ஞாயிறு, நவம்பர் 18, 2018

கல்லும் கரையும்

ஆதரவற்ற ஜீவன்..

ஆனாலும் - அது கருவுற்று குட்டிகளை ஈன்றது...

நான்கோ - ஐந்தோ தெரியவில்லை...

எப்படியும் குட்டிகளைக் காப்பாற்றி விடும் வல்லமை கொண்டது தான்!...

எனினும், மனதுக்குள் ஒரு ஆதங்கம்...

ஒருகால் இயலாமல் போனால்!..
நான் பட்டினி கிடந்தாலும் - என் செல்லங்கள் பசித்திருக்கக் கூடாதே!...

மரத்தடி நிழலில் படுத்துக் கிடந்தபோது இப்படியான எண்ணங்கள்...

கண் திறந்து விட்ட நிலைகள் குட்டிகள்
அங்குமிங்கும் ஓடியாடிக் கொண்டிருக்கின்றன...

பார்ப்பவர்கள் குட்டிகளின் அழகைக் கண்டு வியக்கின்றனர்..


ஒன்றைத் தூக்கிக் கொண்டுபோய் நம் வீட்டில் வளர்க்கலாமா!...
அவர்களுக்குள் ஆவல் பிறக்கின்றது...

இரை தேடிச் சென்று திரும்பும் போது ஒன்றிரண்டைக் காணவில்லை...

குட்டிகளை ஈன்ற தாய் வேற்று மனிதர்களின் வாசனையை உணர்கின்றது...

யாரோ நல்லவர்கள் வந்து குட்டிகளை எடுத்துச் சென்றிருப்பது புரிகின்றது..

மீதமுள்ள மூன்று குட்டிகளும் தாயைக் கண்டதும் ஓடி வருகின்றன..

ஓடிவந்து மேலேறி விழுந்து புரண்டு
மடியில் சுரந்த பாலைப் பகிர்ந்து கொள்கின்றன...

ஒரு நாள் ஆயிற்று...

அதே மரத்தடி நிழல்... ஆசுவாசமாகப் படுத்துக் கிடக்கும் வேளையில் -
புன்னகையுடன் வருகிறாள் - அந்தப் பெண்...

நடையில் சற்றே தயக்கம்...

குட்டிகளின் தாய் குலைக்குமோ.. கடித்து வைக்குமோ!...

சந்தேகத்தைச் சமாளித்துக் கொண்டு நடந்து -
விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குட்டியைத் தூக்குகிறாள்...

பார்த்துக் கொண்டிருக்கும் தாயின் மனம் பதறுகின்றது...
ஆனாலும் குட்டியின் எதிர்காலம் கண்முன்னே நிழலாடுகின்றது!...

அந்தப் பெண் தான் தூக்கியெடுத்த குட்டியை
மார்போடு அணைத்துக் கொண்டு நடக்கிறாள்...

முகத்தில் முன்னை விடப் பிரகாசமான புன்னகை...

பரிதாபத்துக்குரிய அந்த ஜீவன்
பரிதவிப்புடன் பின்னே நடக்கின்றது...

அதை உணர்ந்து கொண்ட அந்தப் பெண் நிற்கிறாள்...

குட்டியைக் கண் முன்பாக நீட்டுகிறாள்...


என் செல்லமே!... போய் வா!..
அங்கே சேட்டைகள் ஏதும் செய்யாமல்
நல்ல பிள்ளை என்ற பேர் எடுக்க வேண்டும்!...
குலத்தின் பேரைக் காக்க வேண்டும்!...
சென்று வா.. என் செல்லமே!...

உச்சி முகர்ந்து உள்ளன்புடன் முத்தம்...

பித்தான பெற்ற மனம் கல்லாயிற்று....

அங்கே இன்னும் இரண்டு குட்டிகள்..

அவை எனக்கே எனக்கு!... யாருக்கும் தரமாட்டேன்!...

வைராக்கியத்துடன் - திரும்பி நடக்கையில் - 
இன்னும் ஒரு நொடி... இன்னும் ஒரு தரம்!...

குட்டியைப் பார்த்தாயிற்று...

