செவ்வாய், ஏப்ரல் 28, 2015

தேர்த் திருவிழா

சிறு வயதில் -

திருவையாற்றில் தேர் என்று - வண்டி கட்டிக் கொண்டு செல்வதையும்
கும்பகோணத்தில திருவிழா.. என்றும் திருவாரூர்ல தேர்.. என்றும் ஆரவாரமாக மக்கள் புறப்பட்டுச் செல்வதையும் கண்டிருக்கின்றேன்..


அப்போதெல்லாம் மனம் கிடந்து அடித்துக் கொள்ளும் -

நம்ம ஊர்ல ஏன் தேர் ஓடலை.. - என்று.

வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டபோது கிடைத்த விடை -

அதெல்லாம் இத்துப் போய் வெகு நாளாச்சு!..

நான் முதல்முதலாக சின்ன வயதில் தரிசித்த தேரோட்டம் - திருச்சுழியில்.

தேவாரத் திருப்பதிகம் பெற்ற திருத்தலம் - திருச்சுழி.
அருப்புக் கோட்டைக்கு அருகில் உள்ளது.

அதன் பிறகு விவரம் அறிந்த வயதில் - திருஆரூர், கும்பகோணம், திருஐயாறு, மதுரை, பந்தநல்லூர், திருப்பனந்தாள், பட்டுக்கோட்டை, மன்னார்குடி - எனும் திருத்தலங்களில்..

அங்கெல்லாம் தரிசனம் செய்யும் போது ஆழ் மனதில் அலையடித்துக் கொண்டிருக்கும்..

நம் ஊரில் தேர் ஓடுவது எப்போது!..

இந்த எண்ண அலைகள் பலரது நெஞ்சக் கடலிலும் புரண்டிருக்கும் போல!..

2010-ஆம் ஆண்டுகளில் - தஞ்சை தினத்தந்தியிலும் தினமணியிலும் சிறப்புச் செய்தியாக தஞ்சை பெரியகோயில் தேரினைப் பற்றி வெளியிட்டிருந்தார்கள்..

அதன் பிறகு - தஞ்சை பெரிய கோயில் திருவிழாவில் தேரோட்டம் நிகழ வேண்டும் என்ற எண்ணங்கள் வலுப்பெற்றன.

அதன் விளைவு - 2013ல் தமிழக அரசு - தஞ்சை பெரியகோயிலுக்குப் புதிய தேர் செய்ய ஆதரவளித்து 50 லட்ச ரூபாயினை ஒதுக்கியது.

மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்திய மக்களுள் நானும் ஒருவன்.

ஸ்ரீகொங்கணேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் புதிய தேர் செய்வதற்கான பூர்வாங்கப் பணிகள் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் ஸ்தபதி திரு வரதராஜன் தலைமையில் தொடங்கப்பட்டன.

அதன்பின் - ஸ்ரீ விஜயராமர் திருக்கோயிலின் எதிரில் திருப்பணி நடைபெற்று - தேர் வடிவம் பெற்று நின்றது.

புதிதாக உருவாக்கப்பட்ட தேரின் வெள்ளோட்டம் ஏப்ரல்/20 அன்று - சிறப்பாக நடைபெற்றது.

நன்றி - Baskie Photography. 


தேர் வெள்ளோட்டம்
தேர் வெள்ளோட்டப் படங்கள் - Baskie Photography.
அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!..

பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா நடை பெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேலையில் - நாளை (29/4) பதினைந்தாம் திருநாளன்று தேரோட்டம் நிகழ இருக்கின்றது.

வெள்ளோட்டத்திற்குப் பிறகு - தேரினை அலங்கரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.


பல்வேறு வண்ணங்களில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட திரைச் சீலைகளால் தேர் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

உச்சி சிகரத்தில் கலசம் வைக்கப்பட்டு, பிரம்மாண்டமாக பெரிய கோயிலைப் போலவே காட்சி அளிக்கின்றது.

