ஞாயிறு, மார்ச் 29, 2015

அமரர் லீ குவான் யூ

சிங்கப்பூர்!..

தமிழக - குறிப்பாக தஞ்சை, திருவாரூர் மாவட்ட இளைஞர்களின் கனவு நகர்!..

இன்றும் கனவு நகராக விளங்கும் சிங்கப்பூரை உருவாக்கிய தவப்புதல்வன் -

லீ குவான் யூ அவர்கள்!..

இன்று அவர் நம்மிடையே இல்லை!..


இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்..
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்!..

தனித்துவம் மிக்க செந்தமிழ்க் கவியின் வரிகளுக்கு எடுத்துக்காட்டு -

அமரர் லீ அவர்கள்!..

லஞ்சம் ஊழல் அற்ற நிர்வாகத்தின் - தலைமகன்!..

சிங்கப்பூர் தமிழர்கள் நடத்தும் பல வணிக நிறுவனங்கள் பலவற்றிலும் - தமிழகத்தின் பல பகுதியைச் சேர்ந்தவர்களும் பணியாற்றுகின்றனர்.

குறிப்பாக - மன்னார்குடி, பட்டுக்கோட்டை, ஒரத்த நாடு வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் - சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார்கள்.

இவர்கள் வம்சாவழியாக அங்குள்ளவர்களுடன் உறவுமுறை தொடர்பில் இருந்து வருகின்றார்கள்.

சிங்கப்பூரின் சிராங்கூன் பகுதி - லிட்டில் இந்தியா என்றழைக்கப்படுவது.

இங்கே - உணவகங்கள், பூக்கடைகள், துணிக்கடைகள், நகைக்கடைகள் போன்றவற்றை - தமிழர்கள் சொந்தமாக நடத்தி வருகிறார்கள். 

இவர்கள் எல்லாம் சிங்கப்பூரின் தந்தை என்று புகழப்படும் - முதல் பிரதமர் லீ குவான் யூ காலத்தில் வேலைக்கு சென்றவர்கள். 

அவர் தமிழர்களை வரவேற்று வாழ்வளித்தவர் ஆவார்.


அதனால் தான் - லீ குவான் யூ அவர்களின் மரணம் தஞ்சை, திருவாரூர் மாவட்ட மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்காங்கே பல கிராமங்களிலும் லீ குவான் யூ அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து துக்கம் கடைப்பிடித்திருக்கின்றனர்.

எண்ணற்ற மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்குக் காரணமாக இருந்தவர் அமரர் லீ அவர்கள்..

நூறு ஆண்டுகளுக்கு முன் சிராங்கூன் சாலை
தீபாவளி கொண்டாடும் சிராங்கூன் சாலை
சிங்கப்பூரைச் செதுக்கிய சிற்பி - அமரர் லீ அவர்கள்..

சிங்கப்பூரை உலக தரத்திற்கு உயர்த்திய உத்தமர்.

சிங்கப்பூரின் ஏழ்மையை அடியோடு ஒழித்தவர்.

வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட - அனைவரும் தரமான வாழ்க்கை வாழ்ந்திடக் காரணமானவர்.

இவரைப் போல மக்கள் தலைவர்கள் பிறப்பது அரிது.

சிங்கப்பூர் சென்று வந்தவர்களுக்குத் தான் - அந்த நாட்டின் மகத்துவம் புரியும்.

எங்கும் சுத்தம். எதிலும் சுத்தம்..

வருடம் முழுதும் மழை பொழிவுள்ள நாடு. மழை பெய்யாத நாளே இல்லை..

எவ்வளவு மழை பெய்தாலும் - மழை ஓய்ந்த அடுத்த நிமிடம் சாலைகளில் மழை நீரைக் காண முடியாது.

அப்படியொரு வடிகால் அமைப்பு!..

லஞ்ச லாவண்யமற்ற - திறமையான, பொறுப்பான - முற்போக்கான சிந்தையுடன் கூடிய ஆட்சியை வழங்கி நாட்டை வளர்ச்சிப் பாதையில் நடத்தியவர்.

ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து ஏழ்மையுடன் விடுபட்டது சிங்கப்பூர்.

இன்றைக்கு உலக வர்த்தக மையங்களுள் ஒன்று!..

பாதுகாப்பு, பொருளாதாரம், மின்சாரம் - அடிப்படை வசதிகள் அனைத்திலும் சிங்கப்பூர் முதலிடத்தில் இருக்கின்றது.

குடிதண்ணீருக்கு மலேஷியாவை எதிர்நோக்கியிருந்த சிங்கப்பூர் - இப்போது நீர்த்தேக்கங்களை உருவாக்கி தன்னிறைவு பெற்றிருக்கின்றது.

- எனில் அதற்கு முழுக்காரணம் அமரர் லீ அவர்கள்.