இனி, இதைத் தவிர
வேறு என்ன சொல்வது -
எங்கிருந்தாலும் வாழ்க!...
*** *** ***

Facebook ல் வந்த காணொளியைக் கொண்டு
பதிவு எழுதப் பெற்றது...

வாயில்லாத
ஜீவனின் பாசத்தைக் கண்டால்
கல்லும் கரையும்...

அப்படியிருக்க
நம் மனம் கரையாதா!...

வாழ்க நலம் எங்கெங்கும்
ஃஃஃ

10 கருத்துகள்:

  1. குட்மார்னிங். முதல் குட்டி கண்ணைக் கவர்கிறது. முக நூலில் நிறைய செல்லங்கள் விடியோக்கள் முகநூலாலேயே எனக்குப் பரிந்துரைக்கப்படும். அவற்றை எல்லாம் மறுக்காமல் அலுக்காமல் சலிக்காமல் பார்ப்பேன்.

    பதிலளிநீக்கு
  2. ஆஹா... எனக்கும் கீதா ரெங்கன் வாட்ஸாப்பில் இந்த காணொளியை அனுப்பிக் கண்கலங்க வைத்தார். அதற்குதான் எவ்வளவு புரிதல்?

    பதிலளிநீக்கு
  3. நான் கண்ட இந்தக் காணொளியை என் நண்பர்கள் சிலருக்கு அனுப்பி வைத்தேன். இரண்டு நாட்களாகிறது. அவர்கள் இன்னும் அதைப் பார்க்கவே இல்லை எனும்போது கஷ்டமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. ஒரு காணொளி இப்பாசப்போராட்டத்தை எழுத வைத்து விட்டது அருமையான விவரிப்பு நேரில் கண்டது போல...

    ஆனால் இது காணொளி இல்லையே.... புகைப்படம் மட்டுமே.

    பதிலளிநீக்கு
  5. ஜி காணொளி இயங்கி விட்டது முடிவில் பைரவர் திரும்பி பார்த்து நடந்ததும் எனது விழிகளில் கலக்கம்....

    பதிலளிநீக்கு
  6. முன்பே நானும் இந்த காணொளியை பார்த்து நெகிழ்ந்து விட்டேன்.
    எங்கு பார்த்தேன் என்று நினைவில் இல்லை.தாயின் கண்ணில் தெரியும் பாசம், பிரிவின் துயரம் மனதை கனக்க வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  7. தாய்ப்பாசம் எத்தனை மேன்மையானது என்பதைப் புரிய வைக்கும் காணொளி. நானும் முகநூலில் பார்த்தேன். மனம் நெகிழ்ந்தது. இந்த ஜீவன்களுக்குப் பேசத்தான் தெரியாது. கண்களாலேயே பேசிவிடும்.

    பதிலளிநீக்கு
  8. தாய்மையின் உன்னதத்தை உணர வைக்கும்...

    பதிலளிநீக்கு
  9. தாய்மையின் வலிமையைக் காட்டும் இன்னொருகாணொளி மனித இயல்பை விலங்குகளில் கண்டு பதிவு எழுத வைத்திருக்கிறது பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  10. எனக்கு இங்கு நாய் தெரியவில்லை. குழந்தையை இன,னொரு குடும்பத,துக்கு விட்டுத் தரும் ஏழைத்தாய்தான் கண்முன் நிழலாடுகிறாள். தான் சிந்திய ரத்தம். அதுவாவது இன்னொரு வீட்டில் சுகமாக இருக்கட்டும் என்ற நடைமுறைப் பிரச்சனைதான் அவளை அப்படி நடந்துகொள்ள வைக்கிறது.

    பணத்தை முன்னிறுத்தி குழந,தையுப் பிரித்து, அது தங்களை அப்பா/அம்மா என்று சொல்ல வைக்க மனித மனம் கொடூரமாக இருக்க வேண்டுமா இல்லையா? (புதன் கேள்வி போல் வந்துவிட்டதோ)

    நாய் விலங்குதான். இங்கு நான் நாயைப் பார்க்க இயலவில்லை. மனதை உறுத,தும் காடொளி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..