ஞாயிறு, நவம்பர் 04, 2018

தீபாவளி வெடி

பதினாறும் பெத்து பெருவாழ்வு வாழணும்!...

சங்கரும் சாருலதாவும் பாதந்தொட்டு எழுந்தனர்...


மருமகனுக்கும் மகளுக்கும் 
திருநீறு பூசினர் - சிவானந்தமும் மரகதமும்...

ஏன்.. மாமா!.. உங்களுக்கு மாடர்னா வாழ்த்தத் தெரியாதா?... - என்றான் சங்கர்...

சும்மா இருங்க!.. - விலாவில் இடித்தாள் சாரு - இதுதான் சமயம் என்று...

சங்கருக்கும் சாருவுக்கும் - இது தலைத் தீவாவளி!..

சங்கர் - சாருலதாவின் சொந்த அத்தை மகன்....

அதனால் தாய்மாமனிடம் பேசும்போது
துள்ளலும் துடுக்கும் அதிகமாக இருக்கும்!...


தூக்கி வளர்த்த மருமகனின் துடுக்குத்தனத்தில்
சிவானந்தம் - ரொம்ப சந்தோஷப்படுவார்...

அதை விடவும் - மருமகனின் அன்பினைக் கண்டு
மரகதம் ரொம்பவே சந்தோஷப்படுவாள்...

மாடர்ன்... னா.. எப்படி மாப்ளே!...

ஹேப்பி டீவாளி... ந்னு தான்!...

டீ வாளியோ... காப்பி வாளியோ!...
அதுல வாழ்த்து எங்கேயிருக்குன்னு சொல்ல முடியுமா!?...

............. ............. ............. !.. - ஒன்றும் சொல்லத் தெரியாமல் சங்கர் விழித்தான்...

ஓ!.. - என்று சிரித்தான் விஷ்ணு - சாருவின் தம்பி..

வெள்ளைக்காரன் எதையோ பினாத்துனான்...னு அதையே புடிச்சிக்கிட்டு!...

சரி.. சரி... வாங்க எல்லாரும்...
விஷ்ணு அந்த எலையெல்லாம் எடுத்து விரிச்சுப் போடு...
சாரு.. மாப்பிள்ளையும் நீயும் உக்காருங்க... சந்தோஷமா சாப்பிடுங்க...
வெடியெல்லாம் அப்புறமா போடலாம்...

சாருவின் அம்மா - தொடர்ந்தாள்...

இல்லம்மா... ரெண்டு வெடி வெடிச்சிட்டு வர்றேன்... - விஷ்ணு துடித்தான்...

மழை தூறலா இருக்கே பார்க்கலையா?...
சாப்பிடறதுக்கும் ஆறு மணியாகறதுக்கும் சரியா இருக்கும்!...

ஆமா.. அது வேற இருக்குதே...
ஆறு மணிக்கு மேல தான் வெடி போடணும்...ன்னு!..

என்னமோ இவனுங்க தான் எல்லாத்தையும் தூக்கி நிறுத்துற மாதிரி...
நாளுங்கெழமையுமா.. ஜனங்க சந்தோஷமா இருக்கட்டும்...னு விடாம
பக்கத்து வீட்டுக்காரனக் கேட்டுக்கிட்டுதான் பட்டாசு வெடிக்கணும்...
எதுத்த வீட்டுக்காரனக் கேட்டுக்கிட்டுதான் புதுச் சட்டை போடணும்...ன்னு

மாமா... வாயு மண்டலம் பூராவும் கெட்டுப் போச்சுதாம்...
அதுனால தான் மாசு படாத சுற்றுச் சூழல் வேணும்..ன்னு!..

மரமெல்லாம் கார்பன் டை ஆக்ஸைடை சுவாசம் பண்ணிட்டு
ஆக்ஸிஜனை வெளியிடுது... ந்னு படிச்சிருக்கீங்க...



இருக்கிற மரத்தையெல்லாம் வெட்டித் தள்ளிட்டா
காற்று எப்படி சுத்தமாகும்!...




இன்னும் எத்தனையோ வழியில காற்று கெட்டுப் போகுது..
அதையெல்லாம் விட்டுட்டு ஒரு நாள் சந்தோஷத்துக்கு வெடி வெச்சிட்டானுங்க!...

ஏங்க... நீங்க கொஞ்சம் சும்மா.. இருங்களேன்...
புள்ளைங்க நிம்மதியா சாப்பிடட்டும்!..
சாரு.. அந்த ஜாங்கிரிய எடுத்து வைம்மா!..
சாரு கையால செஞ்ச ஜாங்கிரி இதெல்லாம்!...

நல்ல வேளை சாரு... மைசூர்பாகு செய்யலை...
சுத்தியல் தேவைப்பட்டிருக்கும்...

