வெள்ளி, டிசம்பர் 02, 2016

ஸ்ரீ வடபத்ரகாளி

இனி எப்போதும் எத்தகையவரும் செய்து முடிக்க இயலாதபடிக்கு -
மாபெரும் செயல்களைச் செய்து முடித்த பெருமை சோழர்களுடையது...

தமிழனின் புகழ்க் கொடி எனும் புலிக் கொடி - 
கடல் கடந்தும் பறந்திடக் காரணம் - சோழ மண்டலத்தின் மாமன்னர்களே!..

சோழப் பேரரசை நிர்மாணிக்கப் புறப்பட்ட மாவீரர்கள் -
அம்பிகையைத் தொழுது வணங்கிய பின்னரே - 
முதலடியை எடுத்து வைத்திருக்கின்றனர்..

மாமன்னன் ராஜராஜ சோழனும் -
அவனது பாட்டனும் பாட்டனுக்குப் பாட்டனும் 
ராஜராஜ சோழனின் வீரமகன் இராஜேந்திர சோழனும்
அவர்களைத் தொடர்ந்த சோழ வம்சத்தின் மன்னர்களும்
நின்று வணங்கிய அம்பிகையின் சந்நிதி ஒன்று உண்டு!..

அந்தச் சந்நிதி - அருள் பொழியும் -
ஸ்ரீ நிசும்பசூதனியின் திருச்சந்நிதி!.. 


அந்தச் சந்நிதி இருக்குமிடம் தஞ்சை மாநகர்..

ஸ்ரீ நிசும்பசூதனியின் சந்நிதி -
தஞ்சை மாநகரின் கீழ்த்திசையில் ஈசான்ய திக்கில் விளங்கும்
ஸ்ரீ வைத்தியநாத ஸ்வாமி திருக்கோயிலின் நிருதி மூலையில் திகழ்கின்றது... 

சோழப் பெருங்குலத்தினைக் காத்து -
அவர்களுக்குப் பேரும் பெருக்கும் அருளியவள் இவளே!..

இவளே - வடபத்ரகாளி எனவும் ராகுகால காளி எனவும் வழங்கப்படுகின்றாள்.. 

அசுரர்களாகிய சண்டனையும் முண்டனையும் சும்பனையும் நிசும்பனையும் தொலைத்துக் கட்டியவள்!..

அதனாலேயே - இவளுக்கு நிசும்பசூதனி எனும் திருப்பெயர்!..

இவளே சோழப் பேரரசை நிர்மாணித்த விஜயாலய சோழனின் இஷ்ட தெய்வம்..

தொண்ணூற்றாறு விழுப்புண்களைத் தன் திருமேனியில் தாங்கியிருந்தவன் - விஜயாலய சோழன்..

கி.பி., 850ல் முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றினான்..

அதுவரையிலும் பழையாறையில் இருந்த சோழ மரபினர் - புதிய நகராகிய தஞ்சையில் குடியேறினர்..

தஞ்சை - சோழர்களின் புதிய தலைநகராயிற்று..

அடுத்த சில ஆண்டுகளில் - பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையே - திருப்புறம்பியத்தில் நடைபெற்ற பெரும்போர் சோழ சாம்ராஜ்ஜியத்திற்கு வித்திட்டது.

இது ஆதாரங்களுடன் கூடிய சோழ வம்சத்தின் வரலாறு..

அந்த வெற்றிக்கெல்லாம் மூல காரணம் - ஸ்ரீநிசும்பசூதனியே!..

தஞ்சையைக் கைப்பற்றியதும் விஜயாலய சோழன் - மாநகரைச் சுற்றி எட்டு திக்குகளிலும் ஸ்ரீ பத்ரகாளியைத் தொழுது வணங்கி நின்றான்..

எங்கும் எப்போதும் - தனக்கு வெற்றிகளையே அருளவேண்டும்!.. -  என்று..

விஜயாலய சோழனின் அன்புக்கு மனம் இரங்கிய அம்பிகை - 
அவன் முன் தோன்றி - அவ்வாறே வரமளித்தாள்..

அம்பிகையின் தரிசனத்தால் மனமகிழ்ந்த மன்னன் - 
அம்பிகையை அங்கேயே திருக்கோயில் கொள்ள வேண்டினான்..

