புதன், ஜூன் 17, 2015

வாழ்க வாஞ்சி..

மணியாச்சி சந்திப்பு..


ஆண்டு 1911. ஜூன் மாதம். பதினேழாம் நாள்.
ஞாயிற்றுக்கிழமை. காலை 10:30

தூத்துக்குடியிலிருந்து பத்து நிமிடங்கள் தாமதமாக வந்து கொண்டிருக்கின்றது  - போட் மெயில் (Boat Mail).

இந்திய இலங்கை இணப்பாக இயங்கிக் கொண்டிருந்த - அந்த ரயில், இன்னும் சில நிமிடங்களில் மூன்றாவது நடைமேடைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்ட நேரம்..

காலை 10:38

திருநெல்வேலியிலிருந்து வந்து இரண்டாவது நடைமேடையில் நின்றிருக்கும் ரயிலின் முதல் வகுப்புப் பெட்டி - போட்மெயிலுடன் இணக்கப்பட வேண்டும்..

பயணிகளும் ரயில்வே ஊழியர்களும் காத்திருந்தனர்.

நுங்கு, பனங்கிழங்கு, சோளப்பொரி, கடலை உருண்டை, வறுகடலை, சீனி பணியாரம், கருப்பட்டிக் காபி - என மண் வாசத்துடன் மக்கள் விற்றுக் கொண்டிருந்தனர்.

அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருந்த சிறுபிள்ளைகளின் முகங்களில் ரயிலைக் காணும் சந்தோஷம் மின்னியது.


அதோ.. சற்று தூரத்தில் கரும் புகை!..

பேரிரைச்சலுடன் நீராவியை விசிறியடித்துக் கொண்டு போட்மெயில் வந்து கொண்டிருந்தது..

சரி.. போய் இறங்குனதும் கையோட நாலு வரி எழுதிப் போடுங்க!..
மூட்டை முடிச்சிகளை விட்டுட்டு எங்கேயும் வேடிக்கை பார்க்காதீங்க!..

ரயில் நிலையத்திற்குள் - பரபரப்பும் அனைவரையும் தொற்றிக் கொண்டது..

காலை 10:45.

படீரென - துப்பாக்கிச் சத்தம்..

இரண்டாவது நடைமேடையில் நின்றிருந்த ரயிலின் முதல் வகுப்புப் பெட்டியில் இருந்து ஒரு பெண் வீறிட்டுஅலறும் சத்தம்..

அங்கிருந்த மக்களுள் பலர் பதறியடித்துக் கொண்டு ஓடினர்..

ஆனாலும், விடாதபடிக்கு ரயில்வே ஊழியர்கள் சிலர் முதல் வகுப்புப் பெட்டியை நோக்கி ஓடினர்..

பெட்டியினுள்ளிருந்து - வாலிபன் ஒருவன் குதித்து ஓடினான். அவனைத் தொடர்ந்து இன்னொருவன்..

முதலில் குதித்தவனின் கையில் துப்பாக்கி..  பளபள - என மின்னியது.

வாலிபர்கள் இருவரும் - இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக ஓடுகின்றனர்.

காலை 10:48.

போட்மெயில் மணியாச்சி சந்திப்பிற்குள் நுழைந்து விட்டது..

போட்மெயில் வருவதைக் கண்காணித்துக் கொண்டிருந்த நிலைய அதிகாரியிடம் செய்தி சொல்லப்பட்டது..

முதல் வகுப்புப் பெட்டியிலிருந்த கலெக்டர் துரை அவர்களை யாரோ துப்பாக்கியால் சுட்டு விட்டார்கள்.. நெஞ்சில் குண்டு பாய்ந்து விட்டது.  உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றார்!..

அதிர்ச்சியடைந்த நிலைய அதிகாரி சம்பவ இடத்திற்கு விரைகின்றார்.

