வியாழன், ஜனவரி 17, 2019

மங்கலப் பொங்கல்

அன்புக்குரிய பெரியோர்களே..
சகோதர சகோதரிகளே!..

நமது கலை மன்றத்தின் பொங்கல் கலை விழாவின்

மூன்றாம் நாளாகிய இன்று மண் மணக்கும் நிகழ்ச்சிகள்
சீரும் சிறப்புமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன...

அடுத்த நிகழ்ச்சியினை நிகழ்த்த இருக்கும்

ஆருயிர் தோழியரை வரவேற்று சிறப்பிக்குமாறு
சகோதரி தாமரைச்செல்வியை அன்புடன்அழைக்கின்றேன்..

தமிழ்ச்செல்வி பெருமிதத்துடன் தாமரையை அழைத்தாள்...


தமிழ்ச்செல்வி 
யப்பா.. ரொம்ப நாளைக்கு அப்புறம்
தமிழும் தாமரையும் நிகழ்ச்சிக்கு வந்திருக்காங்க!...

கூட்டத்தினர் அகமகிழ்ந்த வேளையில் -

மலர்ந்த முகத்துடன் மேடையேறினாள் - தாமரை...

அன்புசால் ஆன்றோர்களே!...

மதிப்புக்குரிய தமிழ்ச்செல்வி அக்கா அவர்கள் எல்லாவற்றையும் விரிவாக சொல்லி விட்டார்கள்.. நீங்களும் ஆவலுடன் இருக்கின்றீர்கள்...


இங்கே பழந்தமிழ்க் கும்மியை நிகழ்த்த வந்திருக்கும்

தோழியர் அனைவரும் அருகிலுள்ள  பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள்..

இரண்டாண்டுகளுக்கு முன்னர் காணும் பொங்கலன்று

அந்த ஊருக்குச் சென்றிருந்தபோது ஊர்க்கோயிலின் முன்பாக
நினைத்த மாத்திரத்தில் பாட்டுச் சொல்லி தெய்வங்களை வழிபட்டனர்..

அந்த வைபவத்தில் மகிழ்ந்த அக்கா அவர்கள்

இந்த வருடம் நமது கலை மன்றத்தில் பெரு முயற்சியுடன்
அந்த நிகழ்ச்சியினை நடத்துகின்றார்கள்...

இவர்கள் நமது விருப்பத்துக்காகவே இங்கு வந்திருக்கின்றார்கள்..

நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களது கிராமத்தில் நிகழ இருக்கும்
காணும் பொங்கல் வழிபாட்டில் கலந்து கொள்ளவேண்டும்!...

ஒன்பது பெண்கள்.. அவர்களுக்குத் தலைவியாக

அன்புக்குரிய செண்பகவல்லி!..

கும்மிப் பாட்டுடன் கிராமியத் தென்றலாகச்

சுழன்று வர இருக்கின்றார்கள்...

அன்றைக்கு தமிழ்ச்செல்வி அக்கா நினைத்த மாத்திரத்தில்

பாடித் தந்த கும்மிப் பாட்டுடன் -

இதோ... செண்பகவல்லியையும் அவரது குழுவினரையும்

இருகரம் நீட்டி வரவேற்கிறேன்!...

தாமரை தனது உரையை நிறைவு செய்ததும்
அரங்கில் ஓ!.. - என, சந்தோஷ ஆரவாரம்...

அரங்கின் மருங்கில் காத்திருந்த கிராமிய இசைக் கலைஞரின் வாத்தியங்கள் கண.. கண.. என்று முழங்கியதும்

பொன்வண்டுக் கூட்டம் என,
செண்பகவல்லியும் தோழியரும் மேடையில் தோன்றிச் சுழன்றனர்.. 

தன்னன்னன் நாதினம்.. தன்னன்னன் நாதினம்..
தன்னன்னன் நாதினம்.. தன்னானா..
தன்னன்னன் நாதினம்.. தன்னானா..

தன்னன்னன் நாதினம்.. தன்னன்னன் நாதினம்..
தன்னன்னன் நாதினம்.. தன்னானா..