மன்னனின் அன்புக்கு இணங்கி 
அம்பிகை கோயில் கொண்ட கோலம் தான் - நிசும்பசூதனி!.. 

அம்பிகை திருக்காட்சி தந்து அமர்ந்த கோயிலுடன் -
விஜயாலயன் - ஏழு கோயில்களை எழுப்பினான்.. 

ஆக, தஞ்சையைச் சுற்றி எட்டு காளி கோயில்கள் - விஜயாலயன் காலத்தில்!..

குடமுழுக்கு 23 ஜூன் 2016
அவற்றுள் - நிசும்பசூதனியின் திருக்கோயில் -
வடபத்ரகாளி கோயில் எனும் பெயருடன்
தஞ்சையின் கீழ்த் திசையில் விளங்குகின்றது - 


தஞ்சையில் கீழவாசல் ஸ்ரீவெள்ளைப் பிள்ளையார் கோயிலுக்கு சற்று எதிரில் - வடக்கு தெற்காக - பழைய ராமேஸ்வரம் சாலை.

இந்த சாலையைத் தான் - கீழவாசல் மார்க்கெட் சாலை என்கின்றார்கள்..

இந்த சாலையைக் கடந்து பூமாலை ராவுத்தர் கோயிலுக்குச் செல்லும் சாலையில் சென்றால் ஐந்து நிமிடத்தில் வடபத்ர காளி எனும் நிசும்ப சூதனியின் ஆலயத்தை அடையலாம்.

பூமாலை ராவுத்தர் கோயில் எனப்படுவது -
ஸ்ரீ பாலாம்பிகை சமேத ஸ்ரீ வைத்யநாதர் திருக்கோயில்..

ஸ்ரீ வைத்யநாத ஸ்வாமி திருக்கோயில்
ஸ்ரீ வைத்யநாதர் மூலத்தானம்
இந்தத் திருக்கோயில் சிறியது தான்.. என்றாலும் கீர்த்தி மிக்கது..

நிசும்பசூதனியின் உக்ரம் குறைய வேண்டி -
பின்னாளில் எழுந்ததே - ஸ்ரீ வைத்யநாதர் திருக்கோயில்!..


கொடிமரம், திருச்சுற்று, உப சந்நிதிகள் என்றெல்லாம் இல்லை..

முன்மண்டபம், அர்த்த மண்டபம்.. கம்பீரமான நந்தி.. பலிபீடம்..
கருவறையின் வலம் இடமாக விநாயகரும் வேலவனும்...

ஸ்ரீ வைத்யநாதர் சந்நிதி மற்றும் தெற்கு நோக்கிய ஸ்ரீ பாலாம்பிகையின் சந்நிதி...

அம்பிகையின் சந்நிதிக்கு வலது புறம் தலையில் உருமால் கட்டியவாறு கரத்தில் பிரம்பொன்று ஏந்தியதாக திருக்கோலம்..

இந்தத் திருமேனியே பூமாலை ராவுத்தர் என்று வழங்கப்படுவது..

மாணிக்கவாசகருக்காக குதிரைச் சேவகனாக சென்ற திருக்கோலம் இதுவே!.. - என்கின்றனர் ஆன்மீக பெருமக்கள்..

இடது புறம் வனப்பான பிட்சாண்டவர்..
இது புத்தரின் திருக்கோலம் என்ற சொல்வழக்கும் உள்ளது..

அருகில் மேற்கு நோக்கியவாறு அழகான வயிரவ மூர்த்தி.. சூரியன், சந்திரன்..

முன்மண்டபத்தில் நவக்கிரக மண்டலம்..

ஐப்பசி அன்னாபிஷேகம் நடந்த மறுநாள் காலையில் இந்தத் திருக்கோயிலுக்குச் சென்றிருந்தேன்..

அன்னாபிஷேகத்துக்கு காணிக்கையாக வந்திருந்த அரிசி பருப்பு மற்றும் காய்களைக் கொண்டு அறுசுவை விருந்து வடை பாயசத்துடன் தயாராகிக் கொண்டிருந்தது.. 

கோயிலினுள் ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்..
எனவே, உள்ளே படம் எடுக்க இயலவில்லை..

ஸ்ரீ வைத்யநாதரின் மூலஸ்தானத்திற்குப் பின்புறம் நிருதி (தென்மேற்கு) மூலையில் வடபத்ர காளியின் திருச்சந்நிதி...

