வியாழன், டிசம்பர் 29, 2016

மார்கழிப் பூக்கள் 14

தமிழமுதம்

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு..(081)
***
ஔவையார் அருளிய
நல்வழி


ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் ஏற்றவர்க்கு
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை எனமாட்டார் இசைந்து..
***
அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை

திருப்பாடல் - 14


உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணனைப் பாடேலோர் எம்பாவாய்!..
***

ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளிய
திருப்பாசுரம்


ஸ்ரீ வைகுந்த பெருமாள்
தூத்துக்குடி
நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்
சென்று திசையளந்த செங்கண்மாற்கு என்றும்
படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம்
அடையாழி நெஞ்சே அறி..(2102)

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்
வீரட்டானத் திருத்தலங்கள்

நான்காவது திருத்தலம்
திருவழுவூர்



இறைவன் - ஸ்ரீ வீரட்டேஸ்வரர், கஜசம்ஹார மூர்த்தி
அம்பிகை - ஸ்ரீ பாலகுஜாம்பிகை, இளங்கிளை நாயகி
தீர்த்தம் - பஞ்சமுக தீர்த்தம்
தலவிருட்சம் - தேவதாரு

இறைவன் என்றெல்லாம் வணங்க வேண்டியதில்லை..
ஆதியில் சொல்லப்பட்ட வேள்வி நெறிமுறைகளைப்
பின்பற்றி ஆகுதியில் அவிர் பாகங்களை அளித்தாலே போதும்..
அதற்குரிய பலன்களைத் தருவதற்குத் தேவர்கள்
கடமைப்பட்டவர்கள் என்ற கர்வத்துடன் இருந்தனர் -
தாருகாவனத்து முனிவர்கள்..

தம்முடைய தவநெறி எல்லாம் தத்தமது மனைவியரின்
மனஉறுதியில் இருப்பதாகத் தருக்கிக் கொண்டிருந்தனர்..

இவர்களுடைய சித்தத்தைத் தெளிவு செய்திட
இறைவன் எண்ணம் கொண்டனன்..


ஸ்ரீ பிட்சாடனர்
அதன்படி திசைகளே ஆடைகளாக
திகம்பரத் திருக்கோலத்தில்
பிக்ஷாடன மூர்த்தியாக
தாருகாவனத்திற்குப் புறப்பட்டான்..

ஈசனின் உள்ளக் கிடக்கையை உணர்ந்து கொண்ட
ஸ்ரீ ஹரிபரந்தாமனும் அழகெல்லாம் ஒன்றாகிய
மோகினியின் வடிவாகி ஈசனைத் தொடர்ந்தனன்..

தாருகாவனத்தில் அப்படியும் இப்படியுமாக
நடைபயின்ற திகம்பரனைக் கண்ட
ரிஷி பத்தினியர் சித்தம் கலங்கி செய்வதறியாது திகைத்து
மனம் தாளாமல் மயக்குற்று வீழ்ந்தனர்..

அங்கே - யாகசாலையின் ஒரு ஓரமாக
மோகினி சற்றே நடை பயின்றனள்..

ஒருக்களித்து நின்று ஓரக்கண்ணால் நோக்கினள்..

இப்படியோர் அழகு... இதுவரைக் காணாத அதிசயம்!..
ரிஷிகளின் உள்ளமும் உடலும் ஒருங்கே துடித்தன..

அவர்தம் மனங்களில் மூண்டெழுந்தது காமத் தீ!..
அந்த அளவில் அவிந்து போனது யாகத் தீ!..

இக்கட்டான இவ்வேளையில்
தன்னைத் தொடர்ந்த ரிஷி பத்தினிகளுடன்
திகம்பரன் யாக சாலைக்கு வந்தனன்...

தம் மனைவியரின் அலங்கோலத்தைக் கண்ட
தவ முனிவர்கள் அதிர்ந்தனர்..
தலையில் அடித்துக் கொண்டனர்..
வாழ்வு நெறி இப்படிப் பாழானதே!.. என்று..

காமத் தீயினை மூட்டிக் கருத்தழியச் செய்த
மோகினியைக் கடுங்கோபத்துடன்  தேடினர்..

தாம் வந்த காரியம் நிறைவேறிய மகிழ்ச்சியுடன்
சிவ காமேஸ்வரனும் ஜகன் மோகினியும்
திருக்கரங்களைக் கோர்த்தவாறு
தொலைவில் சென்று கொண்டிருந்தனர்...


பிக்ஷாடனரின் முன்பாக ஐயனார்
சிவகாமேஸ்வர - ஜகன்மோகினி
சங்கமத்தினால்
ஸ்ரீ சாத்தன் என்று போற்றப்படும் 
ஸ்ரீ ஹரிஹர சுதனின் திருஅவதாரம் நிகழ்ந்த தலம்
திருவழுவூர் என்பது தலபுராணம்.. 

