வியாழன், மார்ச் 22, 2018

திசைதொழும் மேனியன்

எல்லாவற்றையும் -
உச்சரிக்கும் மந்திரங்களினால் சாதித்து விடலாம்...
நிகழ்த்தும் யாகங்களினால் அடைந்து விடலாம்...

அப்படி எல்லாம் எம்மால் ஆகும்!... - என்றிருக்க
பரம்பொருள் என்ற ஒன்று ஏது!...

தவிர -
பரம்பொருள் என்ற ஒன்று இருந்தாலும் அது தேவையில்லாதது!..
அது இல்லாமலேயே எமக்கு அனைத்தும் ஆகிவிடும்!...

இப்படியான இறுமாப்பும் அகங்காரமும்
அவர்களது தலைக்கு மேலாகத் ததும்பிக் கொண்டிருந்தன...

அவர்கள் - ரிஷிகள்.. தாருகாவனத்து ரிஷிகள்...

இருந்தாலும் -
இத்தனையும் தங்களது மனைவியரின் மனோபலத்தால் கூடி வருவது
- என்ற எண்ணமும் அவர்களுக்குள் இருந்தது....

இவர்களது அகங்காரத்தினால் சற்றே அசைந்தது - இந்திர சபை...

அந்த அளவில் இந்திரன் ஓடிச்சென்று நின்ற இடம் திருக்கயிலாயம்...


இந்திரன் ஏதும் உரைக்காமலே -
அவனது உள்ளத்தை உணர்ந்து கொண்ட எம்பெருமான்
பிக்ஷாடனராகத் திருக்கோலம் கொண்டு நின்றார்..

ஐயன் நடத்த இருக்கும் நாடகத்துள்
தானும் பங்குபெற திருவுளம் கொண்டான் ஸ்ரீஹரிபரந்தாமன்...

அதன் விளைவு -

சூரியன் உச்சியைச் சென்றடைவதற்குச் சற்று முன்பாக
தாருகாவனத்து ஆசிரமங்களின் வாசலில்
பிரம்ம கபாலம் ஏந்திய திகம்பரனாக
திருவடித் தாமரைகளில் இலங்கும் வீரத் தண்டைகள்
சல்..சல்.. - என, இசைக்க மென் நடை பயின்றான் எம்பெருமான்...

இந்நேரத்தில் பிச்சைக்கு வந்தது யார் ?.. - என்ற கேள்வியுடன்
வெளிவந்த ரிஷி பத்தினிகள் நிலைகுலைந்தனர்...

பேரழகன் ஒருவன் பிச்சைப் பாத்திரத்துடன்!...

ஆனாலும்,

பிச்சைப் பாத்திரமாக ஏந்தியிருந்த அவன்
இரந்து நிற்காமல் நெடுவழியில் சென்று கொண்டிருந்தான்..

பிச்சைப் பாத்திரத்தை ஏந்தியவன் நிற்காமல் செல்வது எதற்கு?..

- என்ற வினா அந்தப் பெண்களைக் குடைந்தது...

இரந்து வந்த அவனுக்கு ஏதாவது ஈதல் வேண்டுமே!..
அவனுக்கென்று கொடுக்க என்ன இருக்கிறது நம்மிடம்?...

அவ்வேளையில் அவர்களது எண்ணமும் குழைந்தது..
இடைமேலாடையும் மணிமுத்து மேகலையும் நெகிழ்ந்தது...


அதே சமயத்தில் அங்கே வேள்விச்சாலையில்
யாகாக்னியும் திடீரென அவிந்தது..

நிகழ்ந்ததை உய்த்து உணரும் முன் - ரிஷிகளின் முன்பாக
ஜகன் மோகினியாக உலவினான் ஜனார்த்தனன்...

கோலக் குமரியாகக் குலவி நிற்பவன் கோவிந்தன்!..
- என்பதை அறியாத ரிஷிகள் தங்களுக்குள் புலம்பிக் கொண்டனர்...

பிரபஞ்சப் பேரழகே பெண்ணா!.. - உனைக் 
காணாமல் இருப்பதுவும் கண்ணா!...

கருத்தழிந்து போக கதிகலங்கி நின்றனர்...

ஜகன்மோகினி முன்னே செல்ல 
அவளது முகங்காணும் முனைப்புடன்
பின்னே சென்றனர் - பெருந்தவம் புரிந்த முனிவர்கள்...

வெகுதூரம் நடந்த ஜகன்மோகினி 
ஒரு நிலையில் காற்றோடு கலந்து போனாள்...

அவள் பறந்து போனாளே.. - எம்மை
மறந்து போனாளே!...

