திங்கள், ஜூன் 26, 2017

வருக.. வருக.. வராஹி

அன்னை!..

அவளிடமிருந்து தான் இந்த பிரபஞ்சம் தோன்றியது..


புவனம் பதிநான்கைப் பூத்தவளும் இவளே..
பூத்த வண்ணம் காத்தவளும் இவளே..
புன்னகை ததும்பக் காப்பவளும் இவளே!..

இத்தகையவள் தான் -
வானகமும் வையகமும் உய்வடையும் பொருட்டு
ஸ்ரீவராஹி எனத் திருக்கோலங்கொண்டனள்..

மருந்தினும் நயந்த சொற்பைங்கிளி
தென்னகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழும் சோழவளநாட்டின்
தனிப்பெருந் தலைநகராக விளங்கும் தஞ்சை மாநகரின்
அதிபதியாகத் திகழ்பவள் - ஸ்ரீ வராஹி!..

மாமன்னன் ராஜராஜ சோழனின் வழித்துணை ஸ்ரீ வராஹி!..

குமரி முதல் நர்மதை வரை மட்டுமல்லாமல் 
கடல் கடந்த தேசங்களிலும் கலம் செலுத்தி
மாபெரும் வெற்றிகளை எளிதாக சாதித்ததற்கு
பெருந்துணையாகத் திகழ்ந்தவள் - ஸ்ரீ வராஹி!..  


சோழவளநாட்டின் தனிப்பெருந் தலைநகர்  தஞ்சை மாநகரில்  - 
தண்ணருள் பொழிபவள் ஸ்ரீ வராஹி!..

இன்றும் - 
தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலில்  கைகூப்பி வணங்கும் 
பல்லாயிரம் பக்தருக்கும் உற்றதுணை - என வருபவள் ஸ்ரீ வராஹி!..

அருள்மிகும் பெருவுடையார் திருக்கோயிலில் -
அருளாட்சி புரியும் ஸ்ரீ வராஹி அன்னைக்கு சிறப்பான முறையில்
இந்த ஆண்டும் ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படுகின்றது..

தமிழகத்தின் சிவாலயங்கள் பலவற்றிலும் 
சப்தகன்னியர் திருமேனிகள் திகழ்ந்தாலும்  -

காசியம்பதிக்கு அடுத்து - 
தஞ்சை பெரியகோயிலில் தான் -
தனி சந்நிதியில் விளங்குகின்றனள் ஸ்ரீ வராஹி ...

பெரியகோயிலின் தெற்கு திருச்சுற்றின் பிரகார மண்டபத்தில் 
சப்த கன்னியருக்கும் மாமன்னன் திருமேனிகளை வடித்து வழிபட்டனன்..

ஆனால் - காலவெள்ளத்தின் ஓட்டத்தில்
நமக்கு கிடைத்திருப்பவள் ஸ்ரீ வராஹி மட்டுமே!..

எஞ்சிய திருமேனிகள் என்னவாயின - என்பதைக் கூறுதற்கில்லை..  


அளவற்ற சக்தியுடன் விளங்குபவள் - ஸ்ரீவராஹி..
அதிலும் ஆதார சக்தியாகத் திகழ்பவள் - ஸ்ரீ வராஹி!..

நெஞ்சின் நல்ல எண்ணங்களை நிறைவேற்றித் தருபவள் - ஸ்ரீ வராஹி!..
நேர்மையான கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பவள் - ஸ்ரீ வராஹி!..

வேண்டுவோர்க்கு வேண்டியவற்றை அருளும் கருணை உடையவள்.

வளமைக்கும் செழிப்புக்கும் பச்சைப் பசுமைக்கும் அதிபதியானவள்..  
வேளாண்மை செழித்து ஓங்குவதே ஒரு நாட்டின் மேன்மைக்கு அடையாளம்!.. 

ஆதியில் இருந்தே விவசாயம் தான் அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குவது. 

உலகிலுள்ள கருவிகளுள் மேன்மையாகத் திகழ்வது - ஏர்!..
வேளாண் கருவிகளுள் முதலாவதாக விளங்குவது - ஏர்!..

சுழன்றும் ஏர் பின்னது உலகம்!.. - என்பார் வள்ளுவப் பெருமான்!..

இந்த ஏர் - தனைக் கையில் கொண்டு விளங்குபவள் - ஸ்ரீ வராஹி!.. 

வளமையும் செழிப்பும் ஆனி மாதத்திலிருந்தே தொடங்குகின்றன..

ஆடியில் புது வெள்ளம் பெருகி வந்து குளம் குட்டைகள் நிறைந்து
வயலில் நீர் பாய்வதற்கு முன்  - கோடையில் காய்ந்து கிடந்த நிலங்களில்
எரு விட்டு உழவு செய்து ஆயத்தப்படுத்திக் கொள்வது ஆனி மாதத்தில்!..

