புதன், மே 17, 2017

நீ அங்கு சுகமா?..



அடுத்தவர் விஷயத்துக்குள் தலையிடுவதே தவறு..

அதிலும் -
கடிதம் என்றால்!?..

பரவாயில்லை... நம்ம முருகேசன் தானே!..

1991... 

முருகேசனின் ஊர் தாமரைக் குளம்..
காவிரி ஆற்றை ஒட்டியுள்ள அழகான கிராமம்...

திருமணமாகி ஏழு மாதங்கள் தான்..
பாரம்பர்ய விவசாயம் மாடு கன்று - இவற்றை விட்டு விட்டு
இங்கே பாலை நிலத்தில் பாடுபடுவதற்கு என வந்து விட்டான்..

அப்போது அவன் மனைவி கனகவல்லி ஐந்து மாதம்...
பெண் குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகளாகப் போகின்றது..
இன்னும் ஊருக்குப் போக முடியவில்லை...

அன்பு மனைவியின் நினைவை விட -
செல்ல மகளின் நினைவு பாடாகப்படுத்துகின்றது...

மகள் பிறந்த ஒரு வருடம் கழித்து அவளுடைய படம் தபாலில் வந்திருந்தது...

ஓ!.. - என்று அழுகை.. ஆற்றாமை.. அவனை அடக்கமுடியவில்லை யாராலும்..

காலம் மெல்ல நகர்ந்தது..

இந்நிலையில் -
இங்கிருந்து ஒரு கடிதம் ஊருக்குச் செல்கின்றது..

அது - இது தான்... படித்துப் பாருங்கள்...

அன்புள்ள கனகவல்லிக்கு,

எல்லாரும் நலமா.. பாப்பா நன்றாக நடக்கின்றாளா.. ஓடுகிறாளா..
அதெல்லாம் பார்த்து விளையாட கொடுத்து வைக்கவில்லை..
போட்டோ எடுத்து அனுப்பவும்.. நான் அனுப்பிய பார்சல் கிடைத்ததா?..

அம்மாவுக்கு வாங்கிய தைலம் இங்கேயே இருக்கு.. அடுத்த மாதம்
அனுப்புகிறேன்.. அப்பாவை கவனித்துக் கொள்ளவும்.. தங்கச்சிகிட்ட
கொஞ்சம் ராசியா இருந்துக்க.. வேற வீட்டுக்குப் போறவ...

நேரா நேரத்துக்கு சாப்பிடவும்.. இங்கே இன்னும் குளிர் முடியலை.. வெயில் வந்தா கஷ்டம் தான்.. என்னைப் பத்தி கவலைப்படாம நல்லபடியா இருக்கவும்..

உன் தம்பிக்கு இங்கே ஒரு வேலை பார்த்திருக்கேன்.. உடம்பு வளைஞ்சு செய்றதா இருந்தா சொல்லு.. ரெண்டு மூனு வருஷம் இருந்து பார்க்கட்டும்.. நான் இங்கே வந்து பொங்கலோட மூனு வருஷம் ஆகப் போவுது.. 

படுத்தா கண்ணு மூட முடியலை.. எப்பவும் உன் நெனைப்பு தான்..

முத்து மாரியம்மன் கோயிலுக்கு உண்டியல் பணம் கொடுக்கவும்..
ரெண்டு மாசமா சம்பளம் வரலை.. வந்துடும்..

எங்க அம்மா கோபப்படாம நடந்துக்க.. நான் மறுபடியும் எழுதுறேன்.. 
இப்போ இங்கே ராத்திரி மூனு மணி.. பொழுது விடியப்போகுது.. வேலைக்கு போகணும்..

பொங்கல் நல்லபடியா கொண்டாடுங்க.. சந்தோஷமா இருக்கவும்..
எல்லாருக்கும் பொங்கல் வாழ்த்து சொல்லவும்..

இது உனக்கு...





இப்படிக்கு,
முருகேசன்..
10.12.1991..



இந்தக் கடிதம் அங்கே சென்று சேர்வதற்குள்
அங்கேயிருந்து ஒரு கடிதம் இங்கே வந்து கொண்டிருக்கின்றது...

முருகேசனின் மனைவி கனகவல்லி எழுதிய மடல்..
அந்தக் கடிதத்தையும் சற்றே காண்க!..

என்னங்க.. சௌக்கியமா இருக்கீங்களா..

நீங்க அனுப்புன பார்சல் கிடைத்தது.. பாப்பா கவுன் நல்லா இருக்கு..
உங்க அம்மாவுக்கு தைலம் அனுப்பலையா.. கோவமா இருக்காங்க..

நேரா நேரத்துக்கு சாப்புடுங்க.. ஏற்கனவே கறுப்பு.. அதனால வெயில்ல அலையாதீங்க.. எங்களப் பத்தி கவலைப்படாம நல்லபடியா வேலைய பாருங்க.. மாமா நல்லா இருக்காங்க.. கால் வலி தேவலாம்..

