சனி, நவம்பர் 28, 2015

தென்குடித் திட்டை

ஆதிகல்பத்தில் இறைவனால் படைக்கப்பட்ட அனைத்தும் பிரளய கால வெள்ளத்தினால் சூழப்பட்டு மூழ்கின. 

ஆனால், அந்தப் பேரூழிக் காலத்திலும் அழியாத பெருமை உடையது - திட்டை ஸ்தலம். 

கைலாசம், கேதாரம், காசி, ஸ்ரீ சைலம், காஞ்சி, சிதம்பரம் போன்ற சுயம்பு தலங்களின் வரிசையில் இருபத்தி இரண்டாவது சுயம்புத் தலமாக விளங்குவது திட்டை. 


இறைவன் - ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர், ஸ்ரீவசிஷ்டேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகை, மங்களாம்பிகை
தலவிருட்சம் - ஆதியில் செண்பகம், தற்போது வில்வம்.
தீர்த்தம் - சூல தீர்த்தம் எனும் சக்ர தீர்த்தம்.

பிரளய காலத்தில் இப்பிரபஞ்சம் முழுவதும்  நீர் சூழ்ந்தது. சூர்ய சந்திரர் இறைவனுடன் ஒன்றி விட்டதால் எங்கும் இருள் கவிந்திருந்தது.

மும்மூர்த்திகளும் மாயை வசப்பட்டு- இருளடைந்த பிரபஞ்சத்தைக் கண்டு அஞ்சினர். பரம்பொருளை பலவாறு வேண்டி துதித்தனர்.

அப்போது பார்வதி பரமேஸ்வரனின் அருளால் ஊழிப் பெரு வெள்ளத்தின் நடுவில்  மேடாக விளங்கிய திட்டு  ஒன்றினைக் கண்டு வியந்தனர். அந்த மேட்டுப் பகுதியில் ஜோதிமயமான ஒரு சிவலிங்கம் தோன்றிய தரிசனம் அளித்தது. அதனைக் கண்ட  மும்மூர்த்திகளும்  அதிசயித்துடன் பூஜித்தனர்.

இந்த லிங்கத்தினின்று காட்சி தந்த இறைவன் மும்மூர்த்திகளிடம் ஏற்பட்ட மயக்கத்தை அகற்றி அபயமளித்தார்.  அவர்களுக்கு படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் அதற்கான வேத, மந்த்ர, சாஸ்திர அறிவையும் அருளினார்.


இந்த திருவிளையாடல் நடந்த திருத்தலம்  தஞ்சை மாநகரை அடுத்துள்ள தென்குடித் திட்டை . 

பிரம்மன், மஹாவிஷ்ணு, முருகன், வசிஷ்டர், காமதேனு, ஆதிசேஷன் - ஆகியோர் வழிபட்ட திருத்தலம்.

திருஞான சம்பந்தப்பெருமான் - பாடிப் பரவிய திருத்தலம்.

வடக்கே வெட்டாறும் தெற்கே வெண்ணாறும் பாய்ந்தோடும் சிறப்பினை உடைய திட்டை - காவிரியின் தென்கரைத் திருத்தலங்களுள் ஒன்றாகும். 

இங்கு இறைவன் தானாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் .

வசிஷ்ட மகரிஷி திட்டையில் தவம் புரிந்து பிரம்மஞானிகளில் தலைசிறந்தவர் ஆனார். அதனால் இறைவன் வசிஷ்டேஸ்வரர் என - திருப்பெயர் கொண்டார்.  

காமதேனு வழிபட்டதால் தேனுபுரி என்றும் ஜமதக்னி முனிவருடனும் பரசு ராமருடனும் ரேணுகாதேவி வழிபட்டதால் ரேணுகாபுரி என்றும் இத்தலம் புகழப்படுகின்றது.




இத்திருக்கோவில் மூலவர் வசிஷ்டேஸ்வரர் சந்நிதி விமானத்தின் - பிரம்ம ரந்திரத்தில் - சந்திர காந்தக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

இக்கற்கள் காற்றிலிருந்து ஈரப்பதத்தை தம்முள் ஈர்ப்பதால் ஒரு நாழிகைக்கு (24 நிமிடங்கள்) ஒரு துளி நீர் என சுவாமியின் மீது விழுகின்றது. 

இத்தகைய அமைப்பு மிக மிக அபூர்வமானதாகும்.

உள் திருச்சுற்றில் மேற்கு பிரகாரத்தில் - கருவறைக்குப் பின்புறமாக  - ஸ்ரீ வள்ளி தேவயானையுடன் ஸ்ரீ சுப்ரமண்யப் பெருமானின் சந்நிதி விளங்குகின்றது..

