சனி, டிசம்பர் 31, 2016

மார்கழிப் பூக்கள் 16

தமிழமுதம்

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்புஉடைத்து..(112) 
***
ஔவையார் அருளிய
நல்வழி

நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும்புகழும் பெருவாழ்வும் ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான்..
***
அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை

திருப்பாடல் - 16


நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்போனே கொடிதோன்றும் தோரண
வாயில் காப்போனே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதேநீ
நேயநிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!.. 
***

ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளிய
திருப்பாசுரம்


ஸ்ரீ புஷ்பவல்லி உடனாகிய கோவலன்.,
திருக்கோவலூர்
நீயும் திருமகளும் நின்றாயால் குன்றெடுத்துப்
பாயும் பனிமறைத்த பண்பாளா வாயில்
கடைகழியா உள்புகாக்  காமர்பூங் கோவல்
இடைகழியே பற்றி இனி..(2167)

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்
வீரட்டானத் திருத்தலங்கள்

ஆறாவது திருத்தலம்
திருக்கோவலூர்



இறைவன் - ஸ்ரீ வீரட்டானேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ சிவானந்தவல்லி
தீர்த்தம் - பெண்ணையாறு
தலவிருட்சம் - சரக்கொன்றை

திருக்கயிலை மாமலையில்
ஈசனும் அம்பிகையும் ஏகாந்தமாக மகிழ்ந்திருந்த வேளையில்
ஐயனின் திருவிழிகளை தனது தளிர்க்கரங்களால்
மூடி விளையாடினாள் வேதநாயகி..

அந்த விளையாட்டினால் விபரீதம் விளைந்தது..

ஐயனின் திருவிழிகளை மூடிய வேளையில் 
அகிலம் முழுதும் இருளில் மூழ்கியது..

அந்த இருளில் இருந்து அசுரன் ஒருவன் தோன்றினான்..

அவனே அந்தகாசுரன்...

அந்தவேளையில் அவன் அங்கிருந்து 
அகன்று போனாலும் - அதன் பிறகு 
அவன் ஆக்ரோஷம் கொண்டு அனர்த்தங்கள் பல செய்தான்...

அமரர்கள் கூடி முயன்ற போதும் 
அவனுடைய அடாத செயல்கள் தொடர்ந்தன...

தேவர்கள் ஒன்றுகூடி சிவபெருமானைச் சரணடைந்தனர்..

அனைத்துயிர்களின் பொருட்டு ஈசனும்
அந்தகாசுரனுக்கு நீதியை எடுத்துக் கூறினார்..
அகன்று போய்விடுமாறு அறிவுறுத்தினார்..

மாயையால் நிறைந்திருந்த அந்தகாசுரன்
அறிவுரைகளை ஏற்றானில்லை..

ஈசனை எதிர்த்து ஆயுதமேந்தி நின்றான்..

மாறாத புன்னகையுடன் அவனை எதிர்கொண்டார் ஈசன்..

அந்தகாசுரனின் விதி 
எம்பெருமானின் திருக்கரங்களால் முடிவுற்றது...

இந்தத் திருவிளையாடல் 
திருக்கயிலாய மாமலையில்
நிகழ்ந்ததாகும்.. 

ஆனாலும் 
எதையும் ஏற்றுக் கொள்ளாத 
இருள் மனம் கொண்டோர்க்கு
அவர் கொண்ட குணமே கூற்றாகும்
என்பது தலபுராணம் உணர்த்தும் சிறப்பு..
 

திருக்கோவலூர் 
அறுபத்து மூவருள் ஒருவரான
மெய்ப்பொருள் நாயனார் வாழ்ந்த திருத்தலம் ஆகும்..  

ஔவையார் அருளிய விநாயகர் அகவல்
மிக உயர்ந்த ஞானநூலாகும்..

திருக்கோவலூர் வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலில் தான்
ஔவையார் விநாயகர் அகவல் பாடினார்
என்பது குறிப்பிடத்தக்கதாகும்.. 

நடுநாட்டிலுள்ள சிறப்பான திருத்தலங்களுள் 
திருக்கோவலூரும் ஒன்று...

வள்ளல் பாரியின் மக்களாகிய 
அங்கவை சங்கவை இருவரையும்
மலையமான் திருமுடிக்காரியிடம் 
ஒப்படைத்து விட்டு - குன்று ஒன்றின் மீது
வடக்கிருந்து உயிர் நீத்தார் - பெரும் புலவர் கபிலர் 
என்பது வரலாறு..

திருக்கோவலூரின் அருகில் தான் அந்தக் குன்று உள்ளது 

திருக்கோவலூர் மலையமான் வம்சத்தைச் சேர்ந்த
வானவன் மாதேவியார் மணிவயிற்றில் தான்
மாமன்னன் ராஜராஜசோழன் பிறந்தான்..

அந்த வகையில் ராஜராஜன் பிறந்த ஊர் 
திருக்கோவலூர் என்று அறியப்படுகின்றது..

திருக்கோவலூர் 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகும்..

ஒருவர் கிடக்க இருவர் இருக்க மூவர் நிற்க -
எனும் நிலையில் நான்காவதாக ஒருவர் வந்து 
நெருக்கியடித்த அற்புதம் நிகழ்ந்த திருத்தலம்..

இங்குள்ள திரிவிக்ரமப் பெருமாள் திருக்கோயில்
புகழ் பெற்றதாகும்.. 

திருக்கோவலூர் இன்றைய நாளில் 
திருக்கோயிலூர் என்றழைக்கப்படுகின்றது...

- திருப்பதிகம் அருளியோர் -
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய 
தேவாரம்

படைகள்போல் வினைகள் வந்து பற்றியென் பக்கனின்றும்
விடகிலா வாதலாலே விகிர்தனை விரும்பி யேத்தும் 
இடையிலே என்செய்கேனோ இரப்பவர் தங்கட் கென்றும்
கொடையிலேன் கொள்வதே நான் கோவல் வீரட்டனீரே!..(4/69)  
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவாசகம் 


கருவாய் உலகினுக்கு அப்புறமாய் இப்புறத்தே
மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி
அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட
திருவான தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ..
***

தேவி தரிசனம்
ஸ்ரீ சாரதாம்பிகை - மங்களூர்


சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே..(48) 
- அபிராமிபட்டர் - 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

6 கருத்துகள்:

  1. திருக்கோவலூர் பெருமாளை தரிசித்துள்ளேன். சிவனைக் காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை. உங்கள் பதிவு மூலமாகப் பெற்றேன். மங்களூர் சாரதாம்பிகையைக் காணும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. அருமை ஐயா...
    மற்ற மார்கழிப் பூக்களையும் வாசிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  3. மங்களூர் கோவில் சென்றிருக்கிறேன் புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான தகவல்கள்.....

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..