உங்க தங்கச்சிக்கு மூனு பவுன்ல வளையல் வேணுமாம்.. வாங்குறதா இருந்தா எனக்கும் ஒரு செட் சேர்த்து வாங்கவும்.. பின்னால பாப்பாவுக்கு உதவும்..

மூனு வருசம் ஆச்சு.. எப்போ வர்றீங்க.. நல்லபடியா நீங்க வந்ததும் முத்து மாரியம்மனுக்கு பொங்கல் வைக்கணும்..

உங்க அம்மா களத்து மேட்டுக்கு கூப்புடுறாங்க..நான் மறுபடிக்கு எழுதுறேன்..
பொங்கல் வாழ்த்துகள்.. சந்தோஷமா இருக்கவும்..

அன்புடன்....





இப்படிக்கு,
கனகவல்லி..


1996...

இப்போதெல்லாம் -
முருகேசன் அதிகமாகக் கடிதம் எழுதுவதில்லை.. 
காரணம் வீட்டுக்கருகில் அஞ்சலகம் வந்து விட்டது..
அஞ்சலகத்தில் தொலைபேசி இருக்கின்றது...

அஞ்சலகத்தில் கனகவல்லி காத்திருக்க 
சரியான நேரத்திற்கு முருகேசன் பேசுகின்றான்..



2001...

இப்போதெல்லாம் கனகவல்லி அதிகமாக
அஞ்சலகத்திற்குச் செல்வதில்லை...
காரணம் புது வீட்டில் தொலைபேசி வைத்தாயிற்று...

என்ன ஒரு இடைஞ்சல்... கொஞ்சம் சத்தமாகப் பேச வேண்டும்!..
அடுத்த தெருவுக்கெல்லாம் கேட்கும்... அவ்வளவு தான்!..


மூன்றாவது வீட்டு அஞ்சலை அக்கா வந்து விடுவார்கள்..

தம்பி தான் பணம் அனுப்பி இருக்கிறதாமே!..
கை மாத்தாக ஐயாயிரம் ரூபாய் கொடு...
அடுத்த மாதம் திருப்பிக் கொடுத்து விடுகின்றேன்!..

- என்று.. கனகவல்லிக்கு தர்ம சங்கடமாக இருக்கும்...

அதற்கு சில ஆண்டுகளில் - இது வந்து சேர்ந்தது..


கையில் எடுத்துக்கொண்டு கிணற்றடியில் நின்று பேசிக்கொள்வதற்கு வசதியாயிற்று..

எல்லாவற்றையும் விட -
முருகேசனின் மகள் சுந்தரிக்கு மிகவும் பிடித்திருந்தது..

2005...

இப்போதெல்லாம் வீட்டுத் தொலைபேசி முடங்கிப் போயிற்று..
அதனை யாரும் உபயோகிப்பதில்லை....

என்ன காரணமாம்!?...

இதோ இது தான் காரணம்...


இதையும் ஓரங்கட்டுவதற்கு இது வந்து சேர்ந்தது...


கனகவல்லியிடம் இதைக் கொடுப்பதேயில்லை - சுந்தரி...

2010...

இப்போதெல்லாம் சுந்தரி-
அப்பாவுடன் உரையாடுவது இதில் தான்..
முகம் பார்த்துப் பேசும் வசதி இருக்கின்றது...


ஆனால், மேசை முழுவதையும் ஆக்ரமித்துக் கொள்கின்றது..

நம் ஊர் மின்சாரம் திடீரென்று போய்த் தொலைந்து விட்டால்
வேறு கோளாறுகளும் வந்து சேர்ந்து கொள்கின்றன...

என்ன ஒரு பிரச்னை என்றால்.. 
அடிக்கடி இடைஞ்சலும் இடையூறும் கோடு கோடுகளாக அலைக்கழிக்கும்...

கூடவே செய்திகள் மற்றும் படங்களை அச்சிட்டுக் கொள்ளும் வசதியும் வந்தது..




இங்கேயிருந்து அங்கும்..
அங்கேயிருந்து இங்கும் - ஆனந்தம் அலை பாய்ந்த நாட்கள் அவை....

அதற்கடுத்த சில வருடங்களில் இது வந்து சேர்ந்தது..


அவ்வளவு தான்.. ஒரு பூனைக்குட்டி போல சுந்தரியுடன் ஒட்டிக்கொண்டது...

இது வந்த வேளை பழைய சமாச்சாரம் பரணிக்குப் போய்விட்டது.. 

2017...

இப்போதெல்லாம் கடிதம் எழுதுவதே மறந்து போயிற்று..
தொலைபேசியருகில் காத்துக் கிடந்த நாளெல்லாம் கனவாய்ப் போயிற்று...