ஸ்ரீ வைரவ மூர்த்தி - தெற்கு நோக்கியவராக - வடக்கு பிரகாரத்தில் தனியாக சந்நிதி கொண்டு சிறப்புடன் திகழ்கின்றார்..

குருபகவான் சந்நிதி - பின்புறம்
சூரிய பூஜை நிகழும் திருத்தலங்களுள் திட்டை திருத்தலமும் ஒன்று.  

ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளிலும் பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளிலும் கருவறையில் சிவலிங்கத் திருமேனியின் மீது, சூரியனின் கதிர்கள் பரவுகின்றன.


சிவாலயங்களின் தெற்கு கோட்டத்தில் - தக்ஷிணாமூர்த்தி எனும் திருமேனி திகழும்.. 

சிவபெருமான் - ஆல மரத்தின் நிழலில் அமர்ந்து - சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்த வேளையில் - தக்ஷிணாமூர்த்தி எனும் திருப்பெயர் கொண்டார்..

ஆலமர் செல்வன் எனப் புகழ்கின்றது - தேவாரம்..

வியாழன் எனும் பிரகஸ்பதி - சூர்யமண்டலத்தினுள் - தானுமொரு கிரகமாகத் திகழ்பவர்.. 

தேவர்களுக்குக் குருவானதால் வியாழகுரு எனவும் வழங்கப்படுவார்..

தக்ஷிணாமூர்த்தி -  ஈசனின் திருக்கோலம்.. 
பிரகஸ்பதி - வியாழன் எனும் தேவகுரு..

இறையன்பர்கள் - இதனை மனதில் கொள்ள வேண்டும்.

நன்றி - கூகுள்
நவக்கிரகங்களுள் ஒருவரான பிரகஸ்பதி எனும் வியாழ குரு, தனி சந்நிதியில்
சிவனுக்கும் அம்பிகைக்கும் நடுவில் - தெற்குமுகமாக நின்ற திருக்கோலத்தில் ராஜகுரு என அருள் பாலிக்கின்றார்

தேவகுரு ஸ்ரீ பிரகஸ்பதி
சப்தரிஷிகளுள் ஒருவரான ஆங்கீரஸ முனிவரின் மகனாகிய பிரகஸ்பதி வாழ்வில் உன்னத இடத்தை அடைய வேண்டும் என்ற இலட்சியத்துடன் - கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்று சிவபெருமானைக் குறித்து கடுந்தவம் மேற்கொண்டார்.

பிரகஸ்பதியின் தவத்துக்கு இரங்கிய எம்பெருமான் - திட்டை ஸ்தலத்தில் அவருக்குக் காட்சி கொடுத்தார்.

அதன் பயனாக - கிரக பதவி பெற்று - நவக்ரகங்களில் சுப கிரகமாக ஏற்றம் பெற்றார்.

நவக்கிரகங்களுள் முதன்மையாகி தேவர்களுக்குக் குரு எனும் நிலையைப் பெற்றார்.. வியாழன் எனும் பெயரும் பெற்றார்..

ஒருவருக்கு தலைமைப் பதவி, அதிகாரம், செல்வம், கல்வி, ஒழுக்கம், பிள்ளைப்பேறு ஆகியவை - சுபக்கிரகமாகத் திகழும் குரு பகவானின் கருணையினால்  கிடைக்கிறது.

உலகம் முழுதும் உள்ள பொன் பொருள் சுகபோக விஷயங்களுக்கு குருவே அதிபதி..

ஆண், பெண் எவராயினும் அவருடைய திருமணம் தடைப்படுமேயானால், அதை நிவிர்த்தி செய்து அருள்பவர் - குருபகவான்.

இத்திருக்கோயிலில் நவக்கிரக மண்டலம் வேறுபட்டு விளங்குகின்றது..

மேற்கு நோக்கிய சூரியனுக்கு எதிர்முகமாக வியாழகுரு விளங்குகின்றார்.


தேவகுருவின் சுழற்சி வட்டமே வியாழ வட்டம் எனப்படுவது..

குருபகவான் ஒவ்வொரு ராசியிலும் சுமார்  ஓராண்டு காலம் தங்கியிருப்பார். அனைத்து ராசிகளையும் அவர் கடந்து வர பன்னிரு ஆண்டுகள் ஆகும்..

இதுவே  வியாழ வட்டம்  - மகாமகம் எனப்படுவது.

குரு பகவான் ஒருவரே - நவக்கிரஹ மண்டலாதிபதிகளுள் - சுப கிரகம். எனவே தான் குரு பார்க்க கோடி நன்மை என்றனர் பெரியோர்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த வியாழகுரு சிவபூஜை செய்து நலம் பெற்ற தலம் தான் - தென்குடித் திட்டை..

