ஞாயிறு, மே 14, 2017

அம்மா...


அன்னையர் தின நல்வாழ்த்துகள்!..
***

அம்மா!..

கண்ணெதிரே - சிவப்பு விளக்கு..

சில விநாடிகளில் பச்சை ஒளிரலாம்...

சாலை நாற்சந்திப்பின் எதிர்புறத்தில் கோயில்..

காளியம்மன் கோயில்... வழிவிடு காளியம்மன்...

கோயிலின் வாசலில் பெரிய இரும்பு சூலம்..

அதன்மீது விதவிதமான அளவுகளில் எலுமிச்சை மாலைகள்..
பூச்சரங்கள்.. ரோஜா மாலைகள்.. அத்துடன் சில வேட்டி துண்டுகள்..

காளியம்மனுக்கு..ன்னா புடவை தானே போடணும்!.. இது எதற்கு வேட்டி துண்டு எல்லாம்?.. பூசாரிக்காக இருக்குமோ!...

பானு - பானுமதி யோசித்துக் கொண்டிருந்தவேளையில்,
வலப்பக்கமாக - அந்தப் பெண்... கையில் சிறு குழந்தையுடன்...

இவளே சிறு பெண்ணாகத்தான் இருக்கின்றாள்.. 
அவள் கையில் ஒரு குழந்தை!?.. 
காலத்தின் கோலமா?.. காலத்தின் கொடுமையா?..

விழிகளில் பரிதவிப்பு... அழுக்கு படிந்து மெலிந்திருந்த - அந்தக் கை மனதை ரணப்படுத்தியது..

கண்ணாடியை இறக்கினாள்...

வண்டிக்குள் ஏறு!..

குழந்தையுடன் நின்றிருந்த அந்தப் பெண்ணின் விழிகளில் தயக்கம்...

ஏதாகுமோ?.. - என்னும் கலக்கம்..

ம்.. சீக்கிரம்!... - அவசரப்படுத்தினாள்..

அதன்பிறகு ஒரு நொடியும் தாமதிக்காமல் கதவைத் திறந்து கொண்டு காருக்குள் அமர்ந்தாள் - அந்தப் பெண்...

அந்த விநாடியில் பச்சை ஒளிர - கார் முன்னே பாய்ந்தது ஓடியது..

அம்மா.. எங்கேயும் கொண்டு போய் விட்டுடாதீங்க!.. வர்றதுக்குப் பாதை தெரியாது... அம்மா.. மன்னிச்சிடுங்கம்மா... சொன்னா கேளுங்கம்மா!...

பார்வையைத் திருப்பாமலேயே சொன்னாள் - பயப்படாதே!..

இருந்தாலும் சில நிமிடங்களில் - கார் நின்ற இடத்தைக் கண்டதும் தான் அந்தப் பெண்ணுக்கு மனதின் பயம் முற்றாக நீங்கியது...

அது சாலை ஓர உணவகம்.. திறந்தவெளியில் நாகரிகமாக இருந்தது...

நாற்காலிகளில் அமர்ந்தவண்ணம் மக்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்..

சொல்லும் முன்பாகவே காரிலிருந்து இறங்கி ஓரமாக நின்றாள்..

உன் பேரென்ன?..

பரமு!.. - மெதுவாகச் சொன்னாள்..

கையைக் கழுவி விட்டு வா.. சாப்பிடு!.. - என்றாள் பானு..

எனக்கு..ன்னு ஒன்னும் வேணாம்..மா.. இந்தக் குழந்தைக்காகத் தான்!..

உன்னோட குழந்தையா?.. 

இல்லம்மா!.. 

பின்னே!.. பிச்சை எடுக்குறதுக்காக திருடினியா?..

அம்மா.. அம்மா.. இன்னொரு தரம் அப்படிச் சொல்லாதீங்க.. எனக்கு பிச்சை போடலேனாலும் பரவாயில்லை.. என்னைத் திருடின்னு சொல்லாதீங்க!..

குரல் கம்மியது அந்தப் பெண்ணிற்கு...

சரி.. சொல்லலை... இந்தக் குழந்தை?.. 

ரெண்டு வருஷத்துக்கு முன்னால வெள்ளம் வந்ததே.. அப்ப கிடைச்சது இந்தக் குழந்தை...

போலீஸ்..ல சொல்லி ஒப்படைச்சிருக்கலாமே!...

நான் சொன்னேன்.. அவங்க ஏதோ ஒரு எடம் சொன்னாங்க.. 
எனக்கு ஏதும் தெரியாது.. போற வர்றவங்க கிட்ட உதவி கேட்டேன்.. ஒருத்தரும் செய்யலை... சரி... யாராவது தேடி வந்து கேட்டா கொடுப்போம்..ன்னு இருந்தேன்... ஒருத்தரும் வரல்லே...

