புதன், அக்டோபர் 24, 2018

சிவனே உன் அபயம்...

இன்று ஐப்பசி நிறைநிலா நாள்..

சகல சிவாலயங்களிலும்
சிவலிங்க மூர்த்திக்கு அன்னாபிஷேகம் நிகழ்கின்றது..

அன்னம் சிவஸ்வரூபம் - என்பர் பெரியோர்...

மூண்டு முளைத்தெழும் வித்துக்கள் எல்லாமே சிவஸ்வரூபம் தான்..

சோறுடைத்த சோழ நாட்டில் - காவிரி நதிக்குத் தென்கரையில்
திகழும் திருத்தலம் - திருச்சோற்றுத்துறை...

ஊருக்கு உபகாரம் செய்விக்கும்
அடியார் ஒருவர் வறுமையுற்ற காலத்தில்
அவர்பால் இரக்கங்கொண்ட இறைவன்
உலவாக்கிழி - அக்ஷய பாத்திரம் வழங்கியருளியதாக தலபுராணம்..

இத்தலத்தில் தரிசனம் செய்தோர் இல்லத்தில்
அன்னம் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்...

அப்பர் ஸ்வாமிகளுடன் ஞானசம்பந்தப் பெருமானும்
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் திருப்பதிகங்கள் அருளிச் செய்துள்ளனர்...

சப்தஸ்தானப் பெருவிழாவின் மூன்றாவது திருத்தலம்...

சப்தஸ்தானப் பெருவிழாவின் போது
திருஐயாறு ஐயாறப்பருடன் வரும் பக்தர்களுக்கெல்லாம்
திருச்சோற்றுத்துறையில் வீடுதோறும் அன்னம் பாலிக்கப்படுகின்றது...

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து
கண்டியூர் வழியாக வீரமாங்குடிக்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன..

வீரமாங்குடியிலிருந்து 
ஒன்றரை கி.மீ., தொலைவில் திருச்சோற்றுத்துறை...

திருஐயாறு வழியாக எனில் திருப்பழனத்தில் இறங்கி
தெற்காக காவிரி ஆற்றுக்குள் இறங்கிக் கடக்க வேண்டும்..

கோடை வெயிலானாலும் மழையானாலும்
காவிரியைக் கடப்பதென்பது சிரமம்...

திருச்சோற்றுத்துறைக்கு நேரடியாக பேருந்துகள் கிடையாது...

கும்பகோணத்திலிருந்து
பாபநாசம் வழியாக திருச்சோற்றுத்துறைக்கு
பேருந்து இயக்கப்படுவதாக சொல்கின்றனர்..

விசாரித்து அறிவது நலம்..

வாகனங்களில் செல்வது எனில்
தஞ்சை - கண்டியூரிலிருந்து மேற்காக 5 கி.மீ ., தொலைவு...  

இன்றைய பதிவில் இடம் பெற்றுள்ள படங்களை வழங்கியோர் -
சிவனடியார் திருக்கூட்டம் திருச்சோற்றுத்துறை FB..

அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி...

திருத்தலம்
திருச்சோற்றுத்துறை


இறைவன் - ஓதவனேஸ்வரர், தொலையாச்செல்வர்..
அம்பிகை - ஓதவன நாயகி, அன்னபூரணி..
தலவிருட்சம் - பன்னீர் மரம்
தீர்த்தம் - காவிரி..

அப்பர் ஸ்வாமிகள் அருளிய தேவாரம்
ஆறாம் திருமுறை - திருப்பதிக எண் - 44.. 
***
அதிகார நந்தி வாகனத்தில்
அம்மையப்பன் 
மூத்தவனாய் உலகுக்கு முந்தி னானே
முறைமையால் எல்லாம் படைக்கின் றானே
ஏத்தவனாய் ஏழுலகும் ஆயினானே
இன்பனாய்த் துன்பங் களைகி ன்றானே
காத்தவனாய் எல்லாந்தான் காண்கின் றானே
கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத்
தீர்த்தவனே திருச்சோற்றுத் துறை யுளானே
திகழொளியே சிவனேயுன் அபயம் நானே.. (01)

தலையவனாய் உலகுக்கோர் தன்மையானே
தத்துவனாய்ச் சார்ந்தார்க்கு இன்ன முதானானே
நிலையனாய் நின்னொப்பார் இல்லா தானே
நின்றுணராக் கூற்றத்தைச் சீறிப் பாய்ந்த
கொலையவனே கொல்யானைத் தோல்மே லிட்ட
கூற்றுவனே கொடிமதில்கள் மூன்றும் எய்த
சிலையவனே திருச்சோற்றுத் துறை யுளானே
திகழொளியே சிவனேயுன் அபயம் நானே.. (02)

ஸ்ரீ ஓதவன நாயகி 
முற்றாத பால் மதியஞ் சூடினானே
முளைத்தெழுந்த கற்பகத்தின் கொழுந் தொப்பானே
உற்றாரென் றொருவரையும் இல்லா தானே
உலகோம்பும் ஒண்சுடரே ஓதும் வேதங்
கற்றானே எல்லாக் கலைஞா னமுங்
கல்லாதேன் தீவினைநோய் கண்டு போகச்
செற்றானே திருச்சோற்றுத் துறை யுளானே
திகழொளியே சிவனேயுன் அபயம் நானே.. (03)

