வெள்ளி, ஆகஸ்ட் 12, 2016

மீண்டு வாழ்க..

மங்கலகரமாக வரலக்ஷ்மி விரதம் அனுசரிக்கப்படும் நாள் - இன்று..

மகாலக்ஷ்மி பாற்கடலில் தோன்றியவள்.. 

சகல செல்வங்களுக்கும் அதிபதி..


அவளது கடைவிழி நோக்கிற்காக -
கோடானுகோடி மக்கள் தவம் கிடக்கின்றார்கள்..

ஆனாலும்,
அவள் நல்லவர்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை - என்பதான பேச்சு வழக்கு..

உண்மையான ஆன்மீகம் -
பொன் பொருள் போக வைபோகங்களை வைத்து யாரையும் மதிப்பிடுவதில்லை..

நோய் நொடி இல்லாத வாழ்வே சிறந்த வாழ்வு..
கடன் கப்பி இல்லாத வாழ்வே உயர்ந்த வாழ்வு!..

பொன் பொருள் போக வைபோகங்களை அருளும் மஹாலக்ஷ்மி தான் -
நோய் நொடி இல்லாத - கடன் கஷ்டம் இல்லாத வாழ்வையும் அருள்கின்றாள்..

இன்றைய சூழ்நிலையில் - நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாகக் கொண்டாடப்படுகின்றது..

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - என்ற பொன்மொழி நூறு நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது..

தாத்தாவின் காலம் இயற்கையின் மடியினில் ஓடி விளையாடிய வாழ்க்கை திசை மாறிப் போயிற்று..

ஒரு தலைமுறைக்கு இயற்கையோடு இயைந்த வாழ்க்கை என்றால் என்ன என்றே தெரியாமல் போனது விசித்திரம்..

நெற்கதிர் எப்படியிருக்கும் என்று தெரியாத பிள்ளைகள் தமிழகத்திலேயே ஏராளம்.. ஏராளம்!..

தாய் மடியூட்டும் கன்றினைக் கண்டிருக்கின்றார்களா?.. - எனில், அதுவும் இல்லை..

கொல்லைப் புழக்கடையில் மண்டிக் கிடக்கும் குப்பை மேனியைத் தெரியாது..
தும்பையைத் தெரியாது.. தூதுவளையைத் தெரியாது..

துளசியை மட்டும் தெரியும்..

பெருமாள் கோயில் புளியோதரையின் புண்ணியத்தினால் -

துளசி..ன்னா செடி.. துளசிச் செடி..
நீங்களாக வேறெதையும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.. 

கரிசலாங்கண்ணியைத் தெரியாது.. கல்யாண முருங்கையைத் தெரியாது..

பொன்னாங்கண்ணியைத் தெரியாது.. புளிச்ச கீரையைத் தெரியாது..

அங்கும் இங்கும் ஏகத்துக்கு ஓலங்கள்..

அரிசி ஆபத்து.. சர்க்கரை ஆபத்து!.. 
அதைத் தின்னாதே.. இதைத் தின்னாதே!..
ஆற்று நீரில் குளிக்காதே.. கிணற்று நீரைக் குடிக்காதே!..

இதெல்லாம் வயதான முதியவர்களுக்கான அறிவுரை இல்லை..

வளரும் பிள்ளைகளுக்கானவை.. 
கருவில் உயிரைத் தாங்கியிருக்கும் இளம் பெண்களுக்கானவை..

அந்த அளவுக்கு உணவை - நீரை - காற்றை - கெடுத்து வைத்திருக்கின்றது நவீன விஞ்ஞானம்..

ஏன்?.. எதற்காக!..

ஆசை.. பேராசைக்காக!.. 

அற்ப வாழ்வைக் கொண்ட மனிதனின் அகோரப் பசிக்காக!

எல்லாம் இயற்கை என்பதை மறந்த மனிதன் - ஏதேதோ செய்தவனுக்கு உடந்தையாய் இருந்து தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டான்..

தன்னை - தனது பாரம்பர்யத்தைத் தொலைத்தான்..

கோழியை அழித்தான்... ஆடு மாடுகளை ஒழித்தான்..

வயல்வெளிகளில் மண்ணையும் கல்லையும் போட்டு நிரவினான்..

வாய்க்காலை - குளத்தை - கேணியை - ஏரியை - கெடுத்து அழித்தான்..

இன்றைக்கு ஏதோ ஒரு பாட்டிலில் யாரோ அடைத்துக் கொடுத்த தண்ணீரைத் தூக்கிக் கொண்டு திரிகின்றான்..