எல்லாரும் சிரித்த வேளையில்... - விஷ்ணு எழுந்தோடினான்...

அத்தான்.. சீக்கிரமா சாப்பிட்டு வாங்க மணி ஆறாகப் போகுது!...

டேய்.. விஷ்ணு.. என்னடா இது.. ரெண்டு இட்லி தின்னதோட கிளம்பிட்டே!...
ஸ்வீட்டெல்லாம் அப்படி அப்படியே... இருக்கு!...

ரகு வீட்ல.. தௌசண்ட்வாலா போடப் போறாங்க...

நாமளும் தானே வாங்கியிருக்கோம்!....

நேரம் காலை ஆறு மணியை நெருங்கிக் கொண்டிருக்க
ஆங்காங்கே - டமார்.. டுமீர்... - என, வெடி சத்தங்கள்... ஆரவாரங்கள்...


அத்தான் வாங்க... வாங்க!... - விஷ்ணு ஆர்ப்பரிக்க -
சிலுசிலுத்துக் கொண்டிருந்த தூறல்
சட... சட... - என்று பெருமழையாக இறங்கியது...

எல்லா ஆரவாரங்களும் அடங்கிப் போக
ஓ... - என, மழையின் இரைச்சல்...

வீதியில் இறங்கியவர்கள் எல்லாரும் வீட்டுக்குள் ஒடுங்கினர்..
சின்னஞ்சிறு பிள்ளைகளின் முகங்களில் ஏமாற்றம்.. மெல்லிய சோகம்...

இப்போ.. மழை விட்டுரும்... - அவர்களே சமாதானம் சொல்லிக் கொண்டனர்..

மத்தாப்புகளையும் சக்கரங்களையும் வீட்டுக்குள்ளேயே கொளுத்தி
சின்னச் சின்ன சந்தோஷங்களை அள்ளிக் கொண்டார்கள்...

ஜன்னல் வழியாகப் பார்த்துப் பார்த்து சலித்த வேளையில்
ஒருவழியாக ஏழரை மணிக்கு விட்டது மழை....

ஆகா விட்டது மழை... - என்று வாசலுக்குத் துள்ளி வந்தவர்கள் எல்லாரும்
அந்த ரோந்து வண்டியைக் கண்டதும் வீட்டுக்குள் வந்து பதுங்கினர்...

வெடி வெடிக்க நேரம் முடிந்து விட்டதாமே... - பச்சாதாபம் மேலிட்டது....

வீட்டுக்குள் தொலைக்காட்சிப் பெட்டியில்
தீபாவளிக்குக் கூட நல்ல துணி வாங்க விதியற்றவள் போல
கேவலமான அரைகுறை ஆடையணிந்திருந்த ஒருத்தி
அருகில் இருந்த ஆடவனைத் தொட்டுத் தொட்டுப் பேசி சிரித்துக் கொண்டிருந்தாள்...

வேலை வெட்டியற்ற ஒரு கூட்டம்
அவ்வப்போது கைதட்டுவதும் ஊளையிடுவதுமாக இருந்தது...

அலுப்புடன் அடுத்த சானலுக்குப் போனால் -
கேஸ்டர் ஆயிலில் - கடமுட கண்டா.. செய்வது எப்படி என்று!...
வகுப்பெடுத்துக் கொண்டிருந்தாள் ஒரு கிழவி...

கேஸ்டர் ஆயில் என்றால் ஏதோ உலக மகா விஷயம் என்று
கிழவியை குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்தது அரை டிக்கெட் ஒன்று..

இன்னொன்றில் -
இனிப்பு வகைகளுக்குள் ஒளிந்திருக்கும் அரக்கன்!..
- வாரப் பத்திரிக்கைக்காரன் வாசகர்களுக்காக அழுது கொண்டிருந்தான்...

வேறொன்றில் -
மாவுப் பண்டங்களால் உயிருக்கு ஆபத்து!... -

டாக்டர் தொலைக்காட்சியில் - 
எண்ணெய்ப் பலகாரங்களால் வயிற்றுக்குக் கேடு!..
நீரிழிவு நோயாளிகளின் கவனத்திற்கு... -

பியூட்டி தொலைக்காட்சியில் - 
செயற்கை இழைத் துணிகளில் உள்ள
ரசாயனம் சுற்றுச் சூழலுக்கு ஆபத்து!... -

சுட்ட பழம் தொலைக்காட்சியில் - 
சுவையான பட்டி மன்றம்!...
தீபாவளி விருந்துக்கு
இந்தப் பிரியாணி நல்லதா!?..
அந்தப் பிரியாணி நல்லதா!?..

ஜில் ஜில் தொலைக்காட்சியில் - 
இந்த சீன் ரொம்ப ஆபாசமா இருக்கு...ன்னு
ஜனங்க கொஞ்சம் பேர் பேசிக்கிறாங்க...
இது எப்டின்னு சொல்லுங்க கோல்மால் சார்!...

