வெள்ளி, பிப்ரவரி 02, 2018

என்றென்றும் அன்புடன்

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்...

கடந்த ஜனவரி 20 அன்று வெளியாகிய -
சில வார்த்தைகள் - எனும் தொடர்பதிவில்
எனது உடல் நலனைப் பற்றிச் சொல்லியிருந்தேன்...

அதைக் கண்டு அன்புடன் நலம் விசாரித்த
அனைவருக்கும் மனமார்ந்த நன்றி..


இதைச் சொல்ல இத்தனை நாள் வேண்டுமா!?...

எடுத்துக் கொண்ட பணி...
தொடுத்து வைத்த செய்திச் சரம்...

அதனை முறையாக வழங்குவதே நாட்டமாக இருந்தது..
அதற்காகத் தங்களைப் புறக்கணித்ததாக பொருளில்லை..

தமிழுக்குச் செய்வதும்
தமிழார்ந்த நெஞ்சங்களுக்குச் செய்வதும் வேறு வேறல்லவே...

இருப்பினும் -
இந்தக் கால தாமதத்தினைப் பொறுத்தருள வேண்டுகின்றேன்...

ஜனவரி முதல் நாளன்று இரவில் இருந்த வலியும் வேதனையும்
அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக குறைந்து வருகின்றது..

80 சதவிகிதம் நலம் பெற்றுள்ளதாக உணர்கின்றேன்..

இருப்பினும் முறையாக மருந்துகள் எடுக்க வேண்டும்...

அப்படியானால் - அந்த வலிக்கென மருந்து ஏதும் எடுக்கவில்லையா!?..

இல்லை.. எதுவும் இல்லை...

புள்ளிருக்கு வேளூரான் என்று புகழப்பட்ட
வைத்யநாதப் பெருமானின் திருநீறுதான் மருந்து...

அன்றைய இரவின் வேலை நேரம் முழுதும்
எனக்குத் தெரிந்த திருப்பதிகங்கள் திருப்பாசுரங்கள்
இவற்றை மனதிற்குள்ளாகவே பாடிக்கொண்டிருந்தேன்...

மறுநாள் காலையில் புதிதாக இரண்டு திருப்பாடல்கள் கிடைத்தன..

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய திருப்பாடல்கள் - அவை...

ஒன்று -

என் அன்னை ஸ்ரீ அபிராமவல்லி -
அமுதீசனின் ஒரு பாகத்தை விட்டு அகலாது வீற்றிருக்கும்
திருக்கடவூர்த் திருப்பதிகத்தின் திருப்பாடல்...


போராருங் கரியின்உரி போர்த்துப்பொன் மேனியின்மேல்
வாராரும் முலையாள் உமைபாகம் மகிழ்ந்தவனே
காராரும் மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டானத்து
ஆராஎன் அமுதே எனக்கார்துணை நீயலதே..(7/28)

மற்றொன்று -

கற்பகவல்லியாய் அன்னை ஸ்ரீ காமாக்ஷி
தன் திருக்கரத்தால் தழுவி வழிபட்ட ஏகம்பன்
வீற்றிருக்கும் திருக்காஞ்சிப்பதியின் திருப்பதிகத் திருப்பாடல்...


குண்டலந்திகழ் காதுடையானைக்
கூற்றுதைத்த கொடுந் தொழிலானை
வண்டலம்பு மலர்க் கொன்றையினானை
வாளரா மதிசேர் சடையானை
கெண்டையந்தடங் கண்ணுமை நங்கை
கெழுமியேத்தி வழிபடப் பெற்ற
கண்டம் நஞ்சுடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே..(7/61)

திருப்பதிகங்களைக் கண்ட மாத்திரத்தில்
மனம் அவற்றை உள்வாங்கிக் கொண்டது..

அன்று முதல் இந்தத் திருப்பாடல்களையும்
நாள்தோறும் பயின்று கொண்டிருக்கின்றேன்...

குறையொன்றும் இல்லை.. கோவிந்தா!.. - என்றபடிக்கு நாட்கள் நகர்கின்றன..

எனினும், ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்...

என் மனைவிக்கு இந்த செய்தியை சொன்னதும்
உள்ளுக்குள் எப்படியிருந்ததோ .. தெரியாது...