ஓவியம் - திரு. இளையராஜா
கும்மியடி பெண்ணே கும்மியடி வளை
குலுங்கக் குலுங்கக் கும்மியடி கொஞ்சு
தமிழ்க் குண வேழ முகத்தனைக் 
கும்பிட்டுத் தொழுது கும்மியடி!..

ஊருக்கு மேற்கால ஆலமரம் அந்த
ஆல நிழலுல ஐயனாரு.. ஐயனாரு
துணை வேணுமின்னு ஐயன் பேரைச்
சொல்லிச் சொல்லிக் கும்மியடி!..

அங்கிட்டும் இங்கிட்டும் ஆரணங்கு தங்கப்
பூரணம் பொற் கலை தேவியராம்
சந்தம் சொல்லிப் பாடும் பாட்டுக்குள்ளே
வந்து மங்கலம் தந்திடக் கும்மியடி!..

நாடு செழிக்கணும் வீடு செழிக்கணும்
ஆடுமாடு கண்ணு நின்னு செழிக்கணும்
காடு செழிக்கணும் காணி செழிக்கணும்
கூடுங் குருவியும் கூட செழிக்கணும்!..


ஓவியம் - திரு. மாரியப்பன்.. 
பொண்ணும் செழிக்கணும் ஆணும் செழிக்கணும்
புள்ளகுட்டி சொந்தம் கூடி செழிக்கணும்
நல்ல மனமுள்ள நல்லவங்க நாளும்
உள்ளங் குளிர்ந்திட இல்லஞ் செழிக்கணும்!..

கோமள மஞ்சள் மினுமினுக்க நல்ல
குங்குமப் பொட்டுப் பளபளக்க
கூந்தலில் மல்லிகப் பூமணக்க தங்கக்
கைவளை குலுங்கக் கும்மியடி!..

நெத்தியில சுட்டி நின்றாட ரெட்டை
சடையில் சண்பகப் பூ ஆட
செவ்வரிக் கண்ணுக்குள் சேலாட சின்னக்
கைவளை சிணுங்கக் கும்மியடி!...



தங்கச் சிலம்புகள் தானாட இடை
தந்தனம் தந்தனம் என்றாட
தாமரைப் பூந்தனம் சேர்ந்தாட தமிழ்
கொஞ்சிடக் கொஞ்சிடக் கும்மியடி!..

அஞ்சுவிரல் செங்கை அல்லிமலர் அந்தக்
கொங்கையும் தாமரைத் தங்க மலர்
முன்கையில் முந்திடும் முத்துவளை சந்தம்
தந்திடத் தந்திடக் கும்மியடி!..

சின்ன விரல்களில் மோதிரமாம் செல்லத்
தோள்களில் மாணிக்க ஆரங் களாம் 
காதுமடல்களில் ரத்தினமாம் சந்தம்
சொல்லிடச் சொல்லிடக் கும்மியடி!..



பாதக் கொலுசுகள் தானாட அந்தத்
தண்டையும் மெட்டியும் சேர்ந்தாட
நாகமணி முத்து மேகலையும்
நல்ல சந்தங்கள் தந்திடக் கும்மியடி!..

நல்லவளை நலம் தந்தவளை குடி
கொண்டவளைத் துயர் வென்றவளை
பெண்ணவளைப் பெரும் பேறவளைத் தினம்
கண்ணி ரண்டில் வைத்துக் கும்மியடி!..

தாயவளை என்றும் தூயவளை அன்புச்
சேயவளை செல்லப் பெண்ணவளை
பூங்குவளைப் பூவின் தேங்குவளை என்று
ஆனவளைச் சொல்லிக் கும்மியடி!..

உச்ச கதியில் பாடி நிறுத்தியதும் வானை எட்டியது கரகோஷம்...

ஆனந்தத்தில் தத்தளித்த பெண்களில் சிலர்
ஓடிச் சென்று அரங்கில் ஏறி -

அங்கு கும்மி விளையாடிய பெண்களைக் கட்டிக் கொண்டு
முத்தமாரி பெய்தனர்...

