செவ்வாய், செப்டம்பர் 12, 2017

சக்கராப்பள்ளி 2

சக்கராப்பள்ளித் திருத்தலத்தைப் பற்றிய தகவல்கள் தொடர்கின்றன..

முந்தைய பதிவினை - இங்கே காணலாம்...


திருமூலஸ்தானத்தில் ஸ்ரீ சக்ரவாகேஸ்வரர்..

சக்ரவாகப் பறவை நல்லறிவு பெற்று சிவபூஜை செய்ததாக தல புராணம்..

சலந்தரனை அழித்த சக்ராயுதத்தினை சிவபெருமான் ஏந்தியிருந்தார்..

அதனைத் தாம் பெற வேண்டும்!.. - என, ஸ்ரீ ஹரிபரந்தாமனுக்கு ஆவல்..

அதன் பொருட்டு இத்தலத்தில் வழிபட்டு நின்று சிவபெருமானிடமிருந்து சக்ராயுதத்தினைப் பெற்றனர் என்பதும் சொல்லப்படுகின்றது..


இத்தகைய புண்ணியத் தலத்தில் தாமும் வழிபடவேண்டும் என்ற பேராவல் உலகாளும் அன்னை உமா மகேஸ்வரியின் உள்ளத்திலும் எழுந்தது..

அந்த ஆவல் - மகிஷாசுரனை வீழ்த்துதற்கு எழுந்தபோது நிறைவேறியது...

அம்பிகை தன்னுள் ஒருங்கிணைந்திருந்த ஏழு சக்திகளையும் வெளிப்படுத்தினாள்..

அந்த சக்திகள் -
ஸ்ரீபிராமி, ஸ்ரீமகேஸ்வரி, ஸ்ரீகௌமாரி, ஸ்ரீவைஷ்ணவி,
ஸ்ரீவராஹி, ஸ்ரீமாகேந்திரி, ஸ்ரீசாமுண்டி - என ஏழு ரூபங்களாக நின்றன..

இந்தத் திருமேனிகளுடன் ஈசனை ஏழு தலங்களில் வழிபட்டாள் - அம்பிகை..

அதனைத் தொடர்ந்து எல்லா வல்லமைகளையும் பெற்று
ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியாக மகிஷாசுரனை வதம் செய்தனள் - என்பது திருக்குறிப்பு..

சப்த மங்கையருள் முதலிடத்தில் இருப்பவளாகிய ஸ்ரீ பிராமி வழிபட்டதனால் - இத்தலம் சக்ரமங்கை எனப்படுகின்றது...

மற்றொரு சந்தர்ப்பத்தில் -

திருக்கயிலாய மாமலையில் ஈசனுக்குத் தன்னை ஒளித்து விளையாடினாள்..
அந்த விளையாட்டு வினையாயிற்று..

அம்பிகை திரும்பவும் சிவ தரிசனம் பெறுவதில் சிக்கலுற்றாள்..

இப்போது -

என்னைக் கண்டு பிடி!.. - என, தன்னை ஒளித்து விளையாடினான் - ஈசன்...

ஈசன் எம்பெருமானைக் காணாமல் தவித்தாள்.. கலங்கினாள்..

அம்பிகையின் தவிப்பைக் கண்டு அயர்ந்த எம்பெருமான் -

முன்னொரு சமயம் எம்மை வணங்கிய தலங்கள் ஏழிலும் எம்மைக் கண்டுணர்வாய்!.. - எனத் திருவாய் மொழிந்தான்..

அதன்படி இத்தலத்தில் அம்பிகை சிவபூஜை செய்தபோது
தனது நெற்றிக் கண்ணைக் காட்டியருளினன் - என்பது ஆன்றோர் வாக்கு..

இப்படியெல்லாம் சிறப்பு பெற்ற சந்நிதி..
ஸ்ரீ சக்ரவாகேஸ்வரர் சந்நிதியில் மனமுருக நிற்கின்றோம்...

ஐயன் எம்பெருமானுக்கும் ஆருயிர்க்குமான உறவு நெஞ்சகத்தில் புலப்படுகின்றது..

