வியாழன், மார்ச் 29, 2018

கல்யாண தரிசனம்

காலகாலமாக நிகழ்ந்து வருகின்றதொரு கோலாகலம்...

பல வருடங்களுக்குப் பின் காணக் கிடைத்தது...

உடனடியாகப் பதிவு செய்வதற்கான சூழ்நிலை அமையவில்லை...

சில நாட்கள் தாமதமாகி விட்டது..
எனினும், எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி..

கடந்த திங்களன்று
திருமழபாடியில் ஸ்ரீ நந்தியம்பெருமானின் திருக்கல்யாண வைபவம்...

அன்று மாலை நான்கு மணியளவில் திருமழபாடிக்குச் சென்றோம்...

அங்கே அவ்வளவாகக் கூட்டமில்லை...

அப்போது தான் மாப்பிள்ளை அழைப்பு நடந்து கொண்டிருந்தது,,,


முதல் பல்லக்கில்
ஸ்ரீ ஐயாறப்பரும் அறம் வளர்த்த நாயகியும்
தங்களது சுவீகாரப் புத்திரனாகிய நந்தியம்பெருமானுடன் வீற்றிருந்தனர்,,,

இரண்டாவது பல்லக்கில்
ஸ்ரீ மழபாடிநாதனும் பாலாம்பிகையும்
வியாக்ரபாத முனிவரின் புத்ரியாகிய சுயம்பிரகாஷிணி தேவியுடன்
வீற்றிருந்தனர்..

சுயம்பிரகாஷிணி தேவியை சுயசாம்பிகை என்றும் கூறுகின்றனர்...

மணமக்களுடன் திருக்கோயிலைச் சுற்றி எழுந்தருளிய பல்லக்குகளை
ஆரவாரத்துடன் வரவேற்று ஆராதித்தனர் மக்கள்...






வீட்டுக்கு வீடு வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன...
மாவிலைத் தோரணங்கள் தென்னங்குருத்துகளுடன் ஆடிக் கொண்டிருந்தன...

தங்கள் வீட்டுக் கல்யாணத்தைப் போல
அத்தனை ஜனங்களின் முகங்களிலும் அப்படியொரு மகிழ்ச்சி...



மாப்பிள்ளை அழைப்பினைத் தொடர்ந்து
திருக்கோயிலில் ஸ்வாமி தரிசனம்...

திருக்கோயில் வளாகத்தில் எடுக்கப்பட்ட படங்கள்
இன்றைய பதிவில்!...




திருமூலத்தானம்
தலவிருட்சம் - பனை
அடுக்கு திருமாளிகைச் சுற்று


லக்ஷ்மி தீர்த்தம்
மாலை மயங்கிக் கொண்டிருந்த அந்த வேளையில்
திருக்கோயில் வாசலில் ஆயிரக்கணக்கில் ஜனத்திரள்....

அனைத்து சடங்குகளும் மங்கலகரமாக நிகழ்த்தப் பெற்று
இரவு எட்டு மணியளவில் மாங்கல்யதாரணம் நிகழ்ந்தது...

அதற்குப் பின்
நந்தியம்பெருமானும் சுயம்பிரகாஷிணி தேவியும்
அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருவீதி எழுந்தருளினர்...


திருக்கோயிலைச் சுற்றி பல இடங்களிலும் இல்லங்களிலும்
பக்தர்களுக்கு சித்ரான்னங்கள் வழங்கப்பட்டது...

திருக்கோயிலுக்கு எதிரே கொள்ளிட நதி.. நீரற்றுக் கிடந்தது..

நெடிய மணல்வெளியில்
கலை நிகழ்ச்சிகளுடன் திருவிழா களைகட்டியிருந்தது..




கீழுள்ள படங்கள் உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினரால்
வழங்கப்பெற்றவை..

அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி...


திருமாங்கல்ய தாரணம்
கீழுள்ள வைபவங்கள் திருவையாற்றில் நிகழ்ந்தவை..






அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழிண்மை பூண்டு
நங்குரு மரபிற்கெல்லாம் முதற்குரு நாதன் ஆகிப்
பங்கயத் துளவ நாறும் வேத்திரப் படை பொறுத்த
செங்கையம் பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ

சனி, மார்ச் 24, 2018

திருப்பாலைத்துறை

அகங்காரம் கொண்ட தாருகா வனத்து ரிஷிகள்
ஈசன் எம்பெருமானை உய்த்து உணராமல்
அபிசார வேள்வி நடத்தி - அந்த வேள்வியிலிருந்து
வெளிப்பட்ட வேங்கையை பெருமானின் மீது ஏவி விட்டனர்...

அந்த வேங்கையை விரல் நுனியால் கிழித்தெறிந்த திருத்தலம் தான் -

திருப்பாலைத்துறை...


இத்திருத்தலத்தில் ஈசன் எம்பெருமனின் திருப்பெயர் -
அருள்மிகு பாலைவனநாதர்...

அதென்ன பாலைத்துறை?... பாலைவன நாதர்!...

சோறுடைத்த சோழநாட்டில் இப்பகுதி பாலை வனமாக இருந்ததா!?...

சோறுடைத்த சோழநாட்டில் -
எப்பகுதியும் பாலை வனமாக இருந்ததில்லை...

சோறுடைத்த சோழநாட்டை -
பாலை வனமாக ஆக்கும் பணியைத் தான்
நாம் இப்போது செய்து கொண்டிருக்கின்றோம்!...

பாலை வனம் என்றால் -
பாலை மரங்கள் நிறைந்திருந்த வனம் என்பதாகும்...

இந்தப் பாலை மரம் பாலை நிலத்துக்குரியது என்று குறிக்கப்படுகின்றது...

ஆயினும், பாலை நிலத்துக்குரிய மரம்
மருத நிலத்தில் தழைத்து ஊர்ப் பெயரானது எங்ஙனம்!?...

அது காலங்களைக் கடந்து நிற்கும் ஆச்சர்யங்களுள் ஒன்று...


தஞ்சை கும்பகோணம் நெடுஞ்சாலையில்
பாபநாசம் நகரின் ஒருபகுதியாக விளங்குவது திருப்பாலைத்துறை...

அரசுப் பேருந்துகளில் விரைவுப் பேருந்துகளைத் தவிர
மற்றெல்லாப் பேருந்துகளும் திருக்கோயிலுக்கு
சற்று முன்பாக நின்று செல்கின்றன....

பேருந்து நிற்குமிடத்தில்
கோயிலுக்குச் செல்லும் வழியைக் காட்டும் பலகையும் உண்டு...

பிரதான சாலையில் இருந்து - நூறடி தூரத்தில் ராஜகோபுரம்..
சந்நிதி வாசலாக நடக்க வேண்டும்...

இருபுறத்திலும் வீடுகள் மக்கள் புழக்கம் என்பதால்
கோயில் வாசலைப் படம் எடுப்பது கவனத்துக்குரியதாகின்றது...

ஐந்து நிலையுடைய ராஜகோபுரம்...

தலை வணங்கி திருக்கோயிலினுள் நுழைகின்றோம்...

வலது புறமாக பழைமையான நெற்களஞ்சியம்...
கம்பீரமாக விளங்குகின்றது...

நெற்களஞ்சியத்தைப் பற்றி தனியானதொரு பதிவு எழுதுதலே மகிழ்வு...

நெற்களஞ்சியத்தைக் கடந்ததும் பலிபீடம் ..
சிறு மண்டபத்துள் பிரதோஷ நந்தி...


கவள மால்களிற் றின்னுரி போர்த்தவர்
தவள வெண்ணகை மங்கையோர் பங்கினர்
திவள வானவர் போற்றித் திசைதொழும்
பவள மேனியர் பாலைத் துறையரே..

அதிகார நந்தியைப் பணிந்து வணங்கியபடி
திருக்கோயிலினுள் நுழைகின்றோம்...

இரண்டாவதாக மூன்று நிலைகளுடன் மற்றொரு திருவாசல்...

அதையும் கடந்து திருக்கோயிலினுள் நுழைந்தால்
ஏகாந்தம்... ஏகாந்தம்.. அதைத் தவிர ஏதுமில்லை...


