புதன், டிசம்பர் 26, 2018

மங்கல மார்கழி 11

ஓம் 

தமிழமுதம்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று..(108)
***

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 11




கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே 
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின் 
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ 
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்!.. 
***

நின் இல்லத்தின் வாசற்படி கடந்து முற்றத்துள் வந்து நின்று
முகில் வண்ணனின் பேர் பாடிக் கொண்டிருக்கும் வேளையில்
அதைக் கேட்டு சிணுங்காமலும் அவன் பேரைப் பேசாமலும்
சித்திரம் போல் கிடப்பவளே!...

செல்வத்துள் செல்வமாக
செம்மை தனை உடையவளே.. செஞ்சொற் செல்வீ!...

சொந்தமும் சுற்றமும் சூழ வந்து நிற்கின்றோம்..

மலைச் சாரலில் மனம் போலத் திரியும்
மடமயிலைப் போன்றவளே...

அந்த மயிலுக்கு அஞ்சி
புற்றுக்குள் ஒடுங்கும் அரவினைப் போன்ற
அழகுமிகும் இடையினை உடையவளே!..

கறவையினங்களின் காம்பினைப் பற்றிப்
பால் கறப்பதுடன் நில்லாது
பகைவர்களின் செருக்கு அடங்கும் வண்ணம்
வாள் ஏந்தி நிற்கும் வல்லமை மிக்க
கோவலர் குலத்துக் கோமகளே!..

குற்றம் ஒன்றுமில்லாத
எங்கள் குலமகளே!...

பொழுது புலரும் முன்பாக
எழுந்து வாடி... பொற்கொடி!...
***
தித்திக்கும் திருப்பாசுரம்


ஸ்ரீதேவி பூதேவி உடனாகிய
ஸ்ரீ ஆராஅமுதன் - திருக்குடந்தை.. 
காலை எழுந்துலகம் கற்பனவும் கற்றுணர்ந்த
மேலைத் தலைமறையோர் வேட்பனவும் வேலைக்கண்
ஓராழியான் அடியே ஓதுவதும் ஓர்ப்பனவும்
பேராழி கொண்டான் பெயர்.. (2147)
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***  

இயற்கையின் சீதனம்

தாமரை


மலர்களுள் மிக உயர்வானது ...

இறைவனின் திருவடித் தாமரை..
- என்று சைவத்திலும் வைணவத்திலும்
மிகச் சிறப்பாகப் போற்றப்படுவது...

எனினும்
மஹாலக்ஷ்மியின் இருப்பிடமாகப் புகழப்படுவது

தாமரையைக் காண்டால் மன இறுக்கம் விலகும்...
கலங்கிய சிந்தை ஒருமுகமாகும்...

செந்தாமரை இதழ்களை உலர வைத்து
நன்னாரி வேருடன் கஷாயமிட்டு
வாரம் ஒருமுறை அருந்த
இதயம் வலுப்பெறும்..

செந்தாமரை மலர்களைக் கொண்டு
வழிபாடுகளைச் செய்பவர்கள் இல்லத்தில்
நேர்மறையான எண்ணங்கள் நிறைந்திருக்கும்...



திருமுகமும் தாமரை.. திருவிழிகளும் தாமரை...
திருத்தனங்கள் தாமரை.. திருவதனமும் தாமரை..
திருக்கரங்கள் தாமரை.. திருவடிகளும் தாமரை...

இப்படிப் போற்றினால் அது தெய்விகம்...
அப்படியே புகழ்ந்துரைத்தால் அது இல்லறம்..

தெய்வீகமும் இல்லறமும்
தாமரையால் சிறப்பிக்கப்படுவதே சிறப்பு...
*** *** ***

சிவ தரிசனம்
திருக்குடமூக்கு
-: கும்பகோணம் :-



இறைவன் - ஸ்ரீ கும்பேஸ்வரர் 
அம்பிகை - ஸ்ரீ மங்களாம்பிகை

ஸ்ரீ மங்களாம்பிகை 
தல விருட்சம் - வன்னி
தீர்த்தம் - மகாமகக்குளம், காவிரி

பேரூழியின் போது
அமுத கலசம் தங்கிய திருத்தலம்..