திருக்குடமுழுக்கிற்கு முந்தைய தோற்றம்
தற்போது அழகின் வடிவாக..
வடபத்ர காளியின் கோயிலுக்கு மட்டும்
சென்ற ஆண்டுக்கு முன் திருப்பணி தொடங்கப்பெற்றது..

கோயிலுக்கு முன்பாக நீளவாக்கில் இருந்த தகரங்கள் வேயப்பெற்றிருந்த
மண்டபம் முற்றாக அகற்றப்பட்டு அழகான சிற்பங்களுடன் கூடிய மண்டபம் அமைக்கப்பெற்றுள்ளது..

திருப்பணிகள் நிறைவுற்று கடந்த ஜூன் 23 அன்று திருமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது..

துவார பாலகியர் தவிர்த்து -
சந்நிதியின் இருபுறமும் மற்றும் ஏனைய ஆறு தூண்களிலும்
அம்பிகையின் எட்டு விதமான உக்ர வடிவங்கள்..

மனதை கொள்ளை கொள்ளும்படிக்கு அமைக்கப்பட்டுள்ளன....
வண்ணமிகு சிற்பங்களைக் காணக் காண பரவசம் மிகவாகின்றது...

கவலைகளும் கஷ்டங்களும் பறந்தோடுகின்றன...

காளி பரமேஸ்வரி கண்முன்னே களிநடம் புரிவதாக உணர்வு!..

அழகிய சுதை சிற்பங்களுடன் திருக்கோயிலை அழகுற அமைத்தவர் -
கும்பகோணம் ஸ்தபதி திரு Dr. R. செல்வராஜ்...

அவருக்கு எல்லா நலன்களையும் அம்பிகை அருள்புரிவாளாக!.. 


அம்பிகையின் தோற்றம் - கோர சௌந்தர்யம்..
எனினும், சந்நிதியில் கருணைக் கடல் - என, கொலுவிருக்கின்றாள்..

இதோ அவளது சந்நிதி!..


மாபெரும் மன்னர்களும் மகத்தான வீரர்களும் நின்று வணங்கிய சந்நிதி!..

விஜயாலய சோழன் - தன் கண் கொண்டு அம்பிகையைக் கண்டு கைகூப்பி வணங்கிய சந்நிதி..

மாமன்னன் ராஜராஜ சோழப் பெருந்தகையும் அவனது தந்தை சுந்தர சோழனும் முந்தைப் பாட்டனும் பாட்டனுக்குப் பாட்டனும் என, முன்னோர்கள் நின்று வணங்கிய சந்நிதி.

பின்னும், ராஜேந்திர சோழனும் அவனது மகன் ராஜாதி ராஜனும் அவன் சந்ததியரும் தொழுது வணங்கிய சந்நிதி!..


வடக்கு நோக்கிய சந்நிதி...

விஜயாலயன் எழுப்பிய கோயில் கால வெள்ளத்தில் கரைந்து போனது..
ஆயினும் - இப்போதுள்ள சந்நிதி பழைமையானது..

அன்னையின் திருமுகத்தைக் கண்டாலே -
நம்முள் வீரமும் வைராக்கியமும் குடி கொள்வதை உணரலாம்..

சில வருடங்களுக்கு முன்னால் - 
ஒரு வெள்ளிக் கிழமையின் உபயதாரராக இருந்து அம்பிகையை சேவிக்கும் பெரும்பேறு கிடைத்தது..

அப்போது நானும் எனது குடும்பத்தினரும் அம்பிகையின் முன்னிருந்து பதினாறு வகையான மங்கல நீராட்டினைத் தரிசித்தோம்..

அதற்கு முன் கேள்விப்பட்டிருந்த திருமேனி அழகினை -
அப்போது தான் கண்ணாரக் கண்டு இன்புற்றேன்..


நிசும்பசூதனி!..

சும்ப நிசும்பர்களை வதம் செய்ததாலேயே - நிசும்பசூதனி!..

சப்த கன்னியருள் ஏழாமவள் - சாமுண்டி.. ஸ்ரீ காளி!..
இவளுடைய முக லாவண்யம் - தெற்றுப் பற்கள்..

இவளே - தெற்றுப் பல் தெரியும்படி புன்னகைத்தவள்..
இவளே - சண்டமுண்ட சும்ப நிசும்பர்களை வதம் செய்தவள்..

