புதன், டிசம்பர் 30, 2015

மார்கழித் தென்றல் - 14

குறளமுதம்

தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச்சுடும்.. (0293)
***

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 14

திவ்ய தேசம் - திருக்கோளூர்


எம்பெருமான் - ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாள்
தாயார் - குமுதவல்லி, கோளூர்வல்லி
உற்சவர் - நிக்ஷோபவித்தன்

ஸ்ரீ கர விமானம்
ஆதிசேஷன் மீது சயனத் திருக்கோலம்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்

தேவியர் இருவருடன் வைத்த மாநிதிப் பெருமாள்



திருக்கயிலை மாமலையில் சிவதரிசனத்தின் போது
அம்பிகையை உற்று நோக்கிய பாவத்தினால்
இரு கண்களிலும் பார்வை இழந்ததுடன்
தன்னுடைய செல்வம் முழுதையும்
இழந்தான் - குபேரன்..

மன்னிப்பு வேண்டி நின்ற குபேரனுக்கு
மீண்டும் ஒருகண்ணில் மட்டும் பார்வை அருளினாள்
அன்னை பராசக்தி..

மீண்டும் செல்வத்தையும் இழந்த பதவியையும் 
வேண்டி நின்ற குபேரனுக்கு,
வைத்த மாநிதிப் பெருமாளிடம் 
கேட்டுப் பெற்றுக்கொள்!.. 
என, அருளினாள்..

அதன்படி, 
வைத்த மாநிதிப் பெருமாளிடம் 
தன்னைப் பொறுத்தருளுமாறு விண்ணப்பித்து
இழந்த செல்வத்திலிருந்து ஓரளவை மட்டும் 
மீண்டும் பெற்றுக் கொண்டான் என்பது தலபுராணம்..

நவதிருப்பதிகளுள்
செவ்வாய்க்குரிய திருத்தலம்..

வைத்தமாநிதிப் பெருமாளை சேவித்தால்
செவ்வாய் தோஷங்கள் அகலும் என்பது ஐதீகம்..


பன்னிரு ஆழ்வார்களுள்
எந்த ஒரு திவ்ய தேசத்தையும் பாசுரங்கொண்டு
துதிக்காதவர் - மதுரகவி ஆழ்வார்..

நம்மாழ்வாரைக் குருவாகக் கொண்டார்..
அவரையே போற்றிப் பாடினார்..
பரமபதம் எய்தினார்..

மதுரகவி ஆழ்வார் அவதரித்த
திருத்தலம் - திருக்கோளூர்..

உண்ணும் சோறும் பருகும்நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன்சீர் மல்கி அவனூர்வினவி
தண்ணம் என் இளமான் புகுமூர் திருக்கோளூரே!..
- நம்மாழ்வார் -
* * *

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணனைப் பாடேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்
***

சிவதரிசனம்
திருத்தலம் - பொதிகை மலை
- பாபநாசம் -


இறைவன் -  ஸ்ரீ பாபநாசநாதர்
அம்பிகை - ஸ்ரீ உலகம்மை
தீர்த்தம் - தாமிரபரணி 
தலவிருட்சம் - களா மரம்

அம்பிகையின் சக்தி பீடம்.
விமலை எனத் திருப்பெயர்



அகத்தியர் அருந்தமிழ் வளர்த்த
பொதிகை மலையே பாபநாசம் எனப்படுகின்றது..

திருக்கயிலாயத்தில் அம்மையப்பனுக்கு
நிகழ்ந்த திருக்கல்யாணம்
அகத்திய மாமுனிவருக்கு
திருக்காட்சியாகிய திருத்தலம்.

திருக்கோயிலினுள்
அகத்தியருக்கு அருளிய திருமணக்காட்சியை 
சிலாரூபமாக நாமும் தரிசிக்கலாம்..

திருக்கோயிலில் அம்பிகையின் 
சந்நிதி முன்பாக இருக்கும் கல்லுரலில்
மஞ்சள் இடித்துக் கொடுப்பது சிறப்பு..

இதனால்
தடைபட்டு நிற்கும் மங்கலங்கள்
விரைவில் நிகழும் என்பது கண்கண்ட உண்மை..  

நெல்லைச்சீமையில் திகழும்
நவ கயிலாயங்களுள்
முதலாவதான திருக்கோயில்..

எனவே சூர்ய ஸ்தலம்..
பித்ரு தோஷங்கள் சாபங்கள் அகலுகின்றன..



திருக்கோயிலின் எதிரில் தாமிரபரணி
சலசலத்துக்கொண்டு ஓடுகின்றாள்..


பொதிகை மலையிலிருந்து புறப்பட்டு 
ஆங்காங்கே அருவிகளாகி இறங்கி வரும் 
தாமிரபரணி 
திருக்கோயிலின் எதிரில் 
சமநிலை அடைவதாகக் கூறப்படுகின்றது..


ஸ்ரீ சொரிமுத்து ஐயனார் திருக்கோயில்

திருக்கோயிலுக்கு 2.கி.மீ மேலே சிற்றருவி உள்ளது.

அதையும் கடந்து மேலே சென்றால்
ஸ்ரீ சொரிமுத்து ஐயனார் திருக்கோயில்..

