ஞாயிறு, அக்டோபர் 09, 2016

புரட்டாசி தரிசனம் 4

புரட்டாசி மாதத்தின் முதல் மூன்று வாரங்களிலும் -

திருவேங்கடம், திருமாலிருஞ்சோலை மற்றும் திருவிண்ணகரம் 
ஆகிய திவ்ய தேசங்களைத் தரிசித்தோம்..

இந்த வாரத்தில் -

பூலோக வைகுந்தமாகிய திரு அரங்கம்..

வைணவம் பேசும் நூற்றெட்டு திவ்ய தேசங்களுள் -
கோயில் என்று போற்றப்படும் சிறப்பினையுடைய ஒரே திருக்கோயில்..

தானாக உருவாகிய க்ஷேத்ரங்களுள் முதன்மையானது என்பது ஐதீகம்..

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கோலாகலமாக முத்துப் பல்லக்கில் எழுந்தருளி,
காவிரிக் கரையை அடைந்ததும் - பல்லக்கினை விட்டிறங்கி -

தனது திருப்பாதங்கள் தோய நடந்து - திருமூலத்தானத்தினுள் ஏகி -
அரங்கனுடன் இரண்டறக் கலந்து இன்புற்றவள் -

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்..

தொண்டரடிப் பொடியாழ்வார் நந்தவனம் அமைத்ததும்
திருமங்கையாழ்வார் திருமதில் எழுப்பியதும் - இத்திருத்தலத்தில் தான்!..

எத்தனை எத்தனையோ சிறப்புகளுடன் திகழும் 
திரு அரங்கத்தின் புகழை ஒருநாளில் பேசுவதும் அரிது..


மூலவர் - ஸ்ரீ ரங்கநாதன்
உற்சவர் - நம்பெருமாள்
தாயார் - ஸ்ரீ ரங்கநாயகி

தல விருட்சம் - புன்னை
தீர்த்தம் - சந்திர தீர்த்தம், காவிரி மற்றும் பல..

ப்ரணவாக்ருதி விமானத்தின் கீழ் புஜங்க சயனம்
சயனத் திருக்கோலம் - தெற்கே திருமுகமண்டலம்

மங்களாசாசனம்

பெரியாழ்வார், ஆண்டாள், 
குலசேகராழ்வார், திருமழிசையாழ்வார்,
தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார்,
திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார்,
பேயாழ்வார், நம்மாழ்வார்..
*** 

ஸ்ரீ ரங்க தரிசனம்..

பதிவில் இடம்பெற்றுள்ள படங்களை வழங்கியவர்
ஸ்ரீரங்க அரங்கன்..
அவர் தமக்கு மனமார்ந்த நன்றி..


ஸ்ரீ ரங்கநாச்சியார் திருவடி சேவை (8/10/2016)
தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய திருப்பாசுரங்கள்
பதிவில் இடம் பெற்றுள்ளன..
***

பச்சைமா மலைபோல்மேனி பவளவாய்க் கமலச்செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.. (873)

ஸ்ரீ ரங்கநாயகி
விரும்பிநின் றேத்தமாட்டேன் விதியிலேன் மதியொன்றில்லை
இரும்புபோல் வலிய நெஞ்சம் இறையிறை உருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணிணை களிக்குமாறே.. (888)


குடதிசை முடியை வைத்து குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலு மாகண்டு
உடலெனக் குருகுமாலோ எஞ்செய்கேன் உலகத்தீரே.. (890)

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்
பேசிற்றே பேச லல்லால் பெருமையொன் றுணர லாகா
ஆசற்றார் தங்கட் கல்லால் அறியலா வானும் அல்லன்
மாசற்றார் மனத்து ளானை வணங்கி நாமிருப்ப தல்லால்
பேசத்தான் ஆவ துண்டோ பேதைநெஞ் சேநீ சொல்லாய்.. (893)


கங்கையிற் புனித மாய காவிரி நடுவு பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்
எங்கள்மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும் 
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே.. (894)


ஊரிலேன் காணியில்லை உறவுமற் றொருவர் இல்லை
பாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ண னேஎன் கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்கமா நகருள்ளானே.. (900)
***


புரட்டாசி மாதம் முழுதும் இயன்ற அளவுக்கு நாம் செய்யும் தான தர்மங்கள் ஏழேழு தலைமுறைகளைக் காக்கும் என்பது ஆன்றோர் வாக்கு...

நாம் செய்யும் தான தர்மங்கள் ஏழேழு தலைமுறைகளைக் காக்கும் என்பது ஒருபுறம் இருந்தாலும் -

வாழும் நாளிலேயே -
நோய்நொடியின்றி நல்லபடியாக வாழ்வதை - நாம் உணரமுடியும்..

இன்றைய கால கட்டத்தில்
நோய்நொடியின்றி வாழ்வதே மிகப்பெரிய வரம்..

உண்ணும் போது ஒரு கைப்பிடி!.. - என்றார் திருமூலர்...

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.. (0036)

அப்புறமாகப் பார்த்துக் கொள்ளலாம் 
என்று எண்ணாமல் நாளும் நல்லறம் செய்க..
வாழ்வின் முடிவில் நாம் செய்த அறமே 
நமக்கு அழியாத நல்லதுணையாகும் 
 என்பது திருக்குறிப்பு..

வாய்ப்பும் வசதியும் இருப்பின்
அற்றார் அழிபசி தீர்த்தல் நல்லது..
வளமும் நலமும் நம்மைத் தேடி வரும்..

வாழ்க வளம் வளர்க நலம்!..
***

8 கருத்துகள்:

  1. படங்கள், பதிவுச் செய்திகள், பாசுரம் ஆகிய அனைத்தும் அந்த அரங்கனைப்போலவும், சூடிக்கொடுத்த சுடர்கொடியாளான அந்த ஆண்டாளைப்போலவும் அழகோ அழகு.

    பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..

      தங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      படங்களையும் திருப்பாசுரப் பதிவினையும் அழகோ அழகு..
      - என்று பாராட்டியதற்கு நன்றி..

      நீக்கு
  2. தெய்வப்பதிவுகளுக்கு தஞ்சையம்பதி வருக எனும் அளவு இறையன்பில் மூழ்கி முத்தெடுக்கிறீர்கள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. அன்பின் ஜி அரிய புகைப்படங்களுடன் விளக்கம் நன்று வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. சூடிக் கொடுத்த சுடர்கொடியாள் படங்கள் அழகு...
    ஆன்மீகப் பகிர்வு என்றால் எங்கள் ஐயாதான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..

      ஏதும் குறையின்றி இன்னும் சிறப்பாக செய்யவேண்டும் என்ற எண்ணமும் மேலிடுகின்றது..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..