சனி, மே 07, 2016

மழைச் சாரல் 2

தூறல் நின்று போனாலும் துவண்டு போகவில்லை..
சாரல் நின்று போனாலும் சரிந்து போகவில்லை..

மழை பெய்வது நின்று போயிற்று..

அவ்வளவு தானே!..
இதற்கெல்லாம் இத்தனை வருத்தம் கொள்ளலாமா!..

மலருக்குத் தென்றல் பகையானால் அது
மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு!..


எப்படியேனும் ஒரு நன்மை துளிர் விடாதா!..

இப்படியாக - பொன் அளந்த புத்தூரின் மக்கள்
ஒவ்வொருவரும் தம்மைத் தாமே தேற்றிக் கொண்டனர்..

ஆனாலும் - அவர்களுக்குள்ளேயே அச்சம்!..

எத்தனை காலத்துக்குத் தாக்குப் பிடிக்க முடியும்?..
ஒரு நாளா இரண்டு நாளா!.. பன்னிரண்டு வருஷம்!..
இன்னும் முழுதாக நூற்று முப்பத்திரண்டு மாதங்கள்!..


இங்ஙனமாய் சாபம் ஒன்று கொடுத்ததில்லையே..
அடுத்திருந்த சாமி கூட தடுக்கவில்லையே!..
கூட இருந்து எங்களையும் காக்கவில்லையே..
கொடிய சாபம் தீர்க என்று நோக்கவில்லையே!..

மாமா!..

சொல்லுங்கள் மருமகனே?..

பாட்டு எல்லாம் நன்றாகத் தான் இருக்கின்றது.. ஆனாலும் பாட்டு பாடினால் போதுமா?.. பஞ்சம் தீர்ந்து விடுமா!..

பஞ்சத்தைத் தீர்ப்பதற்கு மூளை வேண்டும் ஐயா!..

அதற்கெல்லாம் நம்மிடம் வசதி இல்லை!..

சரி.. அது கிடக்கட்டும்.. அதோ அங்கே - மயிலைக் காளைகளுடன் சென்று கொண்டிருப்பவர் காரை நாட்டுப் பெருங்கூத்தன் தானே!..

ஆமாம்.. அவரே தான்!..

நான் கூப்பிட்டதாக அழைத்து வருக!..

சற்றைக்கெல்லாம் - பெருங்கூத்தன் அருகில் வந்து விட்டார்..

மயிலைக் காளைகளைப் பற்றியிருந்த அவருடைய தோளில் கலப்பை, நுகத்தடி, பூட்டாங்கயிறு.. இடுப்பு மடிப்பில் தாம்பூலப் பெட்டி!..

என்ன கூத்தனாரே.. நலமா!..

பூங்குளத்து சாத்தனாரே!... தாங்கள் அருகில் இருக்கையில் நலத்திற்கென்ன குறைவு?.. தம்முடைய பாட்டெல்லாம் பலமாகக் கேட்டது!..

தாம் மட்டும் என்னவாம்!.. நாமிருவருமே ஏடும் எழுத்தாணியும் கொண்டு கொன்றை மரத்துக் குருசாமியிடம் பயின்றவர்கள் தானே!.. பழையன எல்லாம் மறத்தலின் பொருட்டோ!...

உள்ளது.. உள்ளது!.. அந்தக் காலம் மீளவும் நமக்குக் கிட்டுமோ?.. ஏக்கம் தான் மிச்சம்!..

இருக்கட்டும்.. கூத்தனாரே.. உழவையும் தொழிலையும் மறந்து விட்டு ஊரே கிடக்கும் போது நீர் மட்டும் கலப்பையைச் சுமந்து கொண்டு போவது எங்கே?..


மாவடிக் கொல்லையை உழுது போடத்தான்!.. ஐந்து வேலியாயிற்றே.. தரிசாகப் போடுதற்கு மனம் வரவில்லை!.. பெரிய பிள்ளைகள் இருவரும் ஏற்றம் கட்டி இறைக்க - மானாவரியாய் சோளம் விதைக்கலாம் என்று!..

நீர் எல்லாம் அறிந்திருந்தும் இப்படிப் பேசுகின்றீரே.. சுட்டெரிக்கும் வெயிலில் பச்சை மரம் பற்றிக் கொண்டு எரிகின்றது.. நீர் சோளம் விதைப்பது எங்ஙனம்?..  பஞ்சம் உற்ற காலத்தில் தானியங்களை வீணாக்கலாமோ?.. என்னதான் ஏற்றங்கொண்டு இறைத்தாலும் நாலு துளியாவது மழை வீழ வேண்டாமா!..