எனவேதான்  - விவசாயம் பல்கிப் பெருகி, நாடு நலம் பெற வேண்டும் - என ஆஷாட நவராத்திரி நாட்களில் ஸ்ரீ வராஹி - ஆராதிக்கப்படுகின்றாள்.

வேளாண்மையின் ஆதார தெய்வம் - ஸ்ரீ வராஹி!..  


தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ வராஹி அம்மனுக்கு -
கடந்த அமாவாசை தினத்தன்று (ஆனி 09/ ஜூலை 23) காலை மஹாகணபதி ஹோமத்துடன்  ஆஷாட நவராத்திரி விழா சிறப்பாகத் தொடங்கியது.

தொடர்ந்த நாட்களில் -

காலைப் பொழுதில் திருச்சுற்று மண்டபத்தில் -
அஷ்டபுஜ வராஹி அம்மன் உற்சவத் திருமேனியளாக எழுந்தருளினாள்..

மூல மந்த்ரத்துடன் யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி..

தொடர்ந்து - சந்நிதியில் மஹாஅபிஷேகம்.
மாலையில் சிறப்பு அலங்காரம்... மகா தீபாராதனை தரிசனம்..

23/6 வெள்ளியன்று இனிப்புகளால் அலங்காரம்
24/6 சனிக்கிழமையன்று மஞ்சள் அலங்காரம்
25/6 ஞாயிறன்று குங்கும அலங்காரம் 
- என, நடைபெற்றது.. தொடர்ந்து,

26/6 திங்களன்று சந்தன அலங்காரம்
27/6 செவ்வாய்க்கிழமை தேங்காய்ப் பூ அலங்காரம்
28/6 புதனன்று மாதுளை முத்துகளால் அலங்காரம்
29/6 வியாழன்று நவதானிய அலங்காரம்
30/6 வெள்ளியன்று வெண்ணெய் அலங்காரம்
01/7 சனிக்கிழமை கனிகளால் அலங்காரம்
02/7 ஞாயிறன்று காய் வகைகளால் அலங்காரம்
- என, நிகழ இருக்கின்றது..

03/7 திங்களன்று காலையில் பூச்சொரிதல்..
தொடர்ந்து மாலை ஆறு மணியளவில் ராஜவீதிகளில் திருவுலா..

நாதஸ்வர மங்கலத்துடன் கூத்தொடு பறையொலி தவிலொலியும் கொண்டு -
சிவகண திருக்கயிலாய மற்றும் செண்டை வாத்திய மேளதாளங்கள் முழங்க கரகாட்டம் ஒயிலாட்டம் மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளுடன் அலங்கார ரதத்தில் எழுந்தருள்கின்றாள்.. 

ஜூலை 01 (ஆனி 14) அன்று பஞ்சமி.. அன்றைய தினத்தில் ஆயிரம் பேருக்கு மேல் நிவேதனப் பிரசாத அன்னதானம் வழங்கப்பட உள்ளது..


ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் அங்குசத்திலிருந்து தோன்றியவள் ஸ்ரீ வராஹி!..
ஸ்ரீ லலிதாம்பிகையின் படைகளுக்குத் தலைவியானவள் ஸ்ரீ வராஹி!..

சதுரங்கசேனா நாயகி எனும் திருப்பெயர் கொண்டவள் - ஸ்ரீ வராஹி!..
சப்த கன்னியருள் ஐந்தாவதாக விளங்குபவள் - ஸ்ரீ வராஹி!..

பஞ்சமி எனும் ஐந்தாம் கலைக்கு அதிபதியானவள் - ஸ்ரீ வராஹி!..
அதனால் வளமைக்கும் செழுமைக்கும் உரியவள் - ஸ்ரீ வராஹி!..
  
நம் உடலில் இலங்கும் ஆறு ஆதார சக்கரங்களில் -
ஐந்தாவதாக நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரத்தின் அதிபதி - ஸ்ரீ வராஹி..

வேளாண்மைக்கு உரியதான கலப்பையையும் 
தொழிலுக்கு உரியதான உலக்கையையும் 
திருக்கரங்களில் தாங்கியிருப்பவள் ஸ்ரீ வராஹி!..

ஆனி மாதத்தில் ஆஷாட நவராத்திரியும்,
புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும்,
தை மாதத்தில் சியாமளா நவராத்திரியும்,
பங்குனி மாதத்தில் வசந்த நவராத்திரியும் -

ஆன்றோர்கள் வகுத்தளித்த வைபவங்களுள் சிறப்பானவை. 

இவற்றுள் - ஆனி மாதத்தின் அமாவாசையை அடுத்து வரும் நாட்களில் கொண்டாடப்படும் ஆஷாட நவராத்திரிக்கு உரியவள் - ஸ்ரீ வராஹி!..


