நேற்று வியாழக்கிழமை இரவு வேலை சற்று அதிகம்..
காலையில் அறைக்குத் திரும்புவதில் தாமதம்..
இரவு வேலைக்குச் செல்லும்போது இணைய இணைப்பினை எடுத்துச் செல்லாததால் வலையுலகின் நடப்புகள் தெரியவில்லை..
அறைக்குத் திரும்பிய பின்னர் தான் தெரிகிறது - அன்பின் ஸ்ரீராம் அவர்கள் என்னை மகிழ்ச்சிக் கடலில் தள்ளியிருப்பது..
நேற்றைய அறிவிப்பின்படி -
வருகின்ற வியாழன்று காக்கையின் பாடல் வெளியாக இருந்தது..
ஆனால்,
கொடுத்து வைத்த காக்கை!..
இன்று காலையிலேயே எங்கள் Blog ல் கவிதை வெளியாகிவிட்டது..
அதற்குப் பின்னும் தோரணம் கட்டாமல் இருந்தால் எப்படி!?..
இதோ - நமது தளத்திலும்!..
உங்களுடன் உங்கள் காக்கை!..
* * *
காகா.. காகா.. கா..
காகா.. என்றபடி -
நான் வாசற்படியில்
வந்தமர்ந்தேன்..
கண்டங்கருப்பாய்
சஞ்சலம்..
காக்கையைக் கண்டதும்
சங்கடம்..
கண்களில் சகுனம்..
காலையில் சலனம்..
கண்டத்தில் வெள்ளை
மணிக் காக்கை!..
கன்னங் கரேலென்று
கருங் காக்கை?..
இடம் நல்லதா..
வலம் நல்லதா..
மனம் நல்லதென
அறியீரோ!..
மொட்டை மாடியில்
எனைக் கண்டால்
மூடியே வைப்பீர்
வற்றலைத் தான்..
அஷ்ட லச்சுமியும்
வருவள் என்றால்
அழைத்து நிற்பீர்
எங்களைத் தான்!..
ஆற்றில் குளித்து
சிறகு உலர்த்தி
குப்பை கூளம்
கிளறி நின்றோம்..
கூச்சல் கூட்டம்
பொறுக்காமல்
வேட்டுகள் போட்டு
எமை அழித்தீர்..
ஆயினும் என்பணி
மறந்தேனா..
அன்பெனும் வழியைத்
துறந்தேனா?..
கா..கா.. என்றே
கரைந்திருந்தேன்..
கா.. கா.. என்றே
சேர்ந்திருந்தேன்!..
கா.. கா.. என்றேன்..
நோக்கவில்லை..
கரியன் கரைந்ததை
கேட்கவில்லை..
சென்றவர் சேர்ந்தவர்
இது என்றான்..
முன்னோர் மூத்தோர்
வடிவென்றான்..
இல்லை.. இல்லை..
நான்.. என்றேன்..
என் விடை எவரும்
விரும்பவில்லை...
சிறு புன்னகை கூட
அரும்பவில்லை..
முனைப்பாய் எவரும்
நினைக்கவில்லை..
எனக்கே என்னைப்
பிடிக்கவில்லை..
எனக்கே என்மனம்
பொறுக்கவில்லை...
மானிடர் மடமை
தெளியவில்லை.
மானிடர் மனமும்
புரியவில்லை..
கருவில் சுமந்த
உன் அன்னை
என்னைப் போன்றே
வந்தாளா?..
தோளில் சுமந்த
உன் தந்தை
காக்கை என்றே
நின்றாரா?..
கரவாதுண்ணும்
காட்சியன்றோ
காணச் சொல்லிக்
காட்டிற்று...
கதையாய் கதையாய்
எதை எதையோ
கருதிக் கொள்ள
நான் பழியா!?..
முன்வினை இன்னும்
முடியலையா?..
ஏழ்பிறப்பு என்பதும்
தீரலையா?..
கா.. எனக் கரைந்தும்
புரியலையா!..
கருத்தில் எதுவும்
ஏறலையா?..
கா.. கா.. என்றேன்..
கரவாதிருப்பீர்..
கா.. கா.. என்றேன்..
கலந்தினிதிருப்பீர்!..
கா.. கா.. என்றேன்..
கருணையில் வாழ்க..
கா.. கா.. என்றேன்..
கனிவுடன் வாழ்க!..
கா.. கா.. என்றே
கரைந்ததனால்
கண்டவர் மனதினில்
பதியவில்லை...
காக்கையின் மொழியும்
புரியவில்லை!..
வேறொரு வழியும்
தெரியவில்லை..
ஏழரைச் சனியின்
கொடுமை பெரிது..
தப்பிப் பிழைத்தால்
நாள் இனிது!..
கைப்பிடி சோற்றில்
பழி தொலைந்தால்
காக்கைக்கன்றோ
பழி தொடரும்!?.
உன்நிழல் போல
உன் வினையும்!..
உன்னுடன் தானே
உடன் சேரும்!..
உன்பசி தீர
நான் தின்றால்
மனிதா உன்பழி
எப்படித் தீரும்?..
காரியின் நல்லருள்
வேண்டும் எனில்
காரியின் கால்களில்
விழவேண்டும்..
காரியின் அடிமை
எனக்கெதற்கு
கையூட்டளித்துக்
களிக்கின்றீர்?..
