வெள்ளி, மார்ச் 20, 2015

சின்னஞ்சிறு சிட்டு

விருட்.. என வீட்டுக்குள் நுழைந்த சிட்டுகள் என்னுடன் இருந்தவர்களைக் கண்டதும் ஆனந்தக் கூச்சலிட்டன.

நீங்கள் எப்போது வந்தீர்கள்!..

வியப்பால் விழிகள் விரிந்தன. மகிழ்ச்சியில் மலர்களாய் மலர்ந்தன.


நாங்கள் இப்போது தான் வந்தோம்!.. உங்களைப் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது.. எப்படி இருக்கின்றீர்கள் எல்லாரும்!?..

எப்படியோ.. நாடு விட்டு நாடு வந்து நலமாக இருக்கின்றோம்!.. தாயகத்தை விட்டு வந்தோம் என்பதைத் தவிர வேறு கவலையில்லை.. எந்தக் குறைவும் இல்லை!..

இவர்கள் எல்லாம் வருகின்றார்கள் என்று சொல்லவே இல்லையே.. நீங்கள்!..

என்னைப் பார்த்து கோபித்துக் கொண்டன சிட்டுகள்..

எல்லாம் ஒரு வேடிக்கைக்குத் தான்!.. ஆனந்த அதிர்ச்சிக்காகத் தான்!..

உண்மையிலேயே ஆனந்தமாகத் தான் இருக்கின்றது.. இவர்களை இங்கே சந்திப்போம்.. என்று நாங்கள் கனவிலும் கருதவில்லை!..

- என மகிழ்ந்த சிட்டுகள், என்னை நோக்கி,

நன்றி.. அண்ணா!.. - என்றன.


உலகம் முழுதும் சிட்டுக் குருவிகளைக் கொண்டாடும் இன்றைய நாளில் - நீங்கள் இங்கே வர இருப்பதைக் கூறி -

உங்களால் வர இயலுமா?.. எனக் கேட்டேன்!.. உடனே மகிழ்வுடன் சம்மதித்து வந்திருக்கின்றார்கள் எனில் இவர்களுக்குத் தான் நன்றிகள் எல்லாம்!.. - என்றேன்.

எங்களை எல்லாம் நினைவில் கொண்டு - வரவேற்கும் தங்களின் ஆவலைப் புறக்கணிக்க முடியுமா!.. அதுவும் சிட்டுக் குருவிகளைப் பார்த்தும் வெகு நாட்களாகி விட்டன.. அதுதான் உடனே புறப்பட்டு வந்து விட்டோம்!..

- என்றபடி, உட்கார்ந்திருந்த ஊஞ்சலில் ஆனந்தமாக ஆடினார்கள் - அவர்கள்!..

அவர்கள்!.. அவர்கள்!.. யாரவர்கள்!?..


அவர்கள் தான் - நம் அன்புக்குரிய கரிக்குருவிகள்!..

கரிக் குருவிகளின் களிப்பினைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தன சிட்டுக் குருவிகள்..

சொல்லுங்கள்.. இங்கே எப்படி உங்களுக்குப் பொழுது போகின்றது!..

கரிக்குருவிகள் வினவின.

என்ன பொழுது?.. அந்த நாட்களில் ஓலைக் குடிசையானாலும் அங்கே - தாய் நாட்டில் எங்களுக்கு ஒரு மூலை கிடைத்தது. அதெல்லாம் இப்போது தலை கீழாகப் போய் விட்டதால் - எங்கள் தாயகமே - எங்களுக்கு அந்நியமாகப் போய் விட்டது!..

சிட்டுக் குருவிகள் மனம் கலங்கின..