அவரது எண்ணங்களின் அடிப்படையினைப் புரிந்து கொண்ட மக்களும் அவருடன் நாட்டின் வளர்ச்சிக்குத் துணை நின்றார்கள்.


1963ம் ஆண்டு, சிங்கப்பூரை இந்தோனேஷியா தாக்கியது. அப்போது அந்த தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் சிங்கப்பூர் தவித்தது.

இந்த தாக்குதலுக்கு பின்னர்,

பலமான ராணுவத்தை உருவாக்க நினைத்த லீ அவர்கள் உடனடியாக கட்டாய ராணுவ சேவை திட்டத்தை அமல்படுத்தினார்.

1967ம் ஆண்டு சிங்கப்பூரில் கட்டாய ராணுவ சேவை அறிமுகமானது.

இன்று சிங்கப்பூர் ராணுவம் பலம் கொண்ட நாடாக விளங்குகின்றது.

அமரர் லீ அவர்கள் சுத்தத்தை அதிகம் விரும்பியவர்.

அவர் பிரதமராக பதவி வகித்தபோது - ஆயிரக்கணக்கான தொண்டு ஊழியர்களுடன் தானும் இணைந்து தெருக்களைக் கூட்டி சுத்தம் செய்தார்.

சிங்கப்பூர் மக்கள் சுத்தம் குறித்த அவசியத்தை உணர்ந்தனர்.

அமரர் லீ அவர்கள் தளராத உழைப்பு தான் - இன்று, சிங்கப்பூர் நகரம் தூய்மையாக இருப்பதற்குக் காரணம்.


சிங்கப்பூரை விட்டு வெளியேறியதும் - பிரிட்டிஷ் குழு ஒன்று அறிக்கை அளித்து, சிங்கப்பூரைக் களங்கப்படுத்தியது - இப்படி!..

உலகின் மிக மோசமான சேரிப் பகுதிகளைக் கொண்டது - சிங்கப்பூர்.

இதைக் கண்டு மனம் பொறாமல் - களங்கத்தைத் துடைக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டார் அமரர் லீ அவர்கள்..

தான் பிரதமர் ஆனவுடன், கடந்த 1960ம் ஆண்டில், வீடமைப்பு வளர்ச்சி கழகத்தை துவக்கி, ஐந்தே ஆண்டுகளுக்குள் 54 ஆயிரம் குடியிருப்புக்களை உருவாக்கினார். 

இதனால், இன்று சிங்கப்பூரில் வசிக்கும் 82 சதவீத மக்கள் சொந்த அல்லது வீடமைப்பு வளர்ச்சி கழக வீடுகளில் வசிக்கின்றனர். 

அமரர் லீ அவர்களின் இந்த சாதனை இன்று வரை உலகளவில் மகத்தானது. 


5 ஜூன் 1959-ல் லீ முதல் பிரதமர் ஆனார். 1963-ல் மலேஷிய கூட்டமைப்பில் இணைய பாடுபட்டார்.

1965 ஆகஸ்ட் 7 அன்று மலேஷியாவிலிருந்து பிரிய வேண்டிய சூழ்நிலை வந்தபோது , கடமை உணர்வுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு , தனது தொலைநோக்குச் சிந்தனையால் நவீன சிங்கப்பூரை உருவாக்கினார்.

1959 முதல் தொடர்ந்து 1990 வரை உலகின் நீண்ட காலப் பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றார் .

12 நவம்பர் 1954 இல் மக்கள் செயல் கட்சி தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை அக்கட்சியே - அங்கு ஆட்சி புரிந்து வருகிறது.

அமரர் லீ அவர்கள் - தன் வாழ்நாள் முழுதும் நின்றிருந்த தொகுதி - தஞ்சோம் பஹார் என்பதாகும்.

இங்குதான் சிங்கப்பூரின் துறைமுகம் உள்ளது. கப்பல் பட்டறைகள் உள்ளதும் - சிறப்பாக தமிழர்கள் வாழும் பகுதியும் இதுவே தான்!..

தமிழர்களின் மீது பேரன்பு கொண்டவர்.



சீன, மலாய் மொழிகளுடன் செந்தமிழையும் ஆட்சி மொழியாக்கி அழகு பார்த்தவர்.

சீன - மலாய் மொழிகளுக்கு இணையாக தமிழையும் அரவணைத்தார்.

தமிழ் மொழிக்கு - கல்வி நிலையங்களில் முன்னிரிமை அளித்தார்.




தமிழர்களின் நல்வாழ்வுக்கும் மரபு வழி கலாச்சாரங்களுக்கும் உற்ற துணையாய் இருந்தார்..


அமரர் லீ அவர்கள் - 16 செப்டம்பர் 1923 அன்று பிறந்தவர்.

