வியாழன், பிப்ரவரி 09, 2017

தைப்பூச நன்னாள்..

சிவகுமரனாகிய திருமுருகனுக்கு மிகவும் உகந்த நாள்..

இந்நாளினைக் கிடைத்தற்கரிய நன்னாளாகக் கொண்டு,
விரதமிருந்து காவடி சுமந்தும் பால்குடம் தாங்கியும்
முருகன் திருக்கோயில்களில் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

thanjavur14
அருள்மிகு தண்டாயுதபாணி, பழனி
தமிழகத்தின் பழனியம்பதியில் தைப் பூசம் பத்து நாள் திருவிழா..

பழனியம்பதி வாழ் பாலகுமாரனுக்கு - என, ஆயிரம் ஆயிரமாய் -  
மயில் காவடி, மச்சக் காவடி, சர்க்கரைக் காவடி, சந்தனக் காவடி,
பால் காவடி, பன்னீர் காவடிகள் -  சமர்ப்பிக்கப்படுகின்றன.. 

தைப்பூசத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகத் திரண்டு வந்து - பழனி முருகனைத் தரிசனம் தரிசனம் செய்து இன்புறுகின்றனர்.   


சிவனடியார்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனைத் தொழுது வணங்கி - உணவு உட்கொள்ளாமல், தேவார திருவாசகத் திருமுறைகள், கந்தபுராணம், கந்தசஷ்டிக் கவசம் - என புனிதநூல்களைப் பாராயணம் செய்து - மாலையில் மனைவி மக்களுடன் ஆலய தரிசனம் செய்து சிறிது உணவுடன் விரதத்தினை நிறைவு செய்வர்.

தில்லைத் திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் - 
சிவநடனம் காண வேண்டித் தவமிருந்த வியாக்ரபாதர் , பதஞ்சலி இருவருக்கும் தைப்பூச நன்நாளின் பகல் பொழுதில் - 
சிவபெருமான் அம்பிகையுடன் ஆனந்தத் தாண்டவம் நிகழ்த்தியதாக ஐதீகம்.


வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் வடலூர் அருகில் மேட்டுக்குப்பத்திலுள்ள சித்தி வளாகத்தில் - 1874 தை 19 - பூச தினத்தில்  சித்தி வளாகத்திலுள்ள அறைக்குள் சென்று அருட்பெருஞ்ஜோதியுடன் இரண்டறக் கலந்தார். 

வள்ளல் பெருமானை நினைவு கூர்ந்து  
தை பூசத்தில் அதிகாலை - ஞான சபையில் ஜோதி தரிசனம்  நிகழ்வுறும்.

thanjavur14
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் - பெரிய நாயகி
தஞ்சை - கரந்தையில் உள்ள 
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் 

தைப் பூச தினத்தன்று மாலை,
அருள்மிகு  வசிஷ்டேஸ்வர ஸ்வாமி - பெரியநாயகி அம்மனுக்கும்,
அருள்திரு வசிஷ்ட மகரிஷி - அருந்ததி அம்மைக்கும் 
திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெறுகின்றது.

thanjavur14
அருள்தரு வசிஷ்ட மகரிஷி - அருந்ததி அம்மை
இலங்கையிலும், சிங்கப்பூரிலும் வெகுகோலாகலமாக தைப் பூசம் நிகழ்கின்றது..



நம்மைப் போலவே சீனப் பெருமக்களும் முருகப்பெருமானை வேண்டிக் கொண்டு நேர்த்திக் கடன் செலுத்துவதை காணலாம்.  



வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா - நல்ல
வடிவேலின் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா!..

- என்றுரைப்பார் கவியரசர்..

மலேசியாவில் 
பத்துமலை மற்றும் தண்ணீர்மலை  முருகன் திருக்கோயில்களிலும் 
வெகு சிறப்பாக தைப் பூசப் பெருவிழா நடைபெறுகிறது. 

தைப்பூசத் திருவிழா - சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் அரசு விடுமுறை நாள்.

லண்டன், ஆஸ்திரேலியா மற்றும் மொரீஷியஸில் - அங்கு வாழும் தமிழ் மக்களால் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது..

ஸ்ரீ சிங்கார வேலவன்.. சிக்கல்
மிகத் தொன்மையானது முருக வழிபாடாகும்..

அஞ்சு முகந்தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!.. - என்பது ஆன்றோர் வாக்கு..

அதனாலேயே,
வழித்துணை வருவான் வடிவேலவனே!.. - என்றானது வாழ்க்கைப் பயணம்..

வில்லேந்திய வேலன் - திருஐயாறு
வேலுண்டு வினையில்லை.. 
மயிலுண்டு பயமில்லை..
குகனுண்டு குறைவில்லை மனமே!..


நடவும் தனிமா மயிலோய் சரணம்
நல்லார் புகழும் வல்லோய் சரணம்
திடமும் திருவும் தருவோய் சரணம்
தேவர்க் கரியாய் சரணம் சரணம்
தடவண் புயனே சரணம் சரணம்
தனிமா முதலே சரணம் சரணம்
கடவுள் மணியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்!.. (5)
- வள்ளலார் ஸ்வாமிகள் -

முருகா சரணம்.. முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம் சரணம்!..
***

7 கருத்துகள்:

  1. தைப்பூசத்தைக் குறித்த விரிவான விடயம் அறிந்தேன் ஜி

    பதிலளிநீக்கு
  2. அருமை...

    முருகா சரணம்..முத்து குமரா சரணம்...

    பதிலளிநீக்கு
  3. ஆண்டுதோறும், தைப்பூசத் திருநாளில் தவறாமல் ஒரு பதிவுதரும் நண்பருக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. படங்க்களும் செய்திகளும் அருமை.
    முருகன் தரிசனம் உங்கள் தளத்தில் மனதிருப்தி கிடைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  5. தைப்பூச திருநாள்...
    ஆறாண்டு நடை பயணம்...
    மீண்டும் அப்பன் முருகனை தரிசித்த சந்தோஷம்....

    பதிலளிநீக்கு
  6. தைப்பூசத் திருநாள் - சிறப்புப் படங்கள் மிக அழகு.

    நன்றி நண்பரே.

    சில நாட்களாக பதிவுகளை படிக்க இயலாத சூழல். இன்று தான் நேரம் கிடைத்திருக்கிறது. விடுபட்ட பதிவுகளையும் படித்து விடுவேன்....

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..