சரி.. சாப்பிடு!... - கண் முன்னால் இட்லி, பணியாரம், வடை..

இட்லியைப் பிய்த்து குழந்தைக்குக் கொஞ்சம் ஊட்டி விட்டாள்..
தானும் ஒரு வாய் உண்டாள்...

இட்லியை சட்னியில் நனைத்துக் கொண்டே தொடர்ந்தாள்...

ஐயாயிரம் தர்றோம்.. குழந்தையைக் கொடு...ன்னு ரெண்டு பேர் வந்தானுங்க.. நான் முடியாது...ன்னுட்டேன்...

பத்தாயிரம் கொடுத்தால் கொடுத்திருப்பியா?...

என்னம்மா நீங்க?.. எத்தனை ஆயிரம் கொடுத்தாலும் புள்ளைய கொடுக்க மாட்டேன்!..

ஏன்?..

கையக் காலைத் திருகி பிச்சை எடுக்க உட்டுடுவானுங்க.. ந்னு தாத்தா சொன்னார்...

அவர் யார் தாத்தா?..

என்னையப் போல அனாதை தான்.. அந்தக் கோயில் வாசல்ல தான் அவரும் இருக்கார்.. கொஞ்சம் கொஞ்சமா கண்ணு மங்கிக் கிட்டே வருது... அவரையும் நான் தான் காப்பாத்தறேன்...

சரி.. உனக்கு ஒரு வேலை வாங்கித் தர்றேன்.. செய்றியா?.. மூனு வேளை சாப்பாடு.. சம்பளம் கிடைக்கும்!..

..... ..... ..... .....!..

என்ன பதிலைக் காணோம்.. வேலை செய்றதுன்னா கஷ்டமா!..

இல்லேம்மா.. நானும் ஒரு கருணை இல்லத்தில இருந்து வீட்டு வேலைக்குப் போனவ தான்.. வீடு கூட்டுறது, அழுக்குத் துணி துவைக்கிறது, செருப்பு துடைக்கிறது, நாயைக் குளிப்பாட்டி அள்ளிப் போடறது, கார் கழுவுறது.. கக்கூஸ் கழுவுறது ...ன்னு எல்லா வேலையும் செஞ்சேன்.. 

அடுப்படிக்கு மட்டும் போகக் கூடாது.. ஒரு தடவை எட்டிப் பார்த்துட்டேன்... 
அதுக்காக கால்...ல சூடு வெச்சாங்க... அந்த வீட்டு நாய் கூட நல்லாருக்கு.. 
அத விடக் கேவலமா நடத்துனாங்க...

உங்க இல்லத்தில சொல்லையா?.. யாரும் வந்து கேக்கலையா?..

அவங்க தான் என்னை இவங்களுக்கு வித்துட்டாங்களாமே!..

அடப்பாவிகளா!..

அதுக்கப்புறம் அங்கேருந்து தப்பிச்சு ஓடியாந்தப்ப தான் இந்தக் கோயில் வாசல்ல தாத்தா காப்பாத்துனாரு!.. அதுவும் ஆச்சு மூனு நாலு வருசம்... கோயில் வாசல்ல.. தேங்காப் பழ கடையெல்லாம் குப்பை அள்ளி சுத்தம் செஞ்சு கொடுப்பேன்.. மாசம் முடிஞ்சதும் பணம் கொடுப்பாங்க... 

பக்கத்தில அண்ணாச்சி டீக்கடை இருக்கு.. காலையில பன்னும் டீயும் கொடுக்குறாரு... தீவாளி...ன்னு வந்தா சட்டைத் துணி எல்லாம் எடுத்துக் கொடுப்பாரு... அவங்க அப்பாவுக்கு சாமி கும்பிடறது... ன்னு வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு போய் வடை பாயாசத்தோட சாப்பாடு போடுவாரு..  

கண்ணாடிக் கடை பாய் ஏதோ ஒரு மாசத்துல சாப்பிடாம விரதம் இருப்பாராமே!.. அப்போ எல்லாம் அடுத்த தெரு அல்லா கோயிலுக்கு அழைச்சுக்கிட்டு போவாரு.. அங்கே கஞ்சி ஊத்துவாங்க.. குடிச்சுட்டு வருவோம்.. 

கண்ணாடிக் கடை பாய் வீட்டுல மூனு பொண்ணுங்க.. இருந்தாலும் வாராவாரம் பிரியாணி கொண்டாந்து கொடுப்பாரு... நானும் தாத்தாவும் சாப்பிடுவோம்...

கோயிலாச்சே.. யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?...

காளியம்மன் கோயில் தானே... கோயிலுக்குப் பின்னால பூவரச மரம் இருக்கு.. அங்கே வெச்சி கோழி குழம்பு படையல் போடுவாங்க.... எங்களுக்கும் கொடுப்பாங்க.. அதனால சாமி குத்தம் ஒன்னும் இல்லே...