ஹலோ!.. கொஞ்சம் சத்தமா பேசுங்க!.. சே.. ஒரே தலைவலி இதோடு!.. 

இந்த வார்த்தையெல்லாம் எங்கே போயிற்று?..
- என்று யாருக்கும் தெரியவில்லை..

கிணுங்.. கிணுங்!..

கைக்குள்ளேயே இது.. இதற்குள்ளேயே கை!..


விரல் நுனியால் வருடினால் -
எதிர்முனையில் பேத்தி - புன்னகையுடன்..

இன்னும் பல் முளைக்கவில்லை.. 
அரவணைத்துக் கொண்டிருப்பவள் - கனகவல்லி..
பொன் வண்ணக் கண்ணாடி அணிந்தவளாக.. 
அங்கொன்றும் இங்கொன்றுமாய் நரைமுடிகள்..

கனகவல்லி கேட்கின்றாள் - முருகேசனிடம்...

ஏன்.. இன்னும் குளிக்கலையா?.. 
முதல்ல சவரம் பண்ணுங்க..
நரைச்ச முடி.. பார்க்க நல்லா இல்லை!...

ஏன்... கனகு!.. 
அப்போ எல்லாம் உங்க முகத்தைப் பார்த்தே மூனு வருசம் ஆச்சு..ன்னு அன்பு மடல் எழுதுவே!.. இப்போ.. அந்த முகம் நல்லாவே இல்லே..ன்னு சொல்றே!..

நான் அப்படியா சொன்னேன்!.. என் ராசா முகம் எனக்கு என்னைக்கும் அழகு தான் பேரழகு தான்!.. நல்லா ஸ்மார்ட்டா இருங்க..ன்னு சொன்னேன்!..

ஏன்!.. இன்னொரு கல்யாணமா?..

ஆசை தான்!.. கிழவனுக்கு!.. - சிரிக்கின்றாள் கனகவல்லி...

ஏதும் புரியாமல் புன்னகைப் பூ ஆகின்றாள் - பேத்தி..
***


இன்று மே 17
உலகத் தொலைத் தொடர்பு மற்றும் 
தகவல் தொடர்பு தினம்

நாளுக்கு நாள் அறிவியல் தொழில் நுட்பம் 
முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில் -
இதனுள் நன்மைகளும் தீமைகளும் விரவியே கிடக்கின்றன...


நல்லனவற்றை அள்ளிக்கொள்ளவும் 
அல்லாதனவற்றைப் புறந்தள்ளவும்
இன்றைய சமுதாயம் முன்நிற்கவேண்டும்..

உள்ளங்கைக்குள் உலகம் என்றானது...
அதனை ஆக்கித் தந்தது அறிவியல் தொலை நுட்பம்..

இதனை நல்வழியில் கொண்டு நடப்பது 
நம் ஒவ்வொருவருடைய கடமை..

வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்!.. 
*** 

24 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    ஒவ்வொன்றும் கடந்து வந்த பாதையை அழகாக விவரிக்கும் பொழுது முருகேசனைப்போல நானும் வாழ்ந்த காலங்கள் நெஞ்சில் நிழலாடியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. காலம் மாறியதையும் தகவல் தொழில் நுடபம் வளர்ந்து இருப்பதையும் அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.
    முன்னோர்கள் பாவம் கடல் கடந்து போய் பணம் சம்பாதிக்க போனவர்களுக்கு இது போன்ற வசதிகள் இல்லாமல் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள்?
    இப்போது நேரில் பார்த்துக் கொள்ளமுடிகிறதே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டும்.

    நீங்கள் சொல்வது போல் நல்லதை எடுத்துக் கொள்வோம்.
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அஞ்சல் சேவை விரிவடையாத அந்தக் காலங்களில் சிங்கப்பூர் பினாங்கு சென்றவர்களைப் பற்றிய விவரம் அறிய முடியாமல் தவித்த குடும்பங்களைக் கண்டிருக்கின்றேன்..

      இக்காலத்தில் மிக மிக முன்னேறித்தான் இருக்கின்றது தகவல் தொடர்பு சேவை..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. யார் சொன்னது நாம் முன்னேறவில்லை என்று ஆனால் முன்னேற்றத்தைச் சரியாகக் கையாளத்தெரியாமல் இருக்கிறோம் தொலை தொடர்பு சாதனங்க்சள் மூலம் தொடர்பு கொள்ளலாம் ஆனால் குடும்பவாழ்க்கை முடியுமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தொலைத் தொடர்பு விஷயத்தில் உலகம் முழுதும் முன்னேறித் தான் இருக்கின்றது.. ஆனாலும் - நீங்கள் சொல்கின்றதைப் போல குடும்ப வாழ்க்கை!.. கேள்விக்குறி தான்!..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அபரிமிதமானதே .... அதில் பல பல நன்மைகளும் உண்டு...