வலப்புறமாக திருத்தல விநாயகர்...

மனதார வணங்கி சந்நிதிக்குள் நுழைய -
அன்பையும் அருளையும் அள்ளித் தரும் வள்ளல் பெருமான்..

இறைவன் - ஸ்ரீபாலைவனநாதர்..
அம்பிகை - ஸ்ரீ தவள வெண்ணகையாள்
தல விருட்சம் - பாலை மரம்
தீர்த்தம் - வசிஷ்ட தீர்த்தம், இந்திர தீர்த்தம், குடமுருட்டி..

கற்பூர ஒளியில் சிவலிங்கத் திருமேனி பிரகாசிக்கின்றது...

திருநீறு பெற்றுக் கொண்டு திருக்கோயிலை வலம் வருகின்றோம்...

பழைமை புலப்படுகின்றது விசாலமான பிரகாரம்..

வழக்கமான திருச்சந்நிதிகள்...

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, நிருதியில் கணபதி,
வள்ளி தெய்வயானையுடன் திருமுருகன்,
மஹாலக்ஷ்மி - என, தரிசனம்...


வடக்குத் திருச்சுற்றில் வில்வமரம்..
தல விருட்சமான பாலை மரம் இப்போது இங்கு இல்லை...


மின்னின் நுண்ணிடைக் கன்னியர் மிக்கெங்கும்
பொன்னி நீர்மூழ்கிப் போற்றி யடிதொழ
மன்னி நான்மறை யோடுபல் கீதமும்
பன்னி னாரவர் பாலைத் துறையரே..



வடக்குத் திருச்சுற்று மண்டபத்தில் நாயன்மார்கள்..
பீடத்தில் வைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன..

இன்னும் முறையாக பிரதிஷ்டை செய்யப்படவில்லை..

நடராஜர் சந்நிதியை அடுத்து இரட்டை பைரவ திருமேனிகள்..

திருமூலத்தானத்தை வலம் செய்து வணங்கியபின்
அப்படியே வெளியே வந்து தெற்குப் புறமாக விளங்கும்
அம்பிகையின் சந்நிதியை அடைகின்றோம்...



சித்தர் கன்னியர் தேவர்கள் தானவர்
பித்தர் நான்மறை வேதியர் பேணிய
அத்தனே நமையாளுடை யாயெனும்
பத்தர் கட்கன்பர் பாலைத் துறையரே.. 



காம கோட்டம் தனிக் கோயிலாக
கிழக்கு நோக்கி விளங்குகின்றது..

இது மதுரையைப் போல கல்யாண கோலமாகும்...

இத்தலத்தில் வழிபடும் கன்னியர்க்கும் காளையர்க்கும்
கல்யாணத் தடைகள் விலகுவதாக ஐதீகம்...

அம்பிகையின் சந்நிதியில் அமைதி தவழ்கின்றது...

திருக்கோயிலில் எடுக்கப்பட்ட படங்களுள் சிலவற்றைப் பதிவினில் வழங்கியுள்ளேன்...


ராஜகோபுரத்தை அடுத்து விளங்கும் பிரம்மாண்டமான நெற்களஞ்சியம் அடுத்து வரும் பதிவாகின்றது...


அப்பர் பெருமான் இத்திருக்கோயிலை தரிசனம் செய்து திருப்பதிகம் அருளியுள்ளார்..

பின்னாளில்
ராஜராஜ மாமன்னனின் சீரிய முயற்சியால் நம்பியாண்டார் நம்பியவர்கள் திருமுறைகளைத் தொகுத்தபோது -

அப்பர் பெருமான் அருளிய திருப்பதிகங்கள் மூன்றாக அமைந்தன...

அவற்றுள் நடுவாக விளங்குவது ஐந்தாம் திருமுறை...

ஐந்தாம் திருமுறை நூறு திருப்பதிகங்களைக் கொண்டது..
அதனுள் ஐம்பத்தொன்றாவது திருத்தலமாக அமையப் பெற்றது -
திருப்பாலைத்துறை...

திருப்பாலைத்துறைக்கான திருப்பதிகம்
பதினொரு திருப்பாடல்களை உடையது...

