புதன், ஆகஸ்ட் 29, 2018

ஆரு ஐயா நீ... ..

ஆயா... நீ அழ வேண்டாம்!...
ஆரும் இல்லை உனக்கு என்று
அழவேண்டாம் ஆயா நீ...
ஆதரவா நான் இருக்கேன்..
ஆயா நீ அழவேண்டாம்!...

ஆரு ஐயா நீ!..

நான் பாட்டுக்குக் காட்டுக்குள்ள கிடந்தேன்...
பாழாப் போன மனுசனுங்க காட்டையும் கரட்டையும் 
அழிச்சுப் போட்டுட்டானுங்க...

வீடும் இல்லாம காடும் இல்லாம -
இந்த ஊருக்குள்ள தெருத்தெருவா சுத்திக்கிட்டு இருக்கேன்...
ஆயா உன்னைப் பார்த்தேனா... பாவமா இருந்திச்சு... அதான் வந்தேன்...

நீ மட்டும் ஒத்தையிலயா வந்தே?...

நாங்க பலபேரு குழந்தை குட்டிங்களோட வந்தோம்...

திங்கிறதுக்கு ஒன்னும் கிடைக்கலை...
யாராவது திங்கக் கொடுப்பாங்க...ன்னு பார்த்தா
ஒருத்தனும் ஒன்னும் கொடுக்க மாட்டேங்குறானுங்க...

நாயை அவுத்து விடுறானுங்க...
கம்பை எடுத்து வீசுறானுங்க...
கல்லை விட்டு எறியறானுங்க...
காரை விட்டு ஏத்துறானுங்க...

வாயில்லா ஜீவன்...ன்னா அவ்வளவு கேவலமா?...
நேத்து கூட ரெண்டு பேரு கார்...ல அடிபட்டுட்டானுங்க...

அப்டியும் இப்டியுமா பயந்து ஓடுனதுல..
நாங்கல்லாம் பிரிஞ்சுட்டோம்...

மிருக ஜாதி இருக்குற காட்டுக்குள்ள 
இஷ்டத்துக்கும் திரிஞ்சுக்கிட்டு இருந்தோம்...

மனுச ஜாதி இருக்குற நாட்டுக்குள்ள 
கஷ்டத்துக்கு கஷ்டம்... பயந்துகிட்டு இருக்கோம்...

எங்களால சனங்களுக்கு எடைஞ்சலா இருக்குதாம்...
அதுனால புடிச்சு வேற எங்கயாவது உட்டுடுங்க...
இல்லாட்டி போட்டுத் தள்ளிடுங்க...ன்னு சொல்லியிருக்கானுங்க...
எங்களுக்கு ஈவு எரக்கம் காட்ட யாருமேயில்லை...

இங்க தான் மனுசன மனுசன் அடிச்சுத் திங்கறானே!...
ஒங்களுக்கு எவன் எரக்கம் காட்டப் போறான்!?...
அந்தப் பக்கமா வாழப்பழம் இருக்கு ..
ரெண்டு எடுத்து சாப்பிடு!..

வேணாம்.. ஆயா!... 
பாவம்... நீயே வேகாத வெயில்...ல ஏவாரம் பண்ணிக்கிட்டு இருக்கே!..

இதுல என்ன ராசா இருக்கு?... பாவப்பட்ட ஜீவன்... நீ சாப்பிடு....
நேத்து எவனோ ரவுடிப் பசங்க ரெண்டு சீப்பு பழத்தைத் தூக்கிக்கிட்டுப் போயிட்டானுங்க...
நான் என்னா பண்ணுவேன்.. அந்த காளியாயி மகமாயி கேக்க மாட்டேங்குதே..

கேக்கும் ஆயா... கேக்கும்.. காளி மகமாயி கண்டிப்பா கேக்கும்!...

என்னமோ.... சாமி மாதிரி வாக்கு சொல்றே... நல்லா இரு...
அது சரி.. நீ எங்கேயும் போகாம எங்கூடயே இருந்திடேன்!...

நல்ல கதையா இருக்கு போ!...

ஏன் சாமீ?..

வாயில்லா ஜீவனுக்கு இம்சை கொடுக்கறே...
என்னைய வெச்சு நீ ஏவாரம் பண்றே... ன்னு... -
எவனாவது ஆபீசர் வந்து உன்னைய புடிச்சுக்கிட்டுப் போயிடுவான்!...

அப்பிடி வேற இருக்குதா!?..

ஒலகம் தெரியாத ஆயாவா இருக்கிறியே நீ!..

ஆமாடா.. ராசா.. ஒலகம் தெரியாமத் தான் இருந்துட்டேன்... அதனால தான்
நாலு புள்ளைங்களப் பெத்தும் நடுத்தெருவில ஓடுது எம் பொழப்பு!...

