வியாழன், ஜூலை 27, 2017

பண் உகந்த பரமன்

இன்று ராகு கேது பெயர்ச்சி 

சாயாக்கிரகங்களாகிய ராகுவும் கேதுவும் -
தலை கீழாகச் சுற்றி வருவதாக குறிக்கப்படுகின்றது..

இன்று மதியம் 12.48 மணியளவில் -

ராகு - சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும் 
(மக நட்சத்திரம் முதல் பாதத்திலிருந்து ஆயில்யம் நான்காம் பாதத்திற்கும்)

கேது - கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும்
(அவிட்ட நட்சத்திரம் மூன்றாம் பாதத்திலிருந்து அவிட்டம் இரண்டாம் பாதத்திற்கும்)

பெயர்ச்சி ஆகின்றார்கள் - என, கணித்துள்ளனர்..

ராகு கேது பெயர்ச்சியினால் -
ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் என்னென்ன விளைவுகள் ஏற்படும் ?..

அதெல்லாம் அவரவர் வாங்கி வந்த வரம்..


இதற்கு என்னென்ன பரிகாரம்?..


முடிந்தவரைக்கும் ராகு கேது இருவருக்கும் ஐஸ் வைக்கலாமா!.. 

அதற்கெல்லாம் இருவரும் மயங்கி விடுவார்களா?..

அதற்கெல்லாம் மயங்க மாட்டார்கள்.. 

வருவது எதுவானாலும் அனுபவித்துக் கழிக்க வேண்டியது தான்..
ராகுவும் கேதுவும் நமக்குக் கொடுப்பதெல்லாம் - 
போன ஜன்மத்தின் கணக்கு வழக்கில் மிச்சம் மீதி தான்!..

ஆனாலும் - பரிகாரம் என்பது அவரவர் விருப்பம்..




புகழ் பெற்ற சிவாலயங்களிலும் குறிப்பாக நாகம் வணங்கியதாக புகழ்ந்துரைக்கப்படும் திருக்கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நிகழ்கின்றன..

வீட்டின் அருகில் உள்ள திருக்கோயிலில் இறைவழிபாடு செய்வது சாலச் சிறந்தது..

ஏழை எளியோர்க்கு உதவுவது மிகச் சிறந்தது..

நாகம் வழிபட்டதாகச் சொல்லப்படும் சிவாலயங்களுள் சிறப்பான தலம் -

திருப்பாதாளீச்சரம்.. 

இத்திருத்தலம் இன்றைக்கு பாமணி என்று வழங்கப்படுகின்றது..

பாம்பணி என்பதே பாமணி என்று மருவியது என்கின்றனர்..

இத்திருத்தலம் - மன்னார்குடியில் இருந்து 2 கி,மீ., தொலைவில் உள்ளது..

இத்திருத்தலத்தில் இன்று ராகு கேது பெயர்ச்சி சிறப்பாக நடைபெறுகின்றது..

இத்திருத்தலத்தில் -
திருஞானசம்பந்தப் பெருமான் வழிபட்டு திருப்பதிகம் அருளியுள்ளார்..

திருநாவுக்கரசரும் சுந்தரரும் தமது திருவாக்கினால் குறித்துள்ளனர்..

திருப்பாதாளேஸ்வரம் குறித்த முந்தைய பதிவை இங்கே காணலாம்..

இன்றைய பதிவில்  இடம்பெற்றுள்ள ஸ்வாமி அம்பாள் படங்கள் தேவார திருத்தலங்கள் எனும் தளத்திலிருந்து பெறப்பட்டவை..

ஏனைய படங்கள் - எனது கைவண்ணம்.. 

இன்றைய பதிவில் - திருஞானசம்பந்தப் பெருமான் அருளியுள்ள திருப்பதிகம் இடம்பெறுகின்றது.. 

இத்திருப்பதிகம் முழுதும்  
ஈசன் எம்பெருமான் தனது செஞ்சடையின் மேல் பிறை, ஊமத்தம் பூ , கொன்றை மலர் ஆகியவற்றுடன்  கங்கையணிந்து உமையொரு பாகனாகத் திகழ்வதனை ஞான சம்பந்தப் பெருமான் புகழ்ந்துரைக்கின்றார்..

மேலும் - 

ஈசனின்  திருமேனியில் நாகம் விளங்குவதை - 
திருப்பதிகத்தின் ஒவ்வொரு திருப்பாடலிலும் குறித்தருள்கின்றார்...      