காலகாலமாக நம்மை அணைத்துக் காக்கும் ஐயனின் திருவடிவம் மனத்திரையில் எழுகின்றது..

அம்மையே!.. அப்பா!.. அகிலாண்டகோடி ப்ரம்மாண்ட நாயகா!.. - என மனம் கண்ணீர் வடித்துக் கதறுகின்றது...

தேவதேவருக்கும் கிட்டாத திருக்காட்சி நமக்குக் கிட்டுகின்றது...

கண்களைத் துடைத்துக் கொண்டு திருநீற்றினைத் தரித்துக் கொள்கின்றோம்..

ஐயனின் மூலஸ்தானத்துடன் இணைந்ததாக தென்புறத்தில் ஒரு சந்நிதி..

புகழான திருக்கோயில்களின் அமைப்பில் அது தியாகேசனின் சந்நிதியாகும்..

அதனுள் தியாகேசனின் திருமேனி இல்லை..

ஆனால், நந்தியம்பெருமான் காத்துக் கிடக்கின்றார்..

அந்த சந்நிதியினுள் சிவகயிலாய சுதை சிற்பமும்
சற்றே பின்னமான சிலைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன...

மகாமண்டபத்தில் இந்தப் பக்கம் நால்வர் திருமேனிகள்..

ஈசான்ய மூலையில் ஸ்ரீ தண்டாயுதபாணி.. பாணலிங்கம்..
அருகில் ஸ்ரீ பைரவமூர்த்தியுடன் சூரியன்...

மறுபடியும் திருமூலஸ்தானத்தை வணங்கியபடி வெளியே வருகின்றோம்..

தென்புறத் திருச்சுற்று.. மெத்தென பசும்புல் பரவிக் கிடக்கின்றது..

இருந்தாலும் அவ்வப்போது நெருஞ்சி காலை பதம் பார்க்கின்றது..

திருக்கோட்டத்தில் அழகான விநாயகர்..

அதற்கடுத்ததாக ராஜராஜசோழனின் பாட்டியாராகிய
செம்பியன் மாதேவியார் மலர் கொண்டு சிவ பூஜை செய்யும் அற்புத சிற்பம்...

நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் திகழ்கின்றது..


செங்கல் கட்டுமானமாக இருந்த கோயிலைக் கற்றளியாக மாற்றியவர் - செம்பியன் மாதேவியார் என்பது கல்வெட்டுச் செய்தியாகும்..

அடுத்ததாக தெக்ஷிணாமூர்த்தி சந்நிதி..

ஸ்வாமிக்கு ஐந்தலை நாகம் குடையாக விளங்குகின்றது.. திருவடியில் நந்தி..
பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.. அழகான வேலைப்பாடு..

நிருதி மூலையில் கணபதி சந்நிதி..
அடுத்ததாக வள்ளி தேவயானையுடன் சரவணப் பெருமான்...


பாங்கினால் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை
வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட
ஓங்கினார் உமையொரு கூறனார் ஒலிபுனல்
தாங்கினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே.. (3/27)




மூலஸ்தானத்தின் பின்புறம் லிங்கோத்பவர்..
கோட்டம் முழுதும் அழகழகான சிற்பங்கள் அணி செய்கின்றன..

வடக்குத் திருச்சுற்றில் சண்டிகேசர்.. துர்கா சந்நிதி..

இத்திருக்கோயிலில் நடராஜர் சபா மண்டபம் இல்லை..

நவக்கிரக மண்டலமும் இல்லை..

திருக்கோயிலின் ஈசான்யத்தில் நந்தி மண்டபத்துடன் இணைந்ததாக அம்பிகையின் சந்நிதி..
அம்பிகை சந்நிதி விமானம்
அம்பிகையின் சந்நிதிக்கு நேரெதிராக குங்கிலியக் குண்டம்...
அவ்வப்போது நேர்ந்து கொள்பவர்கள் குங்கிலியம் போடுகின்றார்கள்...

சமீப காலமாக பற்பல விசேஷங்கள் திருக்கோயிலில் அனுசரிக்கப்படுகின்றன..