கதிகலங்கிய ரிஷிகள் தன்னுணர்வு வரப்பெற்றனர்...

அந்த நிலையில் தம்மைத் தாம் காண்பதற்கும் வெறுப்புற்றனர்....

ஏன் இவ்வாறு நிகழ்ந்தது?.. -  என - யோசிக்கும் போது

அங்கே தமது இல்லத்தரசிகள் -
அகம் குழைந்து அத்துடன் ஆடையும் நெகிழ்ந்து
திகம்பரனின் பின்னால் செல்லும் அவலத்தைக் கண்டு அதிர்ந்தனர்...

ஆ.. முதலுக்கே மோசம் வந்ததே!..

பதறி ஓடித் துரத்திப் பிடித்தனர் - தமது பத்தினியரை...
அவர்களோ திகம்பர மயக்கத்திலிருந்து மீளாமல் புலம்பிக் கிடந்தனர்..

போகிற திகம்பரன் சும்மா போகாமல்
ரிஷிகளைப் பார்த்து மெல்லியதாக புன்னகைத்து விட்டுப் போனான்!..

அந்த அளவில் ரிஷிகளின் அகங்காரமும் இறுமாப்பும் இற்று வீழ்ந்தன...

சே.. நாம்இந்த அளவுக்கு கேவலமாகிப் போனோமே!...
அந்த திகம்பரனை சும்மா விடக்கூடாது!...

ஆமாம்... ஆமாம்.... அவனை சும்மா விடக்கூடாது... அமைதிப் பூங்காவாகிய தாருகா வனத்துக்குள் அவன் எப்படி வரலாம்!.. அவனை யார் உள்ளே விட்டது?... போராடுவோம்.. போராடுவோம்.. இறுதிவரை போராடுவோம்!...

கூட்டமாகக் கூடி நின்றார்கள்.. வாய்க்கு வந்தவாறு சத்தம் போட்டார்கள்.. 

அத்துடன் நில்லாமல் -
உடனடியாக கண்ணில் கண்ட  
அனாச்சாரங்களை எல்லாம் அள்ளிப் போட்டு
மீண்டும் தீ மூட்டினார்கள்....

நாசம் விளைவிக்கும் சொற்களைச் சொல்லியவாறு
அபிசார வேள்வியைத் துவக்கினார்கள்....

சுற்றுச் சூழலைக் கெடுத்த அந்த வேள்வித் தீயிலிருந்து
ஒன்றுக்கும் ஆகாதவைகள் எல்லாம் ஆர்ப்பரித்து வந்தன...

அப்படி வந்தவற்றுள் ஒன்று தான் - புலி...

அந்தப் புலிக்கு வெறியேற்றி -

போ!... போய் அந்தத் திகம்பரனை அழி!... - என்று
நிராயுதபாணியாக நின்றிருந்த ஈசன் மீது ஏவினார்கள்...

ஏற்கனவே - 
எம்பெருமானின் மீது ஏவப்பட்ட தீக்கொழுந்துகள் 
அவனது அங்கைக்குள்ளே அடங்கி விட்டன...

நஞ்சுடைய நாகங்கள் அனைத்தும்
நாயகனின் திருமேனியில் நல்லணிகளாக
நடுநிலை மேகலையாக மாறிவிட்டன...


இந்தப் புலி!... நிச்சயம் தனது கூடிய நகங்களினால்
திகம்பரனைக் கீறிக் கிழித்துப் போடும்!...

தாருகாவனத்து ரிஷிகள் அகங்காரத்துடன் சிரித்தனர்..

ஆனால் அவர்களது அகங்காரமும் பொடியாய் உதிர்ந்து போனது...

கெடுமதியாளர் ஏவிய கொடும்புலியானது
ஈசனின் சுட்டு விரல் நுனியால் கிழிபட்டு
கீழே விழுந்து மாண்டது....

கிழிபட்ட புலியின் வரித்தோல் உரிபட்டது...

ஏலவார்குழல் உமையாம்பிகையின் செல்வக் கொழுநன்
இடை மீதினில் புலித் தோலினை ஆடையாய்க் கொண்டு நின்றான்...

மிளிர் கொன்றையினை அணிந்திலங்கும் பொன்னார் மேனியன்
புலித்தோலினையும் அரைக்கசைத்துப் பொலிந்து நின்றான்...