என்னிடம் சொல்லிய வார்த்தைகள் -
அதெல்லாம் ஒன்னும் ஆகாது!... - என்பன தான்...

அடுத்து அபுதாபியிலிருந்து மருமகனும் மகளும் நலம் விசாரித்து விட்டு -
உடனே புறப்படுங்கள்... - என்றார்கள்...

ஆயினும் இங்கே சில நடைமுறைச் சிக்கல்கள்..

சிறு விடுப்பு ஒன்று கேட்டிருக்கின்றேன்...

சற்றே நலமுடன் இருப்பதால் அருகிருக்கும்
சில நல்ல உள்ளங்களுக்கும் கொஞ்சம் திருப்தி...


அன்புக்குரிய
Dr. பா. ஜம்புலிங்கம் ஐயா அவர்கள்

பதிவுகளின் மூலமாக எங்களை அழைத்துச் சென்ற கோயில்களின் தெய்வங்கள் உங்களின் நலனைக் காக்கும்!..

- என்று கனிவுடன் குறிப்பிட்டிருந்தார்..

இதே போல -

அன்பிற்குரிய 
கரந்தை JK அவர்களும்
கில்லர் ஜி அவர்களும்
அனுராதா பிரேம்குமார் அவர்களும்
இளமதி அவர்களும்
அதிரா அவர்களும்
ஏஞ்சல் அவர்களும்

ஸ்ரீராம் அவர்களும்
மனசு குமார் அவர்களும்
தில்லையகத்து கீதா அவர்களும்
தில்லையகத்து துளசிதரன் அவர்களும்
கீதா சாம்பசிவம் அவர்களும்
கோமதி அரசு அவர்களும்

அன்புடன் நலம் விசாரித்த வார்த்தைகளால் கண்கள் குளங்களாகின..

என்ன கைம்மாறு செய்வேன் இந்த அன்பினுக்கு!..

தெரியவில்லை..

எந்நாளும் தொடர்ந்திருக்க வேண்டும் 
இந்த அன்பும் ஆதரவும்!..

இந்த விருப்பம் தான் 
என்றும் வேண்டுதலாக இருக்கின்றது..

என்றென்றும் 
வாழ்க நலம்!..
*** 

29 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா!

    தன்னலம் பாராத் தகையீர்! தொடர்ந்துங்கள்
    நன்னலமும் காப்பீரே நன்கு!

    இறையருளால் இவ்வளவுக்கேனும் நலம் பெற்றமை அறிந்து மனம் அமைதியடைகிறது. தொடர்ந்து நலனில் கவனம் கொள்ளுங்கள் ஐயா!..
    வைத்தியருக்கெல்லாம் தலைவன் வைத்தியநாதன் திருநீற்றின் மகிமை அறிந்திருக்கின்றேன் நானும்!.. பிரார்த்தனைகளும் தொடரட்டும்!

    உங்கள் மனைவியின் கூற்றுக் கண்டு மட்டில்லா மகிழ்ச்சிகொண்டேன்.
    உங்களைப் போன்றே அவர் குணமும் உள்ளதே!..:)
    ஆண்டவன் அருளில் அசையா நம்பிக்கையுள்ளவர்கள் இருவரும்!
    வெகு சிறப்பு!

    நீங்கள் குறிப்பிட்ட பதிகங்களை நானும் குறித்துக்கொண்டேன். அற்புதப் பதிகங்கள்!
    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா! வாழ்த்துக்கள்!

    வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களது வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அன்பின் ஜி
    எல்லாம் நலமாகும் தங்களது உடல் நலம் பூரண குணமடைய எமது பிரார்த்தனைகள் என்றும் உண்டு.
    வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்களது வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. நானும் மூன்று வாரங்களாக பதிவுலகின் பக்கம் வரவில்லை. பதிவுகள் எழுதவோ, படிக்கவோ இல்லை.

    உங்கள் உடல்நலம் இப்போது பரவாயில்லை என அறிந்து மகிழ்ச்சி. பூரண குணமடைய எனது பிரார்த்தனைகளும்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களது வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. வைத்தியநாதன் அருளால் நலம் அடைந்து வருவது மகிழ்ச்சி.
    எதற்கும் விடுமுறை கிடைத்தால் ஊருக்கு போய் கொஞ்சம் ஓய்வு எடுத்து மருத்துவரிடம் காட்டி விட்டு அவர் ஒன்றும் இல்லை என்றால் மேலும்
    மகிழ்ச்சிதானே!