இத்திருக்கோயிலில் குருபெயர்ச்சி விழாவையொட்டி அன்பர்கள் நலனுக்காக சிறப்பான முறையில் லட்சார்ச்சனையுடன் சிறப்பு அபிஷேக அலங்கார மகாதீபாராதனைகளும் நிகழும்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை தரிசனம் செய்வர்.

வருடந்தோறும் குருபெயர்ச்சியில் பங்கேற்று குருபகவானை தரிசிக்கத் திரளும் பக்தர்கள் வசதிக்கென  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன.

இத்தகைய சிறப்பு மிக்க திட்டை ஸ்தலம் - தஞ்சை மாநகரின் வடகிழக்காக 6 கி.மீ தொலைவில் விளங்குகின்றது.


ஸ்ரீநவநீதகிருஷ்ணன் சந்நிதி
மேலும், ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலுக்குப் பின்புறமாக -
ஸ்ரீ நவநீத கிருஷ்ணனின் திருக்கோயில்..

ஸ்ரீருக்மணி சத்யபாமா ஹேமாம்புஜ நாயகியுடன் - நவநீத கிருஷ்ணன் திருச்சேவை சாதிக்கின்றான்..

கோயிலினுள் - தெற்கு முகமாக ஸ்ரீசீதாராமனின் சந்நிதி..

ஸ்ரீராமபிரானைத் தொழுவானாக - வடக்கு முக ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தி..

ஸ்ரீ காரிய சித்தி ஆஞ்சநேயர் வரப்ரசாதி..

எண்ணிய நல்ல காரியங்களை நிறைவேற்றித் தருவதில் வல்லவர்..

வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கூட்டம் அலைமோதுகின்றது..

சீட்டு எழுதிக் கட்டுவதும் மட்டைத் தேங்காய் கட்டுவதும் - சிறப்பு வேண்டுதல்கள்..

ஸ்ரீநவநீத கிருஷ்ணனை சேவிப்பவராக கருடாழ்வார்..



கோயிலினுள் ஸ்ரீஹயக்ரீவர் சந்நிதியும்  திருச்சுற்றில் ஸ்ரீ ஹேமாம்புஜ நாயகி. ஸ்ரீ ஆண்டாள் மற்றும் ஸ்ரீ சக்ரத்தாழ்வார் ஸ்ரீ யோகநரசிம்ஹ மூர்த்தி - விளங்குகின்றனர்..

திருச்சுற்றில் பவள மல்லியும் திகழ்கின்றது..

இன்று தென்குடித் திட்டையில் தெய்வ தரிசனம் கண்டு - சில படங்களைப் பதிவு செய்துள்ளேன்..

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து  -  திருக்கருகாவூர் செல்லும் நகரப் பேருந்துகளும்  ஆவூர், பட்டீஸ்வரம் வழியாக கும்பகோணம் செல்லும் புறநகர் பேருந்துகளும் திட்டை வழியே செல்கின்றன.

ரயில் வசதியும் உண்டு. மயிலாடுதுறை மார்க்கத்தில் - தஞ்சை ஜங்ஷனை அடுத்த ஸ்டேஷன். அனைத்து பாசஞ்சர் ரயில்களும் நின்று செல்கின்றன.

ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றிமால்
கூறினார் அமர்தருங் குமரவேள் தாதையூர்
ஆறினார் பொய்யகத்தை உணர் வெய்திமெய்
தேறினார் வழிபடுந் தென்குடித் திட்டையே(3/35)
-: திருஞான சம்பந்தப்பெருமான் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

புதன், நவம்பர் 25, 2015

கார்த்திகைத் திருநாள்

அண்ணாமலை..

திருஅண்ணாமலை..

அக்னித் தலம்..

ஆதி அந்தம் அறிய ஒண்ணாத அற்புதத் தலம்..

நான்முகனுடனும் ஹரிபரந்தாமனுடனும் -
ஈசன் திருவிளையாடல் கொண்டு இலங்கும் திருத்தலம்..

அம்பிகைக்குத் தன் மேனியில் சரிபாதியினை - இறைவன் அருளிய திருத்தலம்..


எண்ணரும் சிறப்புகளை உடைய இத்திருத்தலத்தில் வெகுசிறப்புடன் நிகழ்வது திருக்கார்த்திகைத் திருவிழா..

தீபத் திருவிழாவிற்கு எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகின்றன..

எப்படியிருப்பினும், தீபம் ஏற்றப்படுவது - ஒளியின் பொருட்டு!..