கோயில் பொட்டியில தேங்கா உடைச்சா கோயிலுக்கு சேர்ந்துடும்.. வெளியில சூலத்தடியில உடைச்சா.. நாங்க பொறுக்கிக்குவோம்..

வேற யாரும் போட்டிக்கு வரமாட்டாங்களா?..

ஏன் வராம!.. வெள்ளிக் கிழமையான அடிதடியே நடக்கும் தேங்காய்க்கு... நாம அதுக்கெல்லாம் போறது கிடையாது.. மத்த நாள்..ல தேங்கா உடைக்கிறதைப் பொறுக்கிக் கொடுத்தா ஐம்பது ரூபா கொடுப்பாங்க...

கொடுக்கிறது யார்?..

யாரோ ஓட்டல்காரங்க!...

சரி.. இப்படியெல்லாம் இருக்கிறப்ப ஏன் சிக்னல்..ல பிச்சை எடுக்கணும்?..

பரமுவின் கண் கலங்கின...


இந்தப் புள்ளைய எப்படியாவது ஸ்கூல்...ல சேர்த்துறணும்.. நல்லா படிக்க வைக்கணும்...

இப்போது பானுவின் கண்கள் கலங்கின...

இதெல்லாம் எத்தனை நாளைக்கு ஆகும்?.. கண் தெரியாத தாத்தாவுக்கு நாளைக்கே ஏதும் ஒன்னு..ன்னா யார் பார்க்கிறது?.. இருக்க இருக்க இந்தப் பிள்ளை வளருமே.. யார் பாதுகாப்பு!..

அந்தக் கவலையும் இருக்கும்மா... என்னைப் பார்த்துக்கிறதே சமயத்துல பெரும்பாடா இருக்கு.. இந்தப் புள்ளைய யார் பார்த்துக்குவா?...

அதுக்குத் தான் சொல்றேன்.. உனக்கு..ன்னு ஒரு பிடிமானம் வேணாமா!..

அதுக்கு..ன்னு எனக்கு பிடிமானமா இருக்குற தாத்தாவை விட்டுட்டு கடைக் காரங்களை விட்டுட்டு  டீக்கடை அண்ணாச்சியை விட்டுட்டு கண்ணாடிக் கடை பாயை விட்டுட்டு சட்டு..ன்னு வந்துட முடியுமா?..

சிக்னல்...ல கிடைக்கிற காசை சேர்த்து வெச்சிருக்கேன்... அது பூராவும் இந்தப் புள்ளைக்குத் தான்...

பேங்க்... ல போட்டு வெச்சிருக்கியா?..

அதெல்லாம் எனக்குத் தெரியாது... கோயில் ஐயர்....கிட்ட கொடுத்து வெச்சிருக்கேன்... அவரு மக டீச்சரா வேலை செய்யிது.. அந்தப் பொண்ணு தான் அவங்க வீட்டு விலாசத்தைப் போட்டு ஏதோ ஒரு சிட்டையைக் கொடுத்தது.. இதோ இங்க இருக்கு.. பாருங்களேன்..

தோளில் தொங்கிய பையிலிருந்து எடுத்துக் காட்டினாள்..

அது வங்கிக் கணக்குப் புத்தகம் தான்.. வாங்கிப் பிரித்துப் பார்த்தாள் பானு..

வியப்பால் விழிகள் விரிந்தன...

ஒரு லட்சத்து இருபதாயிரத்து சொச்சம்!...

மறுபடியும் ஒரு வீடு.. அங்கே அதிகாரம்.. ஆடம்பரம்.. அடங்கிக் கிடக்கணும்.. அதுக்காக பிச்சை எடுக்கிறது சுகம்...ன்னு சொல்லலை... அல்ப காசு பிச்சை எடுக்கறதுக்குள்ள நான் படற அவமானம் இருக்கே!... ஏழு ஜென்மத்துக்கும் போதுமம்மா.. போதும்!..

பானுவிற்குத் தலை சுற்றியது..

இந்தப் பச்சப் புள்ளையப் பாருங்க.. 
நான் தான் அம்மா..ன்னு நினைச்சுக்கிட்டு மார்...ல முகத்தை வெச்சுக்கும்... நான் மார்...ல அணைச்சிக்கிட்டாத்தான் நிம்மதியா தூங்கும்... 

என்னையத் தான் அம்மா..ன்னு நெனைச்சுக்கிட்டு இருக்குது!.. 
அப்படி இருக்கிறப்போ இந்தப் புள்ளைய ஏமாத்தலாமா!..

இந்தப் புள்ளைக்காகத் தான் பணம் சேர்க்கிறேன்... 
இதெல்லாம் ஒரு ஊட்டுக்குள்ள வந்து முடங்கிட்டா ஆகாது...ம்மா!.. 