நீங்கள் சொல்வது உண்மைதான்!.. மனிதர்கள் திருந்திவிடுவார்கள் என்று பார்த்தால் - அதற்கான அறிகுறியே தென்படவில்லை.. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகின்றது. கரிய நிறத்தைக் கண்டு சில மாடுகள் மிரளும்.. வெள்ளை வேட்டியைக் கண்டால் சில நாய்கள் விடாமல் குரைக்கும். அது போல.. - சற்றே நிறுத்தியது கரிக்குருவி.

சொல்லுங்கள்.. அது போல... - ஆவலுடன் கேட்டது சிட்டு!..

அது போல - பச்சையைக் கண்டாலே இந்த மனிதர்களுக்கு ஆகாமல் போய் விட்டது. பச்சைப் பசேலென்று படர்ந்திருக்கும் மரங்களை வெட்டித் தள்ளி விடுகின்றார்கள்..

பச்சைப் பட்டு போல சிலுசிலுக்கும் வயல் வெளிகளைக் கண்டால் - கொலை வெறியாகி கண்டந்துண்டமாகக் கூறு போட்டு விற்று விடுகின்றார்கள்..

இதெல்லாம் தமக்குத் தாமே வெட்டிக் கொள்ளும் குழி என்பதை உணர்ந்தார்களில்லை..

யாராவது கேட்டால் - நாட்டு வளர்ச்சி.. தேச நலன்!.. என்று ஒப்பாரி வைக்கின்றார்கள்.. நாட்டு வளர்ச்சி.. தேச நலன் என்றால் எல்லா உயிர்களும் சேர்ந்தது தானே!.. சமூக ஆர்வலர்களும் ஆய்வாளர்களும் கதறிக் கண்ணீர் வடித்தாலும் கேட்பாரில்லை..

- நீண்ட உரையாற்றி நிறுத்தியது கரிக்குருவி..


இப்படித்தானே பஞ்ச பூதங்களையும் பாழ்படுத்தி விட்டார்கள்!.. பசுமைப் புரட்சி என்ற பேரில் இரசாயனங்களைக் கொட்டியதால் - மண்ணும் நீரும் மாசடைந்து போயின.. இயற்கையாகவே மண்ணுள் வாழும் சிறு பூச்சி புழுக்கள் முற்றாகவே தொலைந்தன.. நீர்நிலைகளின் ஓரங்களில் தாமாகவே மண்டிக் கிடந்த சில மூலிகைகள் கூட அழிந்து விட்டன என்கின்றார்கள்..

- தன் பங்குக்குக் கூறிய சிட்டு - மேலும் தொடர்ந்தது..


எங்களின் வாழ்வாதாரமே - சின்னஞ்சிறு பூச்சிகளும் புழுக்களும் தான்.. அதைத்தான் இளங்குஞ்சுகளுக்கு ஊட்டி வளர்ப்போம்.. அப்புறம் தான் தானியங்கள்!.. அதெல்லாமே பற்றாக்குறையாகிப் போனால்.. என்ன செய்வது?..

நாங்கள் மனிதர்களை அண்டி வாழ்ந்தாலும் அவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்த்ததில்லையே!.. அவர்கள் எங்களுக்குச் செய்தது மிகப்பெரிய தீங்கு!..

- ஆதங்கத்துடன் நிறுத்தியது சிட்டு.

ஆமாம்.. முன்பெல்லாம் கிராமங்களில் தானிய மாலை என்று கோயில்களிலும் வீட்டின் வாசலிலும் முற்றத்திலும் கட்டி வைப்பார்கள்.. வீட்டுக்குள் சிட்டுக் குருவிகள் கூடு கட்டினால் மிகவும் சந்தோஷம்.  பிரிந்திருக்கும் உறவுகள் ஒன்று சேரும் என்று மகிழ்ச்சி அடைவார்கள்.. ஆனால் இன்றைக்கு குடும்பம் என்ற அமைப்பே மாறிப் போனது!..

தனது வருத்தத்தினைப் பகிர்ந்து கொண்டது கருங்குருவி.