தவித்த வாய்க்குத் தண்ணீர் புண்ணியம்!..  - என்பதெல்லாம் போய் -

அவர்கள் பார்த்தால் தண்ணீர் கேட்டு விடுவார்களோ?.. - என்று அஞ்சி
அந்த பாட்டிலை இடுக்கில் ஒளித்துக் கொள்கின்றான்...

ஆர்கானிக் ரைஸ் கிடைக்குமா?.. கம்பு கிடைக்குமா?.. ராகி கிடைக்குமா?..
என்ன விலையானாலும் சரி!..

இவனுங்களுக்கெல்லாம் - அரிசி கேழ்வரகு என்று வாயில் வராது!..

இந்த சமுதாயம் தான் ஏளனம் செய்வதில் முன்னுக்கு நின்றது ஒரு காலத்தில்!..

பள்ளி நாட்களில் பழைய சோறும் மாவடுவும் கொண்டு சென்றால் - கடுமையான நக்கலும் நையாண்டியும் தான்!..

பசங்களா இருந்தா - டேய்.. ஐஸ் பிரியாணி வர்றானுங்க!..

பொண்ணுங்களா இருந்தா - ஏய்.. ஐஸ் வர்றாளுங்க!..

ஏளனத்திற்கு மனம் கூனிக் குறுகியது..

தாயிடம் வம்பு செய்து கொண்டு -
இட்லி தோசைக்காக ஒற்றைக் காலில் நின்ற நாட்கள் எல்லாம் -
இப்போது கண்ணீரை வரவழைக்கின்றன..

நாற்பத்தைந்து வருடங்களுக்குப் பின் -
இன்றைக்கு இட்லி தோசை தின்னலாம்!..

- என்று, மனதில் ஆசை எழுந்து சோற்றுக் கடைக்குள் நுழைந்தால் -

அடே!.. உனக்கு அதெல்லாம் ஆகாதுடா.. சக்கரைடா!.. ஆபத்துடா!.. விலகுடா!..

அலறியடித்துக் கொண்டு வருகின்றது - நாகரிக விஞ்ஞானம்..

நான் ஒரு தவறும் செய்ததில்லையே?..

அதெல்லாம் அப்படித்தான்..
நீ தவறு செய்யாவிட்டாலும் கூட தண்டனை உண்டு..
தவறாக விளைவிக்கப்பட்டவற்றை உண்டாய்!.. குடித்தாய்!..
அனுபவி.. ராஜா அனுபவி!..

அடக் கஷ்ட காலமே!..
நுங்கை வெட்டினவன் தப்பி விட்டான்..
நோண்டித் தின்னவன் மாட்டிக் கொண்டேனே!..

தெருவுக்குத் தெரு மருந்துக்கடைகள்.. வீட்டுக்கு வீடு நோயாளிகள்!..

பாரம்பர்யத்தை நான் தொலைக்கவில்லை..
ஆனால் அப்படிச் செய்த கூட்டத்திற்குள் நானும் ஒருவன்..

கறந்த சூட்டுடன் நுரைத்துத் ததும்பிய பாலைக் குடித்த நாட்களெல்லாம் கனவுகளாய்க் கரைந்து போய் விட்டன...

ஆறு மாதத்திற்குத் தகும்..  -  என, முத்திரையிடப்பட்ட பால் இருக்கின்றது..

இஷ்டம் என்றால் குடிக்கலாம்.. இல்லை..
கஷ்டம் என்றால் பேசாமல் போகலாம்..

பாலைக் காய்ச்சி உறை ஊற்றி - தயிராக்கிக் கடைந்து வெண்ணெய் திரட்டி அதை உருக்கி முருங்கையிலை போட்டு முறுக்கி நறுமணம் மிக்க நெய்
எடுத்ததெல்லாம் - நம்முடைய பாட்டிகளின் காலத்தில்..

இப்போது பாலில் இருந்து நேரடியாக வெண்ணெயையும் நெய்யையும் பிரித்தெடுக்கின்றது - நவீன விஞ்ஞானம்...

பாரம்பரிய விதைகள் அகற்றப்பட்டன.. அழிக்கப்பட்டன..

முளைப்புத் திறனற்ற தான்யங்கள் - காய்கள் - கனிகள்..

இவைதான் இன்றைக்கு சந்தைப்படுத்தப்படுகின்றன...

இதைத் தின்று விட்டு நல்லதெல்லாம் நடக்க வேண்டும் என்றால் -

எப்படிங்க நடக்கும்!..