துப்பாக்கியுடன் ஓடியவனைத் துரத்திப் பிடிக்கின்றனர் சிலர்.
அவர்களுள் கலெக்டரின் பணியாளும் ஒருவர்..

அங்கே கைகலப்பாகின்றது..

அவர்களின் பிடியிலிருந்து இளைஞன் தப்பிக்கின்றான்..

ஆனாலும், விடாமல் துரத்துகின்றனர். கற்களைக் கொண்டு எறிகின்றனர்..

மின்னலென ஓடிய இளைஞன் - முதல் நடைமேடையின் தென்பகுதியில் இருந்த கழிவறைக்குள் புகுந்து கதவைத் தாழிட்டுக் கொள்கின்றான்..

அதே நொடியில் - கழிவறையின் உள்ளிருந்து துப்பாக்கிச் சத்தம்!..

துரத்தி வந்தவர்கள் திகைத்து நிற்க - கழிவறையின் கதவு உடைத்துத் திறக்கப்படுகின்றது..

அங்கே இரத்த வெள்ளத்தில் - அந்த வாலிபன்!..

வாயினுள் சுட்டுக் கொண்டதால் சேதமாகியிருந்தது முகம்..

சடலத்தைக் கொணர்ந்து வெளியே போட்டார்கள்..

யார் பெற்ற பிள்ளையோ!.. இப்படி மண்ணோட மண்ணா கெடக்குதே!.. -

அங்கிருந்த மறத் தமிழச்சிகள் மாரில் அடித்துக் கொண்டு புலம்பினர்..

அதற்குள் மாண்டு கிடந்தவனிடமிருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது..

அந்தக் கடிதத்தின் வாசகங்கள் - உரக்க வாசிக்க முடியாதபடிக்கு இருந்தன..

ஆனாலும் அந்தக் கடிதத்தை எழுதிக் கையொப்பமிட்டிருந்த இளைஞனின் பெயர் உரக்க வாசிக்கப்பட்டது..

அப்படியே - அந்த ஓசை அதிர்ந்து -
பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் முழுதும் எதிரொலித்தது.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் முழுவதையும் அதிர வைத்த - அந்தப் பெயர் -

R. வாஞ்சி ஐயர்., செங்கோட்டை.

ரகுபதி ஐயர் - ருக்மணி அம்மாள் தம்பதியரின் மகன். 1886ல் பிறந்தவர்.

அன்புடன் சூட்டிய பெயர் - சங்கரன். எனினும், அழைக்கும் பெயர் வாஞ்சி.

செங்கோட்டையில் பள்ளிப் படிப்பு. திருவனந்தபுரம் கல்லூரியில் - B.A., பட்டதாரி. புனலூர் வனத்துறை அலுவலகத்தில் பணி..

மனைவி - பொன்னம்மாள்..
ஒரு பெண்குழந்தை பிறந்து இறந்து விட்டது.

மறு பிரசவத்திற்காக - தாய்வீட்டிற்கு சென்றிருந்த வேளையில் தான் இந்த சம்பவம்.

வாஞ்சி தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட செய்தி ஆறு மாதங்களுக்குப் பிறகே அவரிடம் சொல்லப்பட்டது. அந்த மாதரசி அதனை நம்பவில்லை.

தன் கணவர் எங்காவது தலைமறைவாக இருந்து நாட்டிற்காகப் போராடிக் கொண்டிருப்பார் - என்றே நம்பினார்.

மேலும், வாஞ்சியின் தந்தை - தன் மகனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை.

அந்தச் சமுதாயத்தில் - இறந்த கணவனுக்கு மனைவி செய்யும் எந்தச் சடங்கையும் பொன்னம்மாள் செய்யவில்லை.

அதனால், சுமங்கலியாகவே இறுதிவரை வாழ்ந்தார்.