உறிமட்டை தொலைக்காட்சியில் - 
கம்சனைக் கொல்லவில்லையா?...
சிசுபாலனைக் கொல்லவில்லையா?...
அந்த நாட்களை எல்லாம் விட்டு விட்டு
நரகாசுரனைக் கொன்ற நாளை மட்டும்!...

உள்ளூர் தொலைக்காட்சியில் - 
விதிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை மீறி வெடி வெடித்து
சுற்றுச் சூழலை மாசு படுத்துபவர்களின் மீது சட்டப்படி... -

இப்படியாக -
பார்ப்பவர்களின் மனங்களை நோகடித்துக் கொண்டிருந்தன..

இதையும் மீறி - அங்கே ஒருவன்
தீபாவளி தமிழன் பண்டிகையா?... - கத்திக் கொண்டிருந்தான்...

அந்தப் பக்கம் -
ஒட்டடை தொலைக்காட்சியில் ஒரு நேரலை!..
கொய்யாத் தோப்பு பேருந்து நிலையத்திலிருந்து.... -

மூனு நாளா கஷ்டப்படுறோம்...
சொந்த ஊருக்குப் போக முடியல..
இப்டியெல்லாம் லோல் பட்டு!...

ஒவ்வொரு நிகழ்ச்சியாக உழன்று கொண்டிருந்த
சிவானந்தம் திருவாய் மலர்ந்தார்...

கொண்டாட்டத்தை எல்லாம் விட்டுட்டு ஓடணும்....ன்னு தானே
கொஞ்சம் கொஞ்சமா காய் நகர்த்திக்கிட்டு வர்றானுங்க!...

ஆனாலும் நாம விடக்கூடாது...
கஷ்ட நஷ்டம் எல்லாருக்குந்தான்...
வருசத்துல ஒரு நாள் திருநாள்...
சந்தோசமா கொண்டாடியே தீரணும்!...
என்ன சொல்றீங்க... மாப்ளே!...

ஆமாம்!... கொண்டாடியே தீரணும்!...
தோளில் சாய்ந்து கிடந்த லதாவை உசுப்பினான் - சங்கர்...

அரைத் தூக்கத்திலிருந்த அவள் -
ஆமாம்.. ஆமாம்!.. - என்றாள்...

மரகதம்.. இலையப் போடு.. விஷ்ணு தூங்கிட்டான் பார்...
எழுப்பு அவனை!.. பாவம் சின்ன பையன்.. ஏங்கிட்டான்!...

இப்போ என்னா... சாப்பிட்டுட்டு ரெண்டு வெடியப் போடட்டுமே!...
- என்றாள் மரகதம்...

நீ சொன்னா சரிதான்!...
வாங்க வாங்க!... சாப்பிடலாம்!...
சாரு.. மாப்பிள்ளையை அழைச்சிக்கிட்டு வாம்மா!...

சந்தோஷங்கள் அங்கேயே உறைந்திருக்க - வெளியே மழை தூறிக் கொண்டிருந்தது...
* * *


அனைவருக்கும் 
அன்பின் இனிய
தீபாவளி நல்வாழ்த்துகள்!...

வாழ்க நலம்.. 
ஃஃஃ

17 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    அதற்குள் வெடியா? இன்னும் நாட்களிருக்கின்றனவே...!​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு...

      Net Pack முடிந்து விட்டது...
      இது Oc..

      பிறகு வருகிறேன்... நன்றி..

      நீக்கு
  2. தொலைகாட்சி பெயர்களெல்லாம் தகதகக்கின்றனவே...

    பதிலளிநீக்கு
  3. // கொண்டாட்டத்தை எல்லாம் விட்டு ஓடணும்னு தானே கொஞ்சம் கொஞ்சமா... //

    "ஆஹா....ஒரு குரூப்பாத்தான்யா கிளம்பியிருக்காங்க....."

    பதிலளிநீக்கு
  4. உறைந்த சந்தோஷங்கள் உயிர் பெறட்டும். இந்திய மன்னிக்கவும் இனிய அட்வான்ஸ் தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. தொலைக்காட்ச'சீ'களின் நிகழ்வுகள் ரசிக்க வைத்து வேதனைப்படுத்தின ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி
      பஞ்சாங்கத்தில் வெடி இல்லாத தீபாவளி வரும் என்று போட்டு இருக்கிறது.

      இதெல்லாம் அரசியல் பின்னணியோ என்று தோன்றுகிறது.

      நீக்கு
  6. தொலைக்காட்சி பெயர்கள் - செம....

    தீபாவளி வாழ்த்துகள் - அட்வான்ஸாக!