    தேவாரபதிகங்கள் ஓதிய பலனை தரும்.
    தொடர்ந்து படித்து வாருங்கள்.
    வாழ்த்துக்கள்


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளேன்..
      தங்களது வருகையும் அன்பின் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. சகோதரர் அவர்களுக்கு, உங்களுடைய இந்த பதிவையும், நீங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள முந்தைய பதிவையும் இப்போதுதான் படித்தேன். உங்களுடைய “சில வார்த்தைகள்” அப்போதே பார்த்தேன், ஆனால் பதிவு பெரியதாக இருந்த படியினாலும், தேவகோட்டையார் உரையாடல், நகைச்சுவை என்று நீண்டு விட்டதாலும் அப்புறம் நிதானமாக படித்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன். அப்புறம் எனது உடல்நிலை, அலைச்சல் என்று அந்த பதிவினை படிக்காமல் இருந்து விட்டேன். அதனால் அந்த பதிவினில் கடைசியாக நீங்கள் குறிப்பிட்டு இருந்த உங்கள் உடல்நிலை குறித்த செய்தி எனக்கு தெரியாமல் போயிற்று.

    அந்த பதிவினில் இடப்பக்கம் முழுவதும் மற்றும் இடது கை, கால் இரண்டிலும் வலி என்று சொல்லி இருந்தீர்கள். சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர், அதிக மன உளைச்சல், தூக்கமின்மை மற்றும் அதி இரத்த அழுத்தம் காரணமாக எனக்கும் இதே போல் ஏற்பட்டு, உடனடியாக டாக்டரிடம் காண்பித்து மருந்தும் எடுத்துக் கொண்டேன். தொடர்ந்து சாப்பிட்டும் வருகிறேன்.

    நீங்கள் இன்னும் இதற்கான சிகிச்சை எதுவும் எடுத்துக் கொள்ளாதது கவலையைத் தரும் விஷயம் ஆகும். நிறையபேர் டாக்டரிடம் சென்றால், புதிதாக எதையாவது சொல்லி, அறுவை சிகிச்சை அது, இது என்று பயமுறுத்தி விடுவார்கள் என்று செல்வதில்லை. உங்களுக்கு இப்போது வலி குறைந்து குணமடைந்தது போல் தோன்றினாலும், மறுபடியும் வர வாய்ப்பு இருக்கிறது. எனவே ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்; நம்பிக்கையான ஒரு டாக்டரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளவும். அசட்டையாக இருந்து விட வேண்டாம். நீங்கள் கும்பிடும் தெய்வம் உங்களைக் கைவிடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..

      தாங்கள் சொல்வது சரி.. எனக்கு இரத்த அழுத்தம் இல்லை..
      ஆயினும் மன உளைச்சலும் தூக்கம் இல்லாமையும் தான் காரணம்...

      மருத்துவரிடம் செல்வதற்கு குழப்பம் ஒன்றும் இல்லை..
      விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளேன்..

      தங்களது வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. உடம்பை கவனியுங்கள் அண்ணா இறைவன் துணையிருக்கிறார் இருப்பார் என்றென்றும் . ஒருமுறை மருத்துவரிடமும் உடம்பை காட்டவும் .டேக் கேர் அண்ணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோ..

      விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளேன்..
      தங்களது வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. இறைவன் திருவருளால் நலம் பெற்று வருவது மகிழ்ச்சி. ஒரு முழு மருத்துவப் பரிசோதனையும் கட்டாயம் செய்து, ஒன்றுமில்லை என்பதை உறுதி செய்துகொள்ளவும். ஜம்புலிங்கம் ஐயா சொன்னதை வழிமொழிகிறேன். உங்கள் வரியியிலேயே சொல்கிறேன், "வாழ்க நலம்".