ஒரு கொலையைச் செய்து விட்டு - தானும் தற்கொலை செய்து கொண்டார் என்ற வகையில்,

அவரது தியாகம் சுதந்திரத்திற்குப் பின்னும் - இந்த நாட்டில் அங்கீகரிக்கப்பட வில்லை.

எதன் பொருட்டு வாஞ்சி நாதன் கொலை செய்தார்!?..

பாரதத் திருநாடு விடுதலை பெறவேண்டும். ஆங்கிலேய ஆட்சி அடியோடு நீக்கப்பட வேண்டும். அனைத்து ஆங்கிலேயனும் ஒழிக்கப்படவேண்டும். அதற்கு முன்மாதியாக கலெக்டர் ஆஷ் கொல்லப்படவேண்டும்!..

என்பதே - வாஞ்சிநாதன் சார்ந்திருந்த பாரதமாதா சங்கத்தின் நோக்கமாக இருந்தது..

அதுதான் -  மணியாச்சி சந்திப்பில் நிறைவேறியது.

வாஞ்சிநாதனுடன் துணைக்கு வந்த மற்றொருவர் - மாடசாமி என்று துப்பு துலங்கியது. ஆனாலும் -

ரயிலிலிருந்து குதித்து ஓடிய அவர் - அதன் பிறகு என்ன ஆனார் என்பது இன்று வரை யாருக்கும் தெரியாது..

ஆஷ் பயணித்து வந்த ரயில் - மீண்டும் திருநெல்வேலி நோக்கி பயணித்தது.

ஆயினும் -  போகும் வழியிலேயே ஆஷ் துரையின் உயிர் பிரிந்தது.

கொடைக்கானல் சென்று பிள்ளைகளைக் காண வேண்டும் என்ற ஆவல் நிறைவேறவில்லை.

திருநெல்வேலி கலெக்டரான ஆஷ் துரை ஏன் கொல்லப்பட வேண்டும்!..


வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு நாற்பது ஆண்டு கால தீவாந்தர தண்டனை!..

இந்தத் தண்டனை -  கலெக்டர் ஆஷ் இழைத்த அநீதி!..

காரணம் - வெள்ளையனுக்கு எதிராக கப்பல் ஓட்டியது தான்!..

வ.உ.சி., அவர்கள் இயக்கிய கப்பல்
தமிழன் கப்பலோட்டியதால் - வெள்ளையனின் மானம் கப்பலேறியது.

கப்பலோட்டிய தமிழனால் - வெள்ளையனின் கப்பல் கம்பெனி முழுகத் தொடங்கியது.

கப்பலோட்டிய தமிழனின் பெருமை கண்டு வெள்ளையன் நடுங்கினான்..

ஆனாலும் -

''..அவரா ஓட்டினார் - மாலுமி தானே ஓட்டினான்!..''
- என்று ஏளனம் பேசியவர்களையும் பின்னாளில் இந்த நாடு கண்டது!..

1906ல் அரும்பாடுபட்டு - வ. உ. சி., அவர்கள் உருவாக்கிய சுதேசி கப்பல் கம்பெனியை உருக்குலைத்து அடியோடு நாசம் செய்ததில் பெரும்பங்கு - கலெக்டர் ஆஷ் துரையினுடையது.

அதன்பின் - தூத்துக்குடி கோரல் நூற்பாலையின் தொழிலாளிகள் - அநீதிக்கு எதிராகப் போராடினர்.

அவர்களை ஆங்கிலேய முதலாளிகள் - அடக்குமுறையினால் ஒடுக்கினர்.

தொழிலாளர்களுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கினார் - வ.உ.சி.,

27 பிப்ரவரி 1908. வரலாற்றில் பொன்னெழுத்துக்கள் பதிந்த நாள்..

அன்று தான் இந்தியாவின் முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நிகழ்ந்தது.

தமது கைப்பொருள் கொண்டு - தொழிலாளர்களின் பசி தீர்த்தார் - வ.உ.சி.,

நூற்பாலை முடங்கிப் போனது. அதிர்ந்து நின்றனர் வெள்ளை முதலாளிகள்..

