வெள்ளி, ஜூலை 24, 2015

சக்தி தரிசனம் - 2

ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை..


காஞ்சி காமாக்ஷி!.. அவள் சந்நிதி தான் இன்றைய தரிசனம்!..

கண் கொடுத்தவள் காமாட்சி!.. கண் கொடுப்பவள் காமாட்சி!.. 

நடுநாடு..

வடக்கே பல்லவர்க்கும் தெற்கே சோழருக்குமாக நடுவில் விளங்குவது..

திருநாவுக்கரசர் முதலான நல்லோர் பலரும் அவதரித்த பொன் நாடு..

நடுநாட்டின் கண் சிறப்புற்றிருந்த திருநகரங்களுள் ஒன்று திருநாவலூர்.

அதற்கு அருகாமையில் அமைந்திருந்தது - புத்தூர்.

அவ்வூரில் வாழும் சடங்கவி சிவாச்சார்யாரின் இல்லத்தில் திருமண விழா..

ஊரே திரண்டிருந்தது..

மணமகள் - சடங்கவி சிவாச்சார்யாரின் அருந்தவப் புதல்வி சுகுணவதி.

மணமகன் -

சடையனார் - இசைஞானியார் தம்பதியரின் செல்வக்குமரன் நம்பி ஆரூரன்.

நம்பி ஆரூரனின் அழகு கண்டு அனைவரும் அழைத்த பெயர் - சுந்தரன்..

அது மட்டுமல்லாமல் -

அந்நாட்டின் அரசரான நரசிங்கமுனையரையர் - நம்பி ஆரூரனின் அறிவையும் அழகினையும் கண்டு வியந்து -  தன் மகனாக தத்தெடுத்துக் கொண்டார் - எனில், வேறொன்றும் சொல்ல வேண்டுவதில்லை..

முகூர்த்த நேரம். மங்கலச் சடங்குகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இன்னும் சிறு பொழுதில் திருமாங்கல்யதாரணம்..  அவ்வேளையில்,

எதிர் வழக்கிட்டு - திருமணத்தைத் தடுத்தார் முதியவர்..


இங்கே அமர்ந்திருக்கும் நம்பி ஆரூரன் எனக்கு அடிமை.. இதோ அவனது பாட்டன் எழுதித் தந்த ஓலை!.. - என்றார்.

திருமண மன்றம் அதிர்ந்தது..

அங்கும் இங்குமாக கூச்சல்கள்.. பெரியவர்கள் சிலர் முதியவரை நெருங்கி உமது சொல்லுக்கு எது ஆதாரம்?.. என்றனர்.

தனது - மண வாழ்வினைக் கெடுத்த முதியவரை - பித்தன் என்றும் பேயன் என்றும் வசை பொழிந்தார்..

முதியவர் தம் கையிலிருந்த சாசன ஓலையைத் தந்தார்..

அதைப் பற்றியிழுத்துக் கிழித்துப் போட்டார் நம்பி ஆரூரர்.

முதியவர் விடாப்பிடியாக நின்றார்.

உண்மையை உணர விரும்பினர் அனைவரும்.. ஆதலால் -

அற்றை நாளில் - திருவெண்ணெய் நல்லூரிலிருந்த வழக்காடு மன்றத்திற்குச் சென்றது - இவ்வழக்கு..

ஆங்கிருந்த பெரியோர்கள் இரு தரப்பினரையும் விசாரித்தனர்.

ஆதார ஓலையைத் தான் சுந்தரன் கிழித்து விட்டானே.. இனி முதியவர் எதைக் கொண்டு நிரூபிப்பார்!?.. - என சிரித்து மகிழ்ந்தனர் சிலர்..

அது ஆதார ஓலையின் பிரதி ஓலை.. இதோ.. என்னிடம் இருப்பதே மூல சாசனம்!.. - என்று, முதியவர் அதிர்ச்சி கொடுத்தார் அனைவருக்கும்.

அந்தக் காலத்திலேயே, பிரதி ஓலை (Xerox) கூட இருந்திருக்கின்றது.

திருநாவலூரிலிருந்து நம்பி ஆரூரரின் பாட்டனாருடைய கையெழுத்துப் பிரதிகள் கொண்டுவரப்பட்டன.

