செவ்வாய், மே 31, 2016

பகை எனும் புகை

இன்று சர்வதேச புகையிலை எதிர்ப்பு நாள்!..


மனிதனை அழிப்பதற்கு மனிதனால் உருவாக்கப்பட்டவை -
புகையிலை, பீடி, சுருட்டு, சிகரெட், பான்பராக், குட்கா - போன்றவை!..

எந்த ரூபத்தில் பயன்படுத்தினாலும் -
வாய், கன்னம், தொண்டை, நுரையீரல், கல்லீரல், உணவுக்குழாய்,
வயிறு, சிறுநீரகம் - என முழு உடலையும் சீரழித்து சிதைத்து -
சிதைக்கு அனுப்பி வைக்கும் வல்லமை பெற்றது - புகையிலை!..

புகைப்பவர்கள் பத்து பேரினுள் - இருவர் பெண்கள் என்கின்றது உலக சுகாதார நிறுவனம்!..

தற்காலத்தில் - ஆண்களுக்கு இணையாக பெண்களும் புகைப்பிடிக்கத் தொடங்கியிருப்பது - குறிப்பிடத்தக்கது...

புகைப் பழக்கமுடைய பெண்ணுக்கு - 
கருச்சிதைவும் கர்ப்பப்பை கோளாறுகளும் ஏற்படுகின்றன.. 
கருவிலுள்ள இளம் சிசுவும் வெகுவாகப் பாதிப்படைகின்றது

ஆண் பெண் யாராக இருந்தாலும் - சிகரெட் புகைப்பதனால் -
பக்கவாதம், ஒவ்வாமை, காசநோய், மலட்டுத் தன்மை, மாரடைப்பு 
- ஆகிய அதிரடி நோய்கள் சர்வநிச்சயம்!..

இவற்றுக்கும் மேலாக -

வாய், நுரையீரல்,சிறுநீரகம் - முதலான உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படுவது உறுதி!..


புகைப் பழக்கம் உள்ளவர்களால் சுற்றுச்சூழல் கெடுகின்றது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புகைப்பழக்கத்தால் நுரையீரலில் புற்று நோய் ஏற்படுகின்றது என்று இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட ஆண்டு - 1950.


புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் 
வருடந்தோறும் பல லட்சம் பேர் பரலோகத்திற்குப் 
பயணமாகின்றார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.





புகையாளியிடமிருந்து தள்ளி நிற்பதை விட தூரமாகச் சென்று விடுவது   நலம்..

ஏனெனில் - ஒரு புகையாளியைச் சுற்றி நாற்பது அடி தூரத்திற்கு சுற்றுச்சூழல் மாசடைகின்றது...

சிகரெட் புகைத்த பின் - புகையாளியின் இரத்தத்திலுள்ள ஆக்ஸிஜன் இயல்பு நிலைக்குத் திரும்புதற்கு எட்டு மணி நேரமாகின்றது..

சிகரெட் புகையில் அடர்ந்திருக்கும் கார்பன் மோனாக்ஸைடு மிகக் கொடியது.
கார்பன் மோனாக்ஸைடு பலவிதமான நோய்களுக்கு அடிப்படை..

- என்றெல்லாம் சொல்கின்றார்கள் .

என்றாலும் திருந்துவோரைக் காணோம்!..

புகையாளிகளின் நுரையீரல் கெட்டுப் போய் விடுகின்றது.
அதனால் சுவாச பிரச்னைகள் - மற்றவர்களுக்கும் பரவுகின்றது.

எனவே பச்சிளங்குழந்தைகளை புகையாளியிடம் அனுமதிக்காமல் இருப்பது சாலச் சிறந்தது.

எதையும் அறியாமல் புகையின்பத்தில் (!?) ஆழ்ந்து
தமக்குத் தாமே தீ மூட்டிக் கொள்வதால் -

புகையாளிகள் தம்மைச் சேர்ந்தவர்களையும்
பெருந்துன்பத்துக்கு ஆளாக்கி விட்டு போய்ச் சேருகின்றனர்...



புகையிலையினால் என்ன நன்மை என்பது இதுவரையில் தெரியவில்லை..
புகையிலை விளைவிக்கும் கேடுகள் பற்பல..

புகையிலையினுள் புதைந்திருக்கும் நிகோடின் புகைப்பவர்களைப் புதைத்து விடுகின்றது.

எரிந்து புகையும் சிகரெட் புகைப்பவனையும் எரித்து விடுகின்றது.

காசு கொடுத்து புகையிலைப் பொருட்களுடன் புற்று நோயையும் வாங்குவதில் படித்தவனும் படிக்காதவனும் சிறப்பிடம் பெறுகின்றனர்.

ஒவ்வொரு சிகரெட்டும் - புகைப்பவனின் வாழ்நாளில்
மகத்தான 18 நிமிடங்களைக் குறைக்கின்றது என்பது கூடுதல் செய்தி..

புகைப்பவனை நவீன எரிமேடைக்கு அனுப்பி வைப்பதைத் தவிர,
வேறொரு நல்லதையும் - புகையிலை செய்வதில்லை..



புகையிலையின் தாயகம் - தென் அமெரிக்கா!..

இதன் காலம் கி.மு. 6000 என்கின்றார்கள்..

இந்த கொடூரத்தை - அங்கிருந்த பழங்குடி மக்களிடமிருந்து கைப்பற்றி - ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்திய பெருமை -

இந்தியாவுக்குக் கடல் வழி கண்டு பிடிக்கின்றேன்!.. - என்று கிளம்பி,
வழி தவறிப் போன கொலம்பஸுக்கு உரியது.