கண்ணவனாய் உலகெல்லாங் காக்கின் றானே
காலங்கள் ஊழி கண் டிருக்கின் றானே
விண்ணவனாய் விண்ணவரக்கும் அருள்செய் வானே
வேதனாய் வேதம் விரித்திட் டானே
எண்ணவனாய் எண்ணார் புரங்கள் மூன்றும்
இமையாமுன் எரிகொளுவ நோக்கி நக்க
திண்ணவனே திருச்சோற்றுத் துறை யுளானே
திகழொளியே சிவனேயுன் அபயம் நானே.. (04)


நம்பனே நான்மறைகள் ஆயி னானே
நடமாட வல்லானே ஞானக் கூத்தா
கம்பனே கச்சிமா நகரு ளானே
கடிமதில்கள் மூன்றினையும் பொடியா எய்த
அம்பனே அளவிலாப் பெருமையானே
அடியார்கட் காரமுதே ஆனேறு ஏறுஞ்
செம்பொனே திருச்சோற்றுத் துறை யுளானே
திகழொளியே சிவனேயுன் அபயம் நானே.. (05)

ஆர்ந்தவனே உலகெலாம் நீயே ஆகி
அமைந்தவனே அளவிலாப் பெருமை யானே
கூர்ந்தவனே குற்றாலம் மேய கூத்தா
கொடுமூ விலையதோர் சூலம் ஏந்திப்
பேர்ந்தவனே பிரளயங்கள் எல்லாம் ஆய
பெம்மானென் றெப்போதும் பேசும் நெஞ்சிற்
சேர்ந்தவனே திருச்சோற்றுத் துறை யுளானே
திகழொளியே சிவனேயுன் அபயம் நானே.. (06)


வானவனாய் வண்மை மனத்தி னானே
மாமணிசேர் வானோர் பெருமான் நீயே
கானவனாய் ஏனத்தின் பின்சென்றானே
கடிய அரணங்கள் மூன்று அட்டானே
தானவனாய்த் தண்கயிலை மேவி னானே
தன்னொப்பார் இல்லாத மங்கைக் கென்றுந்
தேனவனே திருச்சோற்றுத் துறை யுளானே
திகழொளியே சிவனேயுன் அபயம் நானே.. (07)

தன்னவனாய் உலகெலாந் தானே ஆகித்
தத்துவனாய்ச் சார்ந்தார்க்கின் னமுதா னானே
என்னவனாய் என்னிதயம் மேவி னானே
ஈசனே பாச வினைகள் தீர்க்கும்
மன்னவனே மலைமங்கை பாக மாக
வைத்தவனே வானோர் வணங்கும் பொன்னித்
தென்னவனே திருச்சோற்றுத் துறை யுளானே
திகழொளியே சிவனேயுன் அபயம் நானே.. (08)


எறிந்தானே எண்திசைக்குங் கண்ணா னானே
ஏழுலகம் எல்லாம் முன்னாய் நின்றானே
அறிந்தார்தாம் ஓரிருவர் அறியா வண்ணம்
ஆதியும் அந்தமும் ஆகி அங்கே
பிறிந்தானே பிறரொருவர் அறியா வண்ணம்
பெம்மானென் றெப்போதும் ஏத்து நெஞ்சிற்
செறிந்தானே திருச்சோற்றுத் துறை யுளானே
திகழொளியே சிவனேயுன் அபயம் நானே.. (09)

மையனைய அகண்டத்தாய் மாலும் மற்றை
வானவரும் அறியாத வண்ணச் சூலக்
கையவனே கடியிலங்கைக் கோனை அன்று
கால்விரலாற் கதிர்முடியுந் தோளுஞ் செற்ற
மெய்யவனே அடியார்கள் வேண்டிற் றீயும்
விண்ணவனே விண்ணப்பங் கேட்டு நல்குஞ்
செய்யவனே திருச்சோற்றுத் துறை யுளானே
திகழொளியே சிவனேயுன் அபயம் நானே.. (10)

செய்யவனே.. திருச்சோற்றுத்துறையுளானே..
திகழொளியே சிவனே உன் அபயம் நானே!.. 
ஊரெங்கும் உலகெங்கும்
பசிப் பிணி நீங்கட்டும்..

ஓம் நம சிவாய சிவாய நம ஒம்..
ஃஃஃ

5 கருத்துகள்:

  1. சிந்தை மகிழ சிவதரிசனம். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. சிவதரிசனம் பெற்றேன் ஜி நன்றி.

    பதிலளிநீக்கு
  3. இப்படி எழுந்து நிற்கும் நந்தி வாகனத்தை எங்கும் பார்த்ததில்லை நான், புதுசா இருக்கு.

    பதிலளிநீக்கு
  4. ஊரெங்கும் உலெங்கும் பசிப்பிணி நீங்கி எல்லோரும் நலமாக இருக்கட்டும் என்று நேற்று எங்கள் ஜெயநகர் பிள்ளையார் கோவிலில் வேண்டிக் கொண்டார்கள்.
    நேற்று சாரல் மழையும் பெய்து நாடு செழுமையாக இருக்கும் என்று சொல்லி சென்றது.

    அழகான தெய்வீக படங்கள் பகிர்வுக்கும், பாடலுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. துளசி: படங்களும் தகவல்களும் அருமை. குறித்தும் கொண்டேன் ஐயா.

    கீதா: நந்தி வாகனம் மிக அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..