அலங்காரங்கள் பூர்த்தியானதிலிருந்து - நாளும் நாளும் மக்கள் திரண்டு வந்து தேரினைக் கண்டு மகிழ்வதாக செய்திகள் கூறுகின்றன. 

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில், நாயக்கர் மற்றும் மராட்டியர் ஆட்சிக் காலத்தில் சித்திரை பிரம்மோற்சவம் நடத்தப்பட்டது.

இதில், பதினைந்தாம் நாள் உற்சவமாக தேரோட்டம் நடந்தது.

இரண்டாம் சரபோஜி மன்னர் - ஐந்து பெரிய தேர்களையும், நான்கு ராஜ வீதிகளில் தேர் நிலைகளையும் அமைத்துக் கொடுத்தார்.

சிறப்பாக நடந்து கொண்டிருந்த தேரோட்டம் பல்வேறு காரணங்களால் நடக்கவில்லை.

அதுவும் நூறாண்டுகளுக்கு மேலாகியது.


நாளை காலை 5.30 மணியளவில் யதாஸ்தான பூஜைகளுக்குப் பின் -
ஸ்ரீ பிரகதீஸ்வரர் திருக்கோயிலில் இருந்து ஸ்ரீ விநாயகர், ஸ்ரீசுப்ரமணியர்,
ஸ்ரீ நீலோத்பலாம்பிகை உடன் ஸ்ரீதியாகராஜர் ஸ்ரீபெரியநாயகி அம்மன் மற்றும் ஸ்ரீசண்டிகேஸ்வரர் - ஆகிய பஞ்ச மூர்த்திகளும் தேர் மண்டபத்திற்கு எழுந்தருள்கின்றனர்.

புதிய தேரில் எழுந்தருளும் பெருமான் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி.

நீலோத்பலாம்பிகையுடன் உறைபவர். ஸ்ரீ சோமாஸ்கந்த மூர்த்தி.

தஞ்சை அழகர் என்றும் தஞ்சை விடங்கர் என புகழப்படுபவர் - இவரே!..

ஆதி மூர்த்தியாகிய -  வீதி விடங்கப் பெருமானின் திருமேனியை - தேவலோகத்திலிருந்து கொணர்ந்தவர் - முசுகுந்தச் சக்ரவர்த்தி.

வீதி விடங்கப் பெருமான் ஆரூரில் ஸ்தாபிக்கப்பட்டதோடு கூட இருந்த ஆறு திருமேனிகளையும் மேலும் ஆறு திருத்தலங்களில் நிறுவினார்.

ஆரூர் வீதிவிடங்கப் பெருமானே சோழர்களின் ஆத்மார்த்த மூர்த்தி..

எனவேதான் - ஆரூர் வீதி விடங்கரின் சாயலாக - தஞ்சையிலும் வீதி விடங்கப் பெருமானை மாமன்னன் ராஜராஜ சோழன் வடிவமைத்து வணங்கி நின்றான். 

அர்த்த மண்டபத்தின் வலப்புறமாக விளங்கும் ஸ்ரீதியாகராஜ சந்நிதியின் எதிர்ப் புறம் கூப்பிய கரங்களுடன் - மாமன்னன் ராஜராஜ சோழனின் திருமேனி திகழ்கின்றது.

இங்கே - தினமும் அந்திக் காப்பு எனும் சாயரட்சை வழிபாடு மிகச் சிறப்பாக நிகழும்.

இத்தகைய பெருமையுடைய -

ஸ்ரீதியாகராஜ மூர்த்தி நீலோத்பலாம்பிகையுடன் திருத்தேரில் எழுந்தருளி பவனி வருகின்றார்.

மங்கள வாத்தியத்துடன் சிவகண வாத்திய முழக்கம் மற்றும் பறையொலி கூத்தொலியுடன் விநாயகப் பெருமான் முன் செல்ல , காலை 6.45 மணிக்குள் புதிய திருத்தேரின் வடம் பிடிக்கப்படும்.




