ஞாயிறு, ஜூன் 24, 2018

தமிழும் இசையும்

மங்கலம்...

மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவனவற்றுள் முதலில் இருப்பது....

மகிழ்ச்சியும் மலர்ச்சியும் ததும்பும் உள்ளம்
ஆயுளும் ஆரோக்கியம் நிறைந்திருக்கும் இல்லம்...

இதனால் தான்,
மங்கலம் என்ப மனை மாட்சி - என்றார் வள்ளுவப் பெருந்தகை...

மனை மாட்சியைத் தந்திடும் மங்கலத்தை
எப்படியெல்லாம் வரவேற்கிறார் - கவியரசர்!...


ஜூன் 24 - 1927 
இன்று கவியரசர் பிறந்த நாள்...
கூடவே - அவருடைய அன்புத் தோழர்
மெல்லிசை மன்னருக்கும் பிறந்த நாள்..


ஒளிமயமான எதிர்காலம்
என் உள்ளத்தில் தெரிகிறது - இந்த
உலகம் பாடும் பாடல் ஓசை
காதில் விழுகிறது...

ஒளிமயமான எதிர்காலம்
என் உள்ளத்தில் தெரிகிறது...

நால்வகை மதமும் நாற்பது
கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானில் இருந்தே
பூமழை பொழிகின்றார்...

மாலை சூடி எங்கள் செல்வி
ஊர்வலம் வருகின்றாள்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க
என்றவர் பாடுகின்றார்...

ஒளிமயமான எதிர்காலம்
என் உள்ளத்தில் தெரிகிறது...

குங்குமச் சிலையே குடும்பத்து
விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோயிலில் வாழும் காவல் தெய்வம்
கண்ணகியே வருக...

மங்கலச் செல்வி அங்கயற்கண்ணி
திருமகளே வருக..
வாழும் நாடும் வளரும் வீடும்
வளம் பெறவே வருக!...

ஒளிமயமான எதிர்காலம்
என் உள்ளத்தில் தெரிகிறது - இந்த 
உலகம் பாடும் பாடல் ஓசை
காதில் விழுகிறது...

ஒளிமயமான எதிர்காலம்
என் உள்ளத்தில் தெரிகிறது!...
***


காலத்தால் அழியாத
இந்தப் பாடல் 
இடம் பெற்ற திரைப்படம் 
பச்சை விளக்கு

மங்கலகரமான இந்தப் பாடலில்
மகிழ்ச்சி வெள்ளம் ததும்பும்படிக்கு
இசையமைத்திருப்பவர்
மெல்லிசை மன்னர்..

ஜூன் 24 - 1928
கவியரசரும் மெல்லிசை மன்னரும் வழங்கிய இனிய பாடல்கள் 
இன்றைய நாளில் அதிகமாகப் பேசப்படுகின்றன...

இது தான் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் பெருஞ்சிறப்பு..

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை!.. - என்றார் கவியரசர்..

அந்த சொல் மெல்லிசை மன்னருக்கும் பொருந்தும்..

அவ்வண்ணமாகிய 
மாபெரும் வித்தகர்களை 
நெஞ்சம் மறப்பதில்லை..
நெஞ்சம் மறப்பதேயில்லை!..  
***

21 கருத்துகள்:

  1. காலை வணக்கம்.

    அடடே.. ஆமாம்... இன்று இந்த இரு உடன்பிறவா சகோதரர்களுக்கும் பிறந்தநாள்தான். முன்னர் எங்கள் தளத்தில் இந்நாளில் ஒரு பதிவு போட்ட நினைவு இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. இசையாலும், பாடல் வரிகளாலும் நம்மை மகிழ்வித்த இரு மாமேதைகள்.

    இவர்கள் எல்லாம் கடவுளின் பிள்ளைகள்.

    எங்களை போன்ற பாமரர்களுக்கு சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் தந்து கவலை மறக்கச் செய்பவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      நம்மைப் போன்ற பாமரர்களுக்கு பாடல்களின் மூலம் பல்வேறு நல்ல விஷயங்களை உணர்த்தியவர் கவியரசர்...