எங்களுக்குக் கிடைத்தது இது!.. என்று வீடுகளின் தாழ்வாரங்களில் சிறு கூடுகளைக் கட்டிக் கொண்டு காலங்கழித்தோம்.. வீட்டுக்குருவி என்றே எங்களுக்குப் பெயர். அதைக் கெடுத்து லேகியம் செய்வதற்கு என்று எங்களை வலை வீசிப் பிடித்து அழித்தார்கள்.. எத்தனை எத்தனை விஷப் பூச்சிகளை அழித்து மக்களை வாழ வைத்தோம்.. அதற்குக் கிடைத்த பரிசு இதுதான்!..

சிட்டுக்குருவியின் கண்கள் கலங்கின..

சரி.. சரி.. நடந்தவைகளை மறப்போம்.. அப்படி நடத்திய பாவத்திற்காகத் தானே - இன்று உங்களை மீண்டும் கொண்டாடி மகிழ்கின்றார்கள்!..

- என்றேன் நான்.

நடந்தவைகளை மறந்தாலும் - எங்களுக்கேற்ற சூழல் அமையவில்லையே!..

இருந்தாலும் - வளரும் தலைமுறையினரிடம் - சமூக ஆர்வம் மலர்ந்து வருகின்றது.. அந்தக் கால வீடுகள் மாறிப் போனாலும் - தற்போது பறவைகள் வந்து பழக வேண்டும் என்பதற்காக செயற்கையாக கூடுகளை அமைத்து காத்திருக்கின்றார்கள்..

மனம் கலங்கிய சிட்டுக்குருவிக்கு ஆறுதல் கூறினேன்..

ஆனாலும் - மண்ணிலிருந்த பிள்ளைப்பூச்சி, தெள்ளுப் பூச்சி, மண்புழு இன்னும் ஏதேதோ... அவையெல்லாவற்றையும் உங்களால் காப்பாற்ற முடிந்ததா?.. மரங்களைக் குடைந்து மற்ற சிறு பறவைகளுக்கு உதவிய மரங்கொத்திக் குருவிகளைக் கூட காண முடியவில்லை.

ஒரு சொட்டு நீருக்கும் வழியில்லை என்றால்..
மரங்களையும் அழித்தொழித்த மாபாதகம் மனிதர்களுடையது. மரங்கள் இயற்கையின் வரங்கள்.. அவை அழிந்தால் மண்ணுக்கு மழையேது?.. மழை இல்லையேல் சிற்றுயிர்களுக்கு வாழ்வேது!.. எங்களை விடுங்கள்!... உங்களுக்கும் வாழ்வுதான் ஏது!..

சிட்டுக் குருவியுடன் சேர்ந்து கொண்டு கரிக்குருவியும் கீசு..கீசு என்றது..

நீங்கள் சொல்வது சரிதான்.. ஆனால் நான் ஒரு பாவமும் செய்யவில்லையே!.. என் தந்தை வாழ்ந்த வரையிலும் பல இடங்களிலும் மரங்களை வளர்த்து பராமரித்தார். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்.. சிறுவயதில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தோம் நாங்கள்..

பரிதாபமாக பதில் கூறினேன். எனக்குள் இரக்கம் பொங்கியது.

அதை நாங்கள் உணர்ந்திருப்பதனால் தானே - உங்களுடன் இன்று கூடி மகிழ்ந்திருக்கின்றோம்!..

அப்பா!.. மிக்க மகிழ்ச்சி!..

நல்லவேளை - என்னைக் குற்றவாளியாகக் கருதவில்லை!..

சிறுபொழுதில் மீண்டும் கலகலப்பாகி மகிழ்ந்தன குருவிகள்..

வாருங்கள் மீண்டும்.. நான் இருக்கின்றேன். உங்களைக் காப்பாற்றுகின்றேன்!. - என்று சிட்டுகளை அழைத்தது கரிக்குருவி..

