சனி, ஆகஸ்ட் 27, 2016

மனிதம்

ஏழை ஒருவனை - தனது மனைவியின் சடலத்துடன் பத்து கி.மீ. தொலைவுக்கு  நடத்தி வைத்து பெருமை கொண்டிருக்கின்றது -

ஒடிசா மாநிலத்தின் பவானி பட்னாவிலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை..


மருத்துவ மனையில் வாகன வசதி மறுக்கப்பட்டதால் - காச நோயால் மரணமடைந்த மனைவியின் சடலத்தைத் தோளில் தூக்கிக் கொண்டு,

தனது மகளுடன் பத்து கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்ற செய்தி உலகம் எங்கெங்கும் பரவிக் கிடக்கின்றது...

கலாஹண்டி மாவட்டம் மெல்காரா கிராமத்தைச் சேர்ந்த தானா மஜி என்பவருக்கு இத்தகைய அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது..

காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது மனைவியை - 
மெல்காராவிலிருந்து 60 கி.மீ தொலைவிலுள்ள பவானி பட்னா 
அரசு மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை சிகிச்சைக்காக சேர்த்திருந்தார்..

ஆனால், அன்றிரவே -
அன்புக் கணவனையும் 12 வயதுடைய மகளையும் பரிதவிக்க வைத்து விட்டு தானா மஜியின் மனைவி பரிதாபமாக இறந்து போனார்...

அங்கிருந்து - சடலத்தை தனது ஊருக்கு தனியார் வாகனத்தில் கொண்டு செல்ல வசதியில்லாத தானா மஜி - மருத்துவமனை அலுவலர்களிடம் வாகனத்திற்காக மன்றாடியிருக்கின்றார்..

மெத்தப் படித்து விட்டு பணம் பண்ணுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட மருத்துவமனை ஊழியர்கள் -

படிப்பறிவில்லாத அந்த ஏழைக்கு ஏதொன்றும் நல்லது செய்தார்களில்லை...

பழங்குடியினர் என்று - தானா மஜியை ஏளனமாகப் பார்த்துள்ளனர்..

மனிதர்கள் எல்லோருமே ஆதியில் பழங்குடி காட்டுவாசிகள் தானே!..

அது மறந்து போயிருக்கின்றது - இந்த கற்றறிந்த கசடர்களுக்கு!..



மனம் வெறுத்துப் போல தானா மஜி - விறைத்துக் கிடந்த மனைவியின் உடலைப் பழந்துணிகளைக் கொண்டு மூடி தோள் சுமையாகத் தூக்கிக் கொண்டு - தன் மகளுடன் தனது ஊரை நோக்கி நடந்தார்..

பாமரனாக இருந்த போதும் - புத்தியுடன் நடந்து கொண்டிருக்கின்றார் தானாஜி..

சடலத்தை மருத்துவமனையின் வாசலில் கிடத்தி போராட்டம் அது.. இது என்று கிளப்பியிருந்தால் -

கடுப்புக்குப் பெயர் போன காவல் துறை என்ன வகையான நடவடிக்கையை எடுத்திருக்குமோ தெரியாது!.. கூடவே பதின்ம வயதில் மகள்!..

வியாழன்று Fbல் வெளியான செய்திகள் நெஞ்சைக் குடைந்தன..


தாயைப் பிரிந்த மகள் தகப்பனுக்கு நேரிட்ட கதியை எண்ணி விம்மி அழுதபடி பின் தொடர்ந்தாக செய்தியுடன் வந்த காணொளியைக் காணும் மனநிலையில் நான் இல்லை..

இரண்டு நாட்களாகத் தொடர்வேலை.. செய்தாக வேண்டிய நிர்ப்பந்தம்..

அதற்குள்ளாக, அன்பின் திரு துளசிதரன் அவர்களும் வெங்கட் நாகராஜ் அவர்களும் தங்கள் தளத்தில் வேதனையைப் பகிர்ந்திருந்தனர்..

படிப்பது எதற்காக?..

தான் பெற்ற கல்வியைக் கொண்டு - இல்லார்க்கும் எளியார்க்கும் இயன்றவரை உதவுவதற்காகவே!..

ஆனால் -

கல்வி கடைச்சரக்காகி விட்ட இன்றைய சூழலில் கற்றவர்கள் கடையர்களாகி விட்டனரோ என்றே நினைக்கத் தோன்றுகின்றது...

