வியாழன், ஜூன் 22, 2017

எல்லாம் தெரிந்தவன்

அழகான மலையும் அதைச் சார்ந்த வனமும் காண்பவர் தம் மனங்களைக் கொள்ளை கொண்டது..

அங்கிருந்த பலருக்கும் இங்கேயே தங்கி விட மாட்டோமா!.. - என்றிருந்தது...


இருந்தாலும்,

அடிப்படை வசதிகள் எதுவுமே அங்கில்லை என்றிருக்கும் போது
அவரவரும் தாம் வாழ்ந்து கொண்டிருக்கும் புறாக்கூண்டு குடியிருப்புகளை எண்ணி எண்ணி பெருமகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்தனர்..

யார் இவர்கள்!.. எதற்காக இங்கே வந்தார்கள்?..

அந்த நாட்டின் தலை நகரில் வாழ்பவர்கள் - இவர்கள்...
தலை நகரின் பல பகுதிகளிலும் ஆடம்பர வாழ்வினில் திளைப்பவர்கள்...

மெத்தப் படித்த கர்வத்தினில் மிதப்பவர்கள்.. தாய் மொழி மறந்த நாவின் நுனியில் மாற்று மொழி நர்த்தனமிட -  அதனால் செருக்குற்றிருப்பவர்கள்...

பொது சேவை, இயற்கை ஆர்வம் என்ற பெயர்களில்
நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று ஆங்கேயுள்ள
அழகினையும் நிம்மதியையும் குலைத்துக் கொண்டிருப்பவர்கள்...

இவர்கள் தாம் -
இந்த வனப்பகுதியில் கூடி கும்மாளமிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்...

இயற்கை வாழ்க!.. - என்று, பொதுவாகக் கூவிக் கொண்டிருந்தாலும்,

இந்த வனப்பகுதியை எப்படியாவது வளைத்துப் போட்டு
சுற்றுலா என்ற பெயரில் ஓய்வுக் குடில்களைக் கட்டிப் போட்டால்!....

ஒவ்வொருவரின் உள் மனமும் கணக்கிட்டுக் கொண்டிருந்தது...


இவ்வேளையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் புகுந்த சிலர் -
நெடிய மலைச் சரிவில் ஏறிச் சென்றனர்..

அடர்ந்த காட்டுக்குள் ஆனந்த கீதத்துடன் பெயர் தெரியாப் பறவைகள்..

ஆங்காங்கே வெண்பட்டு விரித்தாற்போல சிற்றாறுகள்...


சற்று தொலைவைக் கடந்ததும் அந்த மலைச்சாரலின் மறுபக்கத்தில்
அழகான குடியிருப்புகளைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்...

இலைகளாலும் ஓலைகளாலும் வேய்ப்பட்டிருந்த பசுமைக் குடில்கள்...

குடில்களின் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் வழி நடைகள்...

ஆகா.. அழகென்றால் இதல்லவோ அழகு!..

அந்த குடியிருப்புகளின் அருகாமையில் ஏரி ஒன்று பரந்து விரிந்திருந்தது...

ஒற்றையடித் தடத்தின் ஊடாக நடந்து குடியிருப்புகளை நெருங்கினர்..

ஆள் புழக்கத்தைக் கண்டார்களில்லை.. ஆச்சர்யம் மிகுந்த வேளையில்,
ஆங்கே ஏரிக் கரையின் ஓரமாக இளைஞன் ஒருவன் அமர்ந்திருந்தான்..

அவனை அழைக்கலாம் என்றால் -
வனவாசியாகிய அவன் மொழி எதுவோ?.. சற்றே குழம்பினார்கள்..

எதற்கும் அழைத்துத் தான் பார்ப்போமே.. காசா.. பணமா!..

தம்பி.. டேய்!..

திடுக்கிட்டவன் திரும்பிப் பார்த்து,

என்ன!.. - என்றான்..

நல்லவேளை.. இவனுக்குத் தமிழ் தெரிந்திருக்கிறது..

நீ யார் .. இங்கு என்ன செய்து கொண்டிருக்கின்றாய்!..

நீங்கள் எல்லாம் யார் .. இங்கு என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்!?..

ஓ!.. எதிர்க்கேள்வியா!.. நாங்கள் பக்கத்திலுள்ள நகர வாசிகள்...

அது இந்த குடியிருப்பைப் போல இருக்குமா?...