இவரது இல்லத்தரசி - குவா ஜியோ சோ. 2010ல் விண்ணுலகு எய்தினார்

அமரர் லீ அவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

மூத்த மகன் லீ சியான் லூங் தான் இன்றைய பிரதமர்.

கடந்த திங்களன்று (23/3) அதிகாலை 3.18 மணிக்கு உடல்நலக் குறைவால் - லீ அவர்கள் உயிரிழந்ததாக சிங்கப்பூர் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தொடர்ந்து சீனர்களின் வழக்கப்படி ஒரு வார கால துக்கம் அனுசரிக்கப்பட்டது.

இன்று (29/3) அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.



இன்று நமது நாட்டில் -  அமரர் லீ குவான் யூ அவர்களை நினைவு கூர்ந்து தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கின்றது.

நமது பிரதமர் - அவருக்கு அஞ்சலி செலுத்துதற்கு சிங்கப்பூர் சென்றுள்ளார்.

பொது மக்கள் அஞ்சலிக்காக பாராளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவரது பூதவுடல் -

இன்று மதியம் - (சிங்கப்பூர் நேரப்படி 12.30) அரசு மரியாதையுடன் இறுதிப் பயணம் ஆகின்றது.


சிறிய பரப்பளவு குறைந்த மக்கள் தொகை - அதனால் அவருக்கு எல்லாம் சாத்தியமாகியது என்று கூறினாலும்,

இப்படித்தான் இந்நாட்டின் மக்கள் வாழ வேண்டும்!..
இங்கு வருவோரும் இப்படித்தான் இருக்க வேண்டும்!..

- என்பதே தாரக மந்திரம் ஆனபடியால் - அந்நாட்டின் மக்களும் பொறுப்பினை உணர்ந்தனர். பிழைப்பு தேடி சென்றோரும் முறையாக நடந்து கொண்டனர்.

சிங்கப்பூரில், எல்லாவற்றுக்கும் - எல்லைக்குட்பட்ட - சுதந்திரம் உண்டு!..


1981 முதல் 1985 வரை எனக்கு வாழ்வளித்தது - சிங்கப்பூர்!..

கிடைக்க இருந்த அரசுப் பணி - அரசியல் சூறாவளியால் - கை நழுவிப் பறந்திட ஏதும் இயலாதவனாக நின்றேன்.

கண்ணெதிரே - தங்கைகளும் தம்பிகளும்!..

தந்தையின் சொற்ப வருமானத்தில் - எதிர்காலம்?...

எங்கள் குடும்பத்திற்கு - உண்மையில் கிழக்கேயிருந்து தான் விடிந்தது..

உழைக்கத் தயாராக இருந்த எனக்கும் - என் போன்றோருக்கும் தலைவாழை இலையில் விருந்து வைத்தது - சிங்கப்பூர்!..

Keppel Shipyard (Tuas Base) தான் - நான் வேலை செய்த தலம்!..

சிறப்பாக வேலை செய்து, நான்கு வருடங்களும் - ஊதிய உயர்வு பெற்றேன்..

சிங்கப்பூரில் இருந்த சமயம் - பொது நிகழ்ச்சி ஒன்றில் - லீ குவான் யூ அவர்களை - அருகிருந்து பார்த்திருக்கின்றேன்..

இன்முகத்துடன் - எளிமைக்கு எளிமையாய் விளங்குவார்.   

அப்போதெல்லாம் - மணமகன் (Camp) சிங்கப்பூர் என்றால் போதும்!..

பெருமை!.. தனிமதிப்பு!..

அந்தப் பெருமையை எனக்கும் வழங்கியது - சிங்கப்பூர்!..

அந்தப் பெருமையை என் போன்ற பலரும் பெற்றிடக் காரணமாகத் திகழ்ந்த சிங்கப்பூரை உருவாக்கியவர் லீ குவான் யூ அவர்கள்..

அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகின்றேன்..
* * *

பதிவு வெளியாகிய பின் இணையத்தில் வெளியாகியுள்ள 
செய்தியும் படங்களும்..

புண்ணியம் செய்தாருக்குப் பூவுண்டு நீருண்டு - என்பார் திருமூலர்.

கொட்டும் மழையில் அமரர் லீ அவர்களின் இறுதிப் பயணம்.





மண்ணிலிருந்து அவர் மறையலாம்..
மக்கள் கண்ணிலிருந்தும் அவர் மறையலாம்..


எண்ணிறந்த உள்ளங்களில் இருந்து 
என்றும் அவர் மறைவதேயில்லை..

லீ அவர்களின் புகழ் என்றும் வாழ்க!..  
* * *  

18 கருத்துகள்:

  1. மாமனிதர்...திரு லீ குவான் யூ அவர்களை வணங்குகிறேன். எவ்வளவு விஷயங்கள்...அறியத்தந்து இருக்கிறீர்கள். சிங்கப்பூர்...ஆச்சரியமாய் இருக்கிறது. ஒருமனிதன் நினைத்தால் எவ்வளவு செய்ய முடிகிறது....