படித்தவர்களால் இயங்கும் அரசு அமைப்புகளின் அலுவலர்கள் பலரும்
ஏன் இப்படி, பணம் பணம்!.. - என்று பறக்கின்றார்களோ தெரியவில்லை..

இந்த சம்பவம் குறித்து மாநிலத்தின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் -

சடலத்தை எடுத்துச் செல்ல தானா மஜி வாகனம் கேட்ட விவரம் மருத்துவ மனை அதிகாரிகளுக்குத் தெரிந்தவுடன் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் துரதிருஷ்ட வசமாக அவர் சடலத்தைத் தூக்கிக்கொண்டு 10 கி.மீ. தூரம் வரை சென்றுள்ளார்!... 

- என்று கூறியிருக்கின்றார்...

பத்து கி.மீ தொலைவினைக் கடந்த பிறகு தான் உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனம் படம் பிடித்து வெளியிட்டிருக்கின்றது..

அதன் பிறகே - மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு 
தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

பின்னர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து -  அங்கிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள கிராமத்துக்கு அவர்களை அனுப்பி வைத்திருக்கின்றனர்.


உள்ளூர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் -

நான் ஏழை.. வாகனத்துக்கு என்னால் பணம் கொடுக்க இயலாது. அரசு வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று மருத்துவமனை அதிகாரிகளிடம் எவ்வளவோ கெஞ்சினேன். ஆனால், மறுத்துவிட்டனர்..

- என்று, தானா மஜி கூறியுள்ளார்

இத்தனைக்கும் - கடந்த பிப்ரவரி மாதம் தான் அரசு மருத்துவ மனைகளில் இலவச வாகனத் திட்டத்தை ஒடிசாவின் முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்..

அந்த செய்தி - ஏழையாளனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை..

ஆனாலும், மருத்துவமனையின் ஊழியர்களால் - அரசின் உதவித் திட்டம் - அந்த ஏழைக்கு மறுக்கப்பட்டிருக்கின்றது..

படித்தவர்கள் - பாமரர்க்குச் செய்யும் உதவி இது தானா?..

வருவாய்த் துறை, காவல் துறை, கல்வித் துறை, மருத்துவத் துறை - என,
அரசு ஊழியர்கள் பலர் மீதும் ஏதேனும் ஒரு அளவில் குற்றச்சாட்டு.. 

இதற்கு முன்னும் - மருத்துவமனைக்கு வரும் ஏழைகளின் மீது -
குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் ஊழியர்களைக் கண்டதுண்டு.. கேட்டதுண்டு..

ஆனாலும், ஒடிசாவில் மருத்துவமனைக்கு உள்ளேயும் வெளியேயும் நடந்திருப்பது அவலத்தின் உச்சம்..


கையில் காசில்லாதவன் கடவுள்
என்றாலும் கதவைச் சாத்தடி!.. 

இந்த வார்த்தைகள் வேறொரு தளத்தில் - சொல்லப்படுபவை...

அதெல்லாம் - இன்றைய காலகட்டத்தில் வழக்கொழிந்து போனாலும்

ஏழைகளுக்கான சேவை என்பதும் இல்லாமல் ஒழிக்கப்படுகின்றது..

மாவட்ட தலைமை மருத்துவமனை இருக்கின்றதென்றால் - பவானிபட்னா ஓரளவுக்குப் பெரிய நகராகவே இருத்தல் வேண்டும்...

அழுது கொண்டு வரும் மகளுடன் தோளில் சுமையுடன் நடக்கும் ஒருவனை நிறுத்தி -

என்ன.. ஏது?.. - என்று கேட்கக் கூடவா ஒருவருக்கும் மனமில்லை?..

அந்த பத்து கி.மீ தொலைவும் 
ஆள் அரவமற்ற வனாந்திரப் பகுதியா?...

பாலைவனப் பாழ் வெளியா?..

ஊர்களின் நடுவாகச் செல்லும் சாலையில் - அசாதாரணமான கோலத்தில் சென்ற சக மனிதனைக் கண்டும் காணாமல் நின்றவர்களை என்னவென்று சொல்வது?..

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் 
பெற்றான் பொருள் வைப்புழி ..

என்பார் வள்ளுவர்..