இதைப் போலவா?.. இதை விட பெரிதானது.. எத்தனை எத்தனையோ வசதிகளைக் கொண்டது... காட்டு வாசியான உனக்கு அதெல்லாம் புரியப் போகின்றதா?..

அறிவு ஜீவிகளாகிய அவர்கள் ஏளனமாக சிரித்துக் கொண்டார்கள்..

அது சரி!.. ஏன் இங்கே எவரையும் காணோம்?..

அவர்கள் எல்லாம் காட்டுக்குள் மலைத்தேன் எடுக்கச் சென்றிருக்கின்றார்கள்..

திடுக்கிட்டார்கள்.. அப்படியானால் இது காடு இல்லையா?..

இதுவும் காடுதான்.. ஆனால் அந்தக் காட்டுக்குள் தான் எங்களுக்குத் தேவையான எல்லாமும் கிடைக்கின்றன... உள்ளே சென்றால் திரும்பி வருவதற்கு சில நாட்கள் ஆகும்!..

சாதாரணமாகச் சொன்னான் - அந்த இளைஞன்..

இப்படியும் ஒரு வாழ்க்கையா!.. - வியப்பு மேலிட்டது அவர்களுக்கு...

எதிரிலிருந்த பெரிய ஏரியை நோக்கினார்கள்..


அதன் கரையில் தோணி ஒன்று கட்டப்பட்டிருந்தது.. 
ஏரியில் பயணிக்க வேண்டும்..அவர்களுக்குள் ஆசை மூண்டெழுந்தது...

அந்த இளைஞனிடம் சொன்னார்கள்..

ஓ!.. போகலாமே!.. - அவன் தோணியைச் செலுத்துவதற்குத் தயாரானான்...

அவர்கள் மகிழ்ச்சியுடன் அந்தத் தோணிக்குள் அமர்ந்து கொண்டார்கள்..

இப்படியும் அப்படியுமாக துடுப்பு நீரில் துழாவியது..

மெல்ல நகர்ந்த தோணி நீருக்குள் ஊர்ந்தது...

இளங்காற்று மேனியில் படர்ந்தது.. 

இது தான் தென்றலாக இருக்க வேண்டும்!.. - அவர்கள் பேசிக் கொண்டார்கள்..

ம்.. அப்படியானால் உனக்கு வெளியுலகம் பற்றி எதுவும் தெரியாது!..

நீங்கள் வேறு.. வெளியுலகம் என்ற ஒன்றே இவனுக்குத் தெரியாது!..

பாடம்.. படிப்பு.. பள்ளிக்கூடம் எதுவும் தெரியாது...

நோய்.. மருந்து.. மருத்துவம் இதெல்லாம் கூடத் தெரியாது...

காசு.. பணம்.. கடன்.. கைமாற்று.. வங்கி வாராக் கடன்.. இதுவும் தெரியாது..

ஆண்ட்ராய்டு.. ஆப்பிள்.. ஐ போன்.. இ மெயில்.. டிவிட்டர்.. எதுவும் தெரியாது..

ஜிஎஸ்டி.. தெரியாது.. நியூட்ரினோ தெரியாது.. எல் நினோ தெரியாது!..

வேறு என்னதான் உனக்குத் தெரியும்!.. - பெரிதாக சிரித்தனர்...

தோணி ஓட்டத் தெரியும்.. கல்யாணம் செய்து வைத்தால்.. -

ஆஹா..ஹா..ஹா!... - ஆரவாரச் சிரிப்பு பீறிட்டது அவர்களிடமிருந்து...

அவனிடமே கேட்டு வைப்போமே!.. அதாவது தெரியுமா உனக்கு!...
உன் வாழ்க்கை உன் கையில்.. அதை இப்படித் தொலைத்து விட்டாயே!..

மறுபடியும் சிரித்தார்கள்... ஆஹா..ஹா..ஹா!...

எனக்கு அதெல்லாம் தெரியாது தான்!.. 
நான் உங்களை ஒன்று கேட்கட்டுமா!..

- என்றான் - அந்த இளைஞன் மெதுவாக..

கேளேன்.. என்ன கேட்கப் போகின்றாய்!..

நீச்சல் தெரியுமா உங்களுக்கு?..

ஏன்?.. ஏன்?.. எதற்காகக் கேட்கிறாய்!?..

தோணிக்குக் கீழே ரெட்டை மூட்டு முறிந்து விட்டது.. அதனால்...

அதனால்!?..