அதன்மூலம் வழியின் பொருட்டு!..

தீப ஒளியினால் - புற இருள் அகல்கின்றது..

அவ்வண்ணமாக - அகத்தில் ஒளி பெருக வேண்டும்..

இதுவே திருக்கார்த்திகை தீபம் ஏற்றுதலின் சிறப்பு..


கடந்த 16/11 அன்று, தங்கக் கொடிமரத்தில் திருக்கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது..

நாளும் பஞ்ச மூர்த்திகள் திருக்கோலங்கொண்டு எழுந்தளினர்..





சிறப்பு நிகழ்வாக -
21/11 அன்று வெள்ளித் தேரோட்டமும் 22/11 அன்று மகாரதங்களின் பவனியும் நடைபெற்றது..

நேற்று அதிகாலை மூலவர் சந்நிதியில் மகாபரணி தீபம் ஏற்றப்பட்டது..

இன்று மாலை ஆறுமணியளவில் ஆண்டுக்கொருமுறை நிகழும் அற்புதமாக ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கொடிமண்டபத்திற்கு எழுந்தருள்கின்றார்..

அவ்வேளையில், ஏக காலத்தில் -
கொடி மரத்தின் முன்னுள்ள அகண்டத்திலும் அண்ணாமலையின் சிகரத்திலும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுகின்றது..

இதையடுத்து, தங்க ரிஷப வாகனத்தில் -
ஸ்ரீ உண்ணாமுலை நாயகியும் ஸ்ரீ அண்ணாமலையாரும் எழுந்தருள்கின்றனர்..


வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மருகில்
துளக்கில் கபாலீச்சரத்தான் தொல்கார்த்திகை நாள்
தளத்தேந்து இளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு!..

- காண வருவாய் பூம்பாவாய்!.. - என, திருமயிலையில் அருளுகின்றார் திருஞான சம்பந்தப்பெருமான்..

தீபமேற்றுதலும் அது கொண்டு ஈசனை வழிபடுதலும் பாரம்பர்ய நிகழ்வு..

அதன் பயன் - மனம் ஒன்றுபடுதல். ஒடுங்குதல்..

அதன் மூலம் அன்பு கொண்டு  அகிலத்தின் சகல உயிர்களுக்கும் ஆதரவளித்தல்..

அதுவே பிறவிப் பயன்!..

அதனை எய்துதற்கே - ஆன்றோர்கள் வழிகாட்டுகின்றனர்..


வையம் தளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே என்று!.. (2082)
- பொய்கையாழ்வார் -

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்!.. (2182)
- பூதத்தாழ்வார் -

இல்லக விளக்கது இருள் கிடப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே!..
- திருநாவுக்கரசர் -

இல்லத்திலும் உள்ளத்திலும் 
விளக்கேற்றுவோம்!..

திருக்கார்த்திகைத் திருநாள் நல்வாழ்த்துகள்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

திங்கள், நவம்பர் 23, 2015

ஸ்ரீகோவிந்த தரிசனம்

தமிழகத்தின் வட மாவட்டங்களில்,
தன் - கைவரிசையைக் காட்டிக் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் கார்மேகக் கூட்டங்கள் -

தென் மாவட்டங்களை நோக்கி நகர்ந்த வேளையில் -

வட வேங்கடத்தை நோக்கி இருந்தது - எங்கள் சிந்தை..


கடந்த வியாழன்று - தஞ்சை சந்திப்பிலிருந்து, இராமேஸ்வரம் - திருப்பதி விரைவு வண்டியில் திருமலையை நோக்கிப் புறப்பட்டபோது இரவு மணி 11.15..

சற்று நேரத்தில் இருக்கை படுக்கையானது..

பெருமாளே!.. - என்று, கண் அயர்ந்த சிறு பொழுதுக்கெல்லாம் - மேல் முழுதும் ஈரம்..

திடுக்கிட்டு விழித்தால் - சிதம்பரம் ரயில் நிலையம் - மழைச்சாரலுடன்!..

அதன் பிறகு தூக்கம் வரவில்லை..

கடலூர், விழுப்புரம் - என, வழி நெடுக மழை..

எதையெல்லாமோ நினைத்துக் கொண்டிருந்த மனம் எப்போது உறங்கியதோ தெரியவில்லை..

விழித்துக் கொண்டபோது - போளூர் கடந்து சென்றது..

அடுத்து காட்பாடி.. அங்கெல்லாம் அச்சமயத்தில் மழையில்லை..

ஆனால், சூல் கொண்டிருந்த மேகங்கள் - வானில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தன..