      மீண்டும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. இருவரும் சேர்ந்து கொடுத்த பாடல்கள் காலத்தால் அழியாத பொக்கிஷங்கள்.
    அவர்கள் என்றும் வாழ்வார்கள்.
    அருமையான பகிர்வு.
    பாடலும் பிடித்த பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      >>> அவர்கள் என்றும் வாழ்வார்கள்.. <<<

      உண்மையான வார்த்தைகள்.
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அருமையான மறக்க இயலாத பாடல் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  5. அன்பின் ஜி
    இரு மாமேதைகளின் பிறந்தநாளில் அற்புதமான பாடலுடன் பகிர்வு நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. கவியரசருக்கும் மெல்லிசை மன்னருக்கும் பிறந்த நாள்.....

    சிறப்பான நாளில் சிறப்பான பாடல் பகிர்வு.

    மீண்டும் கேட்கத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      மறக்க முடியுமா.. அவர்களை மறக்க முடியுமா!...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. தவறுகள் செய்தபோதும் மனத்தளவில் நல்லவராக இருப்பவர்கள் காலத்தை வென்று வாழ்கிறார்கள்.

    வாலி திரையுலகில் கோலோச்சுகிறார். கண்ணதாசன் நட்புடன் இருக்கிறார். ஆனாலும் மேடைகளில் வாலி, கண்ணதாசன் வரிகளை, அவரைக் கிண்டல் செய்து பேசுவர் (திமுகவையும்). கவிதா ஹோட்டலுக்கு கண்ணதாசன் வாலியை வரவழைத்தார். குடித்தபிறகு வாலி ஒரு பெண்ணுடன் ஹோட்டல் ரூமில் ஒதுங்கினார். கண்ணதாசன் அறைக்கு வந்த ஒரு நண்பர், இப்போ உடனே போலீசுக்கு போன் போட்டால் வாலி மாட்டிக்கொள்வார், குற்றம் பதிவு செய்வார்கள், அவருக்கு பாடம் கற்பித்த மாதிரி இருக்கும் என்று சொன்னபோது, கண்ணதாசன் அவரை அறைந்து, வாலி எண் விருந்தினராக இங்கு வந்திருக்கிறார், அவர் வீடுபோய்ச் சேரும்வரை, நான் பொறுப்பு என்று சொல்கிறார். இந்த குணம் பற்றி வாலி மிகவும் சிலாகித்து எழுதியிருக்கிறார்.

    கண்ணதாசன், வாலி திறமைகள் எல்லோரும் அறிந்ததுதான். அவர்களைப் போற்றிய எம் எஸ் வி திறமையும் எல்லோரும் அறிந்ததுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      தாங்கள் இங்கே குறைத்துள்ள தகவலை வாலி அவர்கள் எழுதிய தொடர் கட்டுரை - ஆனந்த விகடனில் படித்துள்ளேன்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. மெல்லிசை மன்னர்கள் இசை மெல்லிசை மன்னருடையதை விடச் சிறப்பாக இருந்ததாக எனக்குத் தோன்றும். அது என்னமோ பிரிந்த பின்னர் ராமமூர்த்திக்குப் படங்கள் கிடைக்கவில்லை. ஆனால் எல்லோரும் ராமமூர்த்தி வயலின் நன்றாக வாசிப்பதால் அவருக்குப் பிரச்னை இல்லை என்றார்கள். ஆனால் கடைசி வரை நின்றது விஸ்வநாதன் மட்டுமே! மற்றபடி அவங்க பிறந்த நாள் எப்போன்னு எல்லாம் நான் தெரிஞ்சு வைச்சுக்கலை! இன்று அவர்கள் பிறந்த நாள் என்று தெரிந்ததும் இங்கே எந்தத் தமிழ்ச் சானலுமே அவர்கள் பாடல்களை ஒளி/ஒலி பரப்பவில்லையே என நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி....

      இப்படியொரு இசைநிகழ்ச்சிக்குப் பதிலாக -

      ஏதாவது அநாகரிகக் கும்மி,
      வீட்டுக்குள் ஒப்பாரி நாடகம்,
      ஊருக்குள் கலவர கருத்தரங்கம்

      இதெல்லாம் போட்டால் வருமானம் கல்லாப்பெட்டி நிறையும்அல்லவா..