அன்னை ஸ்ரீ வராஹி  - எதிர்ப்புகளை தகர்ப்பவள்.
வேளாண் தொழில்களில் மேன்மையை அருள்பவள்.
இல்லங்களில் தன தான்ய மழையினைப் பொழிவிப்பவள்.
கொடுமை கொடுவினைகளை வேரோடு அழிப்பவள்.

ஸ்ரீ வராஹி குடியிருக்கும் இல்லத்தை
பஞ்சமும் பிணியும் நெருங்காது..
நம்மிடம் நேர்மை இருக்கும் பட்சத்தில் - 
நமக்கு உற்ற துணையாகி நல்வழி காட்டுபவள்..  

நியாயமான செலவுகளுக்காக வாங்கிய கடனை - 
திருப்பிக் கொடுக்க இயலாத சூழ்நிலையிலும், 
நம்பிக்கையுடன் கொடுத்த கடன் - 
எதிர்பார்த்தபடி திரும்பக் கிடைக்காத சூழ்நிலையிலும்,

அளப்பரிய அன்புடன்  - நமக்குக் கை கொடுப்பவள் ஸ்ரீ வராஹி. 



ஆன வராக முகத்தி பதத்தினில் 
ஈனவராகம் இடிக்கும் முசலத்தோடு 
ஏனை எழுபடை ஏந்திய வெண்ணகை 
ஊனம் அற உணர்ந்தார் உளத்தோங்குமே!.. 
திருமந்திரம் 4/5/28. 

ஸ்ரீவராஹியின் திருப்பாதங்களுக்கு 
என்றென்றும் எங்களது நன்றிக்கடன் உரியது.. 

எங்களது நன்றிக்கடன் 
இத்துடன் முடிந்து விடக்கூடிய ஒன்றல்ல!..

எத்தனை எத்தனையோ பிறவிகளுக்குத் தொடரக்கூடியது!..
தொடர வேண்டும்.. அதுவே எங்கள் தவம்!..


அன்புள்ளம் ஒன்று போதும் - அவளை வழிபடுவதற்கு..

ஸ்ரீ வராஹி அம்மனை வழிபடுதற்கு எல்லா நாளும் ஏற்றவை..
எனினும் - வளர்பிறையின் பஞ்சமி நாள் மிகவும் ஏற்றது.. 

நமக்கு இயன்ற அளவில் - 
பூஜையறையில் அல்லது சாமி மாடத்தின் முன்பாக 
நெல் அல்லது பச்சைப் பயிறு கொண்டு கோலமிட்டு, 
நெய் விளக்கேற்றி வைத்து வழிபடலாம்..

தாமரை, ரோஜா, மல்லிகை, முல்லை போன்ற நறுமண மலர்களும்
வில்வம், மருக்கொழுந்து போன்ற பத்ரங்களும் உகந்தவை..

அதிக இனிப்புடன் கூடிய கனி வகைகள் 
பாயசம்,கேசரி, ஜிலேபி போன்ற பட்சணங்கள்
இவற்றுள் நம்மால் இயன்றதை அன்புடன் 
நிவேதனம் செய்து ஸ்ரீ வராஹி அம்மனை வழிபடுங்கள்..

யான் பெற்ற பேற்றினை 
அனைவரும் பெற வேண்டும்!..

உங்கள் இல்லத்திற்கும்
வராஹி வருவாள்!..
வரங்கள் பல தந்து
வளமும் நலமும் நல்கிடுவாள்!..


பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்ச பாணி வஞ்சர் 
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே!..(77) 
-: அபிராம பட்டர் :-

அம்பா சூலதனு கசாங்குஸதரி அர்த்யேந்து பிம்பாதரி
வாராஹி மதுகைடப ப்ரஷமனி வாணி ரமா ஸேவிதா
மல்லாத்யாசுர மூகதைத்ய மதனி மாஹேஸ்வரி சாம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீராஜராஜேஸ்வரி..

வரந்தரும் வாராஹி வருக.. வருக..
வளந்தரும் வாராஹி வாழ்க.. வாழ்க!..
* * *

5 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    காலையில் அன்னை வராஹியின் தரிசனம் அழகிய உபதேசத்துடன் நன்று

    பதிலளிநீக்கு
  2. வரம் தரும் அன்னையின் அபிஷேக காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்தேன். அலங்கார படங்கள் அழகு. விவரங்கள் மிக அருமை.
    வராஹி அம்மன் வயல்கள் செழிக்க செய்ய வேண்டும். மக்கள் பசி, பஞ்சம் இல்லாமல் வளமாக வாழ வழி செய்ய வேண்டும்.. நாடு செழிக்க நலல மழை பெய்து வளம் சேர வேண்டும்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. வராஹி புகழ் ஓங்குக வலைப்பதிவர் ஒற்றுமை வளர்க

    பதிலளிநீக்கு
  4. வணங்கிக் கொள்கிறேன் வராஹித் தாயை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..