எல்லாம் சரிதான்.. ஆனா இது நிரந்தர பாதுகாப்பு ஆகுமா... 
நீயே நல்லா யோசித்துப் பார்... 

உனக்கு ஆதரவா இருக்கிற தாத்தா கடைக்காரங்க, டீக்கடை அண்ணாச்சி, கண்ணாடிக் கடை பாய் - எல்லோரையும் கேட்டுப் பார்... 

உன் மனசுக்கு சரி...ன்னா - 
உனக்கு உதவுறதுக்கு காத்திருக்கேன்...

நான் சொல்றது பிடிக்கலேன்னாலும் சரி...
உனக்கு வேணுங்கறதை சொல்லு.. செஞ்சி தர்றேன்!.. 

இவ்வளவெல்லாம் பேசுறீங்களே நீங்க.. யாரு...ம்மா!..

ஒரு கணம் உற்றுப் பார்த்தாள் பானு..

நானும் ஒரு அனாதை!..

காரு எல்லாம் வெச்சிருக்கீங்க!..

கார் இருந்தால் எல்லாம் இருந்து விடும்.. ந்னு அர்த்தமா!.. 
உன்னைச் சுற்றி இருக்கிற இதெல்லாம் கூட என்னைச் சுற்றி இல்லை...

நிழல் தேடும் மரமாகிப் போனேன்...
எனக்கு ஒரு ஆசை... அம்மா..ன்னு கூப்பிடவா!..

என்னது!?.. - திடுக்கிட்டாள் பரமு..


உன்னை அம்மா..ன்னு கூப்பிடவா!..

..... ..... ..... .....!..

அம்மா!...

..... ..... ..... .....!..

அம்மா!...

பானுவின் கண்களில் நீர் வழிந்தது...

பானுவின் அன்பினுக்குள் சிக்குண்ட பரமுவின்
கண்களில் இருந்தும் நீர் வழிந்தது..


தளராத அன்பினில் ததும்பி நிற்கும் 
உள்ளங்களின் வடிவம் தாய்மை...

தரணி வாழ்ந்திடத் தன்னையே தந்திடும் 
தாய்மையின் மறுபெயர் அம்மா!..

அந்த வார்த்தைக்குள்ளே தான் 
இந்த அகிலம்...
அகிலம் வாழ்வதெல்லாம் 
அம்மா என்னும் அன்பினுக்குள்!..

அம்மா எனும் அன்பினுக்கு
இன்றைய பதிவு சமர்ப்பணம்!..
***


உயிருள் உயிராய் நீ காத்தாய்
உணர்வில் தமிழை நீ வார்த்தாய்
தாயே.. என்றும் நீ வாழ்க!..

நிலவைக் காட்டி ஊட்டிய சோறு
நெஞ்சில் இன்னும் இனிக்குதம்மா..
நினைவில் அமுதாய் நீவாழ்க!..
***

9 கருத்துகள்:

  1. விழிகள் கசிந்து விட்டது ஜி
    அன்னையர் தின வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. கடைசி வரியில் கண்கலங்க வைத்து விட்டீர்களே...

    பதிலளிநீக்கு
  3. அருமை...

    என்றும் அன்னையர் தின வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  4. தாய் கிடைத்தாள் பானுவிற்கு.
    அருமையான கதை.
    நெஞ்சில் நினைவில் அமுதமாய் இருப்பாள் என்றும் பரமு.

    பதிலளிநீக்கு
  5. அருமையான கதை ஐயா
    அன்னையர் தின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. மிகவும் அழகாக கதை கூற ஆரம்பித்துவிட்டீர்கள். தங்களின் பாணி மிகவும் அருமையாக உள்ளது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. அன்னையர் தினப் பதிவு அருமைஐயா

    பதிலளிநீக்கு
  8. மிக மிக அழகாகச் சொல்லிச் சென்றுள்ளீர்கள் மட்டுமா கண்களைக் கலங்கடித்தது மட்டுமல்ல.....மனதையும் நொறுக்கிவிட்டீர்களே ஐயா! உங்கள் கதை சொல்லும் விதமே தனிதான்! அருமை அருமை அருமை வார்த்தைகள் இல்லை தாய்மையைச் சிறப்பிக்க இதைவிட வேறென்ன வேண்டும்....!!! எங்கள் இருவரின் மனமும் அப்படியே கலங்கிவிட்டது ஐயா...வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  9. ரொம்ப அழகான அருமையான மனதை நெகிழ்த்தும் படைப்பு...

    அடுத்த ஊயிருக்காக

    அன்பையும், பாசத்தைம், பாதுகாப்பையும்

    வழங்கும் அனைவரும்

    அன்னையே...!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..