ஈசன் எம்பெருமான் வேடுவனாக வந்து
அமுத கலசத்தை அம்பினால் சேதிக்க
அமுதம் எங்கும் பரவி நின்றது..

அமுதம் கலந்த மண்ணை
நான்முகன் லிங்க வடிவாக அமைக்க
அதனுள் ஒளிமயமாக
ஈசன் நிறைந்ததாக ஐதீகம்..

மந்த்ரபீடேஸ்வரியாக
ஸ்ரீ மங்களாம்பிகை...

நான்முகன் - இங்கிருந்தே
படைப்புத் தொழிலைத் தொடங்கியதாக
ஆன்றோர் கூறுவர்...

சிறப்பெல்லாம் தன்னகத்தே கொண்ட
சீர்மிகு திருத்தலம்..

ஸ்ரீ திருஞான சம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு


கழைவளர் கவ்வைமுத்தங் கமழ்காவிரி ஆற்றயலே
தழைவளர் மாவின்நல்ல பலவின்கனி கள்தயங்குங்
குழைவளர் சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா
இழைவளர் மங்கையோடும் இருந்தானவன் எம்மிறையே.. (3/59)
***


திரு ஆதிரையைப் பத்தாம் நாளாகக் கொண்டு
திருவெம்பாவை பாராயணம் நிகழ்வது மரபு...

இவ்வருடம் திருஆதிரை
மார்கழியின் முதல் வாரத்திலேயே
நிகழ்ந்து விட்டது...

இருப்பினும்
திருப்பாடல்கள் தொடர்கின்றன..

அன்பின் திரு நெல்லைத் தமிழன் அவர்கள்
திருவாசகத்திற்கும் உரை சொல்லுமாறு
உற்சாகப்படுத்தியிருந்தார்கள்...

இங்கிருக்கும் சூழ்நிலை
அவ்வாறு செய்வதற்கு இயலாததாக இருக்கிறது...

ஈசனருள் கூடிவர
எதிர்வரும் நாட்களில் அவ்வண்ணம் நிகழ்வதற்கு
வேண்டிக் கொள்கிறேன்...

இன்று முதல்
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை..
திருப்பாடல்கள் 01 - 02


ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கள்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன்வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்..



பாசம் பரஞ்சோதிக்கு அன்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போ(து) இப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குத்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்... 2 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
***

7 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    திருப்பாவையும், திருப்பாசுரமும் சுவை.

    பதிலளிநீக்கு
  2. வழக்கம்போல் இனிமையான பதிவு. திருவெம்பாவை விளக்கம் நானும் சில ஆண்டுகள் முன்னர் எழுதி முகநூலிலும் பகிர்ந்து கொண்டேன். ஆனால் தத்துவங்கள் கிட்டேக் கூடப் போகலை! :) சும்மா எளிமையான விளக்கம். கேஷவின் படங்கள் அற்புதங்களைச் செய்கிறது.

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் துரை அண்ணா...

    அமுதம் இனிமை! விளக்கமும் அப்படியே. தாமரை மலரைப் பற்றிச் சொல்லியிருப்பது சிறப்பு அண்ணா..

    கீதா

    பதிலளிநீக்கு
  4. கேஷவின் படம் அருமை..அவரது ஓவியங்கள் ரொம்ப அழகாக இருக்கின்றன...சொல்ல விடுபட்டுவிட்டது

    கீதா

    பதிலளிநீக்கு
  5. படங்களோடு தரிசனம் நன்று.
    வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  6. அழகான படங்களுடன் பதிவு அருமை.
    கும்பேஸ்வர் அடிக்கடி தரிசிக்கும் கோவில் எங்கள் வீட்டுக்கு வரும் உறவினர்களை அழைத்துக் கொண்டு போய் வரும் கோவில். சிவதரிசனம் செய்து கொண்டேன்.
    நன்றி, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..