முடிவில் - தொழிலாளிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லாமல் போனது நிர்வாகத்திற்கு!..

போராட்டம் வெற்றி பெற்றது.. நிர்வாகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டது.

அப்போது நெல்லையின் துணைக் கலெக்டர் - ஆஷ்!..

தமது அவலத்தை துணைக் கலெக்டரிடம் முறையிட்டது ஆலை நிர்வாகம்.

வேளை வராமலா போகும்!.. - எனக் காத்திருந்தனர்..

அந்த நாளும் வந்தது.

9 மார்ச் 1908.

அன்றைய தினம் - சுதந்திரத்திற்காக வங்கத்தில் போராடிய பிபின் சந்த்ரபாலர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

அவரது விடுதலையை - வ.உ.சி., தனது தோழரான சுப்ரமணிய சிவாவுடன் சேர்ந்து கொண்டாட விழைந்தார்.

அந்த விழா நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் விரும்பவில்லை..

வ.உ.சி., சுப்ரமணிய சிவா- இருவரையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்த மாவட்ட நிர்வாகம் -

சொந்த மண்ணை விட்டு வெளியேறு!.. - எனச் சொல்லி சிறுமைப்படுத்தியது..

எதற்கடா.. இந்த மண்ணை விட்டு நாங்கள் வெளியேற வேண்டும்!.. - என கர்ஜித்தனர் இருவரும்..

அந்த கர்ஜனையில் கதிகலங்கிய மாவட்ட நிர்வாகம், 12 மார்ச் 1908 அன்று,
வ.உ.சி., சுப்ரமணிய சிவா- இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தது.

அடக்குமுறையைக் கண்டு கொதித்தெழுந்தது - திருநெல்வேலி!..

மூண்டெழுந்த கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கினான் - ஆஷ்!..

மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது. நால்வர் உயிரற்று வீழ்ந்தனர்.

ஊரடங்குதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வ.உ.சி., அவர்களும் சுப்ரமணிய சிவா அவர்களும் தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்டனர்.

மக்களிடையே பெருங்கலவரத்தைத் தூண்டி விட்டதாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் முடிவில் -

வ.உ.சி., அவர்களுக்கு 40 ஆண்டு சிறைவாசம் - சுப்ரமணிய சிவா அவர்களுக்கு 10 ஆண்டு சிறைவாசம் என அறிவிக்கப்பட்டது.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் வ.உ.சி.,
அங்கே, அவரை - மாடு இழுக்கும் செக்கில் பூட்டி கொடுமைப்படுத்தினர்.

சிறைக் கொடுமையால் சுப்ரமணிய சிவா தொழுநோயாளியானார்.

இத்தனைக்கும் காரணம் கலெக்டர் ஆஷ் துரை தான்!..
என்று - மனதார நம்பியவர்களுள் முதலிடத்தில் - வாஞ்சி!..

வ.உ.சி., அவர்களுக்கு நேர்ந்த கொடுமையினால் மனமுடைந்தார் - வாஞ்சி.

அதன் விளைவாகவே - சுதந்திரப் போராட்டத்தில் மித வாதத்தை விரும்பாத நீலகண்ட பிரம்மச்சாரியின் போராட்டக் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டார்..

வாஞ்சிநாதனின் செயல் மகத்தானது. வீரம் செறிந்தது.

எனினும் - இன்றைக்கு,

வருணாசிரமத்தைக் காக்கும் பொருட்டே - இந்தக் கொலை நடந்தது என்றும், 

சம்பவம் நடந்தபின் கைப்பற்றப்பட்ட வாஞ்சியின் கடிதத்தில் - 
இங்கிலாந்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரைப் பற்றிக் குறிக்கும் வார்த்தைகளில் - வாஞ்சி நாதன் தன்னுள் கொண்டிருந்த சனாதன உணர்வுகள் வெளிப்படுகின்றன - என்றும் குறிக்கப்படுகின்றது.