ஓலைகளைச் சரிபார்த்தனர். ஒத்தி வைக்கப்படாமல் அப்பொழுதே தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

அதன்படி - வழக்கிட்டு வென்ற முதியவருக்கு அடிமையானார் - நம்பி ஆரூரர்.

என் இருப்பிடத்திற்கு வா!.. - என இழுத்துக் கொண்டு சென்றார் - முதியவர்.

இவர் யாராக இருக்கக்கூடும்!.. - என்ற ஆவலினால் அனைவரும் பின் சென்றனர்.

அருட்துறையாகிய திருவெண்ணெய் நல்லூர் சிவாலயத்தை நெருங்கியதும் - முதியவர் ஒளி வடிவங்காட்டி மறைந்தார்.

அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்..

தேவ துந்துபிகள் முழங்க - வானில் விடை வாகனத்தில் அம்பிகையுடன் திருக்காட்சி நல்கினார் - சிவபெருமான்..

அந்த அளவில் - சுந்தரரின் நெஞ்சில் முன்னை நினைவுகள் மூண்டெழுந்தன.

கூடியிருந்தோர் - எம்பெருமானின் தாள் மலரில் வீழ்ந்து வணங்கினர்.

கரங்கூப்பி வணங்கியவாறு - கண்களில் நீர் வழிய நின்றிருந்தார் சுந்தரர்.

ஆரென்று அறிய இயலாத அசடனாக - அடாத மொழிகள் கொண்டு ஐயனைப் பழித்தேனே?.. இழைத்த வல்வினைகள் தீர ஏது செய்வேன்?..

பாடுக!.. பாடிப் பரவுக!.. - என்றனன் எம்பெருமான்.

பேசவும் ஒரு மொழியின்றிப் பிதற்றும் பித்தனானேன்..ஐயனே.. எதைக் கொண்டு பாடுவேன்!?..

எம்மைப் பித்தன் என்றனையே!.. நின் சொல்லெல்லாம் அருச்சனைப் பாட்டாகும்!.. - சிவம் வாழ்த்தி மறைந்தது..

சுந்தரர் தம் திருவாக்கில் இருந்து செந்தமிழ்த் தேனருவி பிறந்தது.

நாடெங்கும் நடந்து திரிந்து - சிவாலயங்கள் தோறும் செந்தமிழ்ப் பண் முழங்கிய சுந்தரர் - தம்பிரான் தோழர் எனப்பட்டார்..

ஈசனோடு எதிர் வழக்காடியதால் - வன்தொண்டர் எனவும் புகழப்பட்டார்..

திரு ஆரூரில் பரவை நாச்சியாரைக் கண்டார்..

முன்னைப் பழநினைவுகள் முகிழ்த்தன..

திருக்கயிலாயத்தில் ஈசனுக்கு அணுக்கத் தொண்டராகத் தாம் இருந்ததும் - ஒரு மாலை வேளையில்,

மலர் வனத்தில் கமலினி, அநிந்திதை என்னும் கன்னியர் இருவரை அரை விநாடிப் பொழுது கண் கொண்டு நோக்கியதால் மண்ணுலக வாழ்வு வந்துற்றதும் நினைவுக்கு வந்தன..

பெரியோர்கள் துணை கொண்டு பரவையாரை மணம் புரிந்து கொண்டார்..

பின்னும் தலயாத்திரையில் - திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரைக் கண்டார். இவரே முற்பிறப்பில் அநிந்திதை..

ஈசனின் ஆணை நிறைவேறும் பொருட்டு - திருவொற்றியூர் திருக்கோயிலில் மகிழ மரத்தின் கீழ் - உனைப் பிரியேன்!.. என வாக்களித்து ஏற்றுக் கொண்டார்.

ஆயினும் - மீண்டும் திருஆரூர் செல்ல வேண்டும் என்ற ஆசையினால் - ஊர் எல்லையைக் கடந்தபோது இருவிழிகளிலும் பார்வை இழந்தார்..

ஈசனின் அருளால் - திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் ஒன்று கிடைத்தது..