நிசும்பசூதனி - ஏழடி உயரங்கொண்டு விளங்குகின்றனள்.

அம்பிகைக்கு அபிஷேக அலங்காரங்கள் எல்லாம் - 
அருகிலுள்ள மேடையின் மீது நின்று தான்..

நிகரற்ற வல்லமையுடன் எட்டுத் திருக்கரங்களுடன்
உக்ர கோலங்கொண்டு இலங்குகின்றனள்..

அம்பிகையின் திருமுடிக் கற்றைகள் விரிந்து பரந்து கிடக்கின்றன..
தீட்சண்யமான பார்வை.. தெற்றுப் பற்கள் பளீரிடுகின்றன..

பரந்து விரிந்திருக்கும் கேசங்களை மறைத்து -
அக்னி கிரீடம் அணிவிக்கப்பட்டிருக்கின்றது..

தெற்றுப் பற்களின் மீது புல்லாக்கு ஒளிர்கின்றது..
சற்றே இடப்புறம் திருமுகத்தைச் சாய்த்திருக்கின்றாள்..

மிகவும் மெலிந்த திருமேனி..
வார்கொண்ட வனமுலைகள் - வனப்பின்றி விளங்குகின்றன..

அம்பிகையின் விலா எலும்புகளும் புடைத்துத் தெரிகின்றன..
அசுரனின் தலை மீதிருக்கும் திருவடியும் மெலிந்து விளங்குகின்றது..

வல்லமையுடன் விளங்கிய அசுர சைன்யத்தை அழிப்பதற்கென - விரதம் பூண்டு சிவபெருமானின் நல்லருளை வேண்டித் தவமிருந்ததாக ஐதீகம்..

அம்பிகை முண்டமாலை தரித்திருக்கின்றாள்..
திருமேனியில் பாம்பு ஒன்றும் இழைகின்றது..

ஏழு திருக்கரங்களிலும் - வாள், தனுசு, பாசம், மணி, திரிசூலம், மணி, கேடயம், கபாலம் ஆகியனவற்றுடன் திகழ்கின்றாள் - அம்பிகை.. ..

வலது மேல் திருக்கரத்தில் உள்ள திரிசூலம் அசுரனின் மேல் பாய்ந்த வண்ணமாக உள்ளது..

இடக் கரத்தினால் கீழே கிடக்கும் அசுரனைச் சுட்டிக் காட்டுகின்றாள்..

வலது திருவடி - அசுரனின் தலை மீது பதிந்திருக்கின்றது..
இடது காலை மடித்து - அசுரர்களின் மீது அமர்ந்த திருக்கோலம்.

தேவியின் திருவடியில் கிடப்பது சும்பனின் உடல் என்றும் முண்டமாகிக் கிடக்கும் தலை நிசும்பனுடையது என்றும் ஆன்றோர்கள் கூறுவர்.



கருவறைக்குள் விளங்கும் திருமேனியை சிற்பிகள் வடித்தனர் என்பது பொதுவான வார்த்தை... ஆனாலும் -

எவருடைய கற்பனைக்கும் எட்டாத வடிவம் இது..

தேவி புராணங்களில் நிசும்பசூதனியின் இலக்கணம் கூறப்பட்டிருக்கின்றது.. அவற்றையெல்லாம் ஒருங்கே காட்டும் அருள் வடிவம் இது!..

அம்பிகையே - தன்னுடைய திருவடிவத்தினைக் காட்டினாலன்றி - 
அவளே மனமுவந்து இங்கு அமர்ந்தாலன்றி - அறிய இயலாத திருக்கோலம்.

இப்படிப்பட்ட திருக்கோலம் - இப்புவியில் எங்கேயும் இல்லை!..

மற்றொன்று காட்டப்பட்டாலும் அது வேறு விதமாகத்தான் இருக்கும்.. 

ஸ்ரீ பரமேஸ்வரியாகிய அம்பிகை நிசும்பசூதனி - எனக் கோலங்கொண்டு 

தானே தன்னுருவங்காட்டி எழுந்தருளியிருக்கின்றாள் என்பதே திண்ணம்!.. 

ஸ்தபதி அவர்களின் முகவரி
எங்கிருந்த போதும் - எங்கள் சிந்தையில் இருப்பவள் ஸ்ரீவடபத்ரகாளி..