கையூட்டளிக்கும்
மானிடரே..
கா.. கா.. என்றதும்
உமக்கல்ல..
கா.. கா.. சிவனே..
கா.. என்றேன்..
காக்க.. காக்க..
கா.. என்றேன்..
காக்க.. காக்க..
கா.. என்றேன்..
காக்க காவினை
எனக் கரைந்தேன்....
கருணை இலாமல்
காடழித்தீர்..
கா.. எனக் கலங்கி
நான் கரைந்தேன்!..
காக்கைகள் கலந்ததை
கணடதுண்டோ?.
கா.. கா.. என்றதும்
அதற்கேயாம்!.
கடுவிழி நாயாய்
அலைபவருக்கு
காக்கை மொழியும்
புரிவதில்லை!..
காக்கை நிறத்தில்
பெண் என்றால்
கலங்கித் தவித்துப்
பரிதவிப்பீர்..
கடுவினை தீர்ந்திட
வேண்டும் எனில்
காக்கையைக் கூவி
விருந்து வைப்பீர்!..
இருந்தவர் பசிக்கு
சோறிடவில்லை..
சென்றதும் பழியெனப்
பதறுகின்றீர்!..
தன்பிழை என்மேல்
ஏற்றி வைத்து..
எள்ளுடன் சோற்றை
ஏந்தி நின்றீர்!..
என்னே மடமை..
இதுவோ மானிடம்..
மானிடர் மடமை
விலகவில்லை..
காகா.. என்றதும்
தெரியவில்லை..
கா.. கா.. என்றதும்
புரியவில்லை...
சுற்றம் சூழல்
வாழ்வதற்கே
கா.. கா.. என்று
நான் கரைந்தேன்..
அஃறிணை என்றே
எனைப் பழித்தீர்..
நல்லன மறந்து
தவறிழைத்தீர்..
உன்இனம் இனிதாய்
வாழ்வதற்காய்
என்போல் பறவைக்
குலம் கெடுத்தாய்..
கூட்டினை அழித்தாய்..
காட்டினை எரித்தாய்..
தீராப் பழியை
நீயே விளைத்தாய்!..
உறவுகள் தொலைத்த
மானிடனே.. உன்
உள்ளம் முழுதும்
பாழிடம்!..
காவினை அழித்த
மானிடமே இனி
வேறெது உனக்கு
வாழ்விடம்?..
காலங்கள் ஆயிரம்
போனாலும்
காக்கையின் குணமோ
கரைய வில்லை..
கற்றவர் மொழியும்
புரியவில்லை
காக்கை மொழியும்
விளங்கவில்லை!..
ஏழைக்கு இரங்குக..
இனிதே நோக்குக.
இருகை அதனால்
இயற்கை போற்றுக..
அன்பை வாங்குக..
மனிதம் தாங்குக..
பண்பைத் துலக்குக..
பகையை விலக்குக..
காகா.. கா..
காகா.. கா..
விடியலில் நானும்
கரைகின்றேன்..
காகா.. கா..
காகா.. கா..
விடியட்டும் என்றே
கரைகின்றேன்..
***
அன்பின் ஜி
பதிலளிநீக்குகாகத்தின் பாடலில் எவ்வளவு சமூக கருத்து மனிதன் செய்யும் அறியாமையை அழகாக விளக்கினீர்.
வாழ்க காகம்.
அன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
வாழ்க காகம்!..
காகத்தின் கவிதை அருமை.
பதிலளிநீக்குஇயற்கை காப்போம், அன்பை போற்றுவோம்,மனிதம் போற்றுவோம்.
பகையை நீக்கி மகிழ்ச்சி அலையை பரப்புவோம். காகம் வாழ்க ! சுற்றம் சூழ!
வாழ்த்துக்கள்.
அன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
வாழ்க காகம்!..
வாழ்த்துகள் ஸார்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குசற்றும் ஓய்வு கொள்ளாமல் பதிவினை தளத்தில் வழங்கியமைக்கு நன்றி.. மகிழ்ச்சி..
வாழ்க நலம்!..
எங்கள் பிளாக்கில் படித்துவிட்டு உங்கள் தளத்திற்கு வருகிறேன். காக்கையிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியன நிறையவே இருக்கின்றன.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குகாகங்களிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டியவை நிறையவே!..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
எங்க பிளாகிலும் ரசித்தேன் ரசனையும்குறித்திருந்தேன் அருமை சார்
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதாங்கள் குறித்திருந்த ரசனை மனம் கவர்ந்தது..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
காக்கை வழியே மானுடர்க்குச் சொன்ன கருத்துகள் சிறப்பு. எங்கள் பிளாக் பக்கத்திலும் ரசித்தேன்.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
அன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அருமை ஐயா
பதிலளிநீக்குஇயற்கை காப்போம்
அன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
காக்கை வழி அருமையான கருத்துகள். அனைத்து வரிகளும் அருமை!!!மிக மிக மிக ரசித்தோம். எங்க்ள் ப்ளாகிலும் வாசித்தோம்....இங்கும் வாசித்து மகிழ்ந்தோம்...
பதிலளிநீக்குதுளசி, கீதா
அன்பின் துளசி..
நீக்குதாங்கள் அளிக்கும் உற்சாகம் மகத்தானது..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..