ஆயினும், மின்னல் கீற்றாக ஒளி காட்டி வழி நடத்தியவள் அன்னை பராசக்தி..

தகப்பன் தண்டித்தாலும் - தாய் அன்புடன் அரவணைத்துக் கொண்டாள்..

தட்டுத் தடுமாறி - சுந்தரர் வந்து சேர்ந்த திருத்தலம் - திருக்கச்சி!..

இன்று காஞ்சிபுரம் என வழங்கப்படும் திருத்தலம்..

அம்பிகை - காமாட்சி எனும் திருப்பெயர் கொண்டு விளங்கும் திருத்தலம்..

ஈசன் அளந்த நாழி நெல் கொண்டு - முப்பத்திரண்டு அறங்களையும் இயற்றிய திருத்தலம்..

கம்பையாற்றில் மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்யும் பொழுது வெள்ளம் பெருகி வர -


பெருமானே!..  - என, பதறித் துடித்து ஐயனை மார்புறத் தழுவிக் கொண்டனள்..

அவ்வேளையில் அன்னையின் திருமுலைத் தடமும் திருவளைத் தடமும் கொண்டனன் - எம்பெருமான்..

அம்பிகையின் திருப்பெயர்களைக் குறித்த வரிசையில் ,
முதலில் போற்றப்படும் பெருமைக்குரியவள் - காஞ்சி காமாட்சி!..

சிவபெருமானின் இடப்பாகத்தில் கலந்திருப்பவள் - காமாட்சி..

கருணையை விழிகளாகக் கொண்டவள் - காமாட்சி..

சுந்தரர் கேளாமலேயே - அவர் மீது பரிவு கொண்டு - இடக் கண்ணில் பார்வையைக் கொடுத்தருளினாள்..

சுந்தரர் திருப்பதிகம் பாடித் துதிக்கும் போது - பத்துப் பாடல்களிலும் காமாட்சி அன்னையைக் குறித்துப் போற்றுகின்றார்..

ஏலவார் குழலாள் உமை நங்கை, அற்றமில் புகழாள் உமை நங்கை,
வரிகொள் வெள்வளையாள் உமை நங்கை, கெண்டையந் தடங்கண் உமை நங்கை,

எல்லையில் புகழாள் உமை நங்கை, மங்கை நங்கை மலைமகள்
எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை, அந்தமில் புகழாள் உமை நங்கை,
பரந்த தொல்புகழாள் உமை நங்கை - என்றெல்லாம் புகழ்ந்துரைத்த சுந்தரர்

எள்கல் இன்றி இமையவர் கோனை
ஈசனை வழிபாடு செய்வாள் போல்
உள்ளத்து உள்கி உகந்து உமைநங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி
வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே!.. (7/61)

- என்று காஞ்சியின் தலவரலாற்றைப் பதிவு செய்கின்றார்..


கருணை மிகும் காமாக்ஷி அன்னையைப் பற்றி என்ன சொல்ல முடியும்!..

காஞ்சி முழுமைக்கும் காமாக்ஷியே முதலானவள்..

அதனால் - இங்குள்ள மற்ற சிவாலயங்களில் அம்பிகைக்கு தனியாக சந்நிதி கிடையாது..

மாமரத்தின் கீழாக ஐயன் தரிசனம் நல்கியதால் - ஸ்ரீ ஏகாம்பர நாதர்.

தல விருட்சம் - மா மரம்..

தீர்த்தம் கம்பையாறு... இன்றைய சூழலில் குளமாகத் திகழ்கின்றது..

சொல்லுகின்ற சொல்லெல்லாம் அவளே!..
காணுகின்ற காட்சியெல்லாம் அவளே!..

சுந்தரர்க்கு வழிகாட்டி விழி கொடுத்த காமாட்சி
நமக்கும் வழிகாட்டி விழி கொடுக்க வேண்டும்!..

காஞ்சியில் இடக்கண் பெற்ற சுந்தரர் - ஆரூரில் வலக் கண்ணையும் பெறுகின்றார்..

நாடெங்கும் நற்றமிழ்ப் பயிர் வளர்த்த சுந்தரர் - நாளும் நல்லறம் புரிந்தார்..


