சனி, அக்டோபர் 20, 2018

எங்கோன் வாழ்க

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக
பேசப்படும் பொருளாகத் திகழும் ஒரு பேரதிசயம் -

தஞ்சை பெரியகோயில்!...

இன்றும் பேசப்படுகின்றது...

ஆம்!..

ராஜராஜ சோழனும் கருவூராரும்

இன்று ஐப்பசி சதயம்..

மறக்க ஒண்ணாத மகத்தான நாள்..

மாமன்னன் ராஜராஜ சோழன் இப்பூவுலகில் தோன்றிய திருநாள்..
பூமகள் பெருமை கொண்டு - ஆயிரத்து முப்பது மூன்று ஆண்டுகள் ஆகின்றன. 

தஞ்சையில் நேற்று சதயத் திருவிழா சிறப்புடன் தொடங்கியுள்ளது..







தென்னக வரலாற்றில் பொற்காலம் எனப் பெருமையுடன் குறிக்கப்படுவது ராஜராஜ சோழன் - ஆட்சி செய்தகாலமே!..


சங்கு சக்ர ரேகைகளுடன் மஹாவிஷ்ணுவின் அம்சமாகப் பிறந்தவன் - என மக்களால் கொண்டாடப்பட்டவன் - ராஜராஜ சோழன்,

குடஓலைத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டு சோழ மண்டலத்தின் நிர்வாகத்தினை திறம்பட நடாத்தி -

மும்முடிச்சோழ மண்டலம் முழுமையையும் முறையாக அளந்து - 
நிலத்தின் தன்மைக்கேற்ப வரிவிதித்து - அதையும் கிராம சபைகளின் மூலமாக தணிக்கை செய்து நெறிப்படுத்திய பெருமைக்குரியவன்..



தனது ஆட்சியின் நிகழ்வுகளை மக்களும் 
எதிர்வரும் சந்ததியினரும் அறியும் பொருட்டு 
ஆக்கி வைத்த கல்வெட்டுகள் மாமன்னனின் 
பெருமையைப் பேசிக் கொண்டிருக்கின்றன.. 


ராஜராஜ சோழனின் அரும்பணிகளுள் சிறப்பானது
தேவாரத் திருமுறைகளை மீட்டெடுத்தது..

தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் நிலவறைக்குள் ஓலைச்சுவடிகளாகக் கிடந்த -  திருப்பதிகங்களைப் பெரும் முயற்சியால் மீட்டு -

திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி அவர்களைக் கொண்டு தேவாரமாகத் தொகுத்தளித்தான்!..

மூவர் அருளிய திருப்பதிகங்களைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு மீட்டளித்த அதனால்தான், சிவபாத சேகரன், திருமுறை கண்ட சோழன் - எனப் புகழ் கொண்டான்.

மும்முடிச்சோழன், ஜனநாதன், ஜயங்கொண்டான், சோழ மார்த்தாண்டன், ராஜ மார்த்தாண்டன், நித்ய விநோதன், பாண்டிய குலாசனி, கேரளாந்தகன் - என்பன மாமன்னன் ராஜராஜ சோழனின் சிறப்புப்பெயர்களுள் சில!..


அத்தனை சிறப்புகளையும் - 
ஸ்ரீ இராஜராஜேச்சுரம் என்னும் ஒரே அடையாளத்துக்குள் 
பொதிந்து வைத்த வித்தகப் பெருமகன்....

நேற்றும் இன்றுமாக நிகழும் ஐப்பசி சதய விழாவில்
இன்று காலையில் யானையின் மீது திருமுறை வலம் நிகழ்ந்தது... 

அதன்பின் -
ராஜராஜசோழனின் திருமேனிக்கு மாலையுடன் மலரஞ்சலி. 

தொடர்ந்து - இப்போது (IST நண்பகல் ஒருமணி)
நாற்பத்தெட்டு வகையான மங்கலத் திரவியப் பொருட்களால்
இராஜராஜேச்சரத்துள் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கும் 
அம்பிகைக்கும் மஹா அபிஷேகம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது..


மாலை ஆறு மணியளவில்

மங்கல இசையுடன் திருக்கயிலாய சிவகண வாத்யங்கள் முழங்க, 
சர்வம் சிவமயம் என - பாரம்பர்ய பறையொலி கூத்தொலி முழங்க,

கைவளை குலுங்க காரிகையர் நிகழ்த்தும் கோலாட்ட கும்மி ஒலி முழங்க -
ஸ்ரீ பிரஹந்நாயகி உடனாகிய பெருமான் விடை வாகனத்தில் திருவீதியுலா...
எம்பெருமானின் திருவீதியுலா 

அச்சமயத்தில், எம்பெருமானின் திருக்கோலத்தைத் தரிசித்தவாறே -
ராஜராஜசோழன் உலகமாதேவியுடனும் ராஜேந்திரசோழனுடன்
திருவீதி எழுந்தருள்கின்றார்...



சில மாதங்களுக்கு முன் குஜராத்திலிருந்து மீட்டெடுத்து வரப்பட்ட
மாமன்னன் மற்றும் மாதேவியாரி திருமேனிகள்
இன்று திருவீதி வலம் வருகின்றன..

அத்துடன் இதுநாள் வரையில்
ராஜராஜ சோழன் என கொண்டாடப்பட்ட திருமேனி
ராஜேந்திர சோழனுடையது
என்று கண்டறியப்பட்டுள்ளது..