வெள்ளிக்கிழமை முற்பகல் 10.20 மணியளவில் - திருப்பதி சென்றடைந்தோம்..


முன்னதாக பதிவு செய்திருந்ததன்படி, அருகிலேயே - நல்லதொரு விடுதி..

குளித்து விட்டு பகல் உணவு..

மாலையில் திருச்சானூர் தரிசனம்..



உற்சவ மண்டபத்தில் ஸ்ரீ பத்மாவதித் தாயார் - ஊஞ்சலில் திருக்கோலம் கொண்டிருந்தாள்..

நெரிசல் ஏதும் இல்லாமல் தரிசனம் செய்ததில் மிகவும் ஆனந்தமானது மனம்..

ஸ்ரீ மஹாலக்ஷ்மியை வலம் செய்து வணங்கிய வேளையில் - திருச்சுற்றில் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தார்கள்..

குங்குமம் மலர்கள் -  அத்துடன், நெய் மணக்கும் சர்க்கரைப் பொங்கல்..

சற்றைக்கெல்லாம், ஊஞ்சலில் திருக்கோலம் கொண்டிருந்த ஸ்ரீபத்மாவதி - யானை முன் செல்ல, ஆடல் பாடல்களுடன் - திருவீதி எழுந்து திருக்காட்சி அருளினாள்..


மறுநாள் சனிக்கிழமை..
காலையிலேயே, தயாராகி - திருமலையை நோக்கி - காரில் புறப்பட்டோம்..

திருப்பதி நகரின் சாலைகள் மழையினால் குண்டும் குழியுமாக இருந்தன..
ஆங்காங்கே தண்ணீர் தேங்கிக் கிடந்தது..

மலை நகரமாகிய திருப்பதியும் தண்ணீர் தேங்கிக் கிடக்கும்படியாக ஆகியிருந்தது..

இதோ - அடிப்படி என்னும் அலிபிரி..
இதுதான் திருமலையின் அடிவாரம்..
இங்கிருந்தே மலைப்பாதை தொடங்குகின்றது..




அலிபிரி ஸ்ரீலக்ஷ்மி நாராயணர் திருக்கோயிலில் தரிசனம் செய்து விட்டு
அடிவாரத்தின் திருப்படிகளைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டோம்..

போக்குவரத்து பிரச்னையால் - அலிபிரியில் இருக்கும் கம்பீரமான கருடனைப் படம் பிடிக்க இயலவில்லை..



பாதுகாப்புச் சோதனைகளுக்குப் பின் எங்களது பயணம் தொடர்ந்தது..

சீரான மலைப்பாதை.. எங்கெங்கும் சுத்தமாக இருந்தது.. வழி நெடுக - உதிர்ந்து விழும் சருகுகளைக் கூட துப்புரவு செய்து கொண்டேயிருந்தனர்..

முதல் நாள் மழையின் தாக்கம் தெரிந்தது.. விழுந்திருந்த மரங்களும் சரிந்திருந்த பாறைகளும் அப்புறப்படுத்தப்பட்டிருந்தன..

சிலுசிலு என சாரல் வீசிக் கொண்டிருக்க -
மேலெழுந்த விழிகளில் கம்பீரமான திருமலை..

திருமலையின் சிகரங்களுடன் - நீர்கொண்ட மேகங்கள் - ஊடாடிக் கொண்டிருந்தன..


சீராகத் தொடர்ந்த பயணம் - திருமலைக்கு ஐந்து கி.மீ., முன்னதாக சற்றே தடைப்பட்டது..

அடிப்படியிலிருந்து 9. 30 அளவில் புறப்பட்ட நாங்கள் - 10.15 மணியளவில் திருமலையை அடைந்து விட்டோம்..

மகனுக்கு முடியிறக்கி நேர்த்திக் கடன் செலுத்தப்பட்டது..

எங்களுக்குக் குறிக்கப்பட்டிருந்த நேரம் - மாலை மூன்று மணி..

கட்டணமில்லாப் பேருந்து
ஆனாலும் - பக்தர் கூட்டம் அதிக அளவில் இல்லாததால் முன்னதாகவே அனுமதிக்கப்பட்டோம்..

ஆங்காங்கே தொடரும் பாதுகாப்பு சோதனைகள்..

கூண்டுகளுக்குள் வழி நடை - ஒன்றரை மணி நேரம் தான்..

வரிசையில் நடந்து கொண்டேயிருக்க -

அதோ - திருக்கோயில்!..

அதுவரையில் சொல்லக் கேட்டிருந்த ஸ்ரீ விமானம்.. ஆனந்த நிலையம்!..