இத்திருப்பதிகத்தினால் நமக்கு என்ன நன்மை!?..

பாம்புகள் என்றாலே மனித குலத்தில் 99.9% பேருக்கு அச்சம் தான்.. 

அதிலும் விஷமுடைய  நாகங்கள் என்றால் சொல்ல வேண்டியதில்லை..

அத்தகைய நாகங்கள் நம்முடைய வழியில் இருந்து விலகுகின்றன...

அவ்வளவு தானா?...

அதை விட மேலாக -

மனித வடிவுடன் அலையும் நாகங்கள் பற்பல..

அவைகளும் நம்மை விட்டு விலகும்.. அல்லது,
நாம் அவற்றை விட்டு விலகுவோம்!...


திருத்தலம்
திருப்பாதாளீச்சுரம் - பாமணி


ஸ்ரீ பாதாளேஸ்வரர்
ஸ்ரீ அமிர்த நாயகி
இறைவன் - ஸ்ரீ நாகநாதர், பாதாளேஸ்வரர்
அம்பிகை  - ஸ்ரீ அமிர்த நாயகி

தல விருட்சம் - மா
தீர்த்தம் - நாக தீர்த்தம்



திருஞான சம்பந்தர் அருளிய திருப்பதிகம்
முதலாம் திருமுறை
திருப்பதிக எண் - 108.


காவிரித் தென்கரையின்
நூற்று நான்காவது திருத்தலம்..

திருப்பதிகம் வழங்கியோர் 
தருமபுர ஆதீனம்
அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..


மின்னியல் செஞ்சடைமேல் விளங்குமதி மத்தமொடு நல்ல
பொன்னியல் கொன்றையினான் புனல்சூடிப் பொற்பமரும்
அன்ன மனநடையாள் ஒருபாகத்து அமர்ந்தருளி நாளும்
பன்னிய பாடலினான் உறைகோயில் பாதாளே..(01)

நீடலர் கொன்றையொடு நிரம்பா மதிசூடி வெள்ளைத்
தோடமர் காதில் நல்ல குழையான் சுடுநீற்றான்
ஆடரவம் பெருக அனலேந்திக் கைவீசி வேதம்
பாடலினால் இனியான் உறைகோயில் பாதாளே!..(02)

நாகமும் வான்மதியுந் நலமல்கு செஞ்சடையான் சாமம்
போகநல் வில்வரையாற் புரமூன்றெரித்து உகந்தான்
தோகைநன் மாமயில்போல் வளர்சாயல் தூமொழியைக் கூடப்
பாகமும் வைத்துகந்தான் உறைகோயில் பாதாளே..(03)


அங்கமும் நான்மறையும் அருள்செய்து அழகார்ந்த அஞ்சொல்
மங்கையோர் கூறுடையான் மறையோன் உறைகோயில்
செங்கயல் நின்றுகளுஞ் செறுவிற் றிகழ்கின்ற சோதிப்
பங்கய நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளே..(04)

பேய்பல வுந்நிலவப் பெருங்காடரங் காகவுன்னி நின்று
தீயொடு மான்மறியும் மழுவுந் திகழ்வித்துத்
தேய்பிறையும் அரவும் பொலிகொன்றைச் சடைதன் மேற்சேரப்
பாய்புனலும் உடையான் உறைகோயில் பாதாளே!..(05)

கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச் சடைதன் மேலன்று
விண்ணியன் மாமதியும் உடன்வைத்தவன் விரும்பும்
பெண்ணமர் மேனியினான் பெருங்கா டரங்காக ஆடும் 
 பண்ணியல் பாடலினான் உறைகோயில் பாதாளே..(06)


விண்டலர் மத்தமொடு மிளிரும் இளநாகம் வன்னிதிகழ்
வண்டலர் கொன்றைநகு மதிபுல்கு வார்சடையான்
விண்டவர் தம்புரமூன் றெரிசெய்து உரைவேத நான்கும் அவை
பண்டிசை பாடலினான் உறைகோயில் பாதாளே!..(07)

மல்கிய நுண்ணிடையாள் உமைநங்கை மறுக அன்று கையால்
தொல்லை மலையெடுத்த அரக்கன்தலை தோள்நெரித்தான்
கொல்லை விடையுகந்தான் குளிர்திங்கள் சடைக்கணிந்தோன்
பல்லிசை பாடலினான் உறைகோயில் பாதாளே!..(08)