அவிநாசியில் முதலை உண்ட பாலகனை மீட்டுக் கொடுத்தருளினார்.

காவிரி வெள்ளம் - இவருக்காக - திருஐயாற்றில் விலகி வழி விட்டது.

திருக்குருகாவூருக்கு சுந்தரர் வரும் வழியில் - ஈசன் தயிர் சோற்றுப் பொதியுடன் காத்திருந்து - பரிமாறி பசி தீர்த்தனன்.

நாகை, திரு முதுகுன்றம், திருப்புகலூர் முதலான தலங்களில் ஈசனிடமிருந்து பெற்ற பொன்னையும் பொருளையும் ஏழை எளியவர்க்கு வாரிவழங்கினார்.


சோழ நாட்டில் - குண்டையூர் கிழார் கொடுத்த நெல் பொதிகளை - வீட்டில் கொண்டு வந்து சேர்ப்பிக்க ஆவன சேய்யுமாறு ஆரூர் தியாகேசரைக் கேட்டுக் கொண்டார்.

ஈசனும் பூத கணங்களை அனுப்பி வைக்க - நெற்பொதிகள் ஒன்றுக்குப் பத்து நூறு ஆயிரம் எனப் பெருகி திருஆரூர் வீதியெல்லாம் நெற்பொதிகளாகின.

ஆயிரமாயிரம் பொதிகளையும் - அத்தனை மக்களுக்கும் பிரித்தளித்து மகிழ்ந்தார்..

திருஆரூர் தேவாசிரிய மண்டபத்தில் இருந்த அடியார்களைக் கண்டு - இவர் தமக்கு என்றைக்கு அடியனாவேனோ!.. - என்று வியந்தார்..

அந்த அளவில் எழுந்ததே - திருத்தொண்டத்தொகை!..


இவர் காலத்தில் இவரோடு வாழ்ந்த நாயன்மார்கள் - ஏயர்கோன் கலிக்காமர், சோமாசி மாறனார், கோட்புலியார், காடவர்கோன் கழற்சிங்கர், சேரமான் பெருமாள் - முதலானோர்..

கோட்புலியார் தம் மகள்களாகிய - வனப்பகை, சிங்கடி எனும் இருவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு சுந்தரரைப் பணிந்தார்..

பெருங்கருணையுடன் - இனி இவ்விருவரும் எனது மகள்களாவர்!.. - என அன்புடன் மொழிந்தார் - சுந்தரர்..

வனப்பகை, சிங்கடி - இருவரையும் திருப்பதிகங்களில் குறித்து மகிழ்கின்றார்..

சுந்தரர் நிகழ்த்திய அருஞ்செயல்கள் மிகப் பலவாகும்..

அவற்றை - திருவருள் துணை கொண்டு வேறொரு பொழுதில் சிந்திப்போம்..

சேரநாட்டின் திருவஞ்சைக் களத்தில் சேரமான் பெருமாளுடன் இருக்கும் போது - திருக்கயிலைக்கு திரும்பிச் செல்ல விழைகின்றார்.

ஈசன் தானும் வெள்ளை யானையை அனுப்பி வைத்தருள்கின்றனன்.

சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளுடன் சேரமான் பெருமாளும் செல்கின்றார்..


வானவர்கள் வரவேற்று பூமழை பொழிகின்றனர்..

முன்னர் திருமணம் தடைப்பட்ட - சுகுணவதி - தன் தவத்தால் திருக்கயிலை மாமலையில் உமையாம்பிகையின் பணியேற்கின்றார்.

பரவை நாச்சியாரும் சங்கிலி நாச்சியாரும் - திருவருள் திறத்தால் - மீண்டும்  அம்பிகைக்கு அணுக்கத் தோழியராகின்றனர்.

திருக்கயிலாய ஞான உலா பாடிய சேரமான் பெருமாள் சிவ கணங்களுள் ஒருவராகின்றார்..

அம்மையப்பனை வலம் வந்து - திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார் - சுந்தரர்.

அந்த அளவில் - திருநீற்று மடல் ஏந்திய வண்ணம், மீண்டும் -
சிவபெருமானின் அணுக்கத் தொண்டராகத் திகழ்ந்தார்..