நான்கு ராஜ வீதிகளிலும் பவனி வரும் திருத்தேர் - ஸ்வாமி தரிசனம் மற்றும் பக்தர்களின் அர்ச்சனைக்காக - ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றது.

திருத்தேர் நிறுத்தப்படும் இடங்கள்:-

மேல ராஜவீதியில் -

1) ஸ்ரீ கொங்கணேஸ்வரர் திருக்கோயில் அருகிலும்
ஸ்ரீ விஜயராமர் திருக்கோயில் ஸ்ரீ பங்காரு காமாக்ஷியம்மன் திருக்கோயில்
ஸ்ரீ கிருஷ்ணன் திருக்கோயில்களைக் கடந்து
2) ஸ்ரீமூலை ஆஞ்சநேயர் திருக்கோயில் அருகில் தேர் நின்று செல்லும்.

தொடர்ந்து - வடக்கு ராஜவீதியில் -

3) ஸ்ரீ ஆனந்த விநாயகர் திருக்கோயில் அருகிலும்
4) ஸ்ரீ ரத்னபுரீஸ்வரர் திருக்கோயில் அருகிலும் தேர் நின்று செல்லும்.

தொடர்ந்து - கீழ ராஜவீதியில் -

5) கொடிமரத்து மூலை ஸ்ரீமாரியம்மன் கோயில் அருகிலும்
6) ஸ்ரீ விட்டல் பாண்டுரங்கன் திருக்கோயில் (அரண்மனை எதிரில்) அருகிலும்
7) ஸ்ரீ மணிகர்ணிகேஸ்வரர் திருக்கோயில் அருகிலும்
8) ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில் அருகிலும் தேர் நின்று செல்லும்.

தொடர்ந்து - தெற்கு ராஜவீதியில் -

9) ஸ்ரீ கலியுக வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் அருகிலும்
10) ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயில் அருகிலும்
11) ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோயில் அருகிலும் தேர் நின்று செல்லும்.

தேரோட்டத்தின் நிறைவில் - மேலராஜவீதியில் - தேர் நிலை நிறுத்தப்படும்.

நூறாண்டுகளுக்கும் மேலாக நின்று போயிருந்த தேரோட்டம் நாளை புதன் கிழமை மங்கலகரமாக நடைபெற இருக்கின்றது.

திருக்கோயிலும் பிரம்மாண்டம். திருத்தேரும் பிரம்மாண்டம்.


தஞ்சை சரஸ்வதி மஹாலில் உள்ள மராட்டியர்களின் மோடி ஆவணங்களில் நூறாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற தேர்த் திருவிழாவினைப் பற்றிய குறிப்புகள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

1813-ஆம் ஆண்டு தஞ்சையில் நடந்த திருவிழாவின் போது -
திருவையாறு (1900) பாபநாசம் (2800) கும்பகோணம் (3494) கீவளூர் (4500)
மயிலாடுதுறை (3480) திருஆரூர் (2920) மன்னார்குடி (4200) நன்னிலம் (3200) - ஆகிய ஊர்களில் இருந்து தேரிழுக்க 26,494 ஆட்கள் திரண்டு வந்ததாகவும் -

கோயில் வாகனங்களைத் தூக்குவதற்கு திருவையாற்றிலிருந்து 900 ஆட்கள் வந்ததாகவும் அறியமுடிகின்றது.

மேற்குறித்த மோடி ஆவணக் குறிப்புகள் திரு Dr. B. ஜம்புலிங்கம் அவர்களின் பதிவில் இருந்து பெற்றவை.

இத்தகவல்களில் இருந்து - அன்றைய திருவிழாவின் பிரம்மாண்டத்தினை உணர முடிகின்றது.




நன்றி - Baskie Photography
தேர்த் திருவிழாவினைக் காண்பதற்காக - தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், திருச்சி, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர் - என வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

நாளை தேரோட்டத்தை முன்னிட்டு - தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை - என, மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலகத்திலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி -முகம்மது ஜாவீத்
அழகிய படங்களை வழங்கியவர் - திரு H. முகம்மது ஜாவீத்.
காணொளிகளை வழங்கியோர் - தஞ்சாவூர் FB.