தஞ்சை மக்களின் மனங்களிலெல்லாம் கோயில் கொண்டு உறைபவள் இவள்!..

செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகள் எல்லாம் சிறப்பு தான்.. எனினும்

சித்ரா பௌர்ணமி நாளன்று சந்தனக்காப்பு அலங்காரம் கொள்கின்றாள்..
தை மாத வெள்ளிக் கிழமைகளில் பால்குட வைபவ கோலாகலம்..

ஆனாலும் -  விஜயாலயன் எழுப்பிய கோயில் இது அல்ல!.. - என்ற கருத்தும் உண்டு..

அப்படி குறிக்கப்படும் கோயில் -
இன்னும் கொஞ்ச தூரத்தில் இருக்கும் உக்ர காளியம்மன் கோயில்..

அது சிலகாலங்கள் முன்பு வரைக்கும் குயவர் தெருவை அடுத்திருந்த கருவேலங்காட்டிற்குள் இருந்ததால் - கருவக்காட்டு காளி என்றனர்..

மிகப்பெரிய கருவேலங்காடு - இன்றைக்கு அழிந்து போயிற்று..
கருவேலங்காட்டு கோயில்தான் நிசும்பசூதனி கோயில் என்றும் சிலர் கூறுகின்றனர்..

அங்கேயும் பழைமையான காளியின் சிலை உள்ளது..

ஆய்வாளர்களுக்கிடையே கருத்து வேற்றுமைகள் உள்ளன.. ஆனால்,
கைகூப்பித் தொழுவோரிடத்தில் எவ்வித வேற்றுமையும் இல்லை..


சமயங்களைக் கடந்த மெய்ப்பொருளாக விளங்குபவள் நிசும்பசூதனி.. 
செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் - வேற்று சமயத்தவரையும் காணலாம்..

அன்றைக்கு இத்திருக்கோயில் எத்தனை பெரிதாக இருந்ததோ - நாமறியோம்..
இன்றைக்கு திருக்கோயிலின் நாற்புறமும் இல்லங்கள் சூழ்ந்திருக்கின்றன..

மக்கள் நடமாட்டத்திற்கு மத்தியில் மங்கலங்களை அள்ளித் தருபவளாக வீற்றிருக்கின்றாள் - வடபத்ரகாளி எனும் நிசும்பசூதனி!..

குண்டலிபுர வாஸினி சண்டமுண்ட விநாஸினி
பண்டிதஸ்ய மனோன்மணி ஸ்ரீவராஹி நமோஸ்துதே..

- என்று ஸ்ரீ வராஹி அம்மனின் துதியிலும் குறிப்பிடப்படுபவள் - நிசும்பசூதனி!..

மாமன்னர்கள் நின்று வணங்கிய 
நிசும்பசூதனியின் சந்நிதியை 
பதிவு செய்ததில் மகிழ்வெய்துகின்றேன்..

வடபத்ர காளீ போற்றி!..
சும்பநிசும்ப சூதனீ போற்றி.. போற்றி!.. 
* * *  

11 கருத்துகள்:

  1. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய கோயில்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அருமையான பகிர்வு ஐயா...
    நிசும்பசூதனை சோழர்களின் வரலாற்று வாசிப்பில் அறிந்து கொண்ட பெயர்...
    கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவலை தூண்டிய காளி.

    பதிலளிநீக்கு
  4. முன்னர் இக்கோயிலைப் பற்றி தாங்கள் பதிந்தது இன்னும் நினைவில் உள்ளது. குடமுழுக்கின்போது நேரில் கோயிலுக்குச் சென்றுவந்தேன். தற்போது கூடுதல் செய்திகளுடன் மிக அருமையான பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அருமையான பதிவு.
    அம்மனின் பெருமைகளை கேட்டு மகிழ்வாய் இருக்கிறது.
    பத்ரகாளி அனைவருக்கும் அருளை தரவேண்டும்.
    படங்கள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான பகிர்வு. படங்களும் சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. அறிந்திராத பல கோயில்கள் பற்றி அறிய முடிகிறது. சிறப்பான பதிவு அழகான படங்களுடன்...மிக்க நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  8. ஐயா வணக்கம் நிசும்பசூதனி கோவிலின் அர்ச்சகரின் நம்பர் தேவையா தொடர்பு கொள்வதற்கு நன்றி வணக்கம்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..