மாதந்தோறும் பிரதோஷ வைபவங்கள் சிறப்பாக நடத்தப்படுகின்றது..

பங்குனியில் சித்திரை நட்சத்திரத்தை அனுசரித்து சப்தஸ்தானத் திருவிழா நிகழ்கின்றது..

மக்கள் ஆரவாரத்தோடு ஆயிரக்கணக்கில் கூடுகின்றனர்..


எப்பொழுதும் சந்நிதிக்கு முன்பாக நந்தியம்பெருமானைப் படமெடுப்பது வழக்கம்..

இங்கே பிரதோஷ வழிபாடுகள் நடந்து கொண்டிருந்ததால் திரளாகப் பெண்கள் கூட்டம்..

அதனால்-
அலங்காரத்துடன் திகழ்ந்த நந்தியம்பெருமானை எடுக்கமுடியவில்லை...

பொழுது நன்றாக இருட்டி விட்டது..

கொடிமரத்தின் அருகில் விழுந்து வணங்கி விட்டு புறப்பட்டபோது -
சிவகயிலாய வாத்யத் திருக்கூட்டத்தினர் கோயிலினுள் நுழைந்தனர்..

அடுத்த சில நிமிடங்களில் -
எட்டுத் திக்கும் பரவியது - சிவகயிலாய வாத்யங்களின் பெருமுழக்கம்..

திருக்கயிலாய மாமலை போலாகியது திருக்கோயில்..

இத்தகைய சிறப்புகளுடன் இன்னொரு தனிச்சிறப்பாக -

பங்குனி மாதத்தின் சங்கடஹர சதுர்த்தியன்று காலையில்
சூரியனின் செந்நிறக் கதிர்கள் சந்நிதிக்குள் சிவலிங்கத்தின் மீது படர்கின்றன..

அதே நாளன்று மாலையில் -
வேறொரு திருக்கோயிலில் மாலை வேளையில் சூரியனின் பொன்னிறக் கதிர்கள் சந்நிதிக்குள் சிவலிங்கத்தின் மீது படர்கின்றன..

அது எந்தக் கோயில்!?..

அடுத்து வரும் பதிவில் -
சப்த மங்கை திருத்தலங்களுடன் தரிசிப்போம்!..


பாரினார் தொழுதெழு பரவுபல் லாயிரம்
பேரினார் பெண்ணொரு கூறனார் பேரொலி
நீரினார் சடைமுடி நிரைமலர்க் கொன்றையந்
தாரினார் வளநகர் சக்கரப் பள்ளியே.. (3/27)

ஓம் நம சிவாய சிவாய நம.. 
* * *

7 கருத்துகள்:

  1. அம்மையப்பனின் திருவிளையாடல்களை படித்தேன்.

    சுவாரஸ்யமான கல்வெட்டுத் தகவல்கள். அழகான படங்கள்.

    கோவில் படம் பார்க்கும்போது இன்னும் பாதி பூமியில் புதைந்த நிலையில் இருக்கிறதோ என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  2. அருமையான தகவல்கள், படங்கள்.
    பலவருடங்களுக்கு முன் பார்த்த கோயில்.
    பெயர்பலகை புதிதாக கொடுத்து இருக்கிறார்கள்.முன்பு கிடையாது.
    தரிசனத்திற்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஜி
    சக்கராப்பள்ளி வரலாறு அறிய தொடர்கிறேன் படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  4. உங்களுடன் சப்தமங்கைத்தலங்கள் உலா வருகிறோம்.

    பதிலளிநீக்கு
  5. அருமையான பகிர்வு ஐயா...
    அறியத் தந்தீர்கள்...
    விரைவில் இவையெல்லாம் தொகுப்பாக வரட்டும் ஐயா...
    தற்போது பாலகுமாரனின் தேடிக் கண்டுகொண்டேன் வாசிக்கிறேன்... கோவில்களின் வரலாறு, செவி வழிக்கதைகள் எனச் சொல்லி பல கோவில்களை அறிமுகம் செய்யும் நூல்... அதுபோல் இதுவும் வரணும்..

    பதிலளிநீக்கு
  6. படங்களும், தொகுப்பும் மிக அருமை சார்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..