இத்திருப்பதிகத்தினுள் -
விண்ணினார் பணிந்தேத்த - எனும், ஆறாவது திருப்பாடல்
சிவாய - எனும் மகா மந்திரத்துடன் விளங்குவதால்
நடுநின்ற திருப்பதிகம் எனப்படுகின்றது...

விண்ணி னார்பணிந் தேத்த வியப்புறும்
மண்ணி னார்மறவாது சிவாய என்று
எண்ணி னார்க்கிட மாஎழில் வானகம்
பண்ணி னாரவர் பாலைத் துறையரே..
-: அப்பர் ஸ்வாமிகள் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***  

வியாழன், மார்ச் 22, 2018

திசைதொழும் மேனியன்

எல்லாவற்றையும் -
உச்சரிக்கும் மந்திரங்களினால் சாதித்து விடலாம்...
நிகழ்த்தும் யாகங்களினால் அடைந்து விடலாம்...

அப்படி எல்லாம் எம்மால் ஆகும்!... - என்றிருக்க
பரம்பொருள் என்ற ஒன்று ஏது!...

தவிர -
பரம்பொருள் என்ற ஒன்று இருந்தாலும் அது தேவையில்லாதது!..
அது இல்லாமலேயே எமக்கு அனைத்தும் ஆகிவிடும்!...

இப்படியான இறுமாப்பும் அகங்காரமும்
அவர்களது தலைக்கு மேலாகத் ததும்பிக் கொண்டிருந்தன...

அவர்கள் - ரிஷிகள்.. தாருகாவனத்து ரிஷிகள்...

இருந்தாலும் -
இத்தனையும் தங்களது மனைவியரின் மனோபலத்தால் கூடி வருவது
- என்ற எண்ணமும் அவர்களுக்குள் இருந்தது....

இவர்களது அகங்காரத்தினால் சற்றே அசைந்தது - இந்திர சபை...

அந்த அளவில் இந்திரன் ஓடிச்சென்று நின்ற இடம் திருக்கயிலாயம்...


இந்திரன் ஏதும் உரைக்காமலே -
அவனது உள்ளத்தை உணர்ந்து கொண்ட எம்பெருமான்
பிக்ஷாடனராகத் திருக்கோலம் கொண்டு நின்றார்..

ஐயன் நடத்த இருக்கும் நாடகத்துள்
தானும் பங்குபெற திருவுளம் கொண்டான் ஸ்ரீஹரிபரந்தாமன்...

அதன் விளைவு -

சூரியன் உச்சியைச் சென்றடைவதற்குச் சற்று முன்பாக
தாருகாவனத்து ஆசிரமங்களின் வாசலில்
பிரம்ம கபாலம் ஏந்திய திகம்பரனாக
திருவடித் தாமரைகளில் இலங்கும் வீரத் தண்டைகள்
சல்..சல்.. - என, இசைக்க மென் நடை பயின்றான் எம்பெருமான்...

இந்நேரத்தில் பிச்சைக்கு வந்தது யார் ?.. - என்ற கேள்வியுடன்
வெளிவந்த ரிஷி பத்தினிகள் நிலைகுலைந்தனர்...

பேரழகன் ஒருவன் பிச்சைப் பாத்திரத்துடன்!...

ஆனாலும்,

பிச்சைப் பாத்திரமாக ஏந்தியிருந்த அவன்
இரந்து நிற்காமல் நெடுவழியில் சென்று கொண்டிருந்தான்..

பிச்சைப் பாத்திரத்தை ஏந்தியவன் நிற்காமல் செல்வது எதற்கு?..

- என்ற வினா அந்தப் பெண்களைக் குடைந்தது...

இரந்து வந்த அவனுக்கு ஏதாவது ஈதல் வேண்டுமே!..
அவனுக்கென்று கொடுக்க என்ன இருக்கிறது நம்மிடம்?...

அவ்வேளையில் அவர்களது எண்ணமும் குழைந்தது..
இடைமேலாடையும் மணிமுத்து மேகலையும் நெகிழ்ந்தது...


