புதன், அக்டோபர் 25, 2017

சிக்கலில் வேல் வாங்கி...

மண்கமழ் உந்தித் திருமால் வலம்புரி ஓசையந்த
விண்கமழ் சோலையும் வாவியுங் கேட்டது வேலெடுத்துத்
தண்கிரி சிந்த விளையாடும் பிள்ளைத் திருவரையிற்
கிண்கிணி ஓசை பதினாலு உலகமுங் கேட்டதுவே!..(93)


விளங்கு வள்ளிக் காந்தன் வேலெடுத்தான் -  விளையாடுதற்கு..
அதைக் கேட்டு அஞ்சி நடுங்கிய நிருதர் குலம் பதுங்கிக் கொண்டது..

ஆணவத்தின் வேரறுக்க வந்த அறுமுகன் அருட்புன்னகை பூத்தான்..
ஈரமற்ற பாறையாய் எழுந்து நின்ற கிரௌஞ்ச மலை துகள் துகளானது..

பேருருவாக நின்ற கிரௌஞ்சம் பொடிப் பொடியாக இற்று விழுந்தது..
அப்போது எழுந்த ஓசையை பதினான்கு உலகங்களும் கேட்டதுவாம்!..

அப்படியெனில் -
பதினான்கு உலகங்களுக்குள் - ஏதேனும் ஒன்றில்
எதுவாகவும் கிடந்து நாமும் கேட்டிருப்போம் தானே!..

கேட்டிருப்போம்.. நிச்சயம் கேட்டிருப்போம்!..

அதனால் தான் - அவன் திருப்பெயரைச்
சொல்லச் சொல்ல இனிக்கின்றது..
கேட்கக் கேட்கத் தித்திக்கின்றது...


ஐப்பசி மாதத்தின் வளர்பிறை ஆறாம் நாள்..

கிரௌஞ்ச மலை மட்டுமல்லாது
மா மரமாக கிளை விரித்து நின்ற சூரபத்மன்
வேலன் எய்த வேலின் நுனி பட்டு அங்கம் பிளவு பட்டு
ஆணவம் அழிவு பட்டு பேரொலியுடன் மண்ணில் வீழ்ந்த நாள்!..

அதுமட்டுமல்ல..

கொடியனாகக் கிடந்த சூரபத்மன்
குமரனுக்கு அடியனாக ஆன நாளும் இதுவே!..

குன்றமெல்லாம் நின்று வளர் குமரப்பெருமான்
கோலமயில் வாகனனாக கோழிக் கொடியுடை காவலனாக
வீறு கொண்டு வேலேந்தி நின்ற நாளும் இதுவே!..

கந்த சஷ்டி!..

தமிழர் தம் திருநாள்!..

திருச்செந்தூரில் இன்று மாலை மிகச் சிறப்பாக
சூரசங்காரம் நிகழ இருக்கின்றது..

திருச்செந்தூரில் மட்டுமல்லாது
மரபுவழி நின்று மாமயிலோனைப் போற்றித் துதிக்கும்
மக்களின் வாழ்விடம் எங்கெங்கும்
கந்த சஷ்டிப் பெருவிழா அனுசரிக்கப்படுகின்றது..

தமிழிலே ஒரு சொல்வழக்குண்டு..

சிக்கலிலே வேல் வாங்கி செந்தூரில் போர் முடித்தான்!.. - என்று..

சஷ்டிப் பெருவிழாவின் போது -
ஐந்தாம் நாளன்று அருட்குமரன் அன்னையிடம் வேல் வாங்குகின்றான்..


அந்த நிகழ்வு திருஆரூரை அடுத்துள்ள
சிக்கல் எனும் திருத்தலத்தில் பெருஞ்சிறப்புடன் நடைபெறும்...

அப்போது -
வேலவனின் திருமுகத்தில் வியர்வை பூத்திருக்கும்!.. - என்பார்கள்..

அந்த நிகழ்வினை நேரில் காணும் வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிடைத்திருக்குமோ!..

சிக்கல் கோயிலுக்கு பலமுறை சென்றிருக்கின்றேன்..
கந்த சஷ்டி திருவிழாவின் போது சென்றதில்லை..

ஆயினும் -
ஐயன் முருகனின் திருமுகத்தில் பூத்திருக்கும்
வியர்வைத் துளிகளைக் காட்டும் படங்களைக் கண்டிருக்கின்றேன்...

சிக்கலில் திருவிழா நடந்து கொண்டிருக்கின்றது..

நேற்று வேலன் அன்னையிடம் வேல் வாங்கிய திருநாள்..

திருமுகத்தில் பூத்த வியர்வைத் துளிகளுடன்
சிக்கல் சிங்காரவேலனின் அருட்காட்சி..



சென்ற ஆண்டு கிடைத்த படத்துடன்
நேற்று கிடைத்த படமும் அத்துடன்
காணொளிகளும் இன்றைய பதிவில்!...


நேற்று கந்த சஷ்டியின் ஐந்தாம் நாள்..

செந்தூரில் போர் முடிப்பதற்காக
சிக்கல் எனும் பெரும்பதியில்
ஐயன் வெண்ணைநாதர் அருகிருக்க
அன்னை வேல்நெடுங்கண்ணியிடமிருந்து
அறுமுகப் பெருமான் வேலினை வாங்கினான்!..

வீர ஆவேசம் திருமேனியெங்கும்!..