ஆம்.. இப்போதுதான் முதன்முறையாக திரும்லையில் தரிசனம் செய்கின்றேன்..

நெஞ்சம் நெகிழ்ந்துருகியது..

மாடவீதியைக் கடக்கும் வேளையில் சற்று மழை..

தொடர்ந்து நடந்து - ராஜகோபுரத் திருவாசலில் காலடி வைத்தபோது -
அதுவரை இல்லாதபடிக்கு ஆனந்த அதிர்வு!..

திருமுற்றம்.. தங்கக் கொடிமரம்..

கண்கள் கலங்கின.. மெய்மறந்தது..
பயின்றிருந்த திருப்பாசுரங்கள் நாவில் எழவில்லை.. ஆனாலும்,

பெருமாளே.. பெருமாளே!.. - என்று மனம் அரற்றிக் கொண்டிருந்தது..

தென்புறமாக நடந்து - பங்காரு வாகிலி எனும் தங்க வாசலைக் கடந்து - பெருமானின் திருமண்டபத்திற்குள் நுழைந்து, கிழக்காக நடக்க - பெரிய திருவடி - ஸ்ரீ கருட தரிசனம்..

சட்டென வடக்காகத் திரும்பியபோது -

இதோ!.. நானிருக்கின்றேன்!..

- என்று, ஆயிரங்கோடி சூரியப் பிரகாசமாக - ஸ்ரீ வேங்கடேச மூர்த்தி..

அடியார்களோடு எளியேனும் -

பகவானே.. பெருமாளே.. கோவிந்தா.. கோவிந்தா!..

- என, கூவிக் குதுகலித்து வணங்கினேன்..

எம்பிரான் அழகினை - விழிகளால் பருகிய வண்ணம் கூப்பிய கரங்களுடன் நடந்து வெளியே வந்தபோது - மேக மூட்டமின்றி வானம்..

மனமும் அப்படியே இருந்தது..

திருச்சுற்றில் - சடாரி.. தீர்த்தம் வழங்கப்பெற்றது..

மடைப்பள்ளியில் வகுளாதேவி தரிசனம்.. மேலும் விஷ்வக்சேனர் மற்றும் யோக நரசிம்மர் சந்நிதிகள்...

வணங்கி வலம் வருகையில் - லட்டு பிரசாதம் வழங்கப்பெற்றது..

திருக்கோயில் ஊழியர்களும் தன்னார்வத் தொண்டர்களும் மக்கள் பணியில்!..

மனம் நிறைவாக இருந்தது..

திருக்கோயிலுக்கு வெளியே அன்னப் பிரசாத மண்டபத்தில் சுவையான உணவு.. வயிறும் நிறைவாக ஆனது..

சூரிய புஷ்கரணியை வலமாக வந்தோம்..

அதுவரைக்கும் பாதுகாப்பு அறையில் இருந்த - கேலக்ஸியை திரும்பப் பெற்றுக் கொண்டு திருக்கோயிலின் வாசலில் சில படங்களை எடுத்தேன்..





மேலே - ஸ்ரீ வாரி பாத தரிசனம்  செய்ய வேண்டும்.. வானமும் இருட்டிக் கொண்டிருந்தது.. கடுமையான குளிர் காற்றும் வீசியது..

வேறொரு ஜீப்பினில் - திருமலையின் மேலே சென்றோம்..

மலை முழுதும் மேக மூட்டம்..


ஸ்ரீபாத தரிசனம்
சிலா தோரணம்
சிற்றருவி
அருவிக்கரையில் சிவ சந்நிதி
ஸ்ரீ சுதர்சனர்
ஸ்ரீ பாத தரிசனம் செய்தபின் - சிலா தோரணம் - கல் பூங்கா,
அங்கேயிருக்கும் சிற்றருவி அதன் கரையிலுள்ள சிவ சந்நிதி..

நிறைவாக தரிசனம் செய்தபின் மனம் ஏங்கியது..

மறுமுறை எப்போது?.. - என்று..

அனைவ்ருக்காகவும் ஸ்ரீ பிரசாதம்
திருமலையின் அருமை பெருமைகளை உணர்ந்து கொள்ள ஒருநாள் போதாது!..

அதனால் தான், குலசேகர ஆழ்வார் -

குருகாக, மீனாக, செண்பகமாக, காட்டாறாகப் பிறக்க வேண்டும் என்றார்..

அப்படியில்லை என்றாலும்,

கோவிந்தனின் திருக்கோயில் வாசலில் கற்படியாகிக் கிடக்கவேண்டும் என்றார்..