அழிபசி - என்று வள்ளுவப் பெருந்தகை குறிப்பிட்டாலும் 
அநாதரவான சூழ்நிலை என்று கூடக் கொள்ளலாம்.. 

அந்நிலையில் சிக்கித் தவிக்கும் எவருக்கும் மனமுவந்து உதவிடுதலே மனிதம்...

அது - ஆங்கிருந்த மக்களுக்கு இல்லாமல் போனது வேதனைக்குரியது..

Courtesy : Nigeria Today
இத்துடன் வேறொரு சம்பவம்..

இறந்து போன மூதாட்டியின் சடலத்தின் இடுப்பில் ஏறி மிதித்து
இரண்டாக ஒடித்து மூட்டையாகக் கட்டித் தூக்கிச் சென்ற அவலமும்
அதே - ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது...

வேதனை மிகும் அந்த விவரத்தை இந்த இணைப்பில் காணலாம்..

இதோ - தமிழகத்திலிருந்து ஒரு செய்தி!..

துக்கம் நிகழ்ந்த வீட்டுக்கு அரசு வழங்கிய நிதியினைக் கொடுப்பதற்கு லஞ்சம் கேட்டிருக்கின்றார் - கிராம நிர்வாக அலுவலர்..

அந்த விவரம் - இந்த இணைப்பில்.. 


மனிதன்..
எய்த வேண்டிய அடுத்த நிலை புனிதன்..

அந்த நிலைக்கு அவனை ஏற்றுவதற்குத் தான்
எத்தனை எத்தனையோ நீதி நூல்கள்..

அவற்றைப் படித்தாலும் படிக்கா விட்டாலும்
கண் முன்னே மகத்தானவர்களின் சரித்திரங்கள்..

அத்துடன் கறைபட்டு மாண்டவர்களின் கதைகளும்..

புனிதன் ஆகாவிட்டாலும் குறைவில்லை..
மனிதன் கீழாகி மிருகமாகி விடக்கூடாது..
***

15 கருத்துகள்:

  1. வெட்கப்படவேண்டிய நிகழ்வு. மனிதத்தைத் தொலைத்துவிட்டு எதனைச் சம்பாதிக்கப் போகிறோமோ, வேதனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அறியாமையில் மூழ்கிக் கிடப்பவர் யார் என்று தெரியவில்லை..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  2. மனித நேயம் இன்னும் இருக்கிறதா ?வேதனையின் உச்ச கட்டம்.
    மனிதனுக்கு வரும்
    சோதனைகளின் உச்ச கட்டம்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      படித்தவர்கள் இழைக்கும் துரோகங்கள் தான் எத்தனை.. எத்தனை?..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  3. மனிதம் மரித்துப் போய்விட்டதய்யா....
    கொடுமையான நிகழ்வுகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..

      படித்ததனால் ஏற்பட்ட அகம்பாவத்தால் ஏற்பட்டது - அது..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  4. மனிதம் மரித்துப் போய்விட்டது ஐயா
    மரித்துப் போய்விட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      சக மனிதர்களை மதிக்கத் தெரியாத பயனற்ற கல்வியைக் கற்றவர்கள்..
      பொருளாசை கொண்ட புல்லர்கள்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  5. மனிதத்தை தொலைத்து விட்டு
    மனிதம் தேடுகிறோம்....

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  7. மனைவியை கட்டும்போது முதல் மருத்துவ மனை ஆம்புலென்சில் ஏற்றும்வரை படங்கள் யாராலோ எடுக்கப்பட்டிருக்கிறது அவரே ஒரு வேளை சம்பந்தப் பட்டவர்களுக்கு அறிவித்தாரோ என்னவோ. இருந்தாலும் இந்த சோகம் தவிர்க்கப்பட்டு இருக்கவேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      வரும் வழியில் படம் எடுத்தவர்களாலேயே விஷயம் வெளியில் பரவியது..

      அதுவரைக்கும் கடந்து வந்த பாதையில் வேடிக்கை பார்த்தனரே அன்றி வேறெதுவும் செய்யவில்லை என்பதே கொடுமை..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  8. மரித்து போனது மனிதம்.
    தொலைக்காட்சியில் காட்டிய போதே மனம் வருத்தம் அடைந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      நான் FB ல் கண்டேன்.. சில விநாடிகளுக்குள் மனம் கலங்கி விட்டது..
      வேடிக்கை பார்த்த மனிதர்களை என்னென்று சொல்வது?..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..