விழத்தான் வேண்டும்!..

அப்படி இருக்கையில் கையில் இருக்கும் தானியங்களை எல்லாம் - கொடும் வறட்சியாகி விட்ட இந்த காலகட்டத்தில் உழுது விதைத்துப் பயிராக்குவேன் என்கின்றீரே?..

..... ..... ..... ..... .....!..

புத்தியைக் கொண்டு பிழைக்கப் பாரும் கூத்தனாரே!..

அதனால் தான் காலையிலேயே - காளைகளோடு கிளம்பி விட்டேன்!...

என்னது?.. புத்தியைக் கொண்டு பிழைக்கின்றீரா!... ஏன் ஐயா.. இதுவரைக்கும் நான் சொல்லியதெல்லாம் சரி தானே .. யாதொரு பிழையும் இல்லையே!..

இல்லை... சொல்லியதெல்லாம் சரிதான்!...

பிறகு நீர் புத்தியைக் கொண்டு பிழைப்பதாகக் கூறியது எங்ஙனம்?...

என் அப்பனும் பாட்டனும் முப்பாட்டனும் உழைத்துப் பிழைத்ததெல்லாம் இந்தப் பூமியில் தான்.. ஓய்வு என்று ஒரு நாளும் இருந்து அறியோம்!...

உமக்கு மட்டும் என்ன?.. இவ்வூரில் எல்லாருக்கும் அப்படித் தானே!..

மேழி பிடிப்பதை என் ஐயனிடம் இருந்து கற்றுக் கொண்டதிலிருந்து ஒரு நாளும் மறந்து இருந்ததில்லை.. உழவைத் துறந்து இருந்ததும் இல்லை!..

அதற்கு?..

ஏதோ சாமியார்.. சாபம்.. என்றெல்லாம் நினைத்துக் கொண்டு வீணாக இருந்து விடலாகுமா!.. உழவை மறந்து விடலாகுமா?..

அதெப்படி?.. கருவில் உருவேறியது கல்லாமல் பாகம் படுமே!.. 
கை வந்த கழனித் தொழிலும் கை விட்டுப் போகுமோ!..

தொழில் வேண்டுமானால் மறந்து போகாமல் இருக்கலாம்.. 
ஆனால் - தொழில் நுட்பம் மறந்து போகுமே!...

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் - ஆலமரத்து மேடையில் அமர்ந்திருந்த பூங்குளத்துச் சாத்தானார் திடுக்கிட்டுக் கீழே குதித்தார்..

அடுத்த தலைமுறைகளுக்குத் தொழிலால் என்ன பயன்!.. 
தொழில் நுட்பம் அல்லவோ வாழ்விப்பது!..

மரம் சாய்ந்து போனால் அடுப்பிற்கு ஆகும்!.. 
மனம் சாய்ந்து போனால் எதற்கு ஆகும்?..

மழை வராது என்று நினைத்து மேழியை ஒரு மூலையில் போட்டு விட்டால் மீண்டும் மழை வரும் போது அது அங்கே இருக்காது..



சித்திரமும் கைப் பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்!.. அதுபோல 
காளைகளின் பின்னே நடந்த நடையும் 
நடைப் பழக்கம் அல்லவா!..

மழை இல்லை என்று முடங்கிக் கிடந்தால் 
மண் மகள் நம்மைக் கண்டு ஏளனம் செய்ய மாட்டாளா?..

சாத்தனாரே!.. மழை வரட்டும்.. வராமல் போகட்டும்!.. 
சோழ நாட்டு உழவர் தம் செல்வத்துள் செல்வம் மேழிச் செல்வம்!.. அதனை ஒரு மூலையில் கிடத்தி வைக்க என் மனம் ஒப்பவில்லை.. 

உழைப்பவன் ஓய்ந்து கிடந்தால் உழவும் தொழிலும் மறந்து போகுமே.. மடிந்து போகுமே.. மறைந்து போகுமே!.. 

நாளை யாரேனும் இவ்வழியே வந்து உண்ணக் கொடுங்கள் என்று கேட்டால் அவருக்கு உணவை கொடுக்க இயலவில்லை ஆயினும் உழவைக் கொடுக்க வேண்டாமா!..

அதற்காகவாவது உழவை முன்னெடுத்துச் செல்லுதல் வேண்டாமா!..