தான்ய லக்ஷ்மி - என்பதன் அர்த்தம் எல்லாருக்கும் தெரியும்..

சாகம்பரி!.. -  என்பதும் தேவியின் திருப்பெயர்களுள் ஒன்று...

ஸ்ரீ ஆதிசங்கரர் - சாகம்பரி என தேவியைக் குறித்துப் போற்றுகின்றார்..

ஒருசமயம் துர்க்குணம் கொண்ட அசுரன் ஒருவனிடமிருந்து உலக மக்களைக் காப்பதற்காக -

கலைமகள், அலைமகள், மலைமகள் - எனும் முப்பெருந்தேவியரும் ஓருருவாகினர்..

அப்படித் தோன்றியவள் சாகம்பரி தேவி..

சாகம்பரி - காய்கனி அலங்காரம்
சாகம்பரி - பச்சைப்பசும் காய்கனிகளைத் தனது திருமேனியில் கொண்டவளாக ஆயிரங்கண்களுடன் தோன்றினாள் என்பது திருக்குறிப்பு..

அந்த சிறப்பினைத்தான் ஆலயங்களில் அம்பிகைக்கு -
காய்கனிகளைக் கொண்டும் அலங்கார ஆராதனை செய்யப்படுகின்றது..

அந்தப் பெருமைக்கு அவசியமே இல்லாமல் -
அனைத்தும் நஞ்சாகிப் போயின - மரபணு மாற்றத்தினால்!..

மரபணு மாற்றம் நமக்களித்த பரிசுதான் - புதுப்புது வியாதிகள்!.. மருந்துகள்!..

கேட்டால் - சத்து இருக்கின்றதே!.. என்கின்றான்..

அவனுக்கு வாலாட்டிக் கொண்டு அப்படியும் இப்படியுமாக நரிகள் சில!..

இவனுங்க பார்த்தானுங்களா?.. அதுக்குள்ளே சத்து இருப்பதை...

சத்து இருக்கிற அதையெல்லாம் தின்று தீர்க்கின்ற மேலை நாடுகளில் நோயெல்லாம் தீர்ந்து மருத்துவ மனைகளெல்லாம் பஜனை மடங்களாகப் போயினவா?..

எதிர்த்து கேட்டால் சமூக விரோதி.. - என்கின்றான்..

சில வருடங்களுக்கு முன் செயற்கைக் கோழிகளைத் தின்பதால் ஆண்மைக் குறைவு என்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது..

உடனே -

அப்படியெல்லாம் இல்லை!.. - என்று திரைத் தாரகைகளைக் கொண்டு செயற்கைக் கோழிக் கறிக்கு ஆதரவாக வீதியெங்கும் பிரச்சாரம்..

செயற்கைக் கோழிக் கறியின் மகிமையை -
இங்கே அரபு நாட்டில் வந்து பார்க்க வேண்டும்..

தண்ணீரைக் குடித்து விட்டு தரையில் தூங்கிய
அந்த காலத்தில் வீடெங்கும் மழலைச் செல்வங்கள்..

நாகரிகம் தலைக்கு மேல் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில்
ஊருக்கு ஊர் செயற்கை கருவூட்டல் மற்றும் ஆராய்ச்சி மையங்கள்..

அடச்..சீ!..

இதற்கு ஆதரவாய் அப்படியும் இப்படியும் பேசிக்கொண்டு ஊடகங்கள்..

கால்நடைகளுக்கு செயற்கைக் கருவூட்டல்.. நிறைய பால்.. ஆதாயம்.. - என்றான்..

அடுத்தடுத்த காலகட்டங்களில் பொலி காளைகள் ஒழிந்தன..

இயற்கை இணைவு இல்லாததால் - பசுக்களின் கருவறை பலவீனமானது.. கன்று ஈனும் திறன் குறைந்தது..

கால்நடைகள் கசாப்புக் கடைகளை நோக்கி அணிவகுத்தன..

நாட்டு மாடுகளுக்கு மங்கலம் பாடிய பிறகு -
இன்றைக்கு மனிதனுக்கு என்று கிளம்பியிருக்கின்றது - அறிவியல்!..

நாளைக்கு என்னவெல்லாம் நேரக்கூடுமோ?..

பூஜையறைக்குள்ளும் செயற்கை வாழையிலை நுழைந்து விட்டது...
இயற்கை வண்ணங்களை மிஞ்சிய செயற்கைப் பூந்தோரணங்கள்..

இதனாலெல்லாம் அம்பிகை மனம் மகிழ்ந்து விடுவாளா?..