சுந்தரர் அருளிய - நூறு திருப்பதிகங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

பின்னை நாட்களில் - திருமுறைகள் தொகுக்கப்பட்டபோது - சுந்தரரின் திருப்பதிகங்கள் - திருப்பாட்டு எனும் திருப்பெயரில் தேவார அடங்கன் முறையுள் வைக்கப்பட்டது..

இன்று ஆடி சுவாதி.. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் சிவசாயுஜ்யம் பெற்ற நாள்..

பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய் கடுஇருட் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே!.. (7/29)

வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!..

ஓம் நம சிவாய.. சிவாய நம ஓம்..
* * *

21 கருத்துகள்:

  1. கட்டுரை ஆரம்பித்த இடமான காஞ்சி முதல் நிறைவுற்ற இடமான திருவஞ்சைக்களம் வரை அனைத்துத் தலங்களும் சென்றுள்ளேன். உங்களது பதிவால் அனைத்துத் தலங்களுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      காஞ்சி சென்றிருக்கின்றேன்.. கேரளத்தில் பல தலங்களைத் தரிசனம் செய்திருந்தாலும் திருவஞ்சைக் களம் சென்றதில்லை..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பல தலங்களின் தரிசனத்தையும் பற்பல உன்னதனங்களையும் அறிய முடியாது ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. எந்த ஒரு நாளையும் நம்பும் கடவுளுடன் சம்பண்டப் படுத்த ஒரு கதை இருக்கும் போலிருக்கிறதே. பதிவை இனிதான் படிக்க வேண்டும். ஆரம்பத்தைப்பார்த்ததும் எழுந்தஎண்ணமே இப்பின்னூட்டம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அனைத்துத் தலங்களுக்கும் உங்களின் அருமையான பதிவின் மூலம் சென்று வந்த திருப்தி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. வணக்கம் ஐயா!

    எத்தனை தலங்கள்... அவற்றின் சிறப்புகள்! அங்கு நடந்த அதிசயங்கள்!..

    தங்கள் பதிவினைப் படிக்கும் போது அறிந்திருந்து காலப்போக்கில் மறந்திடும் நிலைக்கான பல புராணக் கதைகளை மீண்டும் நினைவு படுத்திக் கொண்டேன். மிக அருமை ஐயா!

    நல்லதொரு தினத்தில் சிறப்பான பகிர்வு!
    நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு நல்வரவு!..

      தங்கள் வருகையும் அன்பின் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி.

      நீக்கு
  6. அற்புதமான பகிர்வு ஐயா... சுந்தரர் கதை... அன்னை காமாஷியின் கதை என ஆஹா.. அற்புதம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      அன்பின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பல தலங்களுக்கும் சென்று வரும் வாய்ப்பை நல்கியுள்ளீர்கள்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. எங்கள் மாமனார் ஆடி சுவாதிக்கு கட்டாயம் திருவஞ்சைக்களத்தில்இருப்பாரகள். சுந்தர்ர்வரலாறூம் காமாட்சியின் மகிமையும்
    அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      சிவப்பழமாகிய தங்கள் மாமனார் பற்றி நினைவு கூர்ந்ததில் மகிழ்ச்சி..தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  9. வணக்கம்,
    அப்பா எத்துனைத் தகவல்கள்,
    நமக்கு கொஞ்சம் பக்தி இலக்கியம் தூரம், சரி இனி எதுவானாலும் தங்களைக் கேட்கலாம்,
    தாங்கள் சொல்லும் விதம் அருமையாக உள்ளது,
    பல கோயில்களுக்கு சென்று வந்த உணர்வு,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. ஆஹா..எத்தனை எத்தனை ஆன்மீக விஷயங்கள் எங்களுக்கு கொடுக்கிறீர்கள் ஐயா. பல இடங்களுக்கு சென்றது இல்லை. உங்கள் வாயிலாக செல்கிறோம் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அறிந்ததையும் புரிந்ததையும் தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். அன்புடன் - தளத்திற்கு வருபவர்களை ஆர்வத்துடன் அழைத்துச் செல்கின்றேன்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..