அதனால் - தோணிக்குள் ஏரித் தண்ணீர் ஏறுகின்றது.. இன்னும் சிறிது நேரத்தில் தோணி மூழ்கி விடும்!.. அதனால் நீரில் குதித்து தப்பித்துக் கொள்ளுங்கள்..

ஆஆ!.. - அதிர்ச்சியில் அலறினார்கள்..

கரை.. கரை.. எங்கே இருக்கிறது!..

கரையா?.. அது வெகு தூரத்திலிருக்கின்றது!..

- என்று, ஏதும் தெரியாத அந்த இளைஞன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே -
சலசல.. என்று ஏரித் தண்ணீர் தோணிக்குள் நிறைந்து கொண்டிருந்தது...

எங்களைக் காப்பாற்று.. எங்களைக் காப்பாற்று!.. - அலறினார்கள்...




நியூட்ரினோ தெரிந்து என்ன?.. எல் நினோ தெரிந்து என்ன?..
நீச்சல் தெரியாது போயிற்றே!..

வங்கி தெரிந்து என்ன?.. வாராக் கடன் தெரிந்து என்ன?..
வாழ்க்கை வழி தெரியாது போயிற்றே!..

வனவாசியாகிய இளைஞன் வருத்தப்பட்டான்..

ங்க்.. ஆஆ!.. ங்க்.. ஆஆ!.. ங்க்.. ஆஆ!.. 
- என்று, பரிதாபமாகக் கதறினர்..

களுக்..களுக்!.. - என்று, தண்ணீரைக் குடித்தபடி 
நீருக்குள் தத்தளித்தனர் - எல்லாம் தெரிந்தவர்கள்..

மரண பயத்தில் ஓலமிட்ட
அவர்களைச் சேர்த்துப் பிடித்து இழுத்தபடி
கரையை நோக்கி நீந்தத் தொடங்கினான் 
வனவாசி..

ஏதும் தெரியாத அவன்
எல்லாம் தெரிந்த அவர்களை 
நிச்சயம் காப்பாற்றி விடுவான்!..
***

16 கருத்துகள்:

  1. //ஏதும் தெரியாத அவன் எல்லாம் தெரிந்த அவர்களை நிச்சயம் காப்பாற்றி விடுவான்//

    அருமை வாழ்வை இப்படித்தான் நிறையபேர் கடத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.

    குறிப்பு-எனக்கு நீச்சல் தெரியும் ஜி


    அபுதாபியில் சில அறிவாளிகளுடன் எனக்கு ஏற்பட்ட நிகழ்வு ஞாபகம் வருகிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்களுக்காவது அறிவாளிகளுடன் ஏற்பட்டது..
      இங்கே எனக்கு மூடர் கூடம் என்று ஆயிற்று..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. இதையொத்த கருத்தைக் கொண்ட கதைகளை பள்ளிக் காலத்தில் கேட்டுள்ளோம். நல்ல கருத்தை உணர்த்தும் பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      இது பழைய கதை தான்..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. தெரிந்த கதை சொல்லிப்போன விதம் அருமை வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. தெரிந்த கதை சொன்ன விதம் அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  7. மனிதன் தனது சுயநலத்திற்காக இயற்கையை அழிக்கத் தலைப்படுவதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். வனப்பகுதிக்கு வரும் நகரத்து "படித்தவர்கள்" சிலர் குடித்து விட்டு பாட்டில்களை அங்கயே - அதுவும் உடைத்துப் - போட்டு விட்டு வருவதால் யானை உட்பட விலங்குகள் காலில் ஏறி அவற்றை அழிப்பது பற்றி ஜெமோ தனது யானை டாக்டர் கதையில் சொல்லி இருப்பார். மனிதன் தான் மட்டுமே வாழத்தான் இந்த உலகம் என்று நினைக்கிறான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      சமீபத்தில் கொடைக்கானல் சென்றிருந்தபோது வழி நெடுக உடைக்கப்பட்ட மது பாட்டில்களைக் கண்டேன்.. இத்தனைக்கும் வனப் பகுதியில் மது அருந்த வேண்டாம் - என, அறிவிப்புகள் வேறு..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. உங்கள் மொழியில் அருமை!!! படித்தவரும் அப்படித்தான் இருக்கிறார்கள்!! மிகவும் ரசித்தோம்

    துளசி, கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..

      படித்தவர்களால் தான் புண்பட்டது இந்த நாடு..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..