ஆனாலும், அதை வெளிக்காட்டாமல்
எழில் முகத்தில் அருட்புன்னகை - வியர்வைத் துளிகளுடன்!..


சேல்வாங்கு கண்ணியர் வண்ணப் பயோதரம் சேரஎண்ணி
மால்வாங்கி ஏங்கி மயங்காமல் வெள்ளிமலை எனவே
கால்வாங்கி நிற்குங் களிற்றான் கிழத்தி கழுத்திற்கட்டு
நூல்வாங்கி டாதன்று வேல்வாங்கி பூங்கழல் நோக்கு நெஞ்சே!..(77)  

என் நெஞ்சே!..
சேல் கொண்ட கண்ணியர் சிற்றிடை தேடித் தொலையாமல் 
மால் கொண்டு மங்கையர் பூங்குழல் நோக்கித் திரியாமல்
வேல் வாங்கி நின்ற வீரனின் பூங்கழல் நோக்கு!..

வேல்நெடுங்கண்ணி அம்பிகையிடம்
முருகன் வேல் வாங்காது இருந்திருந்தால்
வெள்ளிமலையெனக் கால் கொண்டு நிற்கும்
ஐராவத ஆனையின் மீதிருக்கும் வானவர்கோன்
மனைவியின் கழுத்து நூல் வாங்கப்பட்டிருக்கும்!..

அப்படியேதும் நேர்ந்து விடாமல்
கந்தன் கடம்பன் கார்த்திகேயன் கார்மயில் வாகனன்
அமராவதியின் காவலனாகி அருட்செயல் புரிந்தான்!..

அறுமுகனாகிய அவனையே நோக்கு...
அருட்திரளாகிய அவனையே வாழ்த்து..
அதுவே நன்று.. சாலநன்று!..

- என்று புகழ்ந்துரைக்கின்றார் அருணகிரி நாதர்..


இந்த நாள் இனிய நாள்..
ஆணவமும் அகங்காரமும் அழிந்த நாள்..
அன்பும் அருளும் தழைத்த நாள்!..

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ்நூல் விரித்தோனை விளங்குவள்ளிக்
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒருதாழ்வில்லையே!..(72)

முருகா சரணம்.. முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம் சரணம்!..
* * * 

12 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    முருகனின் பாமாலைகளோடு தரிசனம் கண்டேன்.
    முதுகுளத்தூர் அருகே சிக்கல் என்ற ஊர் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      பதிவில் சொல்லப்பட்டுள்ள சிக்கல் எனும் ஊர்
      திருவாரூருக்கும் நாகப்பட்டினத்திற்கும் நடுவில் உள்ளது..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. வேர்வைத்துளிகளோடு சிக்கல் சிங்காரவேலன் முகம் அருமை. சிக்கல், நாகப்பட்டினம் போகும் வழியிலல்லவா இருக்கிறது. கில்லர்ஜி, 'முதுகுளத்தூர்' என்று சொல்லியிருக்கிறார். நான் இரண்டுமுறை சிக்கல் சென்றிருக்கிறேன்.

    "சேல்வாங்கு கண்ணியர்" - பாடல் அர்த்தம் கொடுத்துள்ளது சிறப்பு. பெண்ணைப் பார்த்தால் மீனாட்சி ஞாபகம்தான் எல்லோருக்கும் வருகிறதுபோலும்.

    பதிலளிநீக்கு
  3. அன்புடையீர்..

    சிக்கல் திருவாரூர் - நாகைக்கு நடுவில் உள்ள ஊர்..
    தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  4. பல முறை சிக்கல் சென்றுள்ளேன். இன்று உங்கள் பதிவு மூலமாக. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. ஓவியர் கொண்டையா ராஜு அவர்களின் படமும் அருமை. ஓவியர் கோபுலுவின் படமும் அருமை. இருவரும் லெஜென்ட்ஸ்.

    பதிலளிநீக்கு
  6. அற்புத படங்கள்...ரசித்து...தரிசித்தேன்...

    பதிலளிநீக்கு
  7. முருகனின் வியர்வை அறியாத தகவல்....
    எம்பெருமான் குறித்தான பகிர்வு அருமை ஐயா...
    சிக்கல் சிங்காரவடிவேலன் என்பார்களே... அது இந்த சிக்கல்தானோ...
    கில்லர்ஜி அண்ணன் சொன்னது போல் எங்க பக்கம் ஒரு சிக்கல் உண்டு.

    பதிலளிநீக்கு
  8. சிக்கல் சென்று இருக்கிறேன்.
    இன்று நேரடி தரிசனம் கிடைத்து விட்டது உங்கள் தளத்தில் முருகன் முகத்தில் வியர்வை படம் அருமை.
    நன்றி. வாழ்த்துக்கள்.
    இங்கு இன்று திருச்செந்தூர் சூரசம்ஹாரம் ஜெயா தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு பார்த்தோம்.

    பதிலளிநீக்கு
  9. சிக்கல் என்பது கோயிலின் பெயரோ? ஹா ஹா ஹா நான் தலைப்புப் பார்த்து என்னமோ ஏதோ என நினைச்சிட்டேன்... சூரன்போரோடு விரதங்கள் யாவும் நிறைவு பெற்றது மிக்க மகிழ்ச்சியே...

    பதிலளிநீக்கு
  10. சிக்கலைச் சரியாகத் தெரிந்து கொள்ளாத சிக்கல், கில்லர்ஜியிடம்!!! சிக்கல் சிங்காரவேலா... வணங்கிக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..