திங்கள், ஜனவரி 02, 2017

மார்கழிப் பூக்கள் 18

தமிழமுதம்

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.. (398)
***
ஔவையார் அருளிய
நல்வழி

ஆறிடும் மேடும் மடுவும்போலாம் செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து..
***
அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை

திருப்பாடல் - 18


உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளைஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!.. 
***

ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளிய
திருப்பாசுரம்


ஸ்ரீ ராஜகோபாலன் - மன்னார்குடி
தொழுது மலர்க்கொண்டு தூபங் கையேந்தி
எழுதும் எழுவாழி நெஞ்சே பழுதின்றி
மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கைதொழுவான்
அந்தரம் ஒன்றில்லை அடை..(2139)

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்
வீரட்டானத் திருத்தலங்கள்

எட்டாவது திருத்தலம்
திருவிற்குடி


இறைவன் - ஸ்ரீ வீரட்டானேஸ்வரர்
அம்பிகை - ஏலவார்குழலி
தீர்த்தம் - சக்கர தீர்த்தம், சங்கு தீர்த்தம்
தலவிருட்சம் - துளசி 

ஒருசமயம் நீருக்குள்ளிருந்து அசுரன் ஒருவன் பிறப்பெடுத்தான்..
அவனுடைய பெயர் சலந்தரன் என்பதாயிற்று..

ஏனைய அசுரர்களைப் போலவே அவனும் கடுந்தவம் செய்தான்..
நான்முகப் பிரம்மனிடம் சாகா வரம் கேட்டு நின்றான்..

அந்த வரம் கிடைக்காமல் போகவே
தனது மனைவி அறநெறி தவறும் வேளையில் 
நடக்கவேண்டியது எதுவோ அது நிகழட்டும்!.. 
- என, வரம் கேட்டு வாங்கிக் கொண்டான்..

தனது மனைவியின் மீது அவ்வளவு நம்பிக்கை..

வரம் பெற்ற ஆணவத்தில்
தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் ஏனையோருக்கும்
இடையூறுகள் செய்ய முற்பட்டான்..

இவனுடைய மனைவி பிருந்தை அறநெறி வழுவாதவள்..
மகாவிஷ்ணுவை மனதாரத் துதிப்பவள்...

எனினும் கணவனின் செயல்களால் கலக்கமுற்றிருந்தாள்

இவ்வேளையில்
சலந்தராசுரனை அழிக்கும் வகையறியாத தேவர்கள்
திருக்கயிலையில் ஈசனைச் சரணடைந்தனர்...

அவர்களின் பொருட்டு வயோதிகராக
எம்பெருமான் வெளிப்பட்டார்..

தேவர்களைத் துரத்திக் கொண்டு வந்த சலந்தரனை
வழியில் மடக்கினார்..

தேவர்களை வெல்லும் வல்லமை உனக்கு இருக்குமானால்
நான் பூமியில் வரையும் வட்டத்தைப் பெயர்த்து எடுத்து
தலைக்கு மேல் உயர்த்து!..
என்று சலந்தராசுரனிடம் கூறினார்..

அதற்கு சம்மதித்த சலந்தரன்
ஈசன் வரைந்த வட்டத்தைப்பெயர்த்து எடுத்து 
தலைக்கு மேல் உயர்த்தினான்..

அந்த நேரத்தில் மகாவிஷ்ணு
சலந்தரனாக உருக்கொண்டு அவனது
இல்லத்துக்குச் சென்றார்..

ஆங்கிருந்த பிருந்தை கணவன் என்றெண்ணி
ஆரத் தழுவி அன்புடன் வரவேற்க
மகாவிஷ்ணு தன் உருவம் காட்டினார்..

பிருந்தையின் நிலைமை சிக்கலானது...

மாற்றானைக் கணவன் என்று எண்ணியதால்
தனது அறத்திலிருந்து நழுவியவளானாள்..

தனது எண்ணத்தில் குறையுற்றதால்
தீப்புகுந்து மாண்டாள்..