அதே சமயத்தில் அங்கே வேள்விச்சாலையில்
யாகாக்னியும் திடீரென அவிந்தது..

நிகழ்ந்ததை உய்த்து உணரும் முன் - ரிஷிகளின் முன்பாக
ஜகன் மோகினியாக உலவினான் ஜனார்த்தனன்...

கோலக் குமரியாகக் குலவி நிற்பவன் கோவிந்தன்!..
- என்பதை அறியாத ரிஷிகள் தங்களுக்குள் புலம்பிக் கொண்டனர்...

பிரபஞ்சப் பேரழகே பெண்ணா!.. - உனைக் 
காணாமல் இருப்பதுவும் கண்ணா!...

கருத்தழிந்து போக கதிகலங்கி நின்றனர்...

ஜகன்மோகினி முன்னே செல்ல 
அவளது முகங்காணும் முனைப்புடன்
பின்னே சென்றனர் - பெருந்தவம் புரிந்த முனிவர்கள்...

வெகுதூரம் நடந்த ஜகன்மோகினி 
ஒரு நிலையில் காற்றோடு கலந்து போனாள்...

அவள் பறந்து போனாளே.. - எம்மை
மறந்து போனாளே!...

கதிகலங்கிய ரிஷிகள் தன்னுணர்வு வரப்பெற்றனர்...

அந்த நிலையில் தம்மைத் தாம் காண்பதற்கும் வெறுப்புற்றனர்....

ஏன் இவ்வாறு நிகழ்ந்தது?.. -  என - யோசிக்கும் போது

அங்கே தமது இல்லத்தரசிகள் -
அகம் குழைந்து அத்துடன் ஆடையும் நெகிழ்ந்து
திகம்பரனின் பின்னால் செல்லும் அவலத்தைக் கண்டு அதிர்ந்தனர்...

ஆ.. முதலுக்கே மோசம் வந்ததே!..

பதறி ஓடித் துரத்திப் பிடித்தனர் - தமது பத்தினியரை...
அவர்களோ திகம்பர மயக்கத்திலிருந்து மீளாமல் புலம்பிக் கிடந்தனர்..

போகிற திகம்பரன் சும்மா போகாமல்
ரிஷிகளைப் பார்த்து மெல்லியதாக புன்னகைத்து விட்டுப் போனான்!..

அந்த அளவில் ரிஷிகளின் அகங்காரமும் இறுமாப்பும் இற்று வீழ்ந்தன...

சே.. நாம்இந்த அளவுக்கு கேவலமாகிப் போனோமே!...
அந்த திகம்பரனை சும்மா விடக்கூடாது!...

ஆமாம்... ஆமாம்.... அவனை சும்மா விடக்கூடாது... அமைதிப் பூங்காவாகிய தாருகா வனத்துக்குள் அவன் எப்படி வரலாம்!.. அவனை யார் உள்ளே விட்டது?... போராடுவோம்.. போராடுவோம்.. இறுதிவரை போராடுவோம்!...

கூட்டமாகக் கூடி நின்றார்கள்.. வாய்க்கு வந்தவாறு சத்தம் போட்டார்கள்.. 

அத்துடன் நில்லாமல் -
உடனடியாக கண்ணில் கண்ட  
அனாச்சாரங்களை எல்லாம் அள்ளிப் போட்டு
மீண்டும் தீ மூட்டினார்கள்....

நாசம் விளைவிக்கும் சொற்களைச் சொல்லியவாறு
அபிசார வேள்வியைத் துவக்கினார்கள்....

சுற்றுச் சூழலைக் கெடுத்த அந்த வேள்வித் தீயிலிருந்து
ஒன்றுக்கும் ஆகாதவைகள் எல்லாம் ஆர்ப்பரித்து வந்தன...

அப்படி வந்தவற்றுள் ஒன்று தான் - புலி...

அந்தப் புலிக்கு வெறியேற்றி -

போ!... போய் அந்தத் திகம்பரனை அழி!... - என்று
நிராயுதபாணியாக நின்றிருந்த ஈசன் மீது ஏவினார்கள்...