தங்களது தவம் கெட்டதற்கு தமது மனைவியரின்
மனம் கெட்டது தான் காரணம்..

அதற்குக் காரணன் ஆடையில்லாமல் வந்த திகம்பரன்..
அவனை அழித்தே தீர்வது என - கங்கணம் கட்டிக் கொண்டனர்..

ஆத்திரத்துடன் அபிசார வேள்வியைச் செய்தனர்..

அதில் தோன்றிய - அக்னி, பாம்பு, உடுக்கை, புலி, சிங்கம்
இவற்றையெல்லாம் திகம்பரனை நோக்கி ஏவினர்..

அக்னி, பாம்பு, உடுக்கையெல்லாம் ஈசனுடன் ஒன்றிவிட்டன..
புலியும் சிங்கமும் இறைவன் திருக்கரத்தால் கீறிக் கிழிபட்டுப் போயின...

கடுப்பாகி விட்ட கடுமனத்தோர் யாகத் தீயில் இருந்து
கரிய யானை ஒன்றினைத் தோற்றுவித்து ஏவினர்..

அண்டங்களெல்லாம் அதிரும்படிக்கு ஓடிவந்த யானை
ஈசனைத் தன் துதிக்கையால் சுற்றி வளைத்துத் தூக்கியது..

அண்டங்களைப் படைத்த ஐயன் அணுவிற்கும் அணுவாகி
ஆனையின் வயிற்றுக்குள் புகுந்தார்..

புகுந்ததுடன் மட்டுமல்லாமல் 
வயிற்றுக்குள் அக்னியாக மூண்டெழுந்தார்..

அக்னியின் வெம்மையைத் தாங்க இயலாத வேழம்
கதறிக் கண்ணீர் வடித்தவாறு ஆங்கிருந்த குளத்தினுள் வீழ்ந்தது..

ஆனையின் வயிற்றுக்குள் ஈசன் புகுந்ததும்
வையகமுழுதும் இருண்டு போனது..

இந்தக் கோரத்தைச் சகித்துக் கொள்ள இயலாத பராசக்தி
பால முருகனைத் தன் இடுப்பில் சுமந்தவாறு
அஞ்சி நடுங்கினாள்!..




அவ்வேளையில் ஆனையின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு
யானையின் தோலை ஆடையாகத் தரித்த வண்ணம்
எம்பெருமான் புன்னகையுடன் வெளிப்பட்டருளினன்...

இந்த நிகழ்வு தேவாரம் முழுதும் போற்றப்படுகின்றது..

இந்த நிகழ்வினை அப்பர் பெருமான் 
பாடும் அழகே அழகு!..
  
விரித்தபல் கதிர்கொள்சூலம் வெடிபடு தமருகம்கை
தரித்ததோர் கோலகால வயிரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக்கண்டு ஒந்திருமணிவாய் விள்ள
சிரித்து அருள்செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே!..

இத்தலத்திற்கு அருளப்பெற்ற திருப்பதிகம்
எவையும் கிடைத்தில...

ஆயினும், அப்பர் பெருமான் அருளிய
திருவூர் பதிகத்தினுள் வழுவூர் வீரட்டம் காணப்படுகின்றது..

எனவே, தேவார வைப்புத் தலம் என விளங்குகின்றது..

மயிலாடுதுறை திருவாரூர் வழித்தடத்தில்
மங்கநல்லூருக்கு அருகாமையில் 
வழுவூர் உள்ளது
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
குயில் பத்து




சுந்தரத் தின்பக் குயிலே சூழ்சுடர் ஞாயிறு போல
அந்தரத் தேநின் றிழிந்திங் கடியவர் ஆசை அறுப்பான்
முந்தும் நடுவும் முடிவும் ஆகிய மூவர் அறியாச்
சிந்துரச் சேவடி யானைச் சேவக னைவரக் கூவுவாய்.. 
***

தேவி தரிசனம்

ஸ்ரீ சாரதாம்பிகை
சிருங்கேரி




வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம்அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே புதுநஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே.. (46)
- அபிராமிபட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

4 கருத்துகள்:

  1. அருமை அருமை ,, நேற்று தான் என் மாணவச் செல்வங்களுக்கு இந்தப்பாடல் நடத்தினேன்,, யானைத் தோல் ஆடை ,,,

    விளக்கம் மிக அருமை,, இன்றும் இதே பாடல் இதே விளக்கத்துடன்,, நன்றி நன்றி,, தொடருங்கள்,
    இதே விளக்கத்தை இன்றும் மாணவர்களுக்கு தங்கள் தளம் குறித்து சொல்வேன். படங்கள் அனைத்தும் அழகு,,

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான பகிர்வு. மார்கழி மாதம் முழுவதும் இப்படிச் சிறப்புப் பதிவுகள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..