சனி, செப்டம்பர் 29, 2018

இடராழி நீங்குக 3

இன்று புரட்டாசி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை...

புண்ணியங்கள் சேர்கின்ற நாள்... 
சேர்த்துக் கொள்வதற்குமான நாள்!...

அதற்கான வழிகள் ஆயிரம் .. ஆயிரம்!...

அவரவர்க்கு இயன்ற வழிகளில் தேடிக் கொள்வோமாக!..

இந்நாளில் 
ஸ்ரீபேயாழ்வார் அருளிச் செய்த திருப்பாசுரங்கள்.. 

ஸ்ரீ ஆமருவியப்பன் - தேரழுந்தூர்., (மயிலாடுதுறைக்கு அருகில்) 
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று.. (2282)

மனத்துள்ளான் மாகடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண்துழாய் மார்பன் சினத்துச்
செருநர்உகச் செற்றுகந்த தேங்கோத வண்ணன்
வருநரகம் தீர்க்கும் மருந்து.. (2284)

ஸ்ரீஆராவமுதன் - திருக்குடந்தை 
நாமம் பலசொல்லி நாராயணா என்று
நாமங்கை யால்தொழுதும் நன்னெஞ்சே வாமருவி
மண்ணுலகம் உண்டுமிழ்ந்த வண்டுறையும் தண்துழாய்
கண்ணனையே காண்க நங்கண்.. (2289)

வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால் மூவடிமண்
நீயளந்து கொண்ட நெடுமாலே தாவியநின்
எஞ்சா இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி
அஞ்சா திருக்க அருள்.. (2299)

ஸ்ரீ பார்த்தசாரதி - திரு அல்லிக்கேணி., 
வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்
நெருங்குதீ நீருருவும் ஆனான் பொருந்தும்
சுடராழி ஒன்றுடையான் சூழ்கழலே நாளும்
தொடராழி நெஞ்சே தொழுது.. (2305)

இவையவன் கோயில் இரணியன தாகம்
அவைசெய் தரியுருவம் ஆனான் செவிதெரியா
நாகத்தான் நால்வேதத் துள்ளான் நறவேற்றான்
பாகத்தான் பாற்கடல் உளான்.. (2312)

ஸ்ரீ திருமலையப்பன் - திருமலை., 
அவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான்
உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான் துவர்க்கும்
பவளவாய்ப் பூமகளும் பன்மணிப் பூணாரம்
திகழும் திருமார்வன் தான்.. (2318)

இறையாய் நிலனாகி எந்திசையும் தானாய்
மறையாய் மறைப்பொருளாய் வானாய் பிறைவாய்ந்த
வெள்ளத்தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன்.. (2320)

ஸ்ரீ கோதண்டராமன் - வடுவூர்., (மன்னார்குடிக்கு அருகில்) 
உலகமும் ஊழியும் ஆழியும் ஒண்கேழ்
அலர்கதிரும் செந்தீயும் ஆவான் பலகதிர்கள்
பாரித்த பைம்பொன் முடியான் அடியிணைக்கே
பூரித்தென் நெஞ்சே புரி.. (2325)

எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்
எய்தானம் மான்மறியை ஏந்திழைக்காய் எய்ததும்
தென்னிலங்கைக் கோன்வீழச் சென்று குறளுருவாய்
முன்னிலங்கைக் கொண்டான் முயன்று.. (2333)
* * *

ஸ்ரீ செல்வநாராயணப் பெருமாள்.,
Melukote - Mandia -Dt., Karnataka
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
ஃஃஃ

27 கருத்துகள்:

  1. இங்கே தரிசனம் ஆச்சு. கோவிலுக்கு மாலை சென்றால் போதும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு...

      மாலையில் சென்றால் கூட்டம் அதிகமாக இருக்குமே...

      பெருமாளுடன் நாலு வார்த்தை பேசி விட்டு வரமுடியுமோ!...

      நீக்கு
  2. வடுவூர் ராமரையும், மேல்கோட்டை செல்வநாராயணப் பெருமாளையும் தரிசிக்கும் பேறு சில வருடங்கள் முன்னர் கிட்டியது. பார்த்தசாரதியைப் பலமுறை பார்த்து முகத்து வடுக்களை நினைந்து மனம் வருந்தி இருக்கேன். மீசையோடு காட்சி தரும் மூலவரையும் பார்த்து ரசித்திருக்கேன். சென்னையில்/அம்பத்தூரில் இருக்கும்போதெல்லாம் அடிக்கடி வந்து தரிசித்த தலங்களில் அல்லிக்கேணிப் பார்த்தசாரதி கோயிலும் காளிகாம்பாள் கோயிலும் முக்கியமானவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகை மகிழ்ச்சி..