தாமரை மேலயனும் அரியுந்தம தாள்வினையால் தேடிக்
காமனை வீடுவித்தான் கழல்காண்பில ராயகன்றார்
பூமரு வுங்குழாள் உமைநங்கை பொருந்தியிட்ட நல்ல
பாமரு வுங்குணத்தான் உறைகோயில் பாதாளே!..(09)


காலையி லுண்பவருஞ் சமண்கையருங் கட்டுரை விட்டன்று 
ஆல விடநுகர்ந்தான் அவன் தன்னடியே பரவி
மாலையில் வண்டினங்கள் மதுவுண்டு இசைமுரல வாய்த்த
பாலையாழ்ப் பாட்டுகந்தான் உறைகோயில் பாதாளே!..(10)

பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த பாதாளைச் சேரப்
பொன்னியன் மாடமல்கு புகலிந்நகர் மன்னன்
தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன் சொன்ன
இன்னிசை பத்தும்வல்லார் எழில்வானத்து இருப்பாரே!..(11)
- திருச்சிற்றம்பலம் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
* * *  

20 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    நல்லதொரு நாளில் எவ்வளவு ஆன்மீக விடயங்கள் பிரமிப்பாக இருக்கிறது வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அருமையான பகிர்வு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. இதுல 'சுடுநீற்றான்' என்பது, சுடலைச் சாம்பலைப் பூசியவன் என்ற பொருளில் வருகிறதா?

    ராகு கேது பெயர்ச்சி இன்றா அல்லது 1 ஆகஸ்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      சுடுநீற்றான் - என்பதற்கு சுடலைச் சாம்பலைப் பூசியவன் எனும் பொருள் தான்..

      பாமணி திருக்கோயிலிலும் திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் முதலான தலங்களிலும் இன்று தான் ராகு கேது பெயர்ச்சி வழிபாடுகள் நடைபெறுகின்றன..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. இத்தனை பாடல்களையும் எப்படி பொறுமையாக தட்டச்சு செய்து அளித்துள்ளீர்கள் என்பது பிரமிப்பான விஷயம். ராகு கேதுப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சிப் பலன்கள் எல்லாம் நான் படிக்க மாட்டேன். நம் பணி பணிசெய்துக் கிடப்பதே என்று கடமையைச் செய்வோம். என்ன பலன் வருகிறதோ அது விதி! ஏற்றுக் கொள்வோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      என்ன பலன் வருகின்றதோ - அது விதி.. அதை ஏற்றுக் கொள்வோம்..
      அதைத் தான் நானும் சொல்லியிருக்கின்றேன்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நல்ல பகிர்வு.

    இன்றைக்கு எழுத்துரு அளவு ரொம்பவும் குறைவாக இருக்கிறதே.... சிலருக்கு சிரமமாக இருக்கும் படிக்க....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      எழுத்துரு புதிய மடிகணினியில் இன்னும் சரியாகப் பொருந்தவில்லை என நினைக்கின்றேன்..

      தங்களது குறிப்பினைப் படித்த பிறகு சற்றே திருத்தம் செய்துள்ளேன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அம்மா வீட்டுப்பக்கத்தில் உள்ள கோயிலில் ராகு கேது பெயர்ச்சி விழா கண்டேன்.
    படங்கள், செய்திகள் எல்லாம் மிக அருமை. பாடல்கள் பகிர்வுக்கு ந்னறி.
    படங்கள் உங்கள் கை வண்ணமா ? அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      பதிவில் - ஸ்வாமி அம்பாள் இரு படங்களைத் தவிர மற்றவை எனது கைவண்ணம்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. ஆங்காங்கே சில அறிவு பூர்வமான குறிப்புகளும் மகிழ்ச்சி தருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. உங்கள் கைவண்ணம்பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் வருகையும் பாராட்டும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. துளசி: அருமையான தகவல்கள் அறியாதவையும் கூட.

    கீதா: ராகு கேது பற்றி யோசிப்பதில்லை...அவ்விறைவன் தாள் இருக்க அதைப் பற்றிக் கொண்டால் எந்தப் பாம்பு நம்மைத் தாக்கிவிடும்?!! அவனிருக்க எப்பயமும் இல்லை என்று மனம் எப்போதும் நினைப்பதால்!!

    தாங்கள் இங்குக் கொடுக்கும் பாடல்கள், இறைவன் பற்றிய தகவல்களே மனதை நிறைக்கிறது!!! படங்களும்!! அருமை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அவன் தாள் ஒன்றே அடைக்கலம்..
      நாயன்மார்கள் சொல்லிச் சென்றதும் இதுவே தான்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..