திங்கள், டிசம்பர் 24, 2018

மங்கல மார்கழி 09

ஓம்
தமிழமுதம்

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற்பொருட்டு.. (081) 
*** 

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 09



தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயில் அணைமேல் கண் வளரும்
மாமன் மகளே மணிக் கதவம் தாழ் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்!.. 
***

மாமாயன் மாதவன் வைகுந்தன்
என்றெல்லாம் பற்பல திருப்பெயர்களைச் சொல்லும்
பேரொலியைக் கேட்டும் - 

மாமி!.. உங்கள் மகள் தூங்கிக் கிடக்கின்றாள்!..
- எனில், என்னென்று சொல்வது!..

அவள் உண்மையில் தூங்கிக் கிடக்கின்றாளா?..
அல்லது தூங்குவது போல நடிக்கின்றாளா?
இதற்கும் மேலாக பெருந்துயிலுக்கென
ஏதேனும் மந்திர வசப்பட்டாளா?..

கேளாச் செவியளாக பேசா நாவினளாக
பெருந்தூக்கத்தின் வசப்பட்டிருக்கின்றாளே!..

அவளை நீங்களாவது எழுப்பி விடுங்களேன்!..

மாமன் மகளே.. மதிநிறைச் செல்வீ!..

உனைச் சுற்றிலும்
மாட தீபங்கள் தூமணிகளாக ஒளிர்கின்றன..
தூபங்களும் நறுமணம் கமழ்கின்றன....

மெல்லிய பஞ்சணையினின்று
எழுவதற்கு மனமில்லாதவளே!..

மணிக்கதவத்தின்
தாழினைத் திறந்து கொண்டு
வெளியில் வா!...
***

தித்திக்கும் திருப்பாசுரம் 

ஸ்ரீ வானமுட்டிப் பெருமாள்
கோழிகுத்தி - மயிலாடுதுறை 
சென்றால் குடையாம் இருந்தால்சிங்கா சனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு.. (2134)
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***  

இயற்கையின் சீதனம்

நெல்லி



நெல்லியின் சிறப்பை உணர்த்த
திருநெல்லிக்கா எனும் சிவாலயம்
ஒன்றே போதும்...

ஔவையாருக்கு
அதியமான் தன் அன்பினால் வழங்கியதும்
நெல்லிக்கனியே..

மிகச் சிறந்த
மருத்துவ குணங்களையுடையது நெல்லி...

நெல்லி மரம் இருக்கும் மனையினை
துர்தேவதைகள் அணுகாது..

வில்வம் போலவே நெல்லியிலும் 
ஸ்ரீ மஹாலக்ஷ்மி உறைகின்றாள் 
என்பது ஐதீகம்..

கடுத்த சுவையுடன் கூடிய தண்ணீரை
இன்சுவையாக்கும் தன்மை நெல்லிக்கு உண்டு..

அதனால் தான்
கிணற்று நீரை குடிநீராகப் பயன்படுத்திய
அந்தக் காலத்தில்
உப்புத் தண்ணீர் கிணற்றை தூர் வாரி விட்டு
நெல்லிக் கட்டைகளை போட்டு வைப்பர்...



சஞ்சீவினி எனப்படும் திரிபலா சூரணத்தில்
நெல்லிக்காயுடன் தான்றிக்காயும் கடுக்காயும்
இணைகின்றன...

நெல்லிக்காயை தேனில் ஊறவைத்துத்
தின்பது நல்லது என்பது பரவி வருகின்றது...

பாரம்பர்யமாக 
நெல்லிக்காய் ஊறுகாய் பிரசித்தம்..

இதனால் நலன்கள் அதிகம் என்றாலும்
அளவுக்கு மீறக் கூடாது என்பது முக்கியம்.. 
*** *** ***

சிவ தரிசனம்
திருஇடைமருதூர்



இறைவன் - ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் 
அம்பிகை - ஸ்ரீ பிரஹத் சுந்தரகுஜாம்பிகை

தல விருட்சம் - மருத மரம்
தீர்த்தம் - ஐராவண தீர்த்தம்

ஸ்ரீ விநாயக மூர்த்தி
சிவபூஜை நிகழ்த்திய திருத்தலம்..

கருவறையின் தென்பகுதியில் 
ஸ்ரீ விநாயகப் பெருமான் சிவபூஜை செய்யும்
திருக்கோலத்தில் விளங்குகின்றார்..

சிவபெருமானுக்கு இத்தலத்தில்
ஜோதி மகாலிங்கம் என்றே
சிறப்புப் பெயர்..



திருக்கோயிலில் விளங்கும்
பிரம்மாண்டமான சுதை நந்தி
பேரெழில் கொண்டது...

தைப் பூசம் வெகு சிறப்பாக
இத்திருத்தலத்தில் நிகழும்..

அம்பாள் சந்நிதி
தனிக்கோயிலாக சிறப்புற விளங்குவது


ஸ்ரீ மூகாம்பிகை 
இத்தலத்தில்
தவக்கோலத்தில்
தெற்கு நோக்கியவளாக
ஸ்ரீ மூகாம்பிகை விளங்குகின்றாள்...