ஆகா.. உங்களுடைய வீர தீரத்தை எப்படி மறக்க முடியும் !.. காக்கைகளையும் கழுகுகளையும் அடித்து விரட்டுவதில் வல்லவராயிற்றே தாங்கள்!..

கரிக் குருவியைப் புகழ்ந்தன - சிட்டுக் குருவிகள்..

அது என் முன்னோர்கள் பெற்ற வரம் . இரத்தத்தில் ஊறி விட்டது. பிறவிகள் தோறும் தொடர்கின்றது..

அடக்கத்துடன் கரிக்குருவி சொன்னதும் சிட்டுக்கு ஏக மகிழ்ச்சி!..


ஆமாம்.. தமிழகத்தில் நீங்கள் வலியன் என்றால் வடநாட்டில் கொத்தவால் குருவி என்றல்லவா உங்களுக்குப் பெயர்!.. கொத்தவால் என்றால் கோட்டைக் காவலன் என்று அர்த்தம்!..

அதெல்லாம் தெரியுமா உங்களுக்கு!.. - கரிக்குருவி வியந்தது..

நம் பெருமையை திறமையை நாமே மறக்கலாகுமா!.. ஈசனிடம் வரம் பெற்று வந்தவர் அல்லவா தாங்கள்!.. - சிட்டு மகிழ்ச்சியில் திளைத்தது..

நீங்கள் மட்டும் என்னவாம்!.. சிவபூஜை செய்த பெருமைக்கு நீங்களும் உரியவர்கள் தானே!.. - கருங்குருவியும் சிட்டுகளைப் பாராட்டியது.

நாங்கள்.. நீங்கள்.. என்று எதற்கு இதெல்லாம்.. ஆகக் கூடி பறவை இனம் முழுதுமே பெருமைக்குரியது தானே!.. புராணங்களிலும் வரலாற்றிலும் நீங்கள் எல்லாருமே பேசப்படுகின்றீர்கள்... அன்பிலும் பண்பிலும் மனிதர்களுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்பவர்கள் நீங்கள் தானே!..

நானும் என் பங்கிற்கு பறவை இனத்தைப் போற்றினேன்..


உங்களின் அன்பான அழைப்பினுக்கு இணங்கி வந்தோம்!.. இந்த அன்பும் ஆதரவும் என்றும் தொடர்ந்திருக்க வேண்டும்!..

குருவிகள் கூட்டாக முழங்கின..

மகிழ்ச்சியான வேளையில் இந்த சிறுதான்ய விருந்தினை ஏற்க வேண்டும்!..

எனது மகிழ்வில் - குருவிகள் கலந்து கொண்டன..

நீங்கள் பல்கிப் பெருக வேண்டும்.. என்று மனதார வாழ்த்துகின்றேன்!. எல்லாம் வல்ல பரம்பொருள் மனிதர்களுக்கு நல்லறிவைத் தந்தருளல் வேண்டும்!.. உங்களுடைய வாழ்வாதாரம் மீண்டும் செம்மையாக வேண்டும்!..

என் கண்கள் நீரால் நிறைந்தன..


குருவிகள் குதுகலமாக என்னைத் தேற்றின..

எங்களுக்கு அழிவில்லை.. அண்ணா!.. இங்கே இல்லையே தவிர - எங்குமே இல்லாமல் போய் விடவில்லை!.. மீண்டும் மீண்டும் உங்கள் அன்பினில் இருந்து தோன்றிக் கொண்டேயிருப்போம்!..

உன்னை நான் அறிவேன்.. என்னை நீ அறிவாய்!..
நம்மை நாம் அறிவோம்.. வேறு யார் அறிவார்!..

காலத்தை வென்ற கவியரசரின் வரிகள் அல்லவா!..   
  
எங்கள் மீது நீங்கள் அன்பு கொண்டிருப்பது போல உங்களுடன் நாங்களும் அன்பு கொண்டிருக்கின்றோம்!..

