செவ்வாய், டிசம்பர் 20, 2016

மார்கழிப் பூக்கள் 05

தமிழமுதம்

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு..(0595)
* * *
ஔவையார் அருளிய
மூதுரை

நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம்.. 
* * *

அருளமுதம்

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 05



மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூயபெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் 
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்!..

ஸ்ரீ காளமேகப்பெருமாள் - திருமோகூர்
ஸ்ரீ திருமழிசையாழ்வார் அருளிய
திருப்பாசுரம்

திருக்கலந்து சேருமார்ப தேவதேவ தேவனே
இருக்கலந்து வேதநீதி யாகிநின்ற நின்மலா
கருக்கலந்த காளமேக மேனியாய நின்பெயர்
உருக்கலந்து ஒழிவிலாது உரைக்குமாறு உரைசெயே.. 
(0854)
ஓம் ஹரி ஓம் 
* * *

சிவதரிசனம்

பஞ்ச சபைகள்
ஐந்தாவது திருச்சபை

சித்ரசபை
திருக்குற்றாலம்



இறைவன் - ஸ்ரீ திருக்குற்றாலநாதர்
அம்பிகை - குழல்வாய்மொழி உமையாள்
தீர்த்தம் - ஐந்தருவி
தலவிருட்சம் - ஆல், பலா

அம்பிகையின் சக்திபீடங்களுள் ஒன்று..

அகத்தியர் திருமணக் காட்சி பெற்ற திருத்தலம்..




வருடம் முழுதும் காய்த்துக்கொண்டிருக்கின்றது
திருக்கோயிலின் தல விருட்சமான குறும்பலா..

குறும்பலாவினைச் சிவமாகப் பாவித்து 
ஞானசம்பந்தப் பெருமான்
திருப்பதிகம் ஒன்றினை அருளியுள்ளார்..
எனில், குறும்பலாவின் பெருமை உணரத்தக்கது.. 

திருக்குற்றாலம் - சித்ரசபை
முழுதும் மரத்தால் வடிக்கப் பெற்ற 
சித்ர சபை - குற்றால நாதர் திருக்கோயிலிலிருந்து 
சற்று தூரத்தில் அமைந்துள்ளது..

சபை முழுதும் ஈசனின் திருவிளையாடல்கள்
ஓவியங்களாகத் தீட்டப்பெற்றுள்ளன..

திருஆதிரை நாளன்று நடராஜப் பெருமான்
சித்ர சபைக்கு எழுந்தருள்கின்றார்..


- திருப்பதிகம் -
திருஞானசம்பந்தர் 
* * *
தென்னகத்தின் மிக அழகான அருவிகள் 
விளங்குறும் திருத்தலம்..

திரிகூட ராசப்ப கவிராயர் இயற்றிய
குற்றாலக் குறவஞ்சியில்
திருக்குற்றாலத்தின் பெருமையைக் 
காட்டும் அழகான பாடல்..




மாத மூன்று மழையுள்ள நாடு
வருடம் மூன்று விளைவுள்ள நாடு
வேத மூன்றும் பலாவுள்ள நாடு
விசேஷ மூன்றும் குலாவுள்ள நாடு
போத மூன்றும் நலஞ்செயு நாடு
புவன மூன்றும் வலஞ்செயு நாடு
நாத மூன்றுரு வானகுற்றால
நாத ராரிய நாடெங்கள் நாடே!..
***

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு...


பால்வெண் மதிசூடிப் பாகத்தோர் பெண்கலந்து பாடியாடிக்
காலனுடல் கிழியக்காய்ந்தார் இடம்போலும் கல்சூழ்வெற்பில்
நீலமலர்க் குவளை கண்திறக்க வண்டரற்றும் நெடுந்தண்சாரல்
கோலமட மஞ்ஞை பேடையொ டாட்டயருங் குறும்பலாவே..(2/71)
* * *

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் - 05



பூதங்கள் தோறும் நின்றாய் எனின்அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உன்னைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!..
* * *

தேவி தரிசனம்
ஸ்ரீ கன்யாகுமரி



மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கைச்சகல கலாமயில் தாவுகங்கை
பொங்கலை தங்கும்புரி சடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும்பெண் கொடியே!.. (021)
- அபிராமி பட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

7 கருத்துகள்:

  1. மாதமூன்று மழையுள்ள நாடு
    இப்படி இருந்த நம் நாடு இப்படி இப்படி ஆகிவிட்டதே ஐயா

    பதிலளிநீக்கு
  2. குறளுடன் ஆரம்பித்து அருமையான பகிர்வு ஐயா...

    பதிலளிநீக்கு
  3. குற்றாலம் இரண்டு வருடங்களுக்கு முன் போய் இருந்தோம் , சித்திரசபயையை மீண்டும் பார்த்து வந்தோம். மீண்டும் உங்கள் பதிவில் தரிசனம் செய்தேன்.
    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. தொடருங்கள் தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. அருமை! குறளுடன் தொடங்கி அபிராமி அந்தாதியில் முடித்த விதம் வெகு சிறப்பு ஐயா. தொடர்கின்றோம்...

    பதிலளிநீக்கு
  6. தினமும் படித்து உணர்ந்துவருகிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..