வரகுண பாண்டியரின்
பிரம்மஹத்தி தோஷம் விலகிய தலம்..

பட்டினத்தடிகளும் பத்ருஹரியும்
இத்தலத்தில் சிலகாலம் 
இருந்திருக்கின்றனர்...

கிழக்கு கோபுர வாசல் அருகில்
குளக்கரையில் பட்டினத்தாருக்கும்
மேற்கு கோபுர வாடியில் பத்ருஹரியாருக்கும்
சந்நிதிகள் உள்ளன..

இங்கே
பத்ருஹரியார் முக்தி எய்தினார்..
***

மாலை நேரத்தில் இணையம் சரிவர இயங்குவதில்லை
என்பதால் நள்ளிரவில் இந்தப் பதிவினைத் தொகுத்து
முடித்து விட்டு Facebook ல் நுழைந்தேன்...

அங்கே எனக்குக் கிடைத்த ஆருத்ரா த்ரிசனம்..

அதுவும் திருவிடைமருதூரில்
நிகழ்ந்த வைபவம்...

ஈசன் அருளினை நினைந்த வண்ணமாக
இதோ அந்தக் காணொளி..



 ஜோதி மகாலிங்கம் போற்றி.. போற்றி..
***

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்


பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் 
மறையின் ஓசையும் வைகும் அயலெலாம்
இறைவன் எங்கள் பிரானிடை மருதினில்
உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே.. (5/15)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் 09


சந்தனக்காப்பில் சபாபதி
திரு உத்தரகோசமங்கை
 
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டார்
விழுப்பொரு ளேஉன தொழுப்படி யோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி அடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே
கடலமுதே கரும்பே விரும் படியார்
எண்ணகத்தாய் உலகுக்கு உயிர் ஆனாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

11 கருத்துகள்:

  1. குட்மார்னிங். அமுதம் பருக வந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. ஒரு நாளைப்போல இவ்வளவு விவரங்களையும் தயார் செய்ய சிரமமாக இருக்குமே... புதிய இடத்தில இணையம் சரியில்லை என்றீர்களே... இப்போது தேவலாமா?

    பதிலளிநீக்கு
  3. நெல்லியின் பயன்கள்... அவ்வைக்கு வள்ளல் தந்த பரிசு நெல்லி அல்லவா? தஞ்சையில் எங்கள் வீட்டில் ஒருபெரிய நெல்லி மரம் இருந்தது. அப்பா மரத்தில் ஏறி காய்களை உலுப்புவார். நாங்கள் பொருக்கி சாக்கில் சேர்ப்போம்.

    பதிலளிநீக்கு
  4. நெல்லிக்காய் அருமருந்து. நாங்க தினம் எப்படியாவது உணவில் சேர்க்கிறோம். பாசுர விளக்கமும், கேஷவின் அருமையான படமும் சேர்ந்து அழகூட்டும் பதிவு. திருவிடைமருதூருக்குச் சில முறை சென்றிருக்கிறோம். நேற்றைய ஆருத்ரா தரிசனம் தாமிரசபை நடனம் காணக் கிடைத்தது. அது தவிர்த்து நெ.த.வும் சிதம்பரம் வழிபாடு கொண்டு வீடியோ அனுப்பி இருந்தார். அருமையான பகிர்வுக்கு வாழ்த்துகள். நெல்லி இலைகள் பூஜை செய்வதற்கும் ஏற்றவை.

    பதிலளிநீக்கு
  5. என் மயிலாடுதுறை நினைவுகளை பதிவு அதிகமாக்குகிறது.
    திருவிடைமருதூர், வானமுட்டிபெருமாள் தரிசனம் செய்து மகிழ்ந்தேன்.
    அடிக்கடி போகும் கோவில்கள்.
    உங்களுக்கு நன்றிகள்.
    ஆருத்ரா தரிசனம் கிடைக்கப்பெற்றேன்.
    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. நெல்லியின் பயன்கள் படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  7. நெல்லிக்காய் பற்றிய செய்திகள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  8. கோழிகுத்தி வானமுட்டிப்பெருமாளை இதுவரை கண்டதில்லை ஐயா. காணும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. துளசிதரன்: உங்கள் அமுதத்தைத் தொடர்ந்து வருகிறேன் ஐயா...அருமை...உங்களுக்குப் பிரச்சனை என்பதை அறிந்தேன். எல்லாம் சரியாகிட பிரார்த்தனைகள்

    கீதா: அண்ணா அமுதம் அருமை. நெல்லியின் சிறப்பு உட்பட. எங்கள் ஊரில் வீட்டில் கிணற்றில் நெல்லிக்கட்டைகள் போட்டு வைத்ததுண்டு.

    பதிலளிநீக்கு
  10. ஆவ்வ்வ் துரை அண்ணனைப் பார்த்து நீண்ட நாளாகிட்டுதே என வந்தால், எனக்குப் பிடிச்ச நெல்லிக்கனிகளும் நந்தியும்... நெல்லிக்காயை எங்கு கண்டாலும் வாங்காமல் வர மாட்டேன்ன் அவ்ளோ பைத்தியம் அதன் மேலே எனக்கு.... அழகிய பதிவு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..