அந்தவகையில் கொலம்பஸ் செய்த கேடுகளுள் இதுவும் ஒன்று என்பர்.

நமது நாட்டில் இந்த புகையிலையை அறிமுகம் செய்தவர்கள் - ஐரோப்பியர்.

ஆயினும், அக்காலத்திலேயே - புகையிலையின் தீங்குகளை அறிந்திருந்தனர்.

அதனால் தான் - மற்ற நாடுகளிலும் பரப்பி விட்டார்கள் போலிருக்கின்றது!..



புகைப் பழக்கத்தை விட்டுத் தொலைப்பதற்கு உறுதுணையாக இருப்பது - உலர் திராட்சை.

அவ்வப்போது உலர் திராட்சையை சுவைப்பதனால் புகைக்க வேண்டும் என்ற உணர்வு கட்டுப்படுகின்றது - என்றும் 

புகைப்பதால் இரத்தத்தில் கலக்கும் நிகோடினை - உலர்திராட்சை கரைத்து விடுகின்றது - என்றும் கண்டறிந்திருக்கின்றனர்...



உலக அளவில் -
ஒவ்வொரு எட்டு விநாடிக்கும் ஒரு மனித உயிரை - 
மயானத்திற்கு அனுப்பி வைக்கின்றது - புகையிலை..

இந்தியாவில் -
ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ ஐந்து லட்சம் பேரை - 
தின்று தீர்க்கின்றது - புகையிலை...


சென்று சேர்ந்தாலும் சரி.. 
வந்து சேர்ந்தாலும் சரி!..
அழித்து ஒழிப்பது சினம்!..

அத்தகைய சினத்துடன் 
சரியாசனத்தில் அமர்ந்திருப்பது - புகை!..

புகை நல்வாழ்வுக்குப் பகை!..

நம் வாழ்வு நம் கையில்!..
வாழ்க நலம்!..
* * *

15 கருத்துகள்:

  1. சிறப்பான பகிர்வு. எத்தனை உயிர்களைக் குடித்து விட்டது இப்புகையிலை...... ஆனாலும் அதன் அகோரப் பசி அடங்கவே இல்லை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      புகையிலையை மறத்தல் காலத்தின் கட்டாயம்..
      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. பயனுள்ள பதிவு. அண்மையில் இயக்குநர் விசு தான் இந்த பழக்கம் கொண்டிருந்ததைப் பற்றியும், அதன் பாதிப்பினைப் பற்றியும் பேசியிருந்தார். புகையிலிருந்து விலகியிருப்பது நல்லது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      புகையிலையில் இருந்து விலகியிருப்பதே நல்லது..
      தங்கள் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. புகை தவிர்ப்போம்
    மிகவும் பயனுள்ள பதிவு ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  4. மிகவும் அதிகமாகவே பயமுறுத்துகிறீர்கள் புகை பிடிப்போர் உடல் நலம் கெட வாய்ப்பு அதிகம் தான். என் மாமனார் புகை குடி இரண்டு பழக்கங்களும் கொண்டவர் 86 வயதில் இறந்தார் எந்த நோயுமில்லாமல். நானே என் 15 வயது முதல் 56 வயது வரை புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவனாக இருந்தேன் புகைப் பிடிப்பதை நிறுத்த மனோதிடம் வேண்டும் ஒரு நாள் அறவே விட்டொழிக்கவும் பின் அதையே கடை பிடிக்கவும் திடம் வேண்டும் சிறிது சிறிதாகக் குறைத்து நிறுத்துவது ஏறத்தாழ முடியாத செயல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      புகையிலையை விட்டொழித்தல் மிக சிரமம் தான்..
      இருப்பினும் விட்டுவிடுவது நல்லது தானே..

      தங்கள் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. புகை எனும் பகையாக இருந்திருக்க் வேண்டுமோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் மீள்வருகைக்கு மகிழ்ச்சி..
      தலைப்பை மாற்றித் தான் வைத்தேன்..
      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. மிகவும் பயனுள்ள விடயங்களை தங்களது பாணியில் அழகாக விளக்கினீர்கள் ஜி இதை நம்புவோர் வாழ்க நலம் இல்லையேல் ???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      புகையிலை அவசியமில்லாத ஒன்று..
      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. அருமையான பதிவு.
    நல்ல விழிப்புணர்வு பதிவு.
    எத்தனை பேர் பாதிக்க படுகிறார்கள் என்று சொன்னாலும் கேட்பது இல்லை . அவர்களாய் திருந்தினால்தான் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      புகையிலை அவசியமில்லாத ஒன்று.. எத்தனை ஆயிரம் தடவை எடுத்துச் சொன்னாலும் கேட்பவர்கள் மிகவும் குறைவு தான்..
      தங்கள் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  8. புகை அரக்கன் தான். மாயப்பிசாசும்தான். எத்தனை உயிர்களைப் பறுத்துள்ளது, இன்னும் பறித்துக் கொண்டிருக்கின்றது விடாது கருப்பு போல பற்றிக் கொண்டு.

    இதற்கு அடிமையானவர்கள் தங்களைத் திருத்திக் கொள்வது போலத் தெரியவில்லை. அவர்களாகத் திருந்தினால்தான் உண்டு

    மிக மிக அருமையான தகவல்களுடன் வாசகங்களுடன் ஒரு சிறப்பான பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      புகையிலையின் ஆபத்தை உணர்ந்து அவர்களாகவே திருந்தினால் தான் உண்டு..
      தங்கள் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..