புன்மனத்தோர் ஏவிய புலியினைக் கீறிக் கிழித்து
ஈசன் திருவிளையாடல் நிகழ்த்திய திருத்தலம்
திருப்பாலைத்துறை... 
***

தொடரும் பதிவினில்
திருப்பாலைத்துறைத் திருக்கோயிலின்
தரிசனம்


நீல மாமணி கண்டத்தர் நீள்சடைக்
கோல மாமதி கங்கையுங் கூட்டினார்
சூல மான்மழு ஏந்திச் சுடர்முடிப்
பால்நெய் ஆடுவார் பாலைத் துறையரே!..(5/51)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

17 கருத்துகள்:

  1. ஒரு சமயம் யோசிக்கும்போது நல்லவராய் இருந்தால் கஷ்டப்பட்டு தவம் செய்தாலும் இறைவனைக் காண முடிவதில்லை. அநியாயம் செய்தால், அல்லது தலைக்கனத்துடன் நடந்து கொண்டால் இறைவன் நம்மைத் திருத்த உடனே வந்து விடுகிறார்! எனக்கு கோணல் புத்தி!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் இந்த எண்ணம் என்னுள் அடிக்கடி எழும்...இங்கு நீங்கள் சொல்லியது என் கண்ணில் பட்டது!!

      கீதா

      நீக்கு
  2. அபிசார வேள்வியா? அபச்சார வேள்வியா!! கூடிய நகங்களா? கூரிய நகங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அபிசாரம்! அபசாரம் என்றால் பொருளே வேறே!

      நீக்கு
  3. திருப்பாலைத்துறை திருக்கோவில் தரிசனம் காணக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. ராஜராஜ சோழனின் தாத்தா கட்டிய கோவிலில் நேற்று இன்று நாளை லிங்கத் திருமேனியின் மீது சூரியன் படும் நாள் என்று நேற்று செய்தித்தாளில் ஒரு செய்தி படித்தேன். (மழபாடி?)

    பதிலளிநீக்கு
  5. காலைப் பொழுதில் பக்திரசம் நன்று ஜி

    பதிலளிநீக்கு
  6. வந்தாச்சு அண்ணா வாசித்துக் கொண்டிருக்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  7. புராணக் கதை சொல்லும் தத்துவம் அருமை!! நீங்கள் ரிஷிகளைப் பற்றி முதலில் சொல்லிய வரிகள் அனைத்தும் மனிதருக்கும் பொருந்தும். பலரும் நினைப்பது அதைச் செய்துவிட்டால் இதைச் செய்துவிட்டால் அந்த ஸ்லோகம் சொல்லிவிட்டால் இறைவனிடம் பக்தி கொண்டுள்ளதாகவும்...என்று ... இறைவனிடம் சரணம் அடையாது மந்திர உச்சாடனம் மட்டும் பயனில்லை. மந்திர உச்சாடனம் செய்யவில்லை என்றாலும் இறைவனிடம் சரண் என்பதே மேன்மை!! இக்கருத்தில் எனக்கு ஆணித்தரமான நம்பிக்கை....எல்லாமே அவனே!!!

    அருமையான் தத்துவத்தை உணர்த்தும் கதை...அடுத்த பதிவுக்கு உங்களுடன் கோயில் தரிசனம் பெற காத்திருக்கிறோம் அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  8. கதை விவரிப்பு அருமை.சிதம்பரம் அம்மன் சன்னதியில் மேல் விதானத்தில் இக்கதையின் படங்கள் அழகான ஓவியமாய் தீட்டப்பட்டு இருக்கிறது.

    திருபாலத்துறை இறைவனை தரிசனம் காண தொடர்கிறேன்.
    கோபுர தரிசனம் செய்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  9. கோயில் வீதியில் இருந்து பிரசங்கம் கேட்டதுபோல இருக்கு .. அருமை.

    பதிலளிநீக்கு
  10. கதைகளுக்கு கருத்து சொல்லாமல் எழுத்தினை ரசிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  11. மான் மழு ஏந்திய ஐயன், தன் திருமுடியில், பாலும் நெய்யும் திருவபிஷேகம் காணுவார். திருப்பாலைத்துறைப் பதிகம் பகிர்ந்தது அருமை. இன்னும் இரண்டு பாடலாவது எதிர்பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  12. திசை தொழும் மேனியன் - தலைப்பு மிக அருமை.

    பதிலளிநீக்கு
  13. அழகாக... அருமையாக...

    மிகவும் ரசித்தேன் ஐயா...

    பதிலளிநீக்கு
  14. சிறப்பான வரிகளுடன் அழகிய தரிசனம்...

    மிக சிறப்பு...

    பதிலளிநீக்கு
  15. தாருகாவனத்து ரிஷிகள் பற்றிய கதை சொன்ன விதமும் அதைத் தொடர்ந்த திருப்பாலைத்துறைக் கோயில் பற்றிய குறிப்பும் அருமை! மிக அழகாக ஆவலைத் தூண்டும் வகையில் எழுதி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..