      பொதிகையில் வருகிறதா என்று பாருங்கள்...

      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
    2. ஆமாம், பொதிகையில் வரலாம். இன்னிக்குப் பொதிகை பார்க்கலை. பார்க்கணும். :))))

      நீக்கு
  10. கவியரசரின் நினைவாக அவர் எழுத்தின் ஒரு சிறு பகுதியைப் பகிர்ந்துகொள்கிறேன்:

    காதலில் தோற்றுப்போய் கவிதையில் புலம்பியவ்ர்களில் நானும் ஒருவன்.
    காதல் புனிதமானது என்றும், தெய்வீகமானது என்றும் சொல்லப்பட்ட மொழிகளைக் கேட்டுக் காதலித்தவனல்ல.

    அதுவும் என் கண்களிட்ட கட்டளைப்படி நடந்ததே.

    சரீரங்கள் சேர்ந்ததில்லை; இதழ்கள் இணைந்ததில்லை; கண்களே காலாக்கினியாக எரிந்தன. எரிகின்றன.

    விதியின் பிரவாகத்திலே நடந்த விழி விளையாட்டு.
    அதுவும் பிரிவிலேயே முடிந்தது.

    அவள் பேரழகியல்ல.

    பின்னாளில் அவளை விடப் பேரழகிகளை நான் சந்தித்திருக்கிறேன்.

    கனவில் நிற்கும் அந்தச் சொர்க்கத்தைக் கண்ணெதிரில் நிற்கும் கட்டழகிகளால் எனக்குத் தர முடியவில்லை.

    பத்து ஆண்டுகளுக்கு முன்னால், ஒருநாள் நண்பர் சிவாஜி கணேசன் கேட்டார், ‘எப்படிக் கவிஞர் இவ்வளவு எழுதுகிறார்?’ என்று.

    நானா எழுதுகிறேன்?

    “என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்? –இது
    யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்? –நான்
    அவள் பேரைத் தினம் பாடும் குயிலல்லவா?
    என்பாடல் அவள் தந்த மொழியல்லவா?”

    இந்தப் பாடலை அவளுக்காக எழுதினேன்.

    அவளைப் பற்றி நான் விவரிக்க முடியவில்லை. விவரிக்கவும் கூடாது.

    அவளொரு கௌரவமான குடும்பப் பெண்.

    அவள் நிம்மதிக்கு நான் குறுக்கே போக முடியாது.

    அந்தக் காதல் நிறைவேறியிருந்தால், வாழ்க்கை இன்று எப்படியிருக்கும் என்று என்னால் கணிக்க முடியாது.

    அது தோல்வியுற்றதால் அவள் அமராவதியோ இல்லையோ, நான் அம்பிகாபதியாகி விட்டேன்.

    என் நண்பனுக்கு ஒருத்தி கிடைத்து அவனைக் கொன்றாள்; எனக்கு ஒருத்தி கிடைக்காமல் என்னைக் கொன்று கொண்டிருக்கிறாள்.

    நினைவுகள் சித்திரவதை செய்கின்றன.

    காதல் அவஸ்தை போதும்.

    (கண்ணதாசன் – ‘ராக மாலிகா’ பக்கம் 58-59)

    -இராய செல்லப்பா சென்னையில் இருந்து

    பதிலளிநீக்கு
  11. அருமையான பதிவு ஐயா!/துரைஅண்ணா

    ----துளசிதரன், கீதா..

    கீதா: கீதாக்கா சொல்லியிருப்பது போல் எதெதற்கெல்லாமோ எந்தெந்த தினங்களெல்லாமோ கொண்டாடும் மீடியாக்கள் இதை எல்லாம் மறந்துவிடுகிறார்கள். நீங்கள் சொல்லியிருப்பது போல் வருமானம் கல்லாப்பெட்டி நிறையணுமே....ம்ம்ம்

    பதிலளிநீக்கு
  12. அருமையான பதிவு .இருவருமே மா மேதைகள் .அவர்களின் படைப்புகளும் காலத்தால் அழியாதவை .இன்னிக்கு விகடனில் கவியரசரின் நகைசுவைப்பற்றி அவர் மகள் பேட்டியும் படித்தேன்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..