    எல்லோரும் முட்டாள் பெட்டியில் மூழ்கிக் கிடக்கப் போகிறார்க்ள்....

    பதிலளிநீக்கு
  7. அழகாக இருக்கிறது தீபாவளி.அன்புடன்

    பதிலளிநீக்கு
  8. அதானே மக்கள் ஒரு நாள் வெடியில் காற்றின் மாசு அதிகமாகுமே மற்ற நாட்களில் மாசு மருவற்ற சூழல் இருக்குமா

    பதிலளிநீக்கு
  9. தொலைக்காட்சிகளை குறை கூறியே அந்த நிகழ்ச்சிகளை ரசிப்பவர்களே அதிகம்

    பதிலளிநீக்கு
  10. தீபாவளி சிறப்பு பதிவு அருமை.
    உங்களுக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
    மதுரையில் வெடி காலை முதல் இரவு வரை வெடித்து கொண்டு இருக்கிறார்கள் தீபாவளியிலிருந்து தானே சட்டம் அமுலுக்கு வருகிறது என்று.

    பதிலளிநீக்கு
  11. ஆவ்வ்வ்வ் எவ்ளோ பெரிய போஸ்ட்டூஊஊஊஊ.. தீபவளியை ஆரம்பிச்சு வச்சிட்டீங்க.. எனக்கும் ரவ்வை லட்டு செய்ய விருப்பமாக இருக்கு.. ஆனா தீபாவளி முடிஞ்ச பின்புதான் செய்ய ரைம் இருக்கும் ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  12. தங்களின் ஆதங்கம் புரிகிறது ஐயா...

    பதிலளிநீக்கு
  13. துளசித்ரன்: தீபாவளி 6 ஆம் தேதிதானே இல்லையா? இருந்தாலும் அதற்குள் தமிழ்நாட்டில் வெடி வெடிப்பார்கள் தான். ஆனால் இம்முறை மிகுந்த கட்டுப்பாடுகள் என்று அறிகிறேன். சுவையாகவும், அருமையாகவும் ஆதங்கத்தை வெளியிட்டிருக்கின்றீர்கள் ஐயா.

    தீபாவளி வாழ்த்துகள்!

    கீதா: அண்ணா வெடி வெடிப்பது இரண்டு மணிநேரத்திற்கு என்று சொல்லியிருக்காங்க போல. ஆனால் எப்படி ஆகும்னு தெரியலை. சுற்றுச் சூழல் மாசு மற்ற நாட்களில் நிறையவே இருக்குதான். ஆனா இந்த வெடி நம்ம செல்லங்கள் எல்லாம் மிரண்டு போகுது அண்ணா. எங்கள் வீட்டில் கண்ணழ்கி உருண்டு பெரண்டு சாப்பிடாமல் ஒரு வாரம் சாப்பிட மாட்டாள். வெடிச்சத்தம் ஓயும் வரை சாப்பிட மாட்டாள். ப்ரௌணி இருந்தவரை அவளும் அப்படித்தான் தன்ணீர் நிறைய குடிப்பாள் ஆனால் கட்டிலுக்கடியை விட்டு வெளியே வரவே மாட்டாள். வெளியில் இறங்கவே மாட்டாள்.

    மாடுகள் மிரள்வதையும் பார்த்திருக்கேன்...எங்கள் ஊரில். முதலில் என் மகன் வெடி வெடித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு கொஞ்சம் விவரம் வந்த நாளில் 9 வயதிலிருட்நு, பைரவச் செல்லங்கள், மாடுகள் எல்லாம் மிரள்வதைப் பார்த்ததும் வெடி வெடிப்பதை விட்டுவிட்டான். கண்ணழகி சென்னையில் இருந்தவரை எங்கேனும் தெருவில் சங்கூதிவிட்டால் அவளுக்குத் தெரியும் அன்று எங்கோ சாவு என்று அன்று முழுவதும் உடம்பு நடுக்கத்துடன் சாப்பிடாமல் இருப்பாள். வெடி போடுவார்கள் என்ற பயம். அது போல கோயிலில் பாட்டு போட்டு கொட்டு அடித்தால் பயம் வெடி போடுவார்கள் என்று. வித்தியாசமான கொட்டுச் சத்தம் கேட்டாலே பயம்தான். அவளது உடம்பு நடுங்க ஆரம்பிக்கும்.
    ஆனால் நாதஸ்வரம் தவில் சத்தத்திற்குப் பயப்படுவதில்லை.

    டிவி சானல்கள் பெயர்கள் எல்லாம் ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன். ஹையோ கொடுமை அண்ணா.

    அட்வான்ஸ் தீபஒளி நல்வாழ்த்துகள் அண்ணா!

    பதிலளிநீக்கு
  14. தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
  15. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே!

    இராய செல்லப்பா சென்னை

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..