எனினும் மஹாவிஷ்ணுவின் தரிசனம்
கிட்டியதால் வைகுந்த பதவியும் எய்தினாள்..



இவ்வேளையில்
சலந்தரனை அவன் பெற்றிருந்த வரம் வீழ்த்தியது...

ஈசன் வரைந்த வட்டத்தைப் பெயர்த்துத் தூக்கிய சலந்தரனை 
அந்த வட்டம் சக்கரமாகி அறுத்து வீழ்த்தியது...

எல்லாவற்றையும் வெல்வேன்!.. 
என்று, தருக்கித் திரிந்த சலந்தராசுரன்
எதையும் வெல்லாமல் வீழ்ந்து போனான்..

சலந்தரனை வீழ்த்திய சக்கரத்தைத் தமக்களிக்க வேண்டும்!.. - என
ஸ்ரீ ஹரிபரந்தாமன் நித்தமும் ஆயிரம் தாமரை மலர் கொண்டு
சிவபெருமானை வழிபட்டான்.. 

ஸ்ரீ ஹரியின் தவத்திற்கு இரங்கிய ஹரன்
பூஜையின் போது ஒரு மலர் குறையும்படிக்குச் செய்தார்..

சற்றும் தயக்கமின்றி தனது விழியினைப் பறித்து
தாமரை மலராக சமர்ப்பித்து
வழிபாட்டினைத் தொடர்ந்தான் வைகுந்தன்..


அதனால் மனம் மகிழ்ந்த எம்பெருமான் 
சலந்தரனை வதைத்த சக்ராயுதத்தை
ஸ்ரீ ஹரிபரந்தாமனிடம் வழங்கியருளினார்..

இந்த நிகழ்வு
திருவீழிமிழலை மற்றும் திருமாற்பேறு
ஆகிய தல புராணங்களில் பயின்று வருகின்றது.. 

இதனை திருநாவுக்கரசு ஸ்வாமிகளும்
தனது திருப்பதிகத்தில் குறித்தருள்கின்றார்..

பிருந்தை தீக்குளித்த இடத்தில்
ஈசன் அருளால் துளசி துளிர்த்தது..


திருவிற்குடி வீரட்டானத்தில்
துளசி தான் தலவிருட்சம்..

திருக்கோயிலின் முன்புறம் சக்கர தீர்த்தமும்
பின்புறம் சங்கு தீர்த்தமும் அமைந்துள்ளன..

திருவிற்குடி வீரட்டானத் திருக்கோயிலில் விளங்கும் 
உற்சவ மூர்த்தியின் வலத் திருக்கரத்தில் 
சக்கராயுதம் திகழ்வது குறிப்பிடத்தக்கது

திருவாரூர் - கங்களாஞ்சேரி - நாகூர் வழித்தடத்தில்
அமைந்துள்ளது திருவிற்குடி..

பிரதான சாலையிலிருந்து 2 கி.மீ 
உட்புறமாக செல்லவேண்டும்.. 

இத்தலத்திற்கு
ஞானசம்பந்தப்பெருமான்
திருப்பதிகம் அருளியுள்ளார்..

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருப்பாட்டு

பெண்ணொர் கூறினர் பெருமையர் சிறுமறிக்கையினர் மெய்யார்ந்த
அண்ணல் அன்புசெய்வார் அவர்க்கு எளியவர் அரியவர் அல்லார்க்கு
விண்ணி லார்பொழில் மல்கிய மலர்விரி விற்குடி வீரட்டம்
எண்ணி லாவிய சிந்தையி னார்தமக்கு இடர்கள் வந்தடையாவே..(2/108)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவாசகம்

திருஆதிரைத் திருநாளைப் 
பத்தாவது நாளாகக் கொண்டு
இன்று முதல் திருவெம்பாவை..
(01 - 02)


ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க்கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்!..

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போதிப்போது போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையும் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பார்யாம் ஆரேலோர்!..
***

தேவி தரிசனம்
ஸ்ரீ மாகாளி - உஜ்ஜயினி



வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்புமுன்பு
செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே..(052)
- அபிராமிபட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

3 கருத்துகள்:

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..