அவள் பெருங்கருணையுடன் நமக்களித்த சீதனத்தை அழித்து விட்டு நிற்கின்றோம்..

போனால் போகின்றது!.. என்று, அவள் மறுபடியும் வளங்களை வாரித் தந்தாலும் அதை வைத்துக் காப்பதற்கு வகையற்றவர்களாக ஆகிவிட்டோம்..

இயற்கையைப் பேணுங்கள்.. இறைவனைக் காணுங்கள்!.. -  என்றால்,
கொக்கரிப்புச் சத்தம்.. இதெல்லாம் பிற்போக்குகள் என்று!.. 

இறைவன் இருக்கின்றான்!.. - என்பவனுக்கும்
இறைவனே இல்லை!.. - என்பவனுக்கும்

கடைசி நிமிடம் வரை -
ஒரு கவளம் சோறும் ஒரு குவளை நீரும் அவசியமா இல்லையா?..

அந்த சோறும் நீரும் சும்மா கிடைத்திடுமா!..

அவையென்ன இலவசப் பொருட்களா?..

அவற்றுக்கு அடிப்படை ஆதாரமாக இயற்கை வளம் வேண்டாமா!..

அந்த இயற்கை வளத்தின் காரணிகள் சரிவர பொருந்தியிருக்க வேண்டாமா?..

காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்!..

- என்று பாடினாரே மகாகவி..

அதை நாம் சிந்தையில் கொண்டிருக்கின்றோமா?..

பறவைகள் விலங்குகள் வளம் மிக்க மலைகள் கடல் - இவையெல்லாம் ஒன்றிணைந்த இயற்கைச் சங்கிலிக்குள் மனிதன் ஒரு துணுக்கு!..

ஆனால் - இந்த துணுக்கினால் தான் பற்பல பிணக்குகள் ஏற்பட்டுள்ளன..

பிழை நேர்ந்த இடத்தில் தான் - சரி செய்யப்படவேண்டும்..


இயற்கை வளங்கள் எல்லாம் தொலைந்தன - என்றால்,
இரக்கமற்ற மானுடம் தான் அதற்குக் காரணமாக இருக்கும்..

துன்பத்துடன் துவண்டு வாழ்வதல்ல - வாழ்க்கை..
அதிலிருந்து மீண்டு வாழ்வதே வாழ்க்கை..

மீண்டும் வாழ்வதே வாழ்க்கை!..

நாம் மீண்டு வாழ்வோம்!..
மீண்டும் வாழ்வோம்!..

நம்மிடமிருந்தே தொடங்குவோம்..

வரலக்ஷ்மி பூஜையில் இயற்கையைப் பாதுகாப்பதற்கு உறுதி கொள்வோம்..

மஹாலக்ஷ்மியின் வடிவங்களுள் - அற்புதமான திருக்கோலம் எனில்,

கஜ லக்ஷ்மி!..

கஜலக்ஷ்மி - தஞ்சை பெரிய கோயில் ஓவியம்
ராஜ லக்ஷ்மி என்பதும் இந்தத் திருக்கோலத்தைத் தான்..

இத்திருக்கோலத்தில் தேவியின் இருபுறமும் யானைகள் ஆராதிப்பதாக திகழும்..

மஹாலக்ஷ்மியை யானைகள் நீரெடுத்து ஆராதிப்பதை ஸ்ரீ ஆதிசங்கரர் -
கனகதாரா ஸ்தோத்திரத்தில் குறித்தருள்கின்றார்..

இன்றைக்கு - உலக யானைகள் தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது..

முன்பெல்லாம் வீடுகளின் தலைவாசல் நிலையில் கஜலக்ஷ்மியின் திருக்கோலம் பதிக்கப்பட்டிருக்கும்...


நவீன வீடுகளில் அவையெல்லாம் காணக் கிடைக்கவில்லை..

இயற்கைச் சங்கிலியின் மகத்தான அம்சம் யானை என்கின்றனர்...

பாரதத்தின் பண்பாட்டு நிலையில்
பற்பல வழிகளிலும் சிறப்பிக்கப்படுபவை - யானைகள்..

குறிப்பாக தமிழகத்தில் மனித வாழ்வுடன் பிணைந்திருந்தவை யானைகள்..

மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று 
யானை கட்டிப் போரடித்த அழகான தென் மதுரை!..

- என்ற ஒரு சொற்றொடரே போதும்..

ஆனால், இன்றைக்கு நாம் யானைகளைப் பாதுகாக்கின்றோமா?..

அதன் வாழ்விடங்களை அழித்த பெருமை நம்முடையது..