அதற்கும் மேலே கல்யாணி தீர்த்தம்..

அங்கெல்லாம் செல்வதற்கு வனத்துறையின் அனுமதி வேண்டும்..
இந்தப் பகுதி முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்குள் உள்ளது..

சேர்வலாறு அணையும் பாபநாசம் அணையும் 
இயற்கை எழில் கொஞ்சுவன..


அகத்தியர் அருவி - கல்யாணி தீர்த்தம்

நீர்த்தேக்கத்தைக் கடந்து மேலே சென்றால் 
கல்யாணி தீர்த்தம், பாண தீர்த்தம், அகத்தியர் திருக்கோயில் 
ஆகியன திகழ்கின்றன.

அதற்கும் மேலே அகத்தியர் மலை என சிகரம் உள்ளது..
ஆயினும், ஆபத்தான காட்டுவழி.. மலைப்பாதை..

முன்னை நல்வினைப் பயனுடன்
ஈசன் அருளும் கூடிவருமேயானால்
பொதிகை எனும் பாபநாசத்தில்
ஸ்ரீ அகத்திய மாமுனிவரின் தரிசனம் கிட்டும்!..


சில ஆண்டுகளுக்கு முன் - குடும்பத்துடன்
பாபநாசம் திருக்கோயிலுக்குச் சென்றிருந்தபோது
முன்னோர்களின் தவப்பயனாக - ஆங்கே
அகத்திய மாமுனிவரின் திவ்ய தரிசனம் பெற்றோம்..
***

பொதிகை மலை
திருஞானசம்பந்தர், அப்பர் பெருமான் ஆகியோரின் 
திருவாக்கில் இடம் பெற்ற
 வைப்புத் தலமாகும்..
***

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிச்செய்த
தேவாரம்

வெள்ளிக் குழைத்துணி போலுங் கபாலத்தன் வீழ்ந்திலங்கு
வெள்ளிப் புரியன்ன வெண்புரிநூலன் விரிசடைமேல்
வெள்ளித் தகடன்ன வெண்பிறை சூடிவெள் ளென்பணிந்து
வெள்ளிப் பொடிப்பவ ளப்புறம்பூசிய வேதியனே!.. (4/112) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருவாசகம்


திருஅம்மானை
திருப்பாடல் 07 -08

ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்
சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின்
மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை
நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத்
தாயான தத்துவனைத் தானே உலகேழும்
ஆயானை ஆள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய்!..

பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

11 கருத்துகள்:

  1. குறளமுதத்தோடு தொடங்கிய இனிய பதிவு
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. ஓயாதே உள்ளிருக்கும் உள்ளானை சேயானை, (திருஅம்மானை திருப்பாடல்)
    மாணக்க வாசகரின் இறையமுது பாடலை படித்தபோது
    உருகித் தான் அய்யா போனது மனது.
    இனிக்கும் பதிவு! இனிமை!
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. மனம் உருக்கும் மாணிக்கவாசகர் பாடல்கள், தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. பதிவுகளில் காணும் கதைகளைப் படிக்கும் போதுஇவற்றை ரிவைஸ் செய்வது போல் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. வணக்கம் ஜி மார்கழித் தென்றலின் 14 ஆம் நாள் உற்சவம் நம்மாழ்வார் பாடலுடன் அறிந்தேன் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அழகு தமிழில் அருமையான கதைகள் விளக்கங்களுடன் உந்துமதக் களிற்றனையும், பாபவிநாசனையும் கண்டோம்.

    கீதா: ஐயா பாபநாசம், அகத்தியர் அருவி, சிற்றருவி, கல்யாணதீர்த்தம், பாணதீர்த்தம், எல்லாம் சென்றதுண்டு. இவை எல்லாமே செல்ல முடியும். பேருந்துகளும் உள்ளன. நம் வண்டியிலும் செல்லலாம். சேர்வலாறு அணைக்கட்டு செல்ல முடியும் பேருந்து இருக்கின்றது. அங்கு கோதையார் மேல் அணைக்கட்டு - பவர் ஸ்டேஷன் இருக்கின்றது அங்கிருந்து கீழே கோதையார் கீழ் அணைக்கட்டு, பவர் ஸ்டேஷன் செல்ல விஞ்ச் உண்டு முன்பு. இப்போது தெரியவில்லை. அதற்கு அனுமதி கிடையாது. பணி புரிவோர்க்கு மட்டுமே. இந்தக் கீழ் அணைக்கட்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் பேச்சிப்பாறை அணைக்கு மேல் பகுதியில் கோதையார் லோயர் டாம் என்று இருக்கின்றது...ஆனால் இரு அணைக்கட்டுகளையும் பார்க்க முடியும். பேச்சிப்பாறையிலிருந்து லோயர் டேம் போக 2 1/4 மணி நேரம் ஆகும். இப்போது அனுமதி இருக்கிறதா என்று தெரியவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      தாங்கள் குறிப்பிட்டுள்ள அளவிற்கெல்லாம் - அப்போது சென்றதில்லை..
      இனியொரு முறை வாய்ப்பு கிடைக்கும்போது சென்று வரவேண்டும்..

      விரிவான கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..