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தாங்கள் சொல்வது உண்மையே..
      விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளேன்..
      தங்களது வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. துரை அண்ணா உங்கள் உடல்நலம் நலம் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது ...என்றாலும் அண்ணா தயவாய்...பரிசோதனை செய்து கொள்ளவும். ஒன்றும் இருக்காது. பரிசோதனை ஒரு திருப்திக்காக அவ்ளவுதான்....நீங்கள் நேர்மறையுடன் இதோ கற்ற பாடல்களும், இறைவனின் அன்பும் விட்டுவிடுமா என்ன! நிச்சயமாக உங்களுடன் இறைவனின் அன்பு எப்போதும் இருக்கும். நாங்களும் மனதார பிரார்த்திக்கிறோம் அண்ணா....துளசியும் இதையேதான் உங்களிடம் சொல்ல ச் சொன்னார்...ஒன்றும் இல்லை என்ற நம்பிக்கை உள்ளது...

    வாழ்க நலம்!! அண்ணா...இறைவன் திருவடிகள் சரணம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோ..

      தங்களது பிரார்த்தனைக்கு நன்றி...
      திக்கற்றவர்க்குத் துணை தெய்வம் தானே..

      விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளேன்..
      தங்களது வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. எங்கள் எல்லோரது அன்பும் பிரார்த்தனைகளும் உங்களுக்கு எப்போதும் உண்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோ..

      தங்களது வருகைக்கும் அன்பினுக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள்
    மருத்துவரின் ஆலோசனையும் அவசியம் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      விடுமுறைக்கு விண்ணப்பம் செய்துள்ளேன்..
      தங்களது வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. அனைவரும் கூறியதை தான் நானும் வழி மொழிகிறேன் ஐயா....

    விரைவில் ஒரு முறை மருத்துவரை கண்டு பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்...

    எல்லாம் வல்ல எம்பெருமான் என்றும் துணை இருப்பார்....

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோ..
      தங்களது வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. ஊருக்கு வந்து ஓய்வும் எடுத்துக்கொண்டு முழு உடல் பரிசோதனையும் செய்து கொள்ளுங்கள். தனியாக வேறே இருப்பதால் கவனமாக இருக்கவும். இறைவன் கை விட மாட்டான் என்பதை நானும் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். என்றாலும் மருத்துவப்பரிசோதனையும் அவசியம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோ..

      உண்மையில் நல்ல மனிதர் யாரும் என்னைச் சுற்றி இல்லை..
      அவர்களது செயலால் மன உளைச்சலும் பதற்றமும் ஆகின்றது..

      தெய்வ சிந்தனை ஒன்றே என்னை காத்து நிற்கின்றது..
      தங்களது வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. எங்கள் பெண்ணிற்கு நாங்கள் அமெரிக்காவில் இருக்கையில் இப்படித் தான் திடீரெனக் காய்ச்சல்! மாலை விட்டு விடும். காலையில் கடுமையான காய்ச்சல் இருக்கும். மருத்துவரிடம் காட்டியும் ஒரு வாரம் சரியாகவில்லை. பின்னர் சுவாமிக்கு வேண்டிக் கொண்டு ஒரு ரூபாய்க் காசு எடுத்து வைத்துவிட்டு "மந்திரமாவது நீறு" பதிகத்தைப் போட்டுப் போட்டுக் கேட்கச் சொன்னேன். காய்ச்சல் படிப்படியாகக் குறைந்து நலம் அடைந்தாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோ..

      இப்படியான நிகழ்வுகள் எனக்கும் நேர்ந்துள்ளன..
      தேவாரமும் திருவாசகமும் திருப்பாசுரங்களும் வலிமை மிக்கவை..

      அவற்றின் மீது நம்பிக்கை வைத்தோருக்கே உண்மை புரியும்...
      தங்களது வருகையும் மேலதிக செய்தியும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  14. நலமானது அறிந்து மிக்க மகிழ்ச்சி. பாசுரங்கள் அனைத்தும் மிக வலிமை மிக்கவை. அது நம் எண்ண அதிர்வுகளினால் இருக்கலாம் (அர்த்தம் தெளிந்து சொல்லும்போது).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தாங்கள் சொல்வதைப் போல
      திருப்பாசுரங்களின் பொருள் தெளிந்து சொல்லும்போது
      உண்மையிலேயே மிக அரிதானதொரு புத்துணர்ச்சி கிடைக்கின்றது..

      தங்களின் வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  15. இன்றுதான் பதிவினைக் கண்டேன். முன்னரே நான் கூறியபடி அன்புகூர்ந்து உடல் நலனுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நீங்கள் வணங்குகின்ற எம்பெருமான் என்றும் உங்களுக்குத் துணைநிற்பான்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..