ஆஷ் துரை போன்ற ஆட்சியாளர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு - அதுவே தமிழகத்தில் முதலாவதானது.

ஒரு கொலை செய்து விட்டு - தானும் தற்கொலை செய்து கொண்டார் என்ற அடிப்படையில் - 

வாஞ்சிநாதனின் தியாகம் சுதந்திரத்திற்குப் பின்னும் - இந்த நாட்டில் அங்கீகரிக்கப்படவில்லை.

அன்றைய ஆட்சியாளர்கள் வாஞ்சியின் தியாகத்தைக் கண்டு கொள்ள வில்லை.

அந்நிய ஆதிக்கத்திலிருந்து தாயகம் விடுபட வேண்டுமென பாடுபட்ட வாஞ்சியின் மனைவி - வயதான காலத்தில் ஆதரவற்றிருந்த சூழ்நிலையில், 

தமது ஆட்சியில் அவருக்கு உதவித் தொகை வழங்கி சிறப்பித்தவர் - 
அறிஞர் அண்ணா!..

Even after Independence, the widow of Vanchinathan was not covered under the State Government's pension scheme for freedom fighters or their immediate dependents till 1967. It was C.N. Annadurai who, as Chief Minister, had decided to grant pension to her in June 1967, overruling objections.
(Thanks - The Hindu., June 17, 2011)


திரு. குமரி அனந்தன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அக்டோபர் 1988ல் மணியாச்சி சந்திப்பிற்கு வாஞ்சி மணியாச்சி என பெயர் மாற்றம் செய்தார் அன்றைய பிரதமர் - திரு. ராஜீவ் காந்தி.

வாஞ்சியின் திருவுருவம் செங்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், செங்கோட்டையில் நினைவு மண்டபத்தைக் கடந்த 23 .12.2013 அன்று தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்கள் திறந்து வைத்தார்.


தஞ்சையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் விடியற்காலைப் பொழுதில் வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் நின்று செல்லும்.

ரயில் பயணமாக - திருச்செந்தூர் செல்லும் போதெல்லாம் -  

வாஞ்சியின் இன்னுயிர் அங்கே சுழன்று கொண்டிருக்கும் என்ற நினைவுடன் - மணியாச்சியில் - எழுந்து நின்று கைகூப்பி வணங்கிக் கொள்வேன்..

சமயம் வாய்க்க வேண்டும்... 
வாஞ்சி தன்னுயிர் நீத்த மண்ணைத் தொட்டு வணங்குவதற்கு!..  
* * * 

வாஞ்சி நாதனின் தியாகம் மறக்க இயலாதது. 
தேசபக்தர்களுக்குள் சிறப்பிடத்தைப் பெற்ற வாஞ்சிநாதன்
என்றும் சிந்தையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர்..

என்றென்றும் வாஞ்சி நாதனை நினைவு கூர்வது
நம் அனைவரின் கடமை!..

வாழ்க வாஞ்சிநாதனின் புகழ்!..
* * *

17 கருத்துகள்:

  1. வாஞ்சி நாதனின் வரலாறு அறியக்கண்டேன் அவரை நினைவு கூர்ந்து அவரது புகழ் போற்றுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி.. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      வீர வாஞ்சியின் புகழ் வாழ்க..

      நீக்கு
  2. வாஞ்சி நாதன் பற்றி பள்ளி நாட்களில் சுதந்திரதினம் பேச்சு போட்டி, கவிதைப்போட்டி என் நிறைய பேசினேன்.
    அவரை நினைவுகூர்ந்தது மகிழ்ச்சி.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகைக்கும் மேலதிக செய்திகளுக்கும் மகிழ்ச்சி..

      வீர வாஞ்சியின் புகழ் வாழ்க!..