ஏற்கனவே - 
எம்பெருமானின் மீது ஏவப்பட்ட தீக்கொழுந்துகள் 
அவனது அங்கைக்குள்ளே அடங்கி விட்டன...

நஞ்சுடைய நாகங்கள் அனைத்தும்
நாயகனின் திருமேனியில் நல்லணிகளாக
நடுநிலை மேகலையாக மாறிவிட்டன...


இந்தப் புலி!... நிச்சயம் தனது கூடிய நகங்களினால்
திகம்பரனைக் கீறிக் கிழித்துப் போடும்!...

தாருகாவனத்து ரிஷிகள் அகங்காரத்துடன் சிரித்தனர்..

ஆனால் அவர்களது அகங்காரமும் பொடியாய் உதிர்ந்து போனது...

கெடுமதியாளர் ஏவிய கொடும்புலியானது
ஈசனின் சுட்டு விரல் நுனியால் கிழிபட்டு
கீழே விழுந்து மாண்டது....

கிழிபட்ட புலியின் வரித்தோல் உரிபட்டது...

ஏலவார்குழல் உமையாம்பிகையின் செல்வக் கொழுநன்
இடை மீதினில் புலித் தோலினை ஆடையாய்க் கொண்டு நின்றான்...

மிளிர் கொன்றையினை அணிந்திலங்கும் பொன்னார் மேனியன்
புலித்தோலினையும் அரைக்கசைத்துப் பொலிந்து நின்றான்...

புன்மனத்தோர் ஏவிய புலியினைக் கீறிக் கிழித்து
ஈசன் திருவிளையாடல் நிகழ்த்திய திருத்தலம்
திருப்பாலைத்துறை... 
***

தொடரும் பதிவினில்
திருப்பாலைத்துறைத் திருக்கோயிலின்
தரிசனம்


நீல மாமணி கண்டத்தர் நீள்சடைக்
கோல மாமதி கங்கையுங் கூட்டினார்
சூல மான்மழு ஏந்திச் சுடர்முடிப்
பால்நெய் ஆடுவார் பாலைத் துறையரே!..(5/51)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

செவ்வாய், மார்ச் 20, 2018

அன்பினில் வாழ்க..



தாமரைப் பூவுல சாமி இருக்கும்....ன்னு சொன்னாங்களே!..
ஒரு காலத்துல வீட்டுக்குள்ளே கூடு கட்டினோம்!..
இப்போ.. நிலைமை இப்படியாகிப் போச்சு!..
ஏதோ.. கிடைச்சதைக் கொண்டு சந்தோஷம்
ஆறு கரை புரண்ட காலம்
ஒரு துளியாவது வேணுமே!..
இப்படி ஆகிப் போச்சே!..
கஜ கர்ணம் போட்டாலும்!?....
அண்ணே... எனக்கும் கொஞ்சம்!...
இயற்கை ஆர்வலர்களால்
சிற்றுயிர்களுக்கு வாழ்விடங்கள் அமைக்கப்பட்டாலும்
அவற்றிலும் பற்பல பிரச்னைகள்...

நல்லவங்க இதையாவது செஞ்சாங்களே!..
என்ன செய்ய?...  எனக்கும் சந்ததி வேணுமே!..
இவற்றுக்கெல்லாம் தீர்வு -
இயற்கையைப் பேணுதல் ஒன்றே!...

நல்லவர்க்கு மட்டுமே வனம்!...
மனிதன் இயற்கையை சேதப்படுத்தாமல் விட்டு வைத்தால்
இயற்கை தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும்...

தெய்வமே.. எங்களைக் காப்பாற்று.. 
இறைவனே இயற்கை.. இயற்கையே இறைவன்..
இயற்கை இருக்கட்டும்.. இயற்கையாகவே இருக்கட்டும்!.

இயற்கை இருக்கும் வரைக்கும் தான் நமக்கு இங்கே இருக்கை!..


இன்னைக்கு வழக்கம் போல அண்ணன் வீட்டுக்குப் போகணும்...
நாமும் வாழ்வோம்..
வையகத்தையும் வாழ வைப்போம்..

இயற்கையும் வாழ்க..
இயற்கையோடு இணைந்த இன்பமும் வாழ்க!..
***