ஞாயிறு, ஜனவரி 08, 2017

மார்கழிப் பூக்கள் 24

தமிழமுதம் 

ஏதிலார் குற்றம் போல தன்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு..(190)
***

சமணத் துறவியர் அருளிய
நாலடியார்

- தாளாண்மை - 
நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
சொல்லள வல்லால் பொருளில்லை தொல்சிறப்பின்
ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம்..(195)
***
அருளமுதம்

திரு அரங்கன் - மோகினி அலங்காரம்
இன்று ஸ்ரீ வைகுந்த ஏகாதசி


சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
நன்றி - திவ்ய தரிசனம்
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 24

குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி..
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்!.. 
***

ஸ்ரீ பூதத்தாழ்வார் அருளிய
திருப்பாசுரம்


சிறந்தார்க்கு எழுதுணையாம் செங்கண்மால் நாமம்
மறந்தாரை மானிடமா வையேன் அறந்தாங்கும்
மாதவனே என்னும் மனம்படைத்து மற்றவன்பேர்
ஓதுவதே நாவினால் உள்ளு..(2225)

ஓம் ஹரி ஓம்
***

சிவ தரிசனம்
சப்த விடங்கத் திருத்தலங்கள்

ஆறாவது திருத்தலம்
ஆக்ஞா

திருவாய்மூர்


இறைவன் - வாய்மூர் நாதர் 
அம்பிகை - பாலினும் நன்மொழியம்மை 
தீர்த்தம் - சூரிய தீர்த்தம்
தலவிருட்சம் - பலா

நீல விடங்கர் - கமல நடனம்
தாமரை மலர் தண்ணீரில் அசைவது போன்ற நடனம்..

திருமறைக்காட்டில் 
அப்பர் ஸ்வாமிகளும் ஞானசம்பந்தப் பெருமானும்
திருமடம் அமைத்துத் தங்கியிருந்தவேளையில்
ஒரு நாள் இரவுப் பொழுதில்
திருவாய்மூருக்கு வா!..
- என, அப்பர் பெருமானை இறைவன் 
அழைத்தருளினார்..

அந்நிகழ்வு 
அப்பர் பெருமானின் திருவாக்கினால்
அறியக் கிடைக்கின்றது..


எங்கே என்னை இருந்திடந் தேடிக் கொண்டு
அங்கே வந்து அடையாளம் அருளினார்
தெங்கே தோன்றுந் திருவாய்மூர்ச் செல்வனார்
அங்கே வாஎன்று போனார் அதென்கொலோ!..(5/50)

மன்னு மாமறைக் காட்டு மணாளனார்
உன்னி யுன்னி உறங்குகின் றேனுக்குத்
தன்னை வாய்மூர்த் தலைவனாம் ஆச்சொல்லி
என்னை வாஎன்று போனார் அதென்கொலோ!..(5/50)

கனத்த இருட்பொழுதில்
ஈசன் மின்னொளி காட்டி முன்செல்ல
அப்பர் ஸ்வாமிகள் திருவாய்மூருக்குப் புறப்பட்டனர்..

அப்பர் ஸ்வாமிகளைக் காணாது தேடிய
ஞானசம்பந்தப் பெருமான்
ஸ்வாமிகள் இருளில் தனித்துச் செல்வதை அறிந்து
அவரைத் தொடர்ந்து புறப்பட்டனர்..

வழிகாட்டிச் சென்ற ஒளிசுடர்
திருக்கோயிலின் அருகில் மறைந்து விட்டது..


திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ்
உறைப்புப் பாடியடைப் பித்தாரும் நின்றார்
மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைக்கொள் செஞ்சடையார் இவர் பித்தரே!..(5/50)

வருத்தமுற்ற அப்பர் பெருமான்
திறக்கப் பாடிய என்னிலும்
அடைக்கப் பாடியருளிய
ஞானசம்பந்தப் பெருமானுக்காகவாவது
திருக்காட்சியருளல் வேண்டும்!.. 
- என, வேண்டிக் கொண்டனர்..

அந்த அளவில்,
விடை வாகனத்தில் 
அம்பிகையொடு ஐயன்
திருக்காட்சி நல்கினர் என்பது திருக்குறிப்பு..

சூரியன் வழிபட்ட திருத்தலம்..
வருடந்தோறும் பங்குனி மாதம்
11,12,13 ஆகிய நாட்களில்
கருவறைக்குள் சூரியனின் கதிர்கள் பரவுகின்றன..

அஷ்ட பைரவத் தலம் என்று
திருவாய்மூர் குறிக்கப்படுகின்றது..

வைகாசி விசாகத்தை அனுசரித்து
பெருந்திருவிழா நிகழ்வுறுகின்றது..

வைகாசிப்பெருந்திருவிழாவின் 
நிகழ்வுகளை வழங்கிய 
திருவாய்மூர் FB குழுவினருக்கு 
மனமார்ந்த நன்றி..








நவகோள்கள் அனைத்தும் 
ஆளுக்கொருதிசை என்றில்லாமல்
வரிசையாக நின்று கொண்டிருக்கின்றனர்..

எனவே, அல்லல்கள் அனைத்தும் நீங்கும் தலம்
என்பர் ஆன்றோர்..

திருவாய்மூர் வீதிவிடங்கப்பெருமான்
திருவீதி எழுந்தருளும் காட்சியினை
கீழுள்ள காணொளியில் காணலாம்..




திருக்குவளையிலிருந்து 
3 கி.மீ தொலைவிலுள்ளது திருவாய்மூர்.. 

நாகப்பட்டினம் திருத்துறைப்பூண்டி சாலையில்
திருப்பூண்டியைக் கடந்ததும் மேற்காக செல்லும் 
பிரிவு சாலையில் 2.கி.மீ தொலைவில் உள்ளது - திருவாய்மூர்..

திருவாய்மூருக்கு அடுத்ததாக 
பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் கோயில்..

திருஆரூரிலிருந்து எட்டுக்குடி வழியாகவும்
திருவாய்மூருக்கு வரலாம்..

- திருப்பதிகம் அருளியோர் -
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்..


வாய்மூர் நாதனின் திருக்காட்சியினைக் 
கண்ட மாத்திரத்தில்
ஸ்ரீ திருநாவுக்கரசர்
பாடியருளிய பதிகப்பாடல்



பாலின் மொழியாளோர் பாகங் கண்டேன்
பதினெண் கணமும் பயிலக் கண்டேன்
நீல நிறமுண்ட கண்டங் கண்டேன்
நெற்றி நுதல்கண்டேன் பெற்றங் கண்டேன்
காலைக் கதிர்செய் மதியங் கண்டேன்
கரந்தை திருமுடிமேல் தோன்றக் கண்டேன்
மாலைச் சடையும் முடியுங் கண்டேன்
வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே!..(6/77) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
(13 - 14)

ஸ்ரீ மட்டுவார் குழலி உடனாகிய தாயுமானவர்
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் போதால்
அங்கங்கு குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவுவர் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்குமடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்!..

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமாபாடிச்
சோதித் திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதித் திறம்பாடி அந்தம் ஆமாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்!..
***

தேவி தரிசனம்
ஸ்ரீ சௌந்தர்ய நாயகி - திரு ஊற்றத்தூர்



தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக் கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளிசெம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே!..(073) 
- அபிராமிபட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

4 கருத்துகள்:

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..