ஞாயிறு, ஆகஸ்ட் 13, 2017

அற்றைத் திங்கள் 1

முந்நீர்ப் பழந்தீவுகள் பன்னீராயிரம்..
மாபெரும் தேசத்தின் தென் மேற்கே விளங்குவது..

அதுவும் தனது தந்தை தன்னுடைய தோள்வலியால் கொண்டது..

மாறவேண்டும்.. எல்லைகள் மாற வேண்டும்!.. என - இவன் முனைந்தான்..

நிசும்பசூதனியின் திருக்கரத்தால் -
தனது பெரும் பாட்டன் விஜயாலயன் பெற்ற வீரவாளினை ஏந்தினான்..

கங்கை கொண்டான் ....

இது போதாதென்று -
கடாரம் சென்றான்.. வென்றான்..

இதுவும் போதாதென்று - பெருங்கடலில் நடுவே கலம் செலுத்தி -
ஸ்ரீ விஜயம் சென்றான்.. அதையும் வென்றான்..

இவனே வீரத்திருமகன்!.. - என்று,

முப்போதும் அவனைத் தொடர்ந்திருந்த
பெரும்புகழ் எனும் பொற்பாவை ஆரத்தழுவி ஆனந்தம் கொண்டாள்..

அத்தகைய வீரத்திருமகனின் திருப்பெயரைக் கேட்டதுமே -
அங்குமிங்கும் சிதறிக் கிடந்த புறநாட்டு மன்னர் கூட்டம்
அடங்கி ஒடுங்கி குழிக்குள் புகுந்த நரிக்கூட்டம் ஆகியது...

வேற்று நாட்டவரும் கேட்ட மாத்திரத்தில்
வியர்த்து நடுங்கி விழி கலங்கி நின்ற திருப்பெயர் -

ஸ்ரீராஜேந்திர சோழன்!..

வீரமும் விவேகமும் பண்பும் பக்தியும் கொண்டு இலங்கிய
மன்னனைக் கண்டு மாநிலம் பெருமை கொண்டது...

ராஜேந்திர சோழனைப் பெற்றெடுத்த ராஜராஜ சோழனின் திருப்பெயரைத்
தம் பிள்ளைகளுக்குச் சூட்டிக் கொண்டாடியதை விடவும் அதிகமாக

ராஜேந்திர சோழனின் திருப்பெயரைத் தம் பிள்ளைகளுக்குச் சூட்டி
மகிழ்ந்தது - தமிழ்க் குலம்!..

அதற்குக் காரணம் - அவனும் தந்தையைப் போலவே மக்களோடு மக்களாக பழகிக் கிடந்தான்..

ராஜேந்திரனது திருப்பாதங்கள் பதியாத ஊர்களே கிடையாது - இந்த மாநிலத்தில்!..

வயலைக் கொடுத்தான்.. வரப்பைக் கொடுத்தான்..
வள நாட்டினை வகுத்து வாய்க்காலைக் கொடுத்தான்..

அது வளங்குன்றாதிருக்க நலந்தரும் நீரைக் கொடுத்தான்...

நெடு.. நெடு.. - என, நீரோடி நிலஞ்செழிக்க -
காவிரியின் கடைமடையும் தழைத்திருக்கும் நல்லாட்சியைக் கொடுத்தான்..

குளத்தைக் கொடுத்தான்..
குடிமக்கள் மனங்குளிரட்டும் என -
குளத்தின் கரையில் தளிர் சோலையைக் கொடுத்தான்..

குளிர்ந்த மனங்கள் கும்பிட்டு நிற்கக் கோயிலைச் சமைத்தான்...

அவன் வடித்துக் கொடுத்த கோயில்களுள் ஒன்று தான் -
ஸ்ரீ கயிலாசமுடையார் திருக்கோயில்..

இத்திருக்கோயில் அமைந்திருக்கும் ஊரின் முழுப்பெயர்

வடகரை இராஜேந்திர சிம்ம வளநாட்டு
மிழலை நாட்டு வீரநாராயணபுர இலச்சிக்குடி ..

சோழ தேசத்தின் பெரிய ஏரியாகிய வீரநாராயணபுர ஏரிக்குச் செல்லும் பெருஞ்சாலையில் தான் இவ்வூர்..