அன்பு நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி - என்றும் உரியது.
* * * 

ஊர் கூடித் தேர் இழுப்பது!.. - என்ற சொல்வழக்கு சிறப்புடையது.


தஞ்சையில் நிகழும் தேர்த் திருவிழாவினைக் காண 
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்..

மகிழ்ச்சியும் பக்திப் பெருக்கும் ததும்பும் தருணம் - இது..

என் இருகண்ணிலும் நிறுத்தி எப்போதும் நினைத்திருப்பது தஞ்சையம்பதியைத்தான்!.. பெரியகோயிலைத் தான்!..

எங்கிருந்த போதும் - அம்மையப்பனின் அருகிருப்பதாக உணர்வு!..

ஆடிவரும் அழகுத் தேரினை அருகிருந்து காணும் நாள் எந்நாளோ!..
அன்புமிகும் அம்மையப்பன் அருள்புரிவர் - அந்நாளை!..

சிந்தை எல்லாம் சிவமாகி செழிக்க
ஓம் நம சிவாய சிவாய நம ஓம். 
* * * 

22 கருத்துகள்:

  1. தங்கள் பதிவின் முலம் தேர் ஒட்டம் பார்க்க ஆவல் அதிகரிக்கிறது. தேர் எங்கு எங்கு நிறுத்தப்டும் விவரம் அருமை. நலமுடன் தேர் ஓட்டம் நடைப்பெற எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும். தங்கள் அவா நிறைவேற நாள் கனியட்டும். வாழ்க நலமுடன்.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      நேரில் தேரோட்டத்தைத் தரிசனம் செய்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.. தங்கள் வருகைக்கு நன்றி..

      நீக்கு
  2. தேரோட்டம் பற்றிய விபரம் மிகவும் அருமையாக சொல்லி இருக்கீங்க !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. My tamil fonts are not working and hence in English. I saw some comments in Dr,Jambulingam's post from one Dr.T.Padmanabhan who calls the trial run as funny. He says the temple is based on Maguda AAgamam whereas the car is built as per siva aagamam .He says the car should run on car streets and not on Raja veedhis. Please visit Dr,Jampulingam;s post and read the comments There seems to be some questions to be answered

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Prof.and Director of Information Science, Author of the Tamil book "Thanjaiyilae Gangai" in 1985 and Founder Library Director of Tamil University Library, Dr, T. Padmanaban, M.A.HISTORY(58%marks); M.L.I.S.(A GRADE, Ph.D.(Madras Univ) (50 years of Univ. Service).... a Neutral Gender for G.M. Balasubramaniam to call me as ONE Dr. T. Padmanaban.(.75 years old)....You all do not know about agamas but want to project u as scholars of Thanjavur. Here is my REPLY.:
      SIVAGAMA is not a single agama. There are 28 Sivagamas for Dvaita and Advaita philosophy. Kamigama is for 1. building 2. location 3. rituals and 4. festivals for siva temples. There are 10 Sivas. Parama Siva is the first.Siva..KAMIGAMA is an agama for saivic temples. Big temple has been built as per magudagama for which Gopura itself is the sanctum Sanctorum for which festival rituals are different. As they are neglected there is no sanctity in Big temple. Approach Niskamis of Benares, rectify Big temple. Let us all live with the grace of real Brahadeeswara, with prosperity and peace.Ohm Namasivaya! From A.D. 1010 to 1014 of Rajaraja did the Nayak palace and raja veedhis exist, and Big temple car festival route was from a Vaishnavic temple?

      நீக்கு
    2. அன்பின் GMB ஐயா அவர்களின் வருகைக்கு மகிழ்ச்சி..