      மேல்கோட்டை சென்றதில்லை..

      பார்த்தசாரதிப் பெருமானை சேவித்திருக்கிறேன்...

      காளிகாம்பிகையை தரிசிக்க வேணும்...

      நீக்கு
  3. திருமலைப் பெருமாள் மூலவரைத் தரிசித்திருக்கேன். மலையப்பரைத் தரிசிப்பது என்னமோ தொலைக்காட்சிகள் தயவில் தான். ஆமருவியப்பர் கோயில் வழியே பல முறை சென்றும் நின்று இறங்கிப் பார்க்கலை! திருக்குடந்தை ஆராவமுதரைச் சேவித்திருக்கேன் சில முறைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருக்குடந்தை ஆராவமுதனின் தரிசனம் பல தடவை...

      ஆனாலும் தேரழுந்தூர் சென்றதில்லை..

      நீக்கு
  4. பாசுரங்கள் இனிமை! தரிசனமும் இனிமை! அதிலும் ஆமருவியப்பனுக்குப் பொருத்தமான பாசுரம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்தும் பெருமாளின் சித்தம்..

      தங்கள் வருகையும் கருத்துரைகளும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  5. பாசுரங்களோடு தரிசனம் கண்டேன்.

    பதிலளிநீக்கு
  6. வாய்மொழிந்து.. மாவலிபால் என வரணும். இன்னும் இடுகை படித்து முடியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த.

      வேறெங்கும் பிழைகளைச் சரியாகக் கண்டுபிடிக்கும் கண்கள்

      இங்கே மௌனமாக இருந்து விடுகின்றன...


      திருப்பாசுரத்தை உள்வாங்கிக் கொண்டு -
      வாய் மொழிந்து வாமனனாய் -

      எனத் தட்டச்சு செய்யும் போது மாவலி என்று மனம் அதுவாகவே எடுத்துக் கொள்கிறது...

      அங்கே ஒற்று குறைவு என்பதைக் கவனிக்காமல் கண்கள் கிறங்கி விடுகின்றன..

      கூர்ந்து கவனித்த பிறகே பதிவை வெளியிடுகின்றேன்...

      ஆனாலும் ஒற்று பிழையானது...

      நீக்கு
    2. நீங்க ரொம்ப கேர் எடுத்துக்கிட்டுதான் பதிவை வெளியிடறீங்க. ஆனாலும் பாசுரங்களில் பிழை கண்டால் (அதை ஒருவேளை நெட்லேர்ந்து எடுத்துருப்பீங்களோ என்ற எண்ணத்தில்) அதன் தவறை (என் கண்ணில் பட்டால்) சொல்லிவிடுகிறேன். தவறாக எடுத்துக்காதீங்க. நோக்கம் குற்றம் கண்டுபிடிப்பதல்ல. அர்த்தமுள்ள பதிவை வெளியிடும் உங்களின் பதிவில் தவறு இருக்கக்கூடாது என்பதுதான் என் எண்ணம்.

      நீக்கு
    3. அருமை...
      இப்படியெல்லாம் வழி நடத்தப் படுவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  7. பெருமாள் தரிசனம் ஆச்சு உங்கள் தளத்தில்.
    பாசுங்களையும் பாடி சேவித்தேன்.
    தேரழுந்தூர் ஆம்ருவியப்பனின் தரிசனம் அடிக்கடி கிடைக்கும் மாயவரத்தில் இருக்கும் போது வீட்டுக்கு வரும் உறவினர்களை அழைத்துக் கொண்டு போவோம்.
    கோவிந்தன் புகழ்பாடி சிறப்பு செய்யும் பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      வாழ்த்துரையும் மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  8. உற்சவர்கள் தரிசனம் அருமை. படங்களும் தெளிவு. பார்த்த உடனே இந்தக் கோவில் பெருமாள் என்று சரியாகத் தோன்றியது. மேல்கோட்டை பெருமாளை இதுவரை தரிசித்ததில்லை. விரைவில் வாய்ப்பு கிட்டட்டும்.

    பாசுரங்களுக்கு பிறகு வருவேன்.(சில சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டபின்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த.
      தங்கள் வருகையை ஆவலுடன் நோக்குகின்றேன்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. ஓம் நமோ நாராயணா...