பாவம் ஆயா நீ!.. ஒரு பயலும் கஞ்சி ஊத்தலையா?...

மகுடி அவுளுங்க கிட்டே இருக்கு.... இஷ்டத்துக்கு ஊதுறாளுங்க!..
இவனுங்க பல்லு போன பாம்பு மாதிரி ஆடிக்கிட்டு இருக்கானுங்க!..

கடைசி பய தான் காப்பாத்துறான்...
அவன் மார்க்கெட்டுல மூட்டை எடுத்துப் போடறான்...
மார்க்கெட்டுக்கு அந்தப் பக்கம் அவன் பொண்டாட்டி..
இந்தப் பக்கம் நான்.. பச்சை மொளகா அது இது... ன்னு 
கூறு கட்டி வித்துக்கிட்டு இருக்கோம்!...

இதெல்லாம் சனங்க வந்து வாங்குறாங்க தானே!...

அதை ஏன் கேக்குறே?... அந்தக் கொடுமைய!..
ஐஸ் பொட்டி அலங்காரம் எல்லாம் வெச்சி 
அங்கே ஒரு கோடீஸ்வரன் 
கத்திரிக்கா கடை வெச்சிருக்கானாம்... 

அந்தக் கடைக்குப் போயி வாங்குனாத்தான் கவுரதையாம்...
சனங்க மினுக்கிக்கிட்டு அங்கே போவுதுங்க!...
சொன்ன காசை கொடுத்துட்டு வருதுங்க!...

இங்கே வந்தா 
ஒரு ரூவாய்க்கு தர்றியா...
எட்டணாவுக்குத் தர்றியா...
சும்மாத் தர்றியா...ன்னு மல்லுக்கு நிக்குதுங்க!...

முடிஞ்ச வரைக்கும் இதெல்லாம் வித்துப்புட்டு 
வீட்டுக்குப் போனாத் தான் நமக்கு ஒரு வாய் கஞ்சி...

அடடா... உனக்கே இம்புட்டு கஷ்டம்...
இதுல என்னையும் உங்கூட இருக்கச் சொல்றியே!..

ஏதோ எனக்கு ரெண்டு வாய் சோறு.... ன்னா
அதுல உனக்கு ஒரு வாய் ஊட்ட மாட்டேனா!... 

ஆயா... நீ விக்கிறது பச்ச மொளகா, பூண்டு இஞ்சி.... ன்னாலும்
பேச்சு ஒவ்வொன்னும் பலாச் சுளையா இருக்கு!...

சரி... ஆயா... நாங் கிளம்பறேன்...
எங்கூட்டம் எல்லாம் எங்கே அலையுதுங்களோ?..
தேடிக் கண்டு புடிக்கோணும்!...

தேடிக் கண்டு புடிச்சு மறுபடியும் காட்டுக்கே போய்டுவியா?..

காடு எங்கே இருக்கு... அதைத்தான் அழிச்சிப் போட்டுட்டானுங்களே...
இந்த ஊருக்குள்ள தான் அங்கே இங்கே..ன்னு பொழுதை ஓட்டணும்!...

அப்போ நல்லதா போச்சு...
பொண்டாட்டி புள்ளைங்கள அழைச்சுக்கிட்டு வா...
கெடைக்கிறத சாப்புட்டுட்டு சந்தோசமா இருக்கலாம்!...

சரி.. ஆயா... நான் போய்ட்டு வர்றேன்!...

சரி.. ராசா.. நல்லபடியா போய்ட்டு வா!...
*****

பதிவின் முதலில் உள்ள படம் Fb - ல் வந்தது..
வானரமும் பாட்டியும் ஒருவருக்கொருவர் காட்டும்
அன்பினை வைத்து கதை பின்னப்பட்டுள்ளது.. 
***** 
ஏ.. கடவுளே.. பகவானே..
ஏழை பாழைங்கள காப்பாத்துங்க.. சாமீ!..

*****
ஏழையின் குரலை
ஏற்றருளுங்கள் ஈசனே!...
ஃஃஃ

12 கருத்துகள்:

  1. நல்ல கற்பனை. நிஜத்தில் நடக்கக்கூடிய ஒன்றே! ரொம்ப ரசிச்சேன். நன்றி.காடுனு பேருக்காவது இருந்தாத் தான் இவை எல்லாம் பிழைக்கும். இல்லைனா! நினைக்கவே கலக்கமா இருக்கு!

    பதிலளிநீக்கு
  2. தலைப்பைப் பார்த்து, திருவாரூர் ஐயனைப் பற்றிய பதிவோ என்று தோன்றியது.

    ஆனால் முதல் படம் மனதை உருக்குகிறது.