    தமிழ் நாட்டில் ஏரி,குளம் எல்லாம் இருந்தும் நிறைய அழித்து விட்டு பக்கத்து மாநிலத்தில் தண்ணீர்க்கு எதிர் பார்த்து.... வளமான தஞ்சையை மீத்தேனுக்கு கொடுக்க முடிவெடுத்து...லீ குவான் யூ போல் இங்கு ஒருவர் இல்லையே என மனம் ஏங்க வைக்கிறது...சிங்காரச் சென்னையின்னு சீர்கேடு தான் செய்கிறார்கள். என்ன சொல்வது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //லீ குவான் யூ போல் இங்கு ஒருவர் இல்லையே - என மனம் ஏங்குகின்றது..//

      நிஜமான வார்த்தைகள்.. தங்கள் வருகைக்கு நன்றி..

      நீக்கு
  2. இன்று காலை இறுதிப்பயணத்தைப் பார்த்தேன். கொட்டும் மழையிலும் அஞ்சலி செலுத்த மக்கள் நின்றிருந்ததைப் பார்த்தபோது அவர்மீது அவர்கள் வைத்திருந்த மரியாதையைக் காட்டியது. ஒரு முன்னுதாரணத் தலைவர். மக்களின் மனதைப் புரிந்துகொண்டவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களின் மனதைப் புரிந்து கொண்டவர்.. மக்களும் அவருக்குத் துணை நின்றார்கள்..

      தங்கள் வருகைக்கு நன்றி..

      நீக்கு
  3. மாமனிதர் லீ குவான் யூ அவர்களைப்பற்றி ஓரளவு தெரியும் தங்களது பதிவின் மூலம் நிறைய விடயங்கள் அறிந்தேன்.

    பலரது வாழ்வாதாரம் உயர்வதற்க்கு காரணமாக வாழ்ந்த அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமனிதர் லீ அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்..

      தங்கள் வருகைக்கு நன்றி..

      நீக்கு
  4. மாமனிதர் லீ குவான் யூ அவர்களின் மறைவிற்கு
    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமரர் லீ அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்..
      தங்கள் வருகைக்கு நன்றி..

      நீக்கு
  5. மாமனிதர்......

    எனது இரங்கல்களும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிங்கப்பூரின் சிற்பி.. தளராத உழைப்பு அவருடையது.
      அமரர் லீ அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்..
      தங்கள் வருகைக்கு நன்றி..

      நீக்கு
  6. தனி ஒருவராய் சிங்கப்பூரை உருவாக்கிய மனிதரின் மறைவிற்கு என் இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உழைப்பின் அருமையை உணர்த்தியவர்.
      மாமனிதர் லீ அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்..
      தங்கள் வருகைக்கு நன்றி..

      நீக்கு
  7. மாமனிதர்! அவரது ஆன்மா சாந்தி அடைய எங்கள் பிரார்த்தனைகள்! இவரைப்பற்றி வாசித்து அறிந்திருந்தாலும், தமிழில் இத்தனை அழகாகத் தொகுத்து தந்தமைக்கு மிக்க நன்றி. யாதவன் நம்பி அவர்களும் கொடுத்திருக்கின்ரார்கள்.

    மிக்க நன்றி ஐயா! அருமையான தொகுப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆறுகள் பல உண்டு தமிழகத்தில்!..
      ஆனாலும் பாலை நிலமாகிக் கொண்டிருக்கின்றது..

      சிங்கப்பூரில் மின்வெட்டு - தண்ணீர் பஞ்சம் கிடையாது..
      அயராத உழைப்பால் - சிங்கப்பூர் உயர்ந்தது..

      அமரர் லீ அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்..
      தங்கள் வருகைக்கு நன்றி..

      நீக்கு
  8. சிறப்பான மனிதர்...

    ஆழ்ந்த இரங்கல்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிங்கப்பூரின் சிற்பி!..
      மக்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டவர்!..

      அன்னாரது ஆன்மா சாந்தியடையட்டும்..
      தங்கள் வருகைக்கு நன்றி..

      நீக்கு
  9. அவரைப்போலேவே தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் இருந்தால்,,,,,,,,,,,,,
    எனக்கும் சிங்கப்பூர் கனவு உண்டு, திருமணம் குழந்தை என ஆனப்பின் கனவே,,,,,,,,,,,,
    தங்கள் பதிவின் முலம் பல செய்திகள் தெரிந்துக்கொண்டேன்,
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கனவு நிறைவேற வாழ்த்துக்கள்!..
      தங்கள் வருகைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..