இவ்வூரில் சிவாலயம் அமைந்தபோது சிற்பிகள் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டனர்..

மாமன்னன் ராஜேந்திரனும் குறுஞ்சிரிப்புடன் இசைவு தந்தான்..

அதனால் தான் வேறெங்கும் காணக் கிடைக்காத அரிய கலைச் செல்வம் கிடைத்தது..

ராஜேந்திர சோழனும் அவனது தேவியரும் கருங்கல்லினில் வெளிப்பட்டனர்..

மன்னனைக் காண இயலாத வேளைகளில்
மக்கள் அந்த கலைச்செல்வத்தினைக் கண்டு உவகை கொண்டார்கள்..

கொண்ட புகழுடன் திருக்கொடி மேகந்தொட்டுப் பறந்திருக்க
மாமன்னனின் திருப்பெயர் மக்களின் மனங்களில் உறைந்திருந்தது..

ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில் - மானம்பாடி

ஸ்ரீ சௌந்தர்யநாயகி அம்பாள் சந்நிதி - மானம்பாடி
கால ஓட்டத்தில் தலைமுறைகள் மாறின..
கலைச் செல்வங்களின் தலையெழுத்தும் மாறியது..

வீரநாராயணபுர இலச்சிக்குடி என்ற பெயர்
வீரநாராயணபுரமான மாறம்பாடி - என்றாயிற்று..

மாறம்பாடியும்
மானம்பாடி என்றானது..

ஸ்ரீகைலாசமுடையார் - ஸ்ரீநாகநாதர் என்றானார்..

வீரநாராயணபுர பெரிய ஏரி - வீராணம் ஏரி என்றானது..

சோழதேசத்தின் பெருநகராகிய தஞ்சையிலிருந்து
வீரநாராயணபுர பெரிய ஏரிக்குச் சென்ற பெருவழி -
சென்னை நெடுஞ்சாலை என்றானது..

தஞ்சை - சென்னை நெடுஞ்சாலையில் கும்பகோணத்தை அடுத்து
ஒன்பது கி.மீ., தொலைவில் உள்ளது  -  மானம்பாடி...

இதுதான் அன்றைய - வீரநாராயணபுரமான மாறம்பாடி..

எல்லாவற்றையும் விடப் பெரிய கொடுமை -
மக்களுடன் மக்களாகத் திகழ்ந்த மாமன்னனின் பெருமைதனை
மக்கள் மறந்து போனது...

ஆனால்,
நீரும் சோறும் உள்ளவரை - ராஜேந்திர சோழனின் திருப்பெயர்
நல்லோர் தம் மனதிலிருந்து நீங்காதென்பது சத்தியம்..

நன்றி - திரு. குடவாயில் பாலசுப்ரமணியன்
நன்றி - திரு. குடவாயில் பாலசுப்ரமணியன்
நன்றி - திரு. குடவாயில் பாலசுப்ரமணியன்
குடந்தையிலிருந்து மானம்பாடிக்குச் செல்லும் நகரப் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் நடத்துனரிடம் கேட்டேன்..

மானம்பாடியில் ராஜேந்திர சோழன் கட்டிய சிவாலயத்துக்குப் போக வேண்டும்..

சற்று யோசித்தார் நடத்துனர்..

நான் நினைத்துக் கொண்டேன்..

சிவன் கோயில் பெயரைச் சொல்லுவார் - என்று..

ஆனால், நடத்துனர் சொன்னதோ வேறொரு பெயரை...

நன்றி - திரு குடவாயில் பாலசுப்ரமணியன்
மாபெருஞ்சோழனின் விருப்பத்துக்குரிய மாறம்பாடியாகிய மானம்பாடியில்
சோழனுடைய பெயரில் பேருந்து நிறுத்தம் வேண்டாம் தான்!..

ஆனால்,
சோழன் எழுப்பிய கையிலாசமுடையார் எனும் நாகநாதர் திருக்கோயிலின் பெயரில் கூடவா பேருந்து நிறுத்தம் கிடையாது?...

ஆமாம்.. கிடையாது!..

இன்றைய மானம்பாடியில்
ராஜேந்திர சோழன் எழுப்பிய கோயிலுக்கு அருகிலுள்ள
பேருந்து நிறுத்தத்தின் பெயர்

மாதா கோயில்!..