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே 
நெடியானே வேங்கடவ நின்கோயிலின் வாசலில்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துஉன் பவளவாய் காண்பேனே!.. (685)

கோவிந்த.. கோவிந்த!..
ஓம் ஹரி ஓம்
* * *

புதன், நவம்பர் 18, 2015

வேலும் மயிலும் துணை

இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக.. வருக..
வாசவன் மருகா வருக.. வருக..
நேசக்குறமகள் நினைவோன் வருக..


முருகன் வரவேண்டும்..

அதுவும், நம்முடன் -
நாம் பயணிக்கும் தொலைவுக்கெல்லாம் துணையாக வரவேண்டும்..

அப்படி  துணைக்கு வரும் முருகன் எப்படி வரவேண்டும்?..

பாதம் இரண்டிலும் சலங்கைகளுடன் வரவேண்டும்..

அந்தச் சலங்கைகளில் உள்ள பன்மணிகளும் கீதம் பாடவேண்டும்.. அதற்கேற்ப - அரையணியாய் இலங்கும் கிண்கிணிகளும் ஆடவேண்டும்..

அது மட்டுமா!..

மையல் கொண்டு நடனமிடும் மயிலின் மீது திருக்கரத்தில் வேலினை ஏந்தியவனாக வரவேண்டும்..

எத்தகைய பேறு!..

இத்தகைய தரிசனத்தைக் கண்டாலும் - மனம் திருப்தி அடைகின்றதா!?..

மேலும் மேலும் - அவனது திருக்கோலங்களைக் காண்பதற்கல்லவா துடிக்கின்றது!..

ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்        
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்         
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்னம் பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணைமுழந்தாளும்         
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண..

என - சோதிப் பிழம்பாகத் திருமுருகன் வரவேண்டும்..

கோலாகலமாக வந்தருளும் திருக்குமரனுடன் - 
நாமும் நம் மனமும் எந்நேரமும் இருந்திட வேண்டும்...

அந்த நிலையை எய்திய அருளாளர்களும் ஆன்றோர்களும் ஆயிரம்.. ஆயிரம்..

அத்தகையோர் - தாம் பெற்ற இன்பத்தை நமக்கும் அருளிச் செய்துள்ளனர்..

நலமருளும் ஞான வாக்கியங்களைத் தலைமேற்கொண்டு -
நாம் நடக்கையில் - நடக்கும் வழி எங்கும் நல்வேல் துணைக்கு வருகின்றது..

துணைக்கு வரும் வேல் தான்  - அஞ்ஞான இருளைத் தொலைத்தது..
அறுமுகனின் அடியவர் நெஞ்சில் ஒளியாக நிலைத்தது..

வென்றாக வேண்டியது அஞ்ஞானம் எனும் பகையை..

அதற்காகவே -

வெல்!.. - என்று சொல்லி - வேலினைக் கொடுத்தாள் வேல்நெடுங்கண்ணி..

சிக்கலில் வேல் வாங்கிய திருக்குமரன் - செந்தூரில் போர் முடித்தான்..

நேற்று கந்த சஷ்டியின் ஆறாவது நாள். திருச்செந்தூரில் சூர சம்ஹாரம்..

கந்த சஷ்டியின் ஐந்தாம் நாளாகிய திங்கட் கிழமையன்று (16/11) திருச்செந்தூர் செல்லும் பெரும் பேறு வாய்த்தது..

திருஆரூர் கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாளில் இருந்தே மழை..

தீபாவளிக்குப் பிறகும் விடவில்லை..

சனிக்கிழமை மதியம் தஞ்சையிலிருந்து - திருநெல்வேலி பாசஞ்சர் ரயிலில் புறப்பட்டபோதில் இருந்து மழையும் எங்களுக்கு முன்பாக சென்று கொண்டிருந்தது..



ஆங்காங்கே தாமதித்த ரயில் - கொட்டும் மழையில் இரவு 8.30 மணியளவில் சாத்தூரை அடைந்தது.. அங்கிருந்து சிவகாசிக்குப் பயணித்து - அங்கே ஏழுகோயில் அண்ணாமலையார் சங்கத்தின் அடியார் மண்டபத்தில் ஓய்வு..

மறுநாள் காலையில், சிவகாசி ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் அம்மன் தரிசனம்..

சிவகாசி ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோயில்
அடுத்து, ஸ்ரீ மாலைஅம்மன் பெரியாண்டவர் சந்நிதியில் பேத்திக்கு காதணி விழா..

பொழுது விடிவதற்கு சற்று முன்பாக - 3.00 மணியளவில் மீண்டும் சாத்தூருக்குப் பயணம்.. 45 நிமிடங்கள் தாமதமாக வந்து கொண்டிருந்தது - திருச்செந்தூர் விரைவு வண்டி..

