வியாழன், ஜனவரி 14, 2016

மார்கழித் தென்றல் - 29

குறளமுதம்

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப்படும்.. (0388) 
***

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல்கள் - 29, 30..

திவ்ய தேசம் -  தஞ்சை யாளி நகர்

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி 
விளையாடும் - தஞ்சை மாநகர்..

தஞ்சை யாளி நகர்
ஸ்ரீ வீரநரசிம்ஹ பெருமாள்
மூலவர் - ஸ்ரீ வீரநரசிம்ஹ பெருமாள்
தாயார் -  ஸ்ரீ தஞ்சை நாயகி 

உற்சவர் - லக்ஷ்மி நாராயணன்
ஸ்ரீ வேதசுந்தர விமானம்

தஞ்சை மாமணிக்கோயில்
மூலவர் - ஸ்ரீ நீலமேகப்பெருமாள்
தாயார் - ஸ்ரீ செங்கமலவல்லி 
ஸ்ரீ செளந்தர்ய விமானம்

தஞ்சை மணிக்குன்றம்
மூலவர் - ஸ்ரீ மணிக்குன்றப்பெருமாள்
தாயார் - ஸ்ரீ அம்புஜவல்லி 
ஸ்ரீ மணிக்கூட விமானம்

மூன்று திவ்ய தேசங்களுக்கும்
தலவிருட்சம் - மகிழமரம். 

தீர்த்தம் - வெண்ணாறு. 
ப்ரத்யேகமாக அம்ருத தீர்த்தம்..

மூன்று திருக்கோயில்களிலும்
வீற்றிருக்கும் திருக்கோலம்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்

இத்தலத்தின் மகத்துவம் கூறும் நூல்கள் 
பிரம்மாண்ட புராணம், பத்ம புராணம், 
விஷ்ணு புராணம், சோழ மண்டல சதகம், 
பிரகதீஸ்வர மகாத்மியம் முதலியன.. 

வம்புலாம் சோலை எனப்பட்ட தஞ்சையம்பதியில் 
தவமிருந்த பராசர முனிவருக்காக
ஸ்ரீஹரிபரந்தாமன்
நரசிம்ஹமாக எழுந்தருளி, 
முனிவருக்கு பெருத்த இடையூறுகளைச் செய்த
தஞ்சகன், தாரகன், தாண்டகன் ஆகியோரை
வதைத்துக் காத்தருளினன்..

இச்சம்பவம் 
அம்பிகை கோபங்கொண்டு
ஸ்ரீ கோடியம்மனாகத் தோன்றி
தஞ்சகனைச் சங்காரம் செய்தருளினாள்
என்று சைவ மரபில்
சொல்லப்படுகின்றது.. 
***

மங்களாசாசனம்
திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், 
நம்மாழ்வார்..

தத்தமது திருவாக்கினால் மூன்று வைபவங்களுடன் 
கூடிய சாந்நித்யங்களை ஏக திவ்ய தேசமாக மங்களாசாசனம்..
***

திருப்பாடல் - 29


சிற்றம்சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேள்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்!..

திருப்பாடல் - 30

வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன 
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்!..


சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஸ்ரீ ஆண்டாள் 
அருகிருந்து மார்கழித் தென்றல் என 
பதிவுகளை வழி நடத்தினாள்.. 

திருஆடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே 
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே 
ஒருநூற்று நாற்பத்துமூன்றுரைத்தாள் வாழியே
உயர்ரங்கற்கே கண்ணி உகந்தருளி தாள் வாழியே 
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!..

ஆண்டாள் திருவடிகள் போற்றி!..
ஆழ்வார் தம் திருவடிகள் போற்றி!..

ஓம் ஹரி ஓம்  
***

சிவ தரிசனம்
திருத்தலம் - தஞ்சபுரி

தண்செய் சூழ்ந்திலங்கும் 
தஞ்சையம்பதி



இறைவன் - ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ ஆனந்தவல்லி
தீர்த்தம் - வெண்ணாறு
தலவிருட்சம் - வன்னி

குபேரனிடமிருந்த அளவற்ற செல்வங்களையும்
புஷ்பக விமானத்தையும் கண்டு மயங்கிய இராவணன் -
அடாவடியாகப் பறித்துக் கொண்டு,
நாட்டை விட்டே விரட்டி விட்டான்..