    ஆனாலும் முருகேசன் இன்றும் அதில்தான் வாழ்வது என்பது...மிகவும் கஷ்டமாக இருக்கிறதே...பாவம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      என்ன செய்வது!.. முருகேசனைப் போன்ற பலருக்கும் சில பிரச்னைகள் தீர்வதில்லை...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. ஆஹா மிகவும் அருமையான பதிவு மாற்றங்களோ மாற்றங்கள் இல்லையா ..எல்லாம் மாறினாலும் முருகேசன் இன்னும் தொலை தகவல் தொடர்பில் தான் துணையுடன் பேசுகிறார் .அது மட்டும் மாறலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      காலம் விரைவில் மாறும்..முருகேசனும் குடும்பத்துடன் ஒன்று சேர்வார்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நான் இந்த பதிவைப் படிக்கத் தொடங்கியவுடன் இது உங்களுடைய அல்லது உங்களோடு வேலை பார்த்தவருடைய அனுபவக் கதையாக இருக்கும் என்று நினைத்தேன். வரிசையாக போன், செல்போன், இண்டர்நெட் என்று படங்களைப் பார்த்து, கடைசியில் வந்ததும் தான், இன்று தொலை தொடர்புத் தினம் என்றே எனக்கு தெரிய வந்தது. நன்றி.

    இப்போது செல்போன் வந்தவுடன் நிறையபேர் கத்தி கத்தியே பேசுகிறார்கள். எல்லோருடைய குடும்ப விஷயங்களும் வீதிக்கு வந்து விடுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..

      ஒவ்வொரு கதைக்குள்ளும் -
      அதை ஆக்கியோன் ஒளிந்து கொண்டுதான் இருக்கின்றான்..

      தாங்கள் சொல்வது உண்மை.. இன்று நாம் விரும்பாமலேயே ஊரார் விஷயங்கள் எல்லாம் காதுகளில் விழுகின்றன.. இதுவும் காலத்தின் கோலம் தான்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. நல்ல கற்பனையில் தொழில்நுட்பத்தின் சாதகைத்தை (பாதகத்தையும்கூட) உங்கள் நடையில் பகிர்ந்தவிதம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. கனகவல்லியும் முருகேசனும் எப்போது ஒன்று சேருவார்கள்? அதற்கு நவீன தொழில்நுட்பம் உதவி செய்யாதா? 'அந்தமான காதலி' படத்தின் கதை நினைவுக்கு வருகிறது. எல்லாம் நரைத்தபிறகு, இளமையை நினைத்து அசைபோடத்தான் பாலைவனத்திற்குப் போனார்களா? இருந்தாலும் வாழ்க பில் கேட்ஸ்!

    இராய செல்லப்பா நியூஜெர்சி (மிக விரைவில் சென்னை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      வருடங்கள் கழிந்தாலும் வெளிநாட்டு வாழ்க்கை அவ்வளவு சீக்கிரம் பலரையும் விடுவதில்லை..

      கிணறு தவளையை விட்டாலும் தவளை கிணற்றை விடுவதில்லை..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. தொலைதொடர்பு தினம்.... தினத்திற்குத் தகுந்த பகிர்வு.

    எத்தனை மாற்றங்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. அழகான அருமையான விவரிப்பு...

    ரசித்தேன் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. என்ன ஒரு அழ்கான பதிவு!!! மாற்றங்களை மிக மிக அருமையாகச் சொல்லியிருக்கிறிரீர்கள்! இத்தனை தொழில்நுட்பம் இருந்தும் கைக்குள் அடங்கினாலும், உலகையே சுருக்கிக் கைக்குள்/சுருக்குப் பைக்குள் கொண்டுவந்தாலும்.... பாவம் கனகுவும், முருகேசனும் இன்னும் தொலைதூரத்தில்தான் இருக்கிறார்கள்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தமக்குத் தாமே வரைந்து கொண்ட வட்டத்துக்குள்ளிருந்து
      சிலரால் வெளிவர முடிவதில்லை.. விரும்புவதும் இல்லை..

      எனினும், முருகேசன் விரைவில் குடும்பத்துடன் ஒன்று சேர்வதற்கு வேண்டுவோம்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. அழகு!.. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. ஆனால் மனிதநேயம்...?

    இதயங்கள் இருந்த இடத்தில் இயந்திரங்கள் இருக்கின்றனவோ என்றே எண்ண வைக்கின்றன இன்றைய நிகழ்வுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்...

      தங்களுடைய முதல் வருகை.. நல்வரவு..

      உண்மைதான்.. தாங்கள் கூறுவதே எங்கும் காணக் கிடைக்கின்றது..
      அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..