    மிக அழகிய பதிவு..

    செல்லுவ நாரணனை மட்டும் தான் நான் பல முறை சேவித்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  10. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. பேயாழ்வார், இறைவனைப் பார்க்கிறார். அவன் எப்படி இருக்கிறான் என்பதை 'திருக்கண்டேன்' என்ற பாசுரத்தில் சொல்கிறார். அவன் அருக்கன் (சூரியன்) போன்று ப்ரகாசிக்கிறாராம். செரு கிளரும் பொன்னாழி - செரு என்பது யுத்த பூமி. அந்த யுத்தபூமி அதிரும்படியான பராக்கிரமம் காட்டும் சங்கையும் தரிசித்தாராம்.

    மனத்துள்ளான் பாசுரத்தில், இறைவனைத் "தேங்கோத வண்ணன்" என்று சொல்கிறார். ஓதம் என்பது கடல். தேங்கிய ஓதம் என்பது, கடல் தேங்கிக் கிடப்பது. அப்போது அது என்ன நிறத்தில் இருக்கும் (அனேகமா ஆழ்ந்த நீல நிறம்). அதுதான் இறைவனின் வண்ணம் என்கிறார்.

    நாமம் பலசொல்லி என்ற பாசுரத்தில், "நன்னெஞ்சே வாமருவி' என்கிறார். "மருவி வா நல் நெஞ்சே" - இறைவனைத் தரிசனம் செய்யும்போது கைகள் கூப்பவேண்டும், வாய் பெருமான் நாமம் உரைக்கவேண்டும். கண்கள் அவனைப் பார்க்கவேண்டும். இவற்றையெல்லாம் செய்வதற்கு மனது ஒருமுகப்பட்டிருக்க வேண்டும். அதனால், நெஞ்சை மருவி வா, இதற்கு உடன்பட்டு வா என்று ஆழ்வார் கேட்டுக்கொள்கிறார்.

    வாய்மொழிந்து வாமனனாய் என்ற பாசுரத்தில், 'ஏழ் பிறப்பும்' என்று சொல்கிறார் ஆழ்வார். (ஏழ் பிறப்பும் அவனை நினைந்திரு அவனைப் பணிந்திரு). அது ஏழு பிறப்பல்ல. எல்லாப் பிறவிகளிலும் என்று அர்த்தம் (ஆண்டாளுக்கு சந்தேகத்தால், இற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் என்று சொன்னாள், எத்தனை எத்தனையோ பிறவிகள் உண்டோ அது அத்தனையிலும்)

    "வருங்கால் இரு நிலனும்" பாசுரத்தில், சுடராழி என்பது ஒளி பொருந்திய சக்கரம் என்று அர்த்தம் (சுடர் ஆழி). "தொடர் ஆழி நெஞ்சே" என்பதில், ஆழி நெஞ்சு என்றால் கம்பீரமான மனமே என்று அர்த்தம். ஆழி என்ற சொல்லுக்கு இரண்டு பொருள்.

    இடுகையைச் சாக்கிட்டு பாடலின் பொருளை உணர்ந்து படித்து இன்புற வைத்ததற்கு நன்றி துரை செல்வராஜு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..

      இதுதான் சத்சங்கம்...
      இதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்...

      அவன் அருளாலே அவன் தாளினை வணங்கும் போது தான் இப்படி எல்லாம் நேரும்...

      திருப்பாடல்களையும்
      திருப்பாசுரங்களையும்
      இப்படியாகச் சிந்திக்கும் பொழுதில்
      ஆங்கே எம்பெருமான் பிரசன்னம் ஆகிறான் என்பது ஆன்றோர் வாக்கு...

      அது மீண்டும் நிகழ்ந்துள்ளது..

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  12. மேல்கோட்டை உட்பட அனைத்து கோயில்களுக்கும் சென்றுள்ளேன். பெருமாள்களை தரிசித்துள்ளேன்.இன்று உங்கள் தளம் மூலமாக மறுபடியும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  13. சிறப்பான பாசுரங்கள் உடன் அழ்கிய படங்களும்.....

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. ஓம் நமோ நாராயணாய.. இதை நான் வியாளக்கிழமைகளில் சொல்வதுண்டு:)..

    பதிலளிநீக்கு
  15. அருமையான பாசுரங்கள், படங்கள் மிக மிக அழகு அண்ணா..

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..