    எந்த உயிரும், அதன் தாயாரால் கொஞ்சி மகிழ்ந்து இந்த உலகில் வளர்க்கப்பட்ட உயிரல்லவா? ஆனால் 50+ வயதாகும்போதுதான் பலருக்கு (சிலருக்கு) உலகம் பலவும் கற்றுக்கொடுக்கிறது, 'இளைமை, தைரியம், சக்தி, அழகு, செல்வம் எல்லாமே கண்மூடிக் கண் திறப்பதற்குள் காணாமல் போகும் சக்தி உடையது என்று.

    முதல் படத்தில் வானரம், ஒரு ஆறிவுரை/ஆறுதல் சொல்லும் வயதானவராக எனக்குப் படுகிறது.

    உங்களுடையது வித்தியாசமான சிந்தனை.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஜி
    அழகிய கற்பனை இருப்பினும் உண்மை நிலையே...

    பதிலளிநீக்கு
  4. நெகிழ வைக்கும் கற்பனை. அந்த பாட்டியின் துக்கம் சத்தியமாக அந்த வானர நண்பனுக்குப் புரிந்திருக்கிறது. சாய்ந்து கொள்ள தோள் கிடைத்து விட்டாலே பாதி துக்கங்கள் பறந்து விடும்.

    சுவையான கற்பனை.

    பதிலளிநீக்கு
  5. பாட்டியும், ஆஞ்சநேயர் படமும் பார்த்தவுடனேயே...மனம் நெகிழ்ந்து விட்டது. கதையின் கற்பனை நிதர்சனம் ஐயா.

    பதிலளிநீக்கு
  6. ஆயாவிற்கு ஆறுதல் சொல்லும் குரங்கார் அருமை.
    ஆயா சொல்வது உண்மை. பெரிய கடைகளில் பேரம் பேசாமல் வாங்கும் மனிதர்கள் இவர்களை போன்ற எளியவர்களிடம் பேரம் பேசுவதை கேட்டு இருக்கிறேன்.

    மனிதன் தான் மட்டுமே வாழ பிற உயிரின வசிக்கும் இடங்களையும் அழித்து வருகிறான்.
    வறுமையிலும் செம்மை என்பது போல் உன் குடும்பத்தை அழைத்து வா இருப்பதை தருகிறேன் என்று சொல்லும் ஆயா மனத கவர்ந்தார்.

    குரங்கார் பிரார்த்தனை பலிக்கட்டும்.


    பதிலளிநீக்கு
  7. உங்களின் எழுத்து ரசனையும், கற்பனை ரசனையும் எங்களை திக்குமுக்காட வைத்தது.

    பதிலளிநீக்கு
  8. நல்ல கற்பனை - கற்பனை என்றாலும் நெகிழ வைத்த பகிர்வு.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    தங்களுக்கு நல்ல கற்பனை வளம். அருமையாக படத்தை வைத்து கதை எழுதியுள்ளீர்கள். நானும் இப்படத்தை பார்த்திருக்கிறேன். அருமையாக கதை புனைந்து பகிர்ந்த தங்களுக்கு நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. ஒரு படத்திற்கான உங்கள் கற்பனை அசர வைக்கிறது ஐயா. அருமையான கதை மனதைத் தொட்டக் கதை. ஆமாம் காடுகள் அழிந்துதான் வருகின்றன. எங்கள் ஊர் சமீபத்திய வெள்ளத்திற்கு எங்கள் சுற்றுச்சூழலும் காரணம் என்றும் சொல்லபப்டுகிறதுதான்...

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  11. துரை அண்ணே!!! ஹையோ என்ன சொல்ல வார்த்தைகள் இல்லை. செம கற்பனை. அந்த நம் மூதாதையர் செல்லம் என்ன அழகு பாருங்க. எப்படி அந்தப் பாட்டிகிட்ட போய் அனுசரணையா சொல்லுது...ரொம்ப ரொம்ப ரொம்ப ரசித்தேன் அண்ணா உங்கள் கற்பனையை அதுதான் நிஜமும் கூட இல்லையா. பின்ன காடு எல்லாம் போச்சுனா இதுங்க எங்க போகும்.

    நான் சூப்பர் மார்க்கெட்டில் வாங்குவது என்பது வெகு வெகு வெகு அபூர்வம். பாட்டிகள் வண்டியில் வைத்திருப்பவர் சந்தையில் என்று தான் வாங்குவது. பொருட்கள் கூட வீட்டருகில் இருக்கும் மொத்த வியாபாரக் கடையில்/அண்ணாச்சி கடையில் வாங்குவதுதான். இங்கெல்ல்லாம் ஏதேனும் கிடைக்காத பொருள் என்றால் மட்டுமே அதுவும் தேவை என்றால் மட்டுமே.. பெரிய கடை...

    மிகவும் ரசித்த பதிவு அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..