிருந்தது. இப்போ அதில் 10 அடிக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இன்னும் கொஞ்ச நாளில் அதன் மீதே கட்டிடம் வந்துவிடும். நம்மிடம் சுயநலம் இருப்பதால், பொது நலத்தைப் பற்றி நாம் கவலை கொள்வதில்லை.

      தமிழ் மரபும், தமிழக மன்னர் மரபும் அப்படிப்பட்டதாக இருந்திருக்கவில்லை.

      நீக்கு
    4. கீசா மேடம்.... விரைவில் சிதம்பரம் கோவிலுக்கு தரிசனத்துக்குப் போகவேண்டும். அதற்கு முன் அதனைப்பற்றி நீங்கள் எழுதியுள்ளவைகளையும் படிக்கணும்.

      நந்தனார் படம், பலப் பல முறை பார்த்துள்ளேன். என் பசங்களுக்கும் சின்ன வயதில் வீட்டில் போட்டு பார்க்கவைத்துள்ளேன்.

      'சிவ லோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்'

      நீக்கு
    5. நந்தனார் பற்றிய உண்மைகள் படத்தில் வந்துள்ளவை கோபாலகிருஷ்ண பாரதியாரின் கற்பனை! அதைக் குறித்தும் நான் தனியாக ஒரு பதிவு எழுதியுள்ளேன். சுட்டி தருகிறேன். சிதம்பர ரகசியம் தொடரிலும் அதைப் பற்றிய உண்மைகளைப் படிக்கலாம். ஆகவே திரைப்படம் பார்த்த மனோபாவத்துடன் செல்லாதீர்கள்.

      நீக்கு
    6. http://sivamgss.blogspot.com/2009/07/1.html

      http://sivamgss.blogspot.com/2009/07/blog-post_8190.html

      http://sivamgss.blogspot.com/2007/02/212.html

      https://tinyurl.com/y7gr2j9h


      இவற்றில் டினி உரலில் கொடுத்திருப்பதைக் கட்டாயமாய்ப் படியுங்கள். உ.வே.சா. அவர்கள் பகிர்ந்த உண்மைச் சம்பவம்.

      நீக்கு
    7. கீசா மேடம்... கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன் (ஒரு வாரத்துக்கு). அதனால் பிறகு கண்டிப்பாகப் படிக்கிறேன். உ.வெ.சா அவர்களின் எழுத்துக்கள் நான் படிக்காதது இல்லை என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  8. ஒன்றை சொல்ல மறந்து விட்டேன். சிவ கங்கை தோட்டம் என்ற பெயர் வரக்காரணமே, சிவனிடமிருந்து கங்கை அங்கே வருவதால் தான் அந்த பெயர் உருவானதாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சை பெருவுடையார் கோபுரத்தை, நீங்கள் எழுதியுள்ளதைப் படித்து உருவகப் படுத்தி மனதில் நோக்கும்போது, எனக்கும் அதே எண்ணம்தான் வருகிறது.

      நீக்கு
    2. கருவறைக்கு மேல் கோபுரம் எழுப்பப்பட்டிருக்கிறது. மகுடாகம முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருவுடையார். யோக முறையில் ஆனது. அதன் அதிர்வலைகள் தனியாகத் தெரியும். அடுத்த முறை சென்றால் இதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

      நீக்கு
    3. அடுத்த முறையும் செல்வேன்... ஆனால் தொல்லியியல் துறையில் ஆட்களைப் பிடித்துவைத்துக்கொண்டு. அப்போதானே பிற சிறப்புகளையும் நன்கு காணமுடியும்.

      நீக்கு
  9. நெ.த.வின் பயண குறிப்புகளும், செல்வராஜ் சார் அவர்களின் கருத்தும் மிகவும் நன்றாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  10. சிறப்பான பதிவு ...

    ஒவ்வொரு இடத்திற்கும் கோவிலுக்கும் செல்லும் போது எனக்குள் எழும் கேள்வி ...எத்தகைய பொக்கிசங்கள் இவை ..இதை காப்பாற்றாமல் நாம் என்ன செய்கிறோம் என்பதே ...




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அனுராதா ப்ரேம்குமார்.... வயதானபிறகு நம் எல்லோருக்கும் நிச்சயம் மனதில் தோன்றும், 'இதைச் செய்யாமல் என்ன வாழ்க்கை வாழ்ந்தோம்' என்று. கும்பகோணத்தில் எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் எனக்கு மிகப் பிரமிப்பாக இருந்தது.

      ஆராவமுதனின் சார்ங்கபாணி கோவில் பிரம்மாண்டம் சொல்லி முடியாது. ஆனால் பக்தர்கள் கூட்டம் மிக மிகக் குறைவு. இதுபோல்தான் பல கோவில்களும்.

      நீக்கு
  11. படங்கள் எல்லாம் ரொம்ப அழகாக இருக்கின்றன நெல்லை. உங்கள் குறிப்புகளும் அருமை.

    நான் சிற்பங்களின் கதை அறிய முடிந்தால் ஓகே இல்லைனா அதன் அழகை ரசிப்பது என்றே நினைப்பேன்..

    உங்கள் ஆதங்கம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் நடைமுறை வேறு.

    துரை அண்ணாவின் கருத்துகளும் அருமை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தில்லையகத்து கீதா ரங்கன்.

      சிற்பங்களை ரசிக்கலாம். யோசியுங்கள்... எளிய அந்தச் சிற்பி தன் வாழ்நாளில் சமைத்தவை, எத்தனை நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கின்றது, பலர் வியப்புறுகின்றனர்.