அந்தத் திருமேனியும் 
திருவீதியுலாவில் எழுந்தருள்கின்றது

ராஜேந்திரசோழ
திரு உலாவின் போது - நான்கு ராஜவீதிகளிலும் உள்ள திருக்கோயில்களின் சார்பாக - ஈசனும் அம்பிகையும் மாமன்னனும் வரவேற்கப்படுவர்.

ராஜவீதி நெடுகிலும் மாலைகள் சாற்றப்பட்டு மங்கல ஆரத்தி எடுப்பதுடன் - மாமன்னனுக்கு பரிவட்டமும் கட்டி மரியாதை செய்து மகிழ்வர்.

விண் கொண்ட பெருமை எல்லாவற்றையும் தமிழும் தமிழ் மண்ணும் கொண்டு நிற்கும் வண்ணம் செய்த பெருந்தகை - சக்ரவர்த்தி ராஜராஜ சோழன்..

மேலே உள்ள படங்கள் 
இரண்டாண்டுகளுக்கு முன் என்னால் எடுக்கப்பட்டவை..

கீழுள்ள படங்கள் - 
நமது நண்பர் தஞ்சை திரு ஞானசேகரன் Fb ல் வழங்கியவை..
அவர் தமக்கு மனமார்ந்த நன்றி...




தேர் கொண்ட மாமன்னன்  
சீர் கொண்டு நின்றனன்!..
பெரும்பேர் கொண்டு நின்றனன்!.. 
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு!..

பார் கொண்ட பெருமையெல்லாம் ஊர் கொண்டு நிற்கும் வண்ணம் 
பேர் கொண்டு நிற்கின்றது பெரிய கோயில்!..

ஆயிரம் ஆண்டுகளாக அணி கொண்டு விளங்கும் அந்த அடையாளம் -
இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பொலிந்து விளங்கும்..
  
திருவீதி கண்டருளும் எங்கோன் வாழ்க.. 
ராஜராஜ சோழனின் புகழ் எங்கெங்கும் ஓங்குக!..
***

17 கருத்துகள்:

  1. இவ்வையகம் உள்ளவரை ராஜராஜ சோழனின் புகழ் மங்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அருமையான் சதய திருநாள் தரிசனம்.
    என் மகனும் ராஜராஜசோழன் பிறந்த ஐப்பசி சதய திருநாள் அன்றுதான் பிறந்தான்.
    அவனுக்கு இன்று பிறந்த நாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      ஐப்பசி சதயத்தில் தங்கள் மகன் பிறந்திருப்பதில் வியப்பொன்றும் இல்லை.
      அனைத்து திருமுறைத் தலங்களையும் தரிசித்த குடும்பம் தங்களது ...

      அபிராமவல்லி அம்பிகையில் அருள் என்றென்றும்
      அருகிருந்து காக்கும்!.. வாழ்க நலம்..

      நீக்கு
  3. படங்கள் செய்திகள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  4. சதயத் திருநாள் தரிசனம் நன்று. படங்கள் அழகு. இன்று காலை தினமலர் தளத்தில் இந்தச் செய்தி படித்தபோதே உங்கள் தளத்தில் பதிவு வரும் என்று எதிர்பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. நான் தஞ்சையில் இருந்த காலத்தில் (1979 வரை) இதெல்லாம் கொண்டாடினார்களா என்று நினைவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      அப்போதெல்லாம் ஐப்பசி சதய விழாவினை ராஜராஜ சமய சங்கத்தினர் நடத்தி வந்தனர்..வாரியார் ஸ்வாமிகளின் தொடர் சொற்பொழிவுகளையும் அவர்களே ஏற்பாடு செய்தனர்..

      கடந்த பத்து பதினைந்து வருடங்களாக தேவஸ்தானமும் அரசும் இணைந்து இவ்விழாவினை நடாத்துகின்றனர்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. ஐப்பசி சதயத்தில் ராஜராஜ சோழனைப் பற்றிய இடுகை அருமை. திருமுறை கண்டதும் வானளாவிய கோவில் கட்டியதும் ராஜராஜ சோழனின் புகழை ஓங்கச் செய்துள்ளன. ஒரு காலத்தில் அந்தக் கோவில் கோபுரம் முழுவதும் தங்கத்தினால் அணிசெய்யப்பட்டிருந்தது என்பதை அறிய ஆச்சர்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த.,

      தங்கம் வேயப் பெற்றிருந்ததைப் பற்றி முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை என்கின்றனர்..

      ஆனால் சோடஷ உபச்சாரப் பொருட்களும் தங்க வட்டில்களும் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன...

      ராஜேந்திர சோழன் புதிய தலைநகரை உருவாக்கியதுமே தஞ்சை பாதுகாப்பினை இழந்தது..

      தெற்கேயிருந்து வந்த கொள்ளையர்களால் பலமுறை சூறையாடப்பட்ட தஞ்சை - பாண்டியர் படையெடுப்பில் அழிவினைச் சந்தித்தது..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. படங்கள் தகவல்கள் அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. அழகான படங்களுடன் கூடிய அமர்க்களமான பதிவு. ராஜராஜன் புகழ் என்றும் மங்காதது! ராஜேந்திர சோழன் சிலை என்பதும் புது விஷயம். இந்தத் திருவிழாவில் எல்லாம் கலந்து கொள்ளும் ஆவல் இருந்தாலும் கூட்டம் ஒத்துக்காது என்பதால் போக முடியலை! எந்தத் தொலைக்காட்சியும் ஒளிபரப்பியதாகவும் தெரியவில்லை. பொதிகை ஒளி பரப்பி இருக்கலாம். தெரியலை!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..