      நீக்கு
  3. வாஞ்சிநாதனின் வரலாற்றையும், பிற தியாகிகளின் வரலாற்றையும் பகிர்ந்தமைக்கு நன்றி. இவை போன்ற பதிவுகள் இக்காலகட்டத்திற்குத் தேவை. இன்றைய தமிழ் இந்து நாளிதழில் வாஞ்சியின் உடலை ஆங்கிலேயர்கள் என்ன செய்தார்கள்? - ஆதாரங்களை ஆவணப்படுத்த கோரிக்கை என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. படிக்க மிகவும் வேதனையாக இருந்தது. (இணைப்பு கீழே)
    http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      வாஞ்சியின் உடலை என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை.. மேலும் - நூறாண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி குறித்து பலவிதமான கருத்துரைகள்.. அன்றைய அரசின் பாராமுகம்...

      வலிகளும் வேதனையும் தான் மிச்சம்..
      தங்கள் வருகைக்கும் மேலதிக தகவலுக்கும் நன்றி..

      நீக்கு
  4. வாஞ்சி நாதன் பற்றி பள்ளியில் படித்தது......இப்போது நினவு கூர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் இனிய வருகைக்கு நன்றி..

      வீர வாஞ்சியின் புகழ் வாழ்க!..

      நீக்கு
  5. கர்ஜனை மெய் சிலிர்க்க வைத்தது ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      வீர வாஞ்சியின் புகழ் வாழ்க!..

      நீக்கு
  6. வாஞ்சிநாதனின் நினைவினைப் போற்றுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..

      வீர வாஞ்சியின் புகழ் வாழ்க!..

      நீக்கு
  7. அன்புடையீர்..
    GMB ஐயா அவர்கள் = வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததை - தளத்தில் பதிவு செய்து மகிழ்ந்து - வாழ்த்து கூறியதற்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  8. வாஞ்சிநாதன் ! வஉசி பெயரைக் கேட்டதும் மெய் சிலிர்க்கிறது....வரலாறுதெரியும் என்றாலும் தங்களின் அழகு தமிழில் வரலாறு இன்னும் மிளிர்ந்து...ஒளிர்கின்றது.....

    வஉசி என்றதும் கப்பலோட்டியத்தமிழன் சிவாஜியும் நினைவுக்கு வருகின்றார்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      கப்பலோட்டிய தமிழன் என - வ.உ.சி. அவர்களின் வரலாறு திரைப்படமாக வரவில்லை எனில் - நாமெல்லாம் அவரை முற்றாகவே மறந்து நன்றி கெட்டவர்களாக ஆகியிருப்போம்!..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  9. வாஞ்சியின் தியாகமும் வீரமும் மகத்தானது. உடன் இருந்தவர் மாடசாமி என்ற பெயரைக் கொண்டுதானே கப்பலோட்டிய தமிழன் படத்தில் ஜெமினி கணேசன் பாத்திரம் வடிவமைக்கப்பட்டது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுக்கு நல்வரவு..
      தங்களின் முதல் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி..

      ஆம்.. அப்படித்தான் நினைக்க முடிகின்றது.. ஆயினும் மாடசாமி கற்பனை கதாபத்திரம் - என்று எதிர்வழக்காடுபவர்களும் உண்டு..

      வாஞ்சிநாதனுக்குப் பிறகு - மாடசாமி அவர்களைப் பற்றிய செய்திகள் இல்லை என்பது உண்மை..

      கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் கூட வெள்ளையனின் கப்பலுக்கு குண்டு வைத்து விட்டு - வ.உ.சி. அவர்களின் யோசனையின்படி - பிரெஞ்சுப் பகுதியான புதுச்சேரிக்குக் குடியேறுவதாக காட்டப்படும்.

      அச்சத்தினால் நாட்டை விட்டு வெளியேற்றம் - என்று அந்தக் காட்சியை சிறுமைப்படுத்தினர்..

      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..