      தாஜ்மஹாலை அழகுபடுத்திய பாரசீக வல்லுனர், அவர் பெயரைப் பதித்ததுபோல், நம்ம ஊரிலும் நடந்திருந்தால், நம் முன்னோரை அறிந்திருப்போம்.

      நீக்கு
  12. ஆஆஆஆ புள்ளமங்கை அம்மனைப் பார்த்திட்டேன்ன்ன்ன்...
    சிற்பங்களை நன்கு ரசிச்சிருக்கிறீங்க என்பது புரியுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா... எனக்கு சிற்பங்களை ரசிப்பது பிடிக்கும்.

      இப்போவே இப்படி அழகா இருந்ததுனா (1500 வருடங்களுக்குப் பிறகு), அப்போ எப்படி இருந்திருக்கும்?

      நீக்கு
  13. கல்லாப் பிழையும்.....
    பார்த்ததும் அப்பாதான் நினைவுக்கு வந்தார், ஏனெனில் அப்பா டெய்லி சொல்லுவார்... நான் அது தேவாரம் என நினைச்சிருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த இடுகையின் மூலம், உங்கள் அப்பாவை நினைவுக்குக் கொண்டுவந்ததில் மகிழ்ச்சி. எனக்கு இதனைப் பார்த்த உடனேயே மனதில் ஏதோ தோன்றியதால் படம் பிடித்து வந்தேன்.

      நீக்கு
  14. அல்லோஓஒ நெல்லைத்தமிழன், கோயிலுக்குப் போனால் பார்த்தமா ரசிச்சமா கும்பிட்டோமா என வந்திடோணும்:)
    அதை விட்டுப் போட்டுத் தேவையில்லாத கிளவியை எல்லாம் சேசே கேள்வி எல்லாம் கேய்க்கக்கூடா கர்ர்ர்ர்ர்ர்ர்:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன அதிரா இப்படி படக்குன்னு சொல்லிட்டீங்க. நம்ம மனசுல இதெல்லாம் தோன்றாதா?

      நான் என் இளமைக்கால ஊருக்குச் சென்றபோது மனது ரொம்பவும் வெறுமை அடைந்தது.

      அட, இவ்வளோவு சிறிய வீட்டிலா இத்தனை பேர் லூட்டி அடித்தோம், இங்கயா அவ்வளவு சந்தோஷமாக இருந்தோம் என்ற நினைவு வந்துபோனது. என் சிறிய தந்தையாருக்கு போன் செய்து என் உணர்வைச் சொன்னபோது அவர் சொன்னார், "அப்போ வீடு சிறிது, மனம் பெரியதாக இருந்தது. இப்போ மனசு குறுகிப் போயிடுச்சு.. வீடு சிறியதாகத் தெரியுது" என்றார்.

      உங்களுக்கும் தனிமையாக இருக்கும்போது இந்த மாதிரி நினைவுகள் தோன்றுவதில்லையா? ஆச்சர்யம்தான்.

      நீக்கு
  15. சிறப்பான பதிவு. அருமையான படப்பிடிப்பு! தேர்ந்த ஃபோட்டோகிராஃபர் என்பது தெரிகிறது. ஆனால் இத்தனை படங்கள் எடுக்க அனுமதிக்கிறார்கள் என்பதுதான் எனக்குள் ஓர் புதிராக இருக்கிறது. பொதுவாகப் பட்டீஸ்வரம் போன்ற பெரிய கோயில்களில் படம் எடுக்க அனுமதி கிடைப்பது குதிரைக்கொம்பு! நாங்க பத்து, பதின்மூன்று வருடம் முன்னரே போய் வந்தோம். அப்போக் காமிராவெல்லாம் இல்லை. அடுத்த முறை போனால் காமிரா எடுத்துச் சென்று படம் பிடிக்க முயற்சி செய்யணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கீதா சாம்பசிவம் மேடம்... நீங்கள் எக்ஸ்பர்ட். உங்களிடமிருந்து இந்த பின்னூட்டம் வந்தது எனக்கு மகிழ்ச்சி.

      பட்டீஸ்வரத்திலும் நான் நிறைய படங்கள் எடுத்தேன். எங்கயுமே, மூலவரை எடுப்பதில்லை என்று சொல்லிட்டோம்னா பிரச்சனை இல்லை.

      அதுவும் தவிர, கசக்கும் உண்மை, ஆட்கள் மிக மிகக் குறைவு. நம்மைக் கண்காணிக்கவும் ஆட்கள் இல்லை. ஆனாலும் நான் மூலவரை எடுப்பதில்லை என்று சமீபகாலமாக நினைத்துக்கொள்கிறேன் (அதில் லாஜிக் குறைவு என்றாலும்)

      நெல்லை கிருஷ்ணாபுரத்தில், நான் அனுமதி கேட்டபோது, அனுமதி கொடுக்கலை, அப்புறம் ஒரு சில படங்கள் எடுத்துக்கொள்ள அனுமதித்தார்கள். ஆனால் அவர்களிடம் அனுமதி கேட்பதற்கு முன்னரே நான் பலப் பல படங்கள் எடுத்துவிட்டேன்.

      கும்பகோணம் இராமசாமி கோவிலில் முன் மண்டபத்தில் நிறைய உயிர்ப்பு சிற்பங்கள் உண்டு. அதனைப் படம் பிடித்துக்கொள்ள கோவிலுக்கு 100 ரூ நன்கொடை கேட்டார்கள்.

      திருமழிசை ஆழ்வார் திருவரசுவில் படம் எடுக்கக்கூடாது என்று சொல்லிட்டார். நானும் அதனை மீறலை.

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..