மழைச் சாரலில் கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி நிலையங்களைக் கடந்து -
காலை 6. 45 மணியளவில் திருநெல்வேலிக்குச் சென்றடைந்தோம்..

தாமிரபரணி
அடுத்த ஒரு மணிநேரத்தில் திருச்செந்தூர்..

வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை வருவதற்கான அறிகுறி ஏதும் இல்லை..

ஆயிரம் ஆயிரமாய் பக்தர்கள் - கவலையெல்லாம் மறந்த மனத்தினராக, கந்தன் காலடியைத் துதித்தவாறு - சூர சங்காரத்திற்காக காத்திருந்தனர்..

ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த கடலில் நீராடி எழுவதற்கு சூழல் சரியில்லை..
எனவே, அலைகளில் கால் நனைத்துக் கொண்டோம்..

திருக்கோபுரத்தை - திருக்கோயிலை நெஞ்சாரத் துதித்து -
செந்தில் நாதனாகிய ஜயந்தி நாதனின் சந்நிதி வாசலில் நின்று வணங்கினோம்..

செந்தூரில் எடுக்கப்பட்ட படங்களுள் சிலவற்றை இன்றைய பதிவில் காணலாம்..








காணும் திசை எங்கும் மக்கள் வெள்ளம்..

மறுநாள், சூர சம்ஹாரம் காண்பதற்கென -
பல ஊர்களில் இருந்தும் அலை அலையாய் வந்து கொண்டிருந்தனர்..

மதிய உணவுக்குப் பின் - உவரி ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயிலை நோக்கிப் பயணம் தொடர்ந்தது..



மாலை நான்கு மணிக்கு நடை திறந்ததும் -
ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமியையும் ஸ்ரீ பிரம்ம சக்தி அம்பிகையையும்
ஸ்ரீ கன்னிமூலை கணபதி, ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீமாடஸ்வாமி,
ஸ்ரீ இசக்கி அம்மன், ஸ்ரீ முன்னோடியார்,
வன்னியடி ஸ்ரீ பூர்ணகலா ஸ்ரீ புஷ்கலா சமேத ஸ்ரீ கல்யாண சாஸ்தா - மற்றுமுள்ள பரிவார மூத்திகளையும் வணங்கி வலம் வந்தோம்..

சிவாச்சார்யார் - அபிஷேக சந்தனத்துடன் நிவேத்ய பிரசாதங்கள் வழங்கினார்..

உவரி திருக்கோயிலில்  - முன் புறம் இருந்த மண்டபம் தகர்க்கப்பட்டு
ராஜ கோபுரத் திருப்பணி தொடங்கியுள்ளது..

குலதெய்வத்தின் சந்நிதியில் மனம் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தது..

வரம் பல தருக.. வழித்துணை வருக!.. - என வேண்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு, மாலை 6.30 மணியளவில் திருச்செந்தூரை அடைந்தோம்..

அங்கிருந்து 6.50 மணிக்குப் புறப்பட்ட சென்னை விரைவு ரயில் அதிகாலை 4.15 அளவில் தஞ்சைக்கு வந்து சேர்ந்தது..

வழியில் மதுரையில் மட்டுமே கனமழை..

எவ்வித இடையூறுமின்றி நலமுடன் இல்லம் திரும்பினோம்..

சூர சம்ஹாரம்
சஷ்டி விழாவின் ஏழாம் நாளாகிய இன்று, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் குமர விடங்கப் பெருமானும் தெய்வயானையும் தனித்தனியே எழுந்தருள்கின்றனர்..

சம்பிரதாய நிகழ்வுகளாக - தாம்பூலம் மாற்றிக் கொண்டபின் மாலை மாற்றுதல் நடைபெறும்.. அதன்பின்,

முன்னிரவுப் பொழுதில் - மேலைக் கோபுர வாலிலில் உள்ள திருமண மன்றத்தில் -
திருமுருகனுக்கும் தெய்வயானை அம்பிகைக்கும் மணவிழா நிகழ்கின்றது..

எட்டாம் நாள் மணமக்கள் திருவீதி எழுந்தருளல்..
அதன்பின் மூன்று நாட்கள் ஊஞ்சல் உற்சவம்..
பன்னிரண்டாம் நாள் மஞ்சள் நீராட்டுடன் சஷ்டி விழா இனிதே நிறைவுறுகின்றது..
* * *

வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தன் என்று சொல்லக் கலங்குமே - செந்திநகர்
சேவகா என்று திருநீறு அணிவார்க்கு
மேவ வாராதே வினை..

முருகன் திருவருள்
முன் நின்று காக்க..
* * *