சனி, டிசம்பர் 24, 2016

மார்கழிப் பூக்கள் 09

தமிழமுதம்

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்ற பிற.. (095)
***

ஔவையார் அருளிய
மூதுரை

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.. 
***

அருளமுதம்

ஸ்ரீ சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை

திருப்பாடல் - 09


தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப்பெருந் துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்!..
***

ஸ்ரீ திருமழிசையாழ்வார் அருளிய
திருப்பாசுரம்
ஸ்ரீ நாராயணப்பெருமாள் - திருத்தங்கல்
அம்புலாவு மீனுமாகி ஆமையாகி ஆழியார்
தம்பிரானு மாகிமிக்க தன்புமிக்க தன்றியும்
கொம்பராவு நுண்மருங்கு லாயர்மாதர் பிள்ளையாய்
எம்பிரானு மாயவண்ண மென்கொலோவெம் ஈசனே..(786)

ஓம் ஹரி ஓம்
***

சிவ தரிசனம்
பஞ்சபூதத் திருத்தலங்கள்

நான்காவது திருத்தலம்

திருஆனைக்கா
நீர்


இறைவன் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி
தீர்த்தம் - காவிரி
தலவிருட்சம் - நாவல்

சக்தி பீடங்களுள் ஒன்றாகும் இத்தலம்..
அம்பிகை நீரால் சிவலிங்கம் அமைத்து வழிபட்ட திருத்தலம்.. 
அம்பிகை தானொரு மாணவியாக அமர்ந்து 
வேதங்களின் உட்பொருளை ஈசனிடம் 
கேட்டு உணர்ந்தனள் என்பது ஐதீகம்...

யானை ஏறாதபடிக்கு மாடக்கோயில்களை வடிவமைத்த 
சோழ மாமன்னன் கோச்செங்கணான் - 
சிலந்தியாக இருந்து சிவபூஜை நிகழ்த்தியது இத்தலத்தில்...

கருவறையில் எந்நேரமும் நீர் கசிந்து கொண்டிருக்கின்றது.. 

மழைக் காலங்களில் நான்கடி அளவிற்கு தண்ணீர் சூழ்ந்திருக்கின்றது..

மேற்கு நோக்கிய திருக்கோயில்..

கருவறையின் வாசல் கருங்கல் பலகையால் அடைக்கப்பட்டுள்ளதால்
அதிலுள்ள நவ துவாரங்கள் வழியாகத் தான் சந்நிதியைக் காணமுடியும்.. 

மூலஸ்தானத்தினுள் செல்வதற்கு தென்புறத்தில் சிறிய வாசல் உள்ளது.. அதன் வழியாக ஜம்புகேஸ்வரரை அருகில் சென்று தரிசிக்க இயலும்..


ஐந்து திருச்சுற்றுகளை உடைய திருக்கோயில்..
நான்காவது திருச்சுற்றில் கிழக்கு நோக்கிய வண்ணம் 
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியின் திருக்கோயில்...

அகிலாண்டேஸ்வரியின் திருச்சந்நிதியில் தான் 
வரதன் என்ற கோயில் பணியாளர் கவி காளமேகம் என்றானார்..

- பாடிப்பரவியோர் -
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,
சுந்தரர்
***

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு

வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்
தேனைக்காவில் இன்மொழித் தேவிபாகம் ஆயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க் கேதுமேதம் இல்லையே!..(1/53)

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழற் பந்தர் செய்து
உலந்தவண் இறந்தபோதே கோச்செங்கணா னுமாகக்
கலந்தநீர்க் காவிரிசூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனிற் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டனாரே!..(4/49) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த 
திருப்பள்ளியெழுச்சி

திருப்பாடல் - 09

ஸ்ரீ ஆடவல்லான் - தஞ்சை
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டார்
விழுப்பொருளே உனதொழுப்படி யோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே
கடலமுதே கரும்பே விரும்படியார்
எண்ணகத்தாய் உலகுக்கு உயிரானாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!..
***

தேவி தரிசனம்

ஸ்ரீ பகவதி 
ஆற்றுக்கால் - திருவனந்தபுரம்


வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணிஆரமும் பாகமும் பொற்
செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே.. (34) 
- அபிராமிபட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
*** 

4 கருத்துகள்:

  1. பாடல் தேர்வு அனைத்தும் அருமை,, குறள் தேர்வும்,,

    தொகுப்பு மகி அருமை,, தொடர்கிறேன்,

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான பகிர்வு.

    திருவானைக்கா உறை அகிலாண்டேஸ்வரி தேவியின் பூரண திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.....

    பதிலளிநீக்கு
  3. திருத்தங்கல் பார்த்து பல வருடம் ஆச்சு.
    சிவகாசியில் இருக்கும் போது அடிக்கடி போகும் கோவில்.
    10 வருடங்களுக்கு முன் பார்த்த நினைவுகள் மீண்டும் வந்தன.
    அருமையான பாடல்கள், அழகான படங்களுடன் பதிவு அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..