நெகிழ்ந்து நின்ற நான் சொன்னேன்..

ஏ.. குருவி... சிட்டுக் குருவி..
ஒஞ்சோடி எங்கே அதைக் கூட்டிக் கிட்டு..
வந்து விட்டத்துல ஒரு கூடு கட்டு!..

எங்க கவிப்பேரரசு வைரமுத்து அன்றைக்குக் கூப்பிட்டார். அதையே சொல்லி நானும் கூப்பிடுகின்றேன்!.. மீண்டு நீங்கள் தழைக்க வேண்டும் வரும் சந்ததிகள் எல்லாம் உங்களால் களிக்க வேண்டும்!..

அப்படியே ஆகட்டும் .. காலம் துணை செய்யும்!.. இன்றைக்கு உங்களுடைய கல்யாண நாள்.. நீங்கள் மறந்தாலும் நாங்கள் மறக்கவில்லை.. அன்பின் நல்வாழ்த்துக்கள். நலம் பெருகி நீடூழி வாழ்க!..

- என்று கீச்சிட்டன குருவிகள்..

குறுக்கும் நெடுக்குமாக கூவித் திரிந்த குருவிகள் - 
திறந்திருந்த ஜன்னல் வழியாக வெளியே பறந்தன..

ஜன்னல் திறந்தே இருக்கின்றது.

காற்றுக்காக மட்டுமல்ல.. குருவிகளுக்காவும்!..


இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம்!..

விட்டு விடுதலை ஆகி நிற்பாய் - இந்தச் 
சிட்டுக் குருவியைப் போல!..
சுதந்திரமான மனதிற்காக - மகாகவியின் வாக்கு!..

அந்த சுதந்திரம் சிற்றுயிர்கள் எல்லாவற்றுக்கும் கிடைக்க 
எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் புரிவானாக!..

திருச்சிற்றம்பலம்..
* * *    

30 கருத்துகள்:

  1. இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம் என்பதனை உங்கள் பதிவினைப் படித்து முடித்த பின்னர்தான் நான் தெரிந்து கொண்டேன். நன்றி. சிட்டுக்குருவிகளோடு உங்களுக்குப் பிரியமான கரிச்சான் குருவிகளைப் பற்றியும் நன்றாகவே எழுதி இருக்கிறீர்கள். எனது பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரையுடன் பாராட்டுரைக்கு மிக்க நன்றி..

      நீக்கு
  2. மிகவும் ரசித்து படித்தேன் ஐயா... இன்றைய தினத்திற்கேற்ப பகிர்வு சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அழகாக குருவிகளுடன் பேசி மகிழ்ந்திருகிறீர்கள் நண்பரே அதன் மூலம் வாழ்வியல் உண்மைகளும் வெளிப்பட்டன
    இன்றைய நாளை நினைவு கூர்ந்தது மிகவும் சிறப்பு.
    தங்களின் தேடுதல் கண்டு அதிசயிக்கிறேன் நண்பரே...
    காணொளி அருமை.

    இன்றைய நம் இருவரின் பதிவில் ஒரு ஒற்றுமை கண்டு சிரித்துக்கொண்டு இருக்கிறேன்,
    நீங்கள் எழுதியது கரிக்குருவி, சிட்டுக்குருவி, கழுகு.
    நான் எழுதியது கழுதை, நாய், யானை, காண்டாமிருகம்.
    ஆக மொத்தம் இருவரும் மனுஷனை மறந்துட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்களது பதிவினைக் கண்ட பிறகு- இதே தான் எனக்கும் மனதில் தோன்றியது.. அதையே இங்கு குறிப்பிட்டிருக்கின்றீர்கள்..

      கழுதை யானை காண்டாமிருகம் என்றால் கலகலப்பு!..
      கடைத்தேறா கடையன் என்றால் கைகலப்பு!..