பூங்குளத்து சாத்தனார் - பெருமிதம் மிக்கவராக
காரை நாட்டுப் பெருங்கூத்தனாரை ஆரத் தழுவிக் கொண்டார்..

காரை நாட்டுப் பெருங்கூத்தனாரின் கண்களில் இருந்து வழிந்த நீர்
மண்ணில் விழுந்ததும் - நிலமகளின் திருமேனி சிலிர்த்தது..
* * *


அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ஆலமரத்துப் பிள்ளையார் -
ஆனந்தம் கொண்டு அண்டம் எங்கும் பரவி பெருங்குரலெடுத்துப் பிளிறினார்..

பாற்கடலில் துயிலாமல் துயின்று கொண்டிருந்த ஸ்ரீ ஹரிபரந்தாமன் மெய் சிலிர்த்தான்..

அது சரி.. முனிவரின் சாபத்திற்காக நானும் பாஞ்ச சன்னியத்தை முழக்காமல் இருந்தால் எனக்கும் அல்லவோ பழி வந்து சேர்ந்திருக்கும்!..

அந்த நொடியில் வைகுந்தத்திலிருந்து சங்க நாதம் கிளர்ந்தெழுந்தது..

அதே விநாடியில் திருக்கயிலாய மாமலையிலிருந்து -

டமடம.. டமடம... டமடு.. டமடு.. டம..
டமடம.. டமடம... டமடு.. டமடு.. டம!..

-  என்று எழுந்த உடுக்கை ஒலியால் உலகம் நிறைந்தது..

அதுவரைக்கும் எங்கேயோ உறங்கிக் கிடந்த -

ஆவர்த்தம், சம்வர்த்தம், புஷ்கலா வர்த்தம், சிலாவர்ஷம், துரோணம், காளமேகம், நீலமேகம் -

- எனும் ஏழு மேகங்களும் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தன..

நம் மீது ஏதும் குறை வந்திடக் கூடாது!..

- என, நினைத்த வண்ணம் - பொன் அளந்த புத்தூரின் மேலாகக் கூடி நின்று கொட்டித் தீர்த்து பூமகளின் திருமேனியை நனைத்தன...




நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை என்றபடிக்கு - அவ்வூரின் ஏரி குளங்கள் அனைத்தும் நிறைந்தன..

இதற்கும் மேலாக -
பொன் அளந்த புத்தூரின் மக்கள்
அடைந்த ஆனந்தத்தைச் சொல்லவும் வேண்டுமோ!..  
* * *

முயற்சி
தன் மெய் வருத்தக் கூலி தரும்..

வாழ்க நலம்!.. 
* * * 

7 கருத்துகள்:

  1. அந்த நல்லாரை இங்கே மதுரைக்கு உடனே அனுப்புங்கள் ,வெயில் கொடுமை தாங்க முடியவில்லை ஜி :)

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் ஐயா
    முயற்சி மெய்வருத்தக் கூலிதரும்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  3. மழை சாரல் பதிவு மிக அருமை.
    வாழ்த்துக்கள்.படங்கள் எல்லாம் மிக அருமை.
    முயற்சி செய்யாமல் சோம்பி கிடக்காமல் முனைந்து செயல்பட்டால் இயற்கை, இறைவன் கை கொடுப்பான் என்பது உண்மை உண்மை.

    பதிலளிநீக்கு
  4. அன்பின் ஜி மளைச்சாரலில் நனைந்தேன் அருமையான உரையாடல் முறையில்..... நன்று.

    பதிலளிநீக்கு
  5. மனம் கவரும் மழைச்சாரலாய் எழுத்து நடை....
    நனைந்து ரசித்து... ரசித்து நனைந்தேன் ஐயா...

    பதிலளிநீக்கு
  6. மிகச் சிறப்பாகச் சொன்னீர்கள். சாபத்தினை நினைத்து உழைக்காமல் இருந்தால் எப்படி.....

    பதிலளிநீக்கு
  7. சுட்டெரிக்கும் கடுங்கோடையில் மழைச்சாரல் மனதையும் உடலையும் ஒருசேரக் குளிர்விக்கிறது! சாபத்துக்காக விதியை நொந்து சோம்பிக்கிடக்காமல் உழைப்பைத் தொடர்ந்தால் மேகமும் மனது வைக்கும் என்ற கருத்தை அழகாய் மனதில் படும்படி சொன்னீர்கள்! சிந்திக்க வைக்கும் பதிவுக்குப் பாராட்டுக்கள் துரை சார்!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..