திக்கற்று நின்ற குபேரன், தஞ்சம்!.. - என
சிவபெருமானைச் சரணடைந்து நின்றான்..

அந்த வேளையில்
தஞ்சகன் எனும் மூர்க்கனின் செயலும்
வரைமுரையற்று இருந்தது..

கடுங்கோபங்கொண்ட அம்பிகை
ஸ்ரீ காளி என எழுந்து நின்றாள்..


ஸ்ரீ கோடியம்மன்
அவளுள் மூண்டெழுந்த கோபக்கனல்
கோடி கோடி கொழுந்துகளாக
சுடர் விட்டுப் பிரகாசித்தது..

அம்பிகையுடன் போரிட வந்த தஞ்சகன் வீழ்ந்தான்..
ஸ்ரீ பத்ரகாளியின் பாத ஸ்பரிசத்தால்
நற்கதியடைந்தான்..

அவன் வேண்டிக் கொண்டதன் பேரில்
வம்புலாம் சோலை தஞ்சாவூர் என்றானது..

குபேரனும் தேவர்களும் தஞ்சம் என நின்றதனால்
தஞ்சபுரி என்றானது..


இத்திருக்கோயிலில் குபேரன் வழிபட்டு
நலம் எய்திய ஐப்பசி மாத அமாவாசை அன்று
மகா குபேரயாகம் சிறப்புடன் நிகழ்கின்றது..



பழைமையான திருக்கோயில் எனினும்
ஆன்றோர் அருளிச் செய்த
திருப்பதிகம் ஏதும் கிடைக்கப் பெறவில்லை..


தஞ்சை திருத்தேர்
தஞ்சை வீதி விடங்கர் - அல்லியங்கோதை
ஆயினும், தேவார மூவர் திருநாவிலும்
தஞ்சைத் தளிக்குளம் எனப் பயின்று வருகின்றது..

தஞ்சையில் - அந்தத் திருக்கோயில்
எது என - கண்டறிய இயலவில்லை..



ஆயினும்,
செம்மையுற ஆட்சி செய்த மாமன்னர்களால் 
தஞ்சை வளநாடு பெருமையுற்றது..

பாரோர் வியந்து நோக்கும்
சிறப்பைப் பெற்றது..
***

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிச்செய்த 
தேவாரம்

வேத நாயகன் வேதியர் நாயகன்
மாதின் நாயகன் மாதவர் நாயகன்
ஆதி நாயகன் ஆதிரை நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே!.. (5/100) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச்செய்த
திருவாசகம்

திருப்பொன்னூசல்
ஒன்பதாம் திருப்பாடல்

ஸ்ரீ பிரகதீஸ்வர ஸ்வாமி
தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட்டு எந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையும் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ!.. 

இத்திருப்பாடலுடன்
திருப்பொன்னூசல் நிறைவு பெறுகின்றது..
***
இந்த அளவில்
மார்கழிப் பதிவுகள்
மங்கலகரமாக நிறைவு பெறுகின்றன..



பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல்போற்றி
ஆழிமிசை கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி
வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூர் திருத்தாள் போற்றி போற்றி!..

மார்கழித் தென்றலுடன்
தொடர்ந்து வந்து ஊக்கப்படுத்திய 
அனைவருக்கும் உளமார்ந்த நன்றி..

அன்பின் இனிய 
பொங்கல் திருநாள்
நல்வாழ்த்துகள்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
திருச்சிற்றம்பலம்  
***

8 கருத்துகள்:

  1. அன்பின் ஜி மார்கழித் தென்றலின் 29 ஆம் நாள் பகிர்வு தஞ்சையைக் குறித்த நிறைய விடயங்களுடன் நன்று

    பதிலளிநீக்கு
  2. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. தமிழர் திருநாள் வாழ்த்துக்களை
    மகிழ்வோடு நவில்கின்றேன்
    கனிவோடு ஏற்றருள்வீர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. ஆஹா தஞ்சையைப் பற்றிய அருமையான தொகுப்பாக

    என் மகள் பெயரின் நட்சத்திரம் திருவாதிரை என்று அன்று தான் அக்கோயிலுக்குச் சென்றேன்.

    பதிவு அருமை அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      திருஆதிரை நட்சத்திரச் செல்விக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..