      கலகலப்பாக இருந்து விடலாம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கு மிக்க நன்றி..

      நீக்கு
  5. முதலில் வாழ்த்துக்கள். பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழியவே,,,,,,,,,,,
    அசத்தலான உரையாடல், மனிதன் தன் கடமை மறந்து திரியும் இந்நாளில்.
    சிட்டுக்குருவி என்று ஒரு இனம் இன்று இல்லாமல் போய்விட்டது என்று கேள்விப்பட்டுள்ளேன்.
    சிட்டுக்குருவிகள் தினம் பொருத்தமான பதிவு.
    மீன்டும் மீன்டும் தங்கள் அன்பில் இருந்து தேறிக்கொண்டே இருப்போம்,,,,,,,,,,,,,
    பச்சையைக் கண்டால் நாம் விடுவதில்லை(நீங்கள் இல்லை, குருவி குற்றவாளியாக்கவில்லை).
    பச்சைவெளியையெல்லாம் பிளாட்டாக்கிவிட்டால் ,,,,,,,,,,,,,,,,,
    வேதனைக் கையாலாகத தன்மையுடன்,
    புகைப்படங்கள் அத்துனையும் அருமை.
    தங்கள் தேடல் அதனினும் அருமை.
    தோடுங்கள், நாங்கள் தெளிய,,,,,,,,,,,,,.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      வருகையும் விரிவான கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      தங்கள் இனிய வாழ்த்துரைக்கு மிக்க நன்றி..

      நீக்கு
  6. குருவிகள் பற்றிய பதிவு அருமை, காணொளி , பறவைகள் படம் எல்லாம் மிக அருமை.

    குருவிகள் இனம் பெருகி வாழவேண்டும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. இன்று சிட்டுக்குருவிகள் தினம் என்பது உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். அருமையான பதிவு.சிட்டுக்குருவிகளின் படங்கள் மிக அருமை.
    குருவிகளின் இனம் பெருக வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      குருவிகள் பெருகி பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்!..

      நீக்கு
  8. பஞ்சபூதங்களைப் பாழ்படுத்தியது, பசுமை புரட்சி என்ற பெயரில் இரசாயனங்களைக் கொட்டி நிலத்தை நஞ்சாக்கியது, மரங்களை அழித்தது போன்ற விபரங்களை கரிச்சானுடன் குருவிகள் உரையாடும் விதத்தில் கொடுத்தது மிகவும் அருமை. சிட்டுக்குருவி தினத்தில் விழிப்புணர்வு ஊட்டும் நல்லதொரு பதிவுக்குப் பாராட்டுக்கள் சார்!
    கரிக்குருவிக்கு வடநாட்டில் கொத்தவால் குருவி என்ற பெயர் இருப்பதையும் அறிந்தேன். படங்களும் மிகவும் அருமை! காணொலியை ரசித்துப் பார்த்தேன். மிகவும் நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      கரிக்குருவி - 3 பதிவு வாசிக்கவில்லையா!..
      தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கும் பாராட்டுரைக்கும் நன்றி..

      நீக்கு
    2. அடடா! கரிக்குருவி 3 ஆம் பதிவு போட்டதைக் கவனிக்வேயில்லை. எப்படி விடுபட்டது என்று தெரியவில்லை. இப்போது தான் தெரிந்தது. அவசியம் பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி சார்!

      நீக்கு
    3. அன்புடையீர்..
      மீண்டும் தாங்கள் வருகை தந்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. சிட்டுக் குருவிகளை அழித்து விட்டு , உணவுக் கோபுரத்தை கொஞ்சம் கொஞ்சமாக தகர்த்துக் கொண்டிருக்கிறோம்.இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை.
    சிட்டுக் குருவிகள் தினத்தன்று அருமையான விழிப்புணர்வுப் பதிவு.
    பாராட்டுக்கள்...
    தொடருங்கள்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் பாராட்டுரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..
      குருவிகள் பெருகி வாழ நம்மால் ஆனதைச் செய்வோம்!..