இப்படிப் பெயர் ஏற்படக் காரணம் -
நாகநாதர் ஆலயத்திற்கு வடபுறமாக நூறடி தொலைவில் மிகச் சமீப காலத்தில் கட்டப்பட்டிருக்கும் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலம்..

நான் பயணித்த பேருந்து மானம்பாடியில் நின்றது..

இங்கே இறங்கிக் கேளுங்கள் சொல்லுவார்கள்.. பக்கம் தான்!..

நடத்துனர் இறக்கி விட்டார்.. பேருந்து புறப்பட்டுச் சென்றது..

எதிரில் வந்த இளைஞரிடம் விசாரித்தேன்..

சாலையின் தென்புறம் தெரிந்த மதிற்சுவரைச் சுட்டிக் காட்டினார்..

அதுதான் கோயில்.. - என்றார்..

கோயில் கோபுரம் எதையும் காணவில்லையே!.. - எனக் கேட்டேன்..

அவர் சொன்னார் - அதைத்தான் இடித்துத் தரை மட்டமாக்கி விட்டார்களே!..

அப்போதே மனம் திடுக்கிட்டது..
கண்ணில் நீர் திரையிட்டது..

காலமகள் காப்பாற்றித் தந்த 
கலைச் செல்வங்களைக் 
கை நழுவ விட்டோம்..
கை கழுவி விட்டோம்..
***

20 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    அழகிய வரலாறு சொல்லி வரும் பொழுது முடிவில் விழிகளில் நீரை வரவழைத்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      நேரில் கண்டபோது தாங்கொணாத வேதனை..
      மானம்பாடியைப் பற்றி இன்னும் இரு பதிவுகள் இருக்கின்றன..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  2. என்ன கொடுமை இது..?
    எல்லாவற்றையும் அழித்துவிட்டு
    கல் தோன்றா காலத்தேன்னு இன்னும் கதை சொல்லிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்...
    வேதனை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..

      தாங்கள் சொல்வது சரிதான்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  3. அருமையான கலைச் செல்வங்களை அழிக்க எப்படி மனம் வருகிறது?
    வரலாறை அழகாய் சொன்னீர்கள். மீண்டும் கோயில் பழைய நிலை பெற இறைவன் அருள வேண்டும்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தாங்கள் சொல்வது சரிதான்.. தெய்வம் தான் கண் காட்டவேண்டும்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்புடையீர்..

      வேதனை தான் மிச்சம்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  5. அழகிய கோயில். ஆனால் பாதுக்காக்கத் தவறி விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தாங்கள் சொல்வது சரிதான்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  6. கோயில் எவ்வளவு அழகாக இருக்கிறது!! லயித்துவிட்டோம் அருமையான கலை! எப்படி அழிக்க மனம் வந்தது! தகவல்கள் அறிந்து கொண்டோம். //இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டார்களே!!!// கொடும்பாவிகள்! சிற்பங்கள் எவ்வளவு அழாக இருக்கின்றன ஆனால் சிதைந்திருப்பது மனதிற்கு வருத்தமாக இருக்கிறது.. கோயிலின் மதில் மீது மரங்கள் வளர்ந்து என்று பராமரிக்கவே இல்லை போலும்...

    துளசி, கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசி..

      தாங்கள் சொல்வது சரிதான்.. கலைப் பொக்கிஷத்தைச் சற்றும் பராமரிக்கவில்லை..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு



  8. ஏர் ஓட்டும் வயலினிலே தார் ஓட்டும் காலமடா... http://ajaisunilkarjoseph.blogspot.com/2017/08/blog-post.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      ஏர் ஒட்டும் வயலைத் தான் எல்லாரும் மற்ந்து விட்டோமே..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  9. பதில்கள்
    1. அன்புடையீர்..

      கலை ஆர்வலர்கள் மனங்கள் வேதனையில் ஆழ்கின்றன..
      விரைவில் நல்லது நடக்க வேண்டும்..

      தங்கள் வருகைக்கு நன்றி..

      நீக்கு
  10. எத்தனை அழகான கோவில் - தற்போது இடிபாடுகளுக்கு இடையே.... வருத்தம் மட்டுமே மிச்சம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      வருத்தம் மட்டுமே மிச்சம்..
      விரைவில் நல்லது நடக்க வேண்டும்..

      தங்கள் வருகைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..