நிகழ்ச்சியின் சிகரமாக
செண்பகத்திற்கும் அவளது தோழியர்க்கும்
சால்வைகளும் மாலைகளும் அணிவிக்கப்பட்டன...

இந்த அன்பினில்
நெகிழ்ந்து நின்றார்கள் - அந்த வெள்ளந்திப் பூக்கள்!..

அந்த அளவில் - பிரிவதற்கு மனமின்றி

செண்பகமும் அவளது தோழியரும்
எல்லாரிடம் விடை பெற்றுக் கொள்ள -
அந்த சீருந்து கிராமத்தை நோக்கிப் புறப்பட்டது...


தாமரைச்செல்வி 
அக்கா எப்படியோ..
ரெண்டு வருசத்துக்கு முன்னால நடந்த நிகழ்ச்சியைப் போட்டு
இந்த வருஷக் கலைவிழாவை சிறப்பா நடத்திட்டீங்க!...

புன்னகைத்தாள் - தாமரை...

எல்லாம் நீ கொடுத்த தைரியந்தான் தாமரை!...

- மனமகிழ்ச்சியுடன்
தாமரையின் நெற்றியில் முத்தமிட்டாள் தமிழ்ச்செல்வி!..

காணும் பொங்கலின் மகிழ்ச்சி
கரும்பின் சாறாகத் தித்தித்தது...

வாழ்க நலம்.. 
ஃஃஃ

9 கருத்துகள்:

  1. கும்மிப்பாட்டு அற்புதம் அருமை. அழகிய தமிழில் அருமையான பாடல். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு நல்வரவு....

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. தமிழ்ச்செல்வி தாமரையை அழைத்ததாகச் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் சொற்பொழிவில் தாமரையை வரவேற்றுத் தாமரையே பேசுவதாக அமைந்துள்ளது. முடிவிலும் தாமரை தமிழ்ச்செல்வியைப் பாராட்டுவதாகத் தான் வந்திருக்கு. கொஞ்சம் கவனக்குறைவோ? அதைப் பாருங்க! அல்லது என்னோட புரிதல் சரி இல்லைனாலும் சொல்லுங்க! நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறுபடியும் பிழை....

      கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே குழப்பம்...

      திருத்தி விட்டேன்...
      சுட்டிக் காட்டியமைக்கு நன்றி...

      நீக்கு
  3. கும்மிப்பாட்டு அருமை ஜி பாடிப்பார்த்தேன். ஸூப்பரான ராகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. ஓவியர் இளையராஜாவின் படம் சூப்பர், தற்போது கோவில் தரிசனம்லாம் பார்த்ததால், கோவில் தூணை அப்படியே கண்ணில் கொண்டுவந்திருக்கிறார்.

    மாரியப்பனின் முதல் ஓவியம் அருமை. இரண்டாவது ஓவியத்தில் தடாகம் இயல்பாக இல்லை. ஓவியம் என்று தெளிவாத் தெரியுது.

    எப்போதும்போல் நீங்கள் ஓவியர் மாருதியின் ரசிகரா இல்லை அவர் வரைகின்ற பெண்களின் ரசிகரா என்ற சந்தேகமும் வந்தது. ஹா ஹா

    பதிலளிநீக்கு
  5. கும்மி பாட்டு அருமை.
    கும்மி பாட்டு ஓவியம் கிடைக்கவில்லையா?
    வட நாட்டு கோலட்டம் படம் போட்டு இடுக்கிறீகள்.
    வ.உ.சி பூங்கா ஈரோட்டில் காணும் பொங்கல் கொண்டாடங்கள் பெண்கள் மட்டும் அனுமதியாம் அவர்கள் ஆடி, பாடி, கும்மியடித்து மகிழ்ழ்சியாக இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  6. ரசிக்க வைத்த பாட்டு, பதிவு. ஓவியங்களைத் தெரிவு செய்து அமைக்கும் விதம் அருமை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..