      நீக்கு
  10. முதலில் உங்களுக்கு எப்படிப் பாராட்டையும், வாழ்த்தையும், நன்றிகளையும் தெரிவிப்பது என்று தெரியவில்லை அண்ணா! எங்களைப் பற்றியும் இப்படியெல்லாம் அனுபவித்து, எங்களுடன் உரையாடி எங்கள் துயரங்களையும், பெருமைகளையும், அருமைகளையும் இவ்விலகிற்கு எடுத்துச் சொல்லி எங்கள் மனதில் மட்டுமல்ல, இதை வாசிப்போர் எல்லோரது உள்ளங்களிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டீர்கள்! இந்த தினம் மட்டுமன்றி எல்லா தினங்களிலும் எங்களைக் கவனிக்கச் சொல்லுங்கள் அண்ணா. மனிதர்களாகிய உங்களுக்கு மட்டுமல்ல, தாயகம் பிரிவது எங்களுக்கும் நேர்ந்துவிட்டது. எங்களில் தாயகம் கடப்பது என்பது சிலபருவ காலங்களில் மட்டுமே நிகழ்ந்து வந்தது. ஆனால் இப்போது, நிரந்தரமாகக் கூட புதிய சூழல்களுக்கு எங்களை மாற்றிக் கொண்டு வாழ வேண்டியதாகிப் போனது. எங்கள் இனம் அழிந்து வருகின்றதுதான். எத்தனை டவர்கள் வந்துவிட்டன எங்கள் மொழிகளுக்குக் குறுக்கீடாக. அதைப் பற்றிக் கூட சில கால்நடை மாணவர்கள் ஆராய்ச்சிச் செய்து அதை நிரூபித்து உள்ளார்கள். மனிதர்கள் தான் இதற்குக் காரணம் என்றாலும், அவர்களிலும் உங்களைப் போன்று நல்லோர்கள், எங்களையும் புரிந்து கொள்வோர்கள் இருப்பதால் தான், தாயகம் கடந்தாலும் வாழ முடிகின்றது எங்களால். எங்களையும் உபசரித்து, மதித்து உரையாடி இங்குக் கொண்டாடியதற்கு மிக்க மிக்க நன்றி! அண்ணா

    பின் குறிப்பு: எங்களின் அழகான படங்களை வெளியிட்டு எங்களின் நல்ல காலங்களை அதைப் பார்த்து அசை போடத் தந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படிக்குக் குருவிகள் கூட்டம்!

      நீக்கு
    2. அன்பான குருவிகளுக்கு.. (திரு.துளசிதரன்!..)

      உங்களையும் மறக்க இயலுமோ!..
      வீட்டு முற்றத்தில் விளையாடிய நாட்கள்..
      மழைச் சாரலில் தாழ்வாரத்தில் ஒதுங்கிக் கிடந்த நாட்கள்..

      இந்தத்தலைமுறைக்குக் கிடைக்காத பொக்கிஷங்கள் அல்லவா!..
      காலகாலத்துக்கும் தொடரும் - நட்பும் உறவும்!..

      பதிவு கண்டு மனதார பாராட்டியதற்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. உங்கள் இந்தப் பதிவைப் படித்ததுமிரண்டு எண்ணங்கள் தோன்றின. மகளிர் தினத்தைப்போல் சிட்டுக்குருவிகளையும் நினைத்துப் பார்க்க ஒரு தினத்தை நினைவூட்டியது. இரண்டு அந்த நாய்களில் சன்னல் வழியே உள்ளே வந்து முகம் பார்க்கும் நிலைக்கணாடியில் கொத்தி மோதும் குருவிகள் எல்லாம் நினைவுகளாகவே இருக்கும்

    பதிலளிநீக்கு
  12. நாட்களில் என்பது தவறாக தட்டச்சாகி விட்டது. பொறுப்பீர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் கருத்துரை கண்ட பின்பு தான் எனக்கும் நினைவுக்கு வருகின்றது..

      ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து கண்ணாடியில் உருவம் கண்டு பயந்து - கொத்தியது எல்லாம் எங்கள் வீட்டில் நிகழ்ந்திருக்கின்றது.

      குரங்கு ஒன்று வீட்டுக்குள் புகுந்து - முகம் பார்க்கும் கண்ணாடியைத் எடுத்துக் கொண்டு ஓடியதும் நினைவுக்கு வருகின்றது.

      தங்கள் வருகையும் கூடுதலான தகவலும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  13. உலக சிட்டுக்குருவி தினத்தையொட்டி அருமையான பதிவை தந்து அசத்திவிட்டீர்,வாழ்த்துக்கள்....

    இந்த பதிவை பார்த்தபோது நேற்று செய்தித்தாளில் படித்த ஒரு வரி ஞாபகம்,ஒரு சின்ன வீடு,சின்ன தொட்டி வைத்தால் ரேஷன் கார்டில் பெயர் இல்லாவிட்டாலும் நம் குடும்பமாகும் சிட்டுக்குருவிகள்....

    வாழ்க வளமுடன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      காக்கை குருவி எங்கள் ஜாதி!..
      - என்பது மகாகவி பாரதியின் முழக்கம்.

      நாம் அதைச் செயல்படுத்தும் நேரம் இதுவே!..

      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  14. கவியரசரையும் பாரதியையும் துணைக்கு அழைத்துக்கொன்டு ஒரு அசத்தலான பதிவினைக்கொடுத்ததற்கு இனிய பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களும்! சிட்டுக்குருவிகள் தினத்திற்கு இதை விட ஒரு அருமையான பதிவை யாரும் எழுதி விட முடியாது. ஏனென்றால் இதன் மூலம் மறைந்து வரும் குருவி வகைகளைப்பற்றி, அவற்றின் உபயோகங்கள் பற்றிச் சொன்னதுடன் அவற்றின் அங்கலாய்ப்பாக இடையே தேசத்தின் மண் வளம், நீர் வளம், பசுமை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதைக்குறிப்பிட்டு ஒரு உண்மையான குடிமகனின் வேதனையையும் தெரிவித்து விட்டீர்கள்.
    ' தானிய மாலையை'க் குறிப்பிட்டு சில மலரும் நினைவுகளைக் கொண்டு வந்து விட்டீர்கள்.

    அன்ன தானம் பெற்றவர்களின் வாழ்த்துக்களுக்கு இணையான வாழ்த்துக்கள் வேறில்லை! அதனையும் குருவிகளுக்குச் செய்து அவர்களீன் வாழ்த்துக்களைப் பெற்றதாக எழுதிய கற்பனைத்திறன் மிக அழகு!

    [தாமதமாக இருந்தாலும்] உங்களின் மண நாளிற்கு உங்களுக்கும் உங்கள் துனைவியாருக்கும் என் மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வாழ்த்துரை கண்டு மிக மகிழ்ச்சி.. நன்றி..

      பதிவுக்கான கருத்துரையில் - தங்களின் ஆதங்கமும் இயற்கையின் மீது தாங்கள் கொண்டுள்ள ஆர்வமும் புரிகின்றது.

      இன்றைக்கு - கிராமங்களில் கூட தான்ய மாலை கட்டுபவர்கள் குறைந்து விட்டார்கள்..

      தான்ய மாலை உணர்த்தும் உண்மை கூட - இளைய தலைமுறையினருக்குத் தெரியாமல் போய் விட்டது.

      நலம் தரும் பழைமையை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும்..

      அது அனைவருடைய கடமையும் கூட!..

      தங்கள் வருகை மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது.. வாழ்க நலம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..