அவற்றின் வழித்தடங்களை ஆக்ரமித்த அடாத செயல் நம்முடையது..

உணவுக்கும் நீருக்கும் பரிதவித்த அந்த ஜீவன்கள்
ஓடும் ரயிலிலும் பேருந்துகளிலும் மின் வேலிகளிலும்
அடிபட்டு பரிதாபமாகச் சாகும்படிக்குச் செய்தது தான் -

இன்றைய நவீன தமிழகத்தின் கொடூரம்..



தமிழகத்தில் யானைகளின் வாழ்விடமாக அமைந்துள்ளது - கோவை மாவட்டத்தின் வனப்பகுதி..

இந்த வனப்பகுதியில் கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 24 யானைகள் இறந்துள்ளன..

அதிலும், கடந்த இருமாதங்களில் மட்டும் பத்து யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன..

இதெல்லாம் - நன்மைக்கான அடையாளங்கள் இல்லை..


நாமும் வாழுவோம்.. சக உயிரினங்களையும் வாழவிடுவோம்!..

வரலக்ஷ்மி பூஜையில் வரம் வேண்டி நிற்கும் போது -
இயற்கையுடன் இயைந்து நிற்கும்படிக்கான 
மனோநிலையினை அருளும்படி வேண்டிக் கொள்வோம்..

பொன்னும் பொருளும் தேவைதான்.. 

ஆனால்,
அவற்றை விட இயற்கை மேலானது..

இயற்கை ஒன்றுதான் 
ஆரோக்கியத்தைத் தரவல்லது.. ஆயுளைத் தரவல்லது..

இயற்கையைப் பேணிக் காப்பது தான்
இறை வழிபாடு..


நமோஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை
நமோஸ்து பூமண்டல நாயிகாயை
நமோஸ்து தேவாதி தயாபராயை
நமோஸ்து சார்ங்காயுத வல்லபாயை..
(கனகதாரா ஸ்தோத்திரம்)
-: ஸ்ரீ ஆதி சங்கரர் :-

ஓம் 
மஹாலக்ஷ்ம்யை ச வித்மஹே
விஷ்ணு பத்ந்யை ச தீமஹி
தந்நோ: லக்ஷ்மி ப்ரசோதயாத்:  
*** 

7 கருத்துகள்:

  1. இயற்கையைப் பேணிக்காக்கும் இறைவழிபாடு..அருமை.

    பதிலளிநீக்கு
  2. //தண்ணீரைக் குடித்து விட்டு தரையில் தூங்கிய
    அந்த காலத்தில் வீடெங்கும் மழலைச் செல்வங்கள்//

    அன்பின் ஜி மனிதன் சிந்திக்க வேணஅட்ய அற்புதமான விடயத்தை சொன்னீர்கள் ஆனால் மனிதன் மறக்கின்றான், மறுக்கின்றான் என்ன செய்வது ?

    //பாரம்பர்யத்தை நான் தொலைக்கவில்லை
    ஆனால் அப்படிச் செய்த கூட்டத்தில் நானும் ஒருவன்//

    வேதனையின் உச்சம் விதியின் வழி

    பதிலளிநீக்கு
  3. உங்கள் பதிவை ரசித்தேன் இறைவழிபாட்டின் அடிப்படையை உணராமல் சடங்குகளில் காலம் கழிக்கும் பலருக்கு சரியான பாடம்

    பதிலளிநீக்கு
  4. உண்மைதான் ஐயா...
    அருமையான பகிர்வு....
    இன்றைய உணவு முறைகளால்தான் அரிதாக கேள்விப்பட்ட புற்றுநோய் இன்று ஆளுக்கு ஆள் வந்துவிட்டது....
    எல்லாம் தொலைத்து விட்டு இப்போ நம்மையும் தொலைத்துக் கொண்டு நிற்கிறோம்....

    அருமையான பகிர்வு...

    பதிலளிநீக்கு
  5. அருமையான பகிர்வு.

    யானைகளின் மரணம் - கொடுமை. அவற்றின் இருப்பிடத்தினை நாம் பிடுங்கிக் கொண்டு விட்டோம்.... :(

    பதிலளிநீக்கு
  6. துளசி என்றால் செடியைதான் நினைத்தேன் ,நீங்கள்தான் இடையில் புகுந்து குழப்பி விட்டீர்கள் :)
    pl.visit>>>http://www.jokkaali.in/2016/08/blog-post_12.html
    கணவனின் சந்தோசம் ,இதற்குத் தானா :)

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..