      தாங்கள் குறித்த Dr. B. ஜம்புலிங்கம் அவர்களின் பதிவினையும் அதில் மதிப்புக்குரிய Dr. T. பத்மநாபன் அவர்களின் சீரிய கருத்தினையும் கண்டேன்..

      நல்ல கருத்துக்களைக் காணவும் கருத்தில் கொள்ளவும் செய்த இறையருளுக்கு நன்றி..

      நீக்கு
    3. அன்புக்குரிய Dr. T. பத்மநாபன் ஐயா அவர்களுக்கு நல்வரவு..
      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      அரிய கருத்துக்களை தளத்தில் பதிவு செய்தமைக்கு நன்றி..

      நட்பின் வருகை தொடர விரும்புகின்றேன்.. வாழ்க நலம்..

      நீக்கு
  4. வணக்கம் ஜி புகைப்படங்களும் தங்களது விளக்கங்களும் அருமை காணொளிகள் கண்டு களித்தேன் நன்றி வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
      வாழ்க நலம்..

      நீக்கு
  5. இன்று மாலை பெரிய கோயிலுக்குச் சென்றுவந்துவிட்டு, உங்களது தளம் பார்த்தேன். மாலை சென்றபோது கோயிலிலிருந்து முளைப்பாரி எடுத்துச்செல்வதைப் பார்த்தேன். நாளை காலை அங்கு செல்ல உங்களது பதிவு ஆவலைத் தூண்டிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
      வாழ்க நலம்..

      நீக்கு
  6. படங்களும் பதிவும் அருமை ஐயா
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
      வாழ்க நலம்..

      நீக்கு
  7. காணொளி அருமை. படங்களும் மிக அழகு! அதுவும் அந்தத்தேரின் வேலைப்பாடுகள் மிகவும் நுணுக்கமாக மிக அழகாக இருக்கின்றன. அருமையான விளக்கங்கள். விவரணங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
      வாழ்க நலம்..

      நீக்கு
  8. தேரோட்டம் பற்றிய அனைத்தும் சிறப்பு ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
      வாழ்க நலம்..

      நீக்கு
  9. @ டாக்டர் டி. பத்மநாபன் முன்பின் தெரியாதவரை ஒரு இன்னார் என்று குறிப்பிடுவதில் தவறில்லை.மெத்தப்படித்தவர் எனும் செறுக்கு உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது. உங்கள் பின்னூட்டம் பற்றி நான் கருத்தெதுவும் கூறவில்லை. உங்கள் கருத்துக்களைப் பார்க்க வைத்ததற்கு நீங்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும் எனக்கு இந்த ஆகமங்கள் பற்றி ஏதும் தெரியாது. மேலும் சைவ வைஷ்ணவ சித்தாந்தங்கள் பற்றிய சர்ச்சையில்நாட்டமும் கிடையாது நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகள் சேர வேண்டிய இடம் நிகழ்வினைக் குறித்து எழுதும் வலைப் பதிவரின் தளம் அல்ல ஒரு வேளை உங்கள் எண்ணங்கள் புறக்கணிக்கப் பட்டதால் எழுந்த சீற்றமா உங்களை இவ்வாறு எழுதத் தூண்டியது. காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே.
    @ துரை செல்வராஜு இன்று காலை நேரடி ஒளிபரப்பு ஏதும் இருந்ததா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      நான் காலையில் இருந்தே எனது Fb - தளத்தில் இருக்கின்றேன்.. தகவல்களை அளிப்பவர்கள் படங்களைப் பதிவிடுகின்றனர். ஆர்வத்துடன் அவர்கள் செய்யும் காணொளிகள் சிற்சில விநாடிகளுடன் நிறைவடைகின்றன.. காத்திருக்கின்றேன்.. தங்கள் அன்பின் வருகைக்கு நன்றி..

      நீக்கு
  10. தேரோட்டம் பற்றிய வெள்ளோட்டப் பதிவு.

    படங்கள் அனைத்துமே